* வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி
* வரிகளைக் குறைத்தால் அரசின் பயணம் கடினமாயிருக்கும்
கிரிக்கெட்டிற்கு ஏற்பட்டிருக்கும் நிலை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் தலைமைப் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு அமையப் போகிறது?
கிரிக்கெட்டின் தற்போதைய வீழ்ச்சிக்கான காரணங்கள் என்ன என்பதைக் கண்டறிவதும், அதற்கான நீண்டகால தீர்வுகளை எடுப்பதுமே ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையின் எதிர்பார்ப்பாகும். இதன் போது அந்த துறை மற்றும் ஏனைய துறைகள் தொடர்பான நிபுணர்களின் கருத்துக்களை பெற்று எதிர்காலத்தில் செயற்பாடுகளை மிகவும் செயற்திறன் மிக்கதாக முன்னெடுத்துச் செல்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன்படி எதிர்காலத்தில் நிபுணர்களுடன் கலந்துரையாடி அறிக்கை சமர்ப்பிக்க ஆயத்தமாக உள்ளோம். இது தொடர்பில் அண்மையில் பாராளுமன்றத்தில் பேசப்பட்டது. ஜனாதிபதியின் தேவை கிரிக்கெட் பிரச்சினைக்கு குறுகிய கால தீர்வு அல்ல. நீண்ட காலமாக நிலவி வரும் இந்தப் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். அதற்கான அடித்தளத்தை அமைத்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்.
இலங்கையின் தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு பரந்தளவிலான சர்வதேச ஒத்துழைப்பு கிடைத்து வருகின்றது. தற்போது நாடு பெற்றுள்ள மற்றும் பெற்றுக் கொண்டிருக்கின்ற நன்மைகள் பற்றி?
ஆரம்பத்தில், எமக்கு முக்கியமாக இருந்தது சர்வதேசத்தில் நமது நாட்டைப் பற்றிய சரியான பிம்பத்தை உருவாக்குவதேயாகும். நாடு மிகவும் மோசமான நிலையில் வீழ்ச்சியடைந்த ஒரு காலகட்டத்தின் பின்னர் மீண்டும் எழுந்திருப்பதற்குத் தேவையான மறுசீரமைப்பைச் செய்வதற்கு அரசாங்கத்தினால் முடிந்திருக்கின்றது. இந்த நிலையில்தான் சர்வதேசமும் எம்மோடு இணைந்து கொள்கிறது. அந்தச் செய்தி சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாகவே செல்ல வேண்டும். அதன் காரணமாகத்தான் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக நாம் செய்து கொண்ட ஒப்பந்தம் எமக்கு முக்கியமாகின்றது. கடன் தொகையின் முதல் தவணை பெறப்பட்டதன் மூலம், நாட்டை படுகுழியில் இருந்து மீட்க நாம் எடுத்த நடவடிக்கை வெற்றிகரமான ஒன்று என்பது உறுதியானது. அதன் மூலம் உலக வங்கி எமக்கு உதவி செய்ய ஆரம்பித்தது. ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி செய்யத் தொடங்கியது. கடன் மறுசீரமைப்பைச் செய்வதற்கு அனைத்தும் மிகவும் முக்கியமானதாகியது. இவற்றால் வரும்காலங்களில் முதலீடுகள் இலங்கைக்கு வரத் தொடங்கும். தற்போது இந்தியாவின் அதானி, டாட்டா போன்ற நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஆயத்தமாகியுள்ளன. சீனாவின் துறைமுக நகர நிறுவனம், சினோபெக் நிறுவனம் பாரியளவில் முதலீடுகளைச் செய்ய ஆரம்பித்துள்ளன. அண்மையில் அமெரிக்காவின் டீ. எப். சீ என்ற நிறுவனம் பல்வேறு துறைகளில் ஒரு பில்லியன் டொலர் நிதியை முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையில் மாத்திரம் 533 மில்லியன் டொலரை முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி வேலைத்திட்டம் தொடர்பில் சர்வதேச சமூகத்தில் ஒரு நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளதை இதிலிருந்து நாம் அறியலாம்.
எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் ஏராளமுள்ளன. குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையைப் பெற்றுக் கொள்வதற்கான அரசாங்கத்தின் ஆயத்தங்களை கூறுங்களேன்?
