இஸ்ரேல், காஸா போரில் வெற்றிக்கு வழிவகுப்பது படை பலங்களல்ல. மத நம்பிக்கைகளின் மன நிலைகளே! இந்த நம்பிக்கைகள்தான் இங்குள்ள பிரச்சினை. இதனால்தான், இப்பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்த ஆப்ரஹாம் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களின் இறைதூதர் ஆப்ரஹாமின் (இப்றாஹீம்) அத்திவாரத்திலிருந்தாவது இப்பிராந்தியத்தில் சமாதானத்தை நிலைநாட்டத்தான் இந்த “ஆப்ரஹாம் உடன்படிக்கை”. ஆனால், இதற்கான முயற்சிகள் முயற்கொம்பாகத்தானுள்ளன.
‘தீர்க்கதரிசிகளின் தேசம்’ எனப் போற்றப்படும் (பலஸ்தீன், சிரியா, ஜோர்தான், லெபனான்) பிராந்தியத்தை விவிலிய வேதங்கள் “பாரான் தேசம்” என்கின்றன. இதனை, “ஷாம் தேசம்” என்கிறது இஸ்லாம். இப்பகுதியை வேதங்கள் சகலதும் ஆசீர்வதித்துள்ளன. ஆன்மிகத்தில் இத்தனை மவுசுள்ள இப்பகுதியின் தலைவிதியை மோதல், சமாதானம், முரண்பாடு, மூர்க்கத்தனமென இறைவன் மாற்றிமாற்றி எழுதியிருக்கிறான். இங்கு இதுவரைக்கும் அமைதி ஏற்படாதமைக்கு இறைவனின் இந்நியதிதான் காரணம். இங்கு இடம்பெறும் வெற்றி மற்றும் தோல்விகளை, ஒவ்வொருவரும் தங்கள் மதப்போதனையின் உணர்வில் நிம்மதியடைவதுண்டு. இறுதி வெற்றியை எதிர்பார்த்துத்தான் ஹமாஸ் போரிடுகிறது. “ஷாம் தேசம்” வெற்றிகொள்ளப்படுமென்ற இறைதூதர் முஹம்மது நபியின் நபிமொழி, உலக முடிவில் உண்மைப்படும் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். இதற்கான பிரார்த்தனைகள் மஸ்ஜிதுன் நபவியில் ஆரம்பமாகிவிட்டன. இனி, ஏனைய முஸ்லிம் நாடுகளிலும் பிரார்த்தனைகள் ஆரம்பமாகலாம். இவ்வாறு நிகழின் முஸ்லிம் அரசுகளுக்கு சிக்கல்கள் ஏற்படும். காஸா மீதான தாக்குதல்களை முஸ்லிம் நாடுகள் கண்டிப்பதற்கு முன்னர், ஆன்மிகத் தலைமைகள் பிரார்த்தனைகளில் முனைப்புக் காட்டுகின்றன. முஸ்லிம் நாடுகளின் அரசியல் நிலவரத்துடன் அங்குள்ள ஆன்மிக தலைமைகள் இல்லை. இதையே, இது புலப்படுத்துகிறது.
எண்ணிக்கையில் சிறிது, பரப்பளவில் பாதி என்பதற்காக மன பலத்தை குறைத்துக் கணிப்பிட முடியாது. இதற்கு காஸாதான் உதாரணம். தங்களை முந்திக்கொண்டு காஸாவுக்கு உதவ ஈரான் வருவது, மத்திய கிழக்கில் பெரும் பேரிடியையே ஏற்படுத்தும். இதனால், கடமைக்காவது சில கண்டனங்களை வெளியிடும் நிர்ப்பந்தம் முஸ்லிம் நாடுகளுக்கு ஏற்பட்டு வருகிறது.
மத்திய கிழக்கில் முஸ்லிம் நாடுகளுக்கு மத்தியில் தனித்து நிற்பதாக ஐரோப்பாவிடம் முறையிட்டுத்தான், அந்நாடுகளின் ஆதரவைப் பெறுகிறது இஸ்ரேல். மிகப் பலசாலியான இஸ்ரேலின் அடக்குமுறைக்குள் முடங்கியுள்ளதாக காஸா அலறுகிறது. இங்குள்ள இருபக்க நியாயங்களை எடுத்துச்சொல்லத்தான் இந்த “ஆப்ரஹாம்” ஒப்பந்தம். உண்மையில் மதத்தின் அத்திவாரத்திலிருந்து எழும் இப்பிரச்சினைகளை பூதாகரமாக்குவது அரசியல்தான். இன்றைய உலக இயக்கம் அரசியல், ஆன்மிகம் என்ற இரட்டைச் சக்கர வண்டி போல ஓடுகிறது. நாஸ்திகம் பேசினாலும், நாலு ஆதாயங்கள் இல்லாதிருக்காது. அந்த ஆதாயத்துக்குள் அரசியலே இருக்கும். ஐரோப்பா இதற்கு நல்லதொரு உதாரணம். எத்தனை பெரிய வல்லமையுள்ள நாடுகள் உள்ளன இந்த ஐரோப்பாவில். ஏன், துணிந்து வந்து தீர்வு சொல்லத் தயங்குகின்றன?
மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தை, தூரத்திலிருந்து சுரண்டும் சுயநலம்தான் இந்தப் போரை பெரிதாக்குகிறதா?. இஸ்ரேலின் இருப்பை நியாயப்படுத்தும் தரப்புக்கள், பலஸ்தீனத்தின் பரிதாபத்தை கண்டுகொள்ளத் தயங்குகின்றன. காரணம், இஸ்லாத்தின் பிடிக்குள் மத்திய கிழக்கு திளைத்திருக்க கூடாதென்பதே! இப்போது இடம்பெறும் போரில் ஏற்படும் அழிவுகளை அட்டவணையிடுவதில் என்ன பலன். ஆக்கமான பணிகளுக்கு அணிதிரள உலக அமைப்புக்கள் ஒன்றுபடட்டும்.
ஒவ்வொரு அலறல்களும், ஒப்பாரிகளும் ஒவ்வொருத்தரது வீடுகளிலும் கேட்பதாக உணர்ந்தாலே போதும், மனங்களும் மதங்களும் ஒன்றிணைய. இதற்கு நாஸ்திக உலகம் விதிவிலக்குத்தான். இயற்கையை வென்று, இறை சக்தியை விஞ்சிவிட்டதாக விஞ்ஞானம் மற்றும் நாஸ்திகம் ஏன், தொழிநுட்பமும் கூறலாம். குளத்தில் நீந்த, பயணிக்க இயந்திரங்களை கண்டுபிடித்திருக்கலாம். ஆனாலும், அடையும் இலக்கை ஆத்மிக அறிவே காட்ட வேண்டும். இந்த ஆன்மிக உணர்வில்தான் முஸ்லிம் உலகம் பேசுகிறதே தவிர, ஹமாஸுக்காக அல்ல. முஸ்லிம் உலகில் ஷியா, சுன்னி பிளவுகளின் போக்குகள் இவ்வாறுதானுள்ளன.
சுஐப் எம்.காசிம்-