‘மதங்களின் உண்மையான போதனைகளைப் பின்பற்றுவது தேவையற்ற முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்கு உதவும்’ என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார். ‘அதிகரித்துள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் உள்ளிட்ட சகல தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம்’ எனவும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து எம்முடன் அவர் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
கே: உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய சனல்-4 தொலைக்காட்சியின் ஆவணப் படம் குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: இது பலமுறை கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் விவாதிக்கப்பட்டும் உள்ளது. எனினும் அதில் காண்பிக்கப்பட்டது போன்று உறுதியான ஆதாரங்கள் எதுவும் இதுவரை இல்லையென்பது துரதிர்ஷ்டமானது. இந்த விவகாரம் இன்னும் அதிகார வரம்புக்குள் இருப்பதால், பொறுப்புள்ள அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் நாட்டின் சிறந்த பிரஜை என்ற ரீதியில் இது குறித்து என்னால் கருத்துத் தெரிவிக்க முடியாது.
கே: அப்பாவி நபர்களின் உயிரைப் பறிப்பது சொர்க்கத்தை அடைவதற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையே தாக்குதலுக்கான அடிப்படைக் காரணம் என்ற கருத்து நிலவுகிறது. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்: இத்தகைய நம்பிக்கைகள் சில வழிபாட்டு முறைகளுக்குள் இருக்கலாம். அவ்வழிபாடுகளைப் பின்பற்றுபவர்களின் ஊடாக அவை காலப்போக்கில் உருவாகியிருக்கலாம். இவ்வாறான வழிபாட்டு முறைகளைத் தடுக்கவும், ஒழிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப் புதிய சட்டங்களை உருவாக்குவது குறித்தும் பரிசீலித்து வருகிறோம். இருப்பினும், இந்த முயற்சிகளில் எங்களின் வெற்றியை முன்கூட்டியே கூற முடியாது.
கே: அருட்தந்தை ஜெரோம் பெர்னாண்டோ மீதான விசாரணைகள் எந்த நிலையில் உள்ளன? புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் இதற்கான உங்கள் பதில் என்ன?
பதில்: குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடமே இந்தக் கேள்வியை முன்வைக்க வேண்டும்.
கே: இந்தச் சம்பவங்களில் இருந்து நாம் என்ன மாதிரியான பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்பதை உங்களால் கூற முடியுமா?
பதில்: சாதி, மதம், மொழி பேதங்கள் பேசாமல் ஒருவரையொருவர் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். பரஸ்பர மரியாதை என்பது நமது தொடர்புகளின் அடித்தளமாக இருக்க வேண்டும்.
கே: மதஒற்றுமையைப் பாதுகாக்க புதிய சட்டங்களை இயற்றுவது பற்றி நீங்கள் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். இவற்றின் பின்னணியில் நாட்டைச் சீர்குலைக்கும் நோக்கத்தில் மறைமுக சக்திகள் இருப்பதாக நீங்கள் சந்தேகிக்கின்றீர்களா?
பதில்: தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன, அவற்றின் செயற்பாட்டைக் குழப்பும் வகையில் எவ்வித கருத்தையும் கூற நான் விரும்பவில்லை.
கே: இலங்கையில் நாளாந்தம் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில், இலங்கையர்களிடையே ஒழுக்கம் மற்றும் விழுமியங்கள் வீழ்ச்சியடைந்து வருவது குறித்து அக்கறை செலுத்தியிருப்பீர்கள். குற்றச்செயல்கள் அதிகரிப்பதைத் தடுக்க நீங்கள் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் ஏதேனும் உள்ளதா?
பதில்: சமூகத்தில் உள்ள முக்கிய பிரச்சினை மக்கள் மதக்கட்டமைப்புகளிலிருந்து விலகியிருப்பதாகும். சமூகம் மற்றும் தேசத்தின் மீது சரியான அக்கறையைக் கொண்டிருக்காத நிலையில், தனிப்பட்ட ஒழுக்கநடத்தை மிகவும் முக்கியமானது. யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் இணையதளங்கள் போன்ற சமூக ஊடகங்கள் இதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன. இவை பொறுப்பான அறிக்கையிடலில் ஈடுபட வேண்டும். தார்மீக விழுமியங்களின் சீரழிவு ஒரு தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எத்தனை அமைச்சுக்கள், அமைச்சர்கள் அல்லது நிறுவனக் கட்டமைப்புக்கள் இருந்தாலும் அனைவருக்கும் இதில் பொறுப்பு உள்ளது.
கே: இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் தாய்லாந்து இலங்கைக்கு பரிசாக வழங்கிய முத்துராஜா என்ற யானை தொடர்பாக தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இது பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?
பதில்: தற்போது தாய்லாந்தில் இருக்கும் யானைக்கு உரிய பராமரிப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்த இறுதி அறிக்கைக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம். கூடுதல் தகவல்கள் கிடைக்கும் வரை அவை உண்மையா, பொய்யா என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியாது. எல்லா விலங்குகளையும் நன்றாக நடத்த வேண்டும் என்பது எங்கள் நம்பிக்கை. இரக்கம் நமது சமூகத்தில் ஒரு முக்கிய மதிப்புமிக்கது. துரதிர்ஷ்டவசமாக, தார்மீக சீரழிவு மற்றும் மாறிவரும் அமைப்புகளால் இரக்கம், பச்சாதாபம், அனுதாபம், பிறர் மீது அக்கறை, சமத்துவம் போன்றவற்றில் சரிவு ஏற்பட்டுள்ளது. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் பொருந்தும். இது நம் நாட்டில் நாம் கடைப்பிடிக்கும் மதிப்புகளுக்கு எதிரானது.
கே: போதைப்பொருள் பாவனை என்பது சமூகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினையாக உள்ளது. இந்த அச்சுறுத்தலை எவ்வாறு எதிர்த்துப் போராட திட்டமிட்டுள்ளீர்கள்?
பதில்: நாட்டுக்குள் போதைப்பொருளைக் கொண்டு வருபவர்கள் யார் என்பது குறித்து சட்ட அமுலாக்க முகவர் நிறுவனங்களுக்கு நன்கு தெரியும் என நான் நம்புகிறேன். எவ்வாறாயினும், போதைப்பொருள் வர்த்தகம் ஒரு சக்திவாய்ந்த உலகளாவிய மாஃபியாவால் கட்டுப்படுத்தப்படுகிறது, இது இலங்கைக்கும் பொருந்தும். இந்தச் சிக்கலைத் தீர்க்க பல அமைப்புகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் எங்களுக்குத் தேவையாக உள்ளது.
கே: புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில், இந்த நேர்காணலின் மூலம் நீங்கள் சமூகத்திற்கு ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புகின்றீர்களா?
பதில்: நிச்சயமாக, ஒவ்வொருவரும் அந்தந்த மதங்களின் சரியான போதனைகளைப் பின்பற்றுமாறு ஊக்குவிக்க விரும்புகிறேன். மேலும், மற்றவர்களின் மதம் அல்லது வேறு எந்தத் தொடர்புகளையும் பொருட்படுத்தாமல், அவர்களை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நான் வலியுறுத்துகிறேன். ஒரு மதம் அல்லது தேசியத்துடன் அடையாளம் காண்பதற்கு முன், நாம் அனைவரும் மனிதர்கள். நமது மத நம்பிக்கைகள் அல்லது நாம் பேசும் மொழி எதுவாக இருந்தாலும், நாம் அனைவரும் ஒரே மரண விதியைப் பகிர்ந்து கொள்கிறோம். எனவே, நமது சிறு வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒன்று சேர்வதும், ஒன்றுபடுவதும் அவசியம்.