நாட்டில் தேர்தல் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில், தேர்தலை அடிப்படையாகக் கொண்ட காய்நகர்த்தல்களில் அரசியல் கட்சிகள் யாவும் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன.
இவ்வாறு சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் அரசியல் களத்தை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பொன்று மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. கட்சியின் தீர்மானத்துக்கு மாறாகச் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சுற்றாடல் அமைச்சராகவிருந்த நஸீர் அஹமட்டை கட்சியிலிருந்து நீக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த தீர்மானம் சரியானது என்பதே அந்த உயர்நீதிமன்றத் தீர்ப்பாகும்.
2021 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது அதனை எதிர்ப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருந்த போதும், கட்சியின் முடிவை மீறி நஸீர் அஹமட் அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார். இதனையடுத்து முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடம் ஒன்றுகூடி அவரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கத் தீர்மானித்தது.
இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூன்று நீதியரசர்கள் குழு, கட்சி மேற்கொண்ட தீர்மானத்தில் தலையிடுவதற்கு எந்தக் காரணமும் இல்லையெனத் தீர்ப்பை வழங்கியிருந்தது.
இந்தத் தீர்ப்பையடுத்து நஸீர் அஹமட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாகியிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அரசியலமைப்புக்கு அமைய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்திருந்தார். இதனையடுத்து விருப்புவாக்கில் அடுத்த இடத்தில் இருக்கும் அலிசாஹிர் மௌலானாவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட்டுள்ளது.
இதற்கு அமைய அலிசாஹிர் மௌலானா மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார். பாராளுமன்றம் கூடும்போது அவர் அதற்கான பதவிச் சத்தியத்தைச் செய்து கொள்வார்.
உயர்நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. பல தசாப்தங்களுக்கு முன்னர் கட்சி ஒழுக்கத்தை மீறியதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களை அரசியல் கட்சிகள் வெளியேற்றிய காலம் இருந்தது. ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சி லலித் அத்துலத்முதலி, காமினி திஸாநாயக்க, ஜி.எம். பிரேமச்சந்திர மற்றும் பலரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து வெளியேற்றியிருந்தது.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கட்சி அணிக்குள் தள்ளப்பட்டதன் பின்னர், அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு மாறிய சந்தர்ப்பங்கள் ஏராளமாக இருந்தன. குறிப்பாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பல கட்சித்தாவல்கள் இடம்பெற்றபோதும், அவ்வாறானவர்களைக் கட்சிகளிலிருந்து வெளியேற்றும் முயற்சிகள் சட்ட நடவடிக்கைகளால் முடங்கிப் போயிருந்தன.
இவ்வாறான நிலையில் முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைத்திருக்கும் இந்த வெற்றி இதுபோன்ற வழக்குகளின் தீர்ப்புக்கு முன்னோடியாக அமையும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக 2020 பொதுத்தேர்தலில் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பலர் தாம் தெரிவு செய்யப்பட்ட கட்சியின் தீர்மானங்களுக்கு மாறாகச் செயற்பட்டு வருவது மாத்திரமன்றி, தம்மை சுயாதீனமானர்கள் என அறிவித்தும் செயற்பட்டு வருகின்றனர். அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் ஜனாதிபதியை ஆதரிப்பதற்கு எடுத்த தீர்மானத்தைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக சுதந்திரக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்திருந்தமையை உதாரணமாகக் கூற முடியும்.
அதேநேரம், நஸீர் அஹமட்டுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஆராய்ந்து வருவதாக பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் கூறியிருந்தார். பொதுஜன பெரமுனவின் ஊடாகப் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட பலர் குறிப்பாக டளஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டிலான் பெரேரா உள்ளிட்டவர்கள் அக்கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாகப் பாராளுமன்றத்தில் செயற்பட்டு வருகின்றனர்.
எனினும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்கள் என்பதால் அவர்கள் குறித்து தம்மால் தீர்மானம் எடுக்க முடியாது என சாகர காரியவசம் கூறியுள்ளார். ஆளும் கட்சியைப் போன்று எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலரும் இவ்வாறு கட்சிதாவியுள்ளனர்.
உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கம் இந்தத் தீர்ப்பு இதுபோன்றவர்கள் மீது அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இன்னும் ஒரு சில வாரங்களில் 2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான விவாதம் நடைபெறவுள்ளது. உயர்நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து வரவுசெலவுத் திட்டம் குறித்து பாராளுமன்றத்தில் இடம்பெறக் கூடிய வாக்கெடுப்பு என்பனவும் எதிர்பார்ப்பை உருவாக்கக் கூடியவையாக அமையும்.
அது மாத்திரமன்றி அடுத்த வருடம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பொதுத்தேர்தலில் போட்டியிடத் தெரிவு செய்யப்படும் வேட்பாளர்கள் குறித்து அரசியல் கட்சிகளும், தாம் தெரிவு செய்யும் அரசியல் கட்சி குறித்து வேட்பாளர்களும் அதிக கவனம் செலுத்துவதற்கான பின்னணி உருவாகியுள்ளது.
ஒரு கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்குத் தெரிவானதன் பின்னர் சொந்த நோக்கங்களுக்காக தமக்கு வாக்களித்த வாக்காளர்களைக் காட்டிக்கொடுக்கும் அரசியல் செயற்பாடு இதன் பின்னர் ஓரளவுக்கு முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
சிறந்த அரசியல் கலாசாரமொன்றைக் கொண்டு வருவதற்கு சிறந்த அடித்தளமாக இதனைப் பயன்படுத்தவும் முடியும். இது விடயத்தில் வாக்காளர்களாகிய பொதுமக்களுக்கும் பொறுப்பு உள்ளது. தமக்காகத் தொடர்ந்தும் பணியாற்றக் கூடிய நபர்களைத் தெரிவுசெய்து தமது பிரதிநிதிகளாக அனுப்பி வைப்பதற்கான தார்மீகப் பொறுப்பு வாக்காளர்களுக்கு உருவாகியுள்ளது.
மறுபக்கத்தில், தேர்தல்களுக்கான செலவீனங்கள் குறித்த விடயத்திலும் அரசியல் கட்சிகள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும். இதற்கான சட்ட ஏற்பாடுகளைக் கொண்டுவருவதில் சகல தரப்பினரும் ஆர்வம் காட்டுவது நாட்டில் சிறந்த அரசியல் கலாசாரத்தைக் கொண்டுவருவதற்குப் பெருமளவில் பங்களிக்கும் என்பதில் ஐயமில்லை.
பி.ஹர்ஷன்