Home » வரவு-செலவுத்திட்ட விவாதம் நவம். 13 முதல் டிசம். 13வரை

வரவு-செலவுத்திட்ட விவாதம் நவம். 13 முதல் டிசம். 13வரை

நாளைமறுதினம் 07 இல் சபை கூடுகிறது

by Damith Pushpika
November 5, 2023 6:50 am 0 comment

பாராளுமன்றம் நாளை மறுதினம் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை கூடவுள்ளதாக, பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு -செலவுத் திட்டம்) எதிர்வரும் 13ஆம் திகதி நண்பகல் 12.00 மணியளவில் நிதி அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமெனவும், செயலாளர் நாயகம் தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் (19) பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூடிய போதே, இது தொடர்பாக இணக்கம் காணப்பட்டது.

இதற்கமைய, நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, மு.ப. 10.30 மணிக்கு தஸ்ஸனா பௌத்த சன்விதானய (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டுக்காக முன்வைக்கப்படவுள்ளதுடன், மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.0 மணிவரை கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான இரண்டு வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2023 நவம்பர் 8ஆம் திகதி (புதன்கிழமை) மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு (08 வினாக்கள்) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 10.30 மணிவரை பிரதமரிடம் கேட்கப்படும் வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணிவரை நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமூலம் மற்றும் குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆகியன இரண்டாம் மதிப்பீட்டுக்காக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணிவரை ஆளும் கட்சியால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புவேளையின் போதான பிரேரணை மீதான விவாதம் நடைபெறும்.

2023 நவம்பர் 9ஆம் திகதி (வியாழக்கிழமை) மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான வினாக்களை அடுத்து மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணிவரை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அதனையடுத்து, 2023ஆம் நிதியாண்டுக்கான 231.5 பில்லியன் ரூபா அனுமதியை பெறுவதற்கு 1ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு முன்வக்கப்படவுள்ளது. அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான இரண்டு வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2023 நவம்பர் 10ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான வினாக்களை அடுத்து, தனியார் உறுப்பினர் சட்டமூலமான உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தல்) சட்டமூலம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அதன் பின்னர், தனியார் உறுப்பினர் சட்டமூலங்களான பாராளுமன்றத் தோ்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் மாகாணசபைத் தோ்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் என்பன இரண்டாம் மதிப்பீடுக்காக முன்வைக்கப்படவுள்ளது.

அதனையடுத்து, மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணிவரை கலஹா பத்ரவதி தேசிய பிக்குமார் பராமரிப்பு நிலைய நம்பிக்கை பொறுப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெறவுள்ளது. விவாதத்தை அடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணிவரை எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதம் நடைபெறும். அத்துடன், 2024ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்ட உரை இம்மாதம் 13ஆம் திகதி (திங்கட்கிழமை )நண்பகல் 12.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நிகழ்த்தப்படவுள்ளது.

நவம்பர் 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதிவரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து, 7 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (வரவு – செலவுத்திட்டம்) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெறவுள்ளதாக, செயலாளர் நாயகம் தெரிவித்தார். அத்துடன், வரவு-செலவுத்திட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 21ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) பி.ப. 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

குழுநிலை விவாதம் நவம்பர் 22ஆம் திகதி (புதன்கிழமை) முதல் டிசம்பர் 13ஆம் திகதி (புதன்கிழமை) வரை ஞாயிறு தினம் தவிர்ந்து, 19 நாட்கள் இடம்பெறவுள்ளன .இதற்கமைய, 2024ஆம் நிதியாண்டுக்கான வரவு -செலவுத்திட்ட மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13ஆம் திகதி (புதன்கிழமை) பி.ப. 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

வரவு -செலவுத்திட்ட விவாதத்தின் போது, ஒவ்வொரு நாளும் மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 6.00 மணிவரை விவாதம் நடைபெறவுள்ளது. வாக்கெடுப்பு நடைபெறும் நாட்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் பி.ப. 6.00 மணி முதல் பி.ப. 6.30 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division