மேற்கு நேபாளத்தில் நேற்று முன்தினம் (03) ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 160 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
மேற்கு காத்மண்டுவிலிருந்து 500 கிலோமீற்றர் தூரத்திலுள்ள West Rukum மற்றும் Jajarkot ஆகிய மாவட்டங்களிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், இந்த நிலநடுக்கம் 5.6ஆக ரிச்டர் அளவுகோலில் பதிவாகியதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு நேபாளத் தலைநகர் காத்மண்டுவிலும் அயல் நாடான இந்தியாவின் புதுடில்லி உள்ளிட்ட நகரங்களிலும் உணரப்பட்டதுடன், நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு மணித்தியாலத்தினுள் மேலும் மூன்று அதிர்வுகள் உணரப்பட்டதாகவும், வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு உயிரிழப்புகளும் சேதங்களும் ஏற்படலாமென்ற அச்சம் காரணமாக அங்குள்ள மக்கள் நேற்று முன்தினம் பொது வெளியில் தமது இரவுப்பொழுதை கழித்ததாகவும், அச்செய்திகள் தெரிவிக்கின்றன்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து Jajarkot மருத்துவமனை காயமடைந்தவர்களால் நிரம்பி வழிந்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணி நடவடிக்கைகளில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், வெளிநாட்டுச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நேபாளம் பிரதமர் Pushpa Kamal Dahal நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேற்று (04) சென்று பார்வையிட்டதுடன், நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.