இரண்டாம் கடன் தவணையைப் பெற்றுக் கொள்வதில் மிகவும் முக்கிய விடயமாக இருப்பது தற்போது பணிக்குழுவுடன் இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதாகும். அடுத்த கட்டமாக இருப்பது வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பாகும். இதில் முக்கிய விடயமாக இருப்பது இருதரப்பு கடனாகும். தற்போது சீனாவுடன் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளோம். இதன் மூலம் நாம் எதிர்பார்ப்பது சீனாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை IMF மற்றும் பாரிஸ் க்ளப் உடன் பகிர்ந்து கொண்டு, பொதுவாக ஒரேமாதிரியான கடன் மறுசீரமைப்பைச் செய்ய முடியுமாக இருந்தால், இரண்டாவது கடன் தவணையை விரைவாகப் பெற்றுக் கொள்ள முடியும். எவ்வாறாயினும், இந்த வருடத்திற்குள் இந்த உடன்படிக்கையை எட்ட முடியும் என எதிர்பார்க்கின்றோம்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டின் வெற்றியை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
இந்தச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி கடுமையான தீர்மானங்களை பயமின்றி எடுக்கின்றார். எதிர்க்கட்சி பல்வேறு விடயங்களைக் கூறி விமர்சிக்க முடியும். விமர்சிப்பதால் பிரச்சினைக்கு பதில் கிடைக்கப் போவதில்லை. நாடு வீழ்ச்சியடைந்த போது பல தரப்பினருக்கும் இந்நாட்டைப் பொறுப்பேற்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. எனினும் அவர்கள் யாரும் விரும்பவில்லை. எனவே தற்போதைய ஜனாதிபதி இந்தச் சவாலைப் பொறுப்பேற்று நாட்டிற்குச் சேவையாற்றுவதற்கு முன்வந்தார். அவர் இந்தச் சந்தர்ப்பத்தில் பாரிய செயற்பாடுகளைச் செய்து வருகின்றார். ஜனாதிபதி சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப எடுக்கும் தீர்மானங்கள் என்றோ ஒரு நாள் நல்ல அடித்தளத்தை அமைக்கும் என்பதை எதிர்கால சந்ததியினர் புரிந்து கொள்வார்கள்.
வற் வரியை அதிகரித்தல், மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தல் என்பன IMF இன் நிபந்தனைகள் என அரசாங்கம் கூறினாலும், அவை IMF ன் நிபந்தனைகள் அல்ல என எதிர்க்கட்சி கூறுகின்றதே?
அதைச் செய்யுங்கள், இதைச் செய்யுங்கள் என IMF நிபந்தனைகளைப் போடுவதில்லை. சம்பளம் வழங்கவும், வட்டி செலுத்தவும், அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லவும் நமது வரிப்பணம் இந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்று மட்டுமே அவர்கள் சொல்கிறார்கள். அந்த அளவினை வேறு வழிகளின் அறவிட்டுக் கொள்ள முடியாத நிலையில், அதை எப்படி அறவிட்டுக் கொள்வது என்பதை அவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதன் பிரகாரமே இது இடம்பெற்றது. மின்சாரத்திற்கான செலவுக்கு ஏற்ப நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும். இல்லையென்றால் திறைசேரியிலிருந்து பெற வேண்டி வரும். திறைசேரியிலிருந்து எடுப்பது என்பது மீண்டும் மக்களிடம் இருந்து எடுப்பது அல்லது பணம் அச்சிட நேருவதாகும். பணம் அச்சிடுவது என்பது பணவீக்கம் மீண்டும் அதிகரிப்பதாகும். இதனால், கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. இல்லை என்றால் நாடு மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும்.
மொட்டு கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான முறுகல் வலுவடைந்து வருகின்றது. இந்த நிலை எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்திற்கு பாதகமாக அமையுமா?
தேர்தல் காலம் வரும் போது கலந்துரையாடி ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முடியும் என எதிர்பார்க்கின்றேன்.
அடுத்த வாரம் 2024ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மக்கள் நிவாரணங்களை எதிர்பார்த்திருக்கின்றார்கள்.
இந்த முறை வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு ஆறுதல் வழங்குமா?
மிகவும் இக்கட்டான நிலையிலும் மக்களுக்கு ஓரளவு நன்மைகளை வழங்குவதாக ஜனாதிபதி அமைச்சரவையில் எம்மிடம் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஜனாதிபதி மிகவும் கவனம் செலுத்துவார் என நான் நினைக்கின்றேன். எனவே எதிர்வரும் 13ம் திகதி திங்கட்கிழமை வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் வரை பொறுமையாக இருப்போம்.
காஸாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியினால் இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கங்கள் ஏற்படுமா?
மத்திய கிழக்கில் அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது உலக அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டதைப் போன்றதாகும். இது பொதுவாக வர்த்தக முதலீடு மற்றும் சுற்றுலாத் துறைக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
எண்ணெய் விலை உயர வாய்ப்புள்ளது. அதேபோன்று நாம் தொடர்ச்சியாக மத்திய கிழக்குடன் முன்னெடுத்துச் செல்லும் உறவுகள் ஊடாக சில தெரிவுகளைச் செய்ய வேண்டும். ஒரு போதும் இந்த யுத்தம் தொடரக்கூடாது. எனவே கூடிய சீக்கிரத்தில் சமாதானத்தை ஏற்படுத்திக் கொண்டு தீர்வுக்குச் செல்ல வேண்டும். பலஸ்தீனர்களுக்கான நாடும், யூதர்களுக்கான நாடும் உருவாக்கப்பட வேண்டும் என 1967ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தத் தீர்வு வரும் வரை இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது என்பது அனைவரும் புரிந்து கொண்ட உண்மை. அது விரைவில் நடக்க வேண்டும்.
எம். எஸ். முஸப்பிர்