நாகபட்டினத்தில் இந்திய மத்திய அமைச்சர் சர்பானந்தா,
அமைச்சர் ஏ.வி.வேலு கொடி அசைத்து ஆரம்பித்து வைக்க, KKS
துறைமுகத்தில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா,
டக்ளஸ் தேவானந்தா, வடக்கு ஆளுநர் சார்ள்ஸ், அங்கஜன் இராமநாதன்
எம்.பி, இந்திய துணைத்தூதர் ராகேஷ் உட்பட அதிகாரிகள் வரவேற்றனர்.
நாகபட்டினத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நேற்று ஆரம்பமானதுடன், இந்தச் சேவையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் ஆரம்பித்து வைத்தார். நாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆரம்ப விழாவில் இந்திய மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வி.வேலு ஆகியோர் கொடி அசைத்து கப்பலை வழியனுப்பினர்.
இதேவேளை, இந்திய வெளியுறத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் காணொளியினூடாக இலங்கையின் கப்பல்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் உரையாடியதுடன், அவரது அலுவலகத்திருந்தவாறே கொடி அசைத்தும் கப்பலை வழியனுப்பினார்.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து நேற்று (14) காலையில் 50 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் காங்கேசன்துறை நோக்கி பயணத்தை ஆரம்பித்த கப்பல், நேற்று மதியம் 12.20 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.
கப்பலின் வரவேற்பு நிகழ்வில் கப்பல்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து மதியம் 1.20 மணியளவில் நாகபட்டினத்துக்கு 31 பயணிகளுடன் தனது பயணத்தை ஆரம்பித்த கப்பலை, இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் பச்சை கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார்.
நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பலில் பயணம் மேற்கொள்வதற்கு ஒருவருக்கு ஒருவழிக் கட்டணமாக இலங்கை ரூபாவில் 27,000 ரூபாவும் இருவழிக் கட்டணமாக 53,500 அறவிடப்படவுள்ளதுடன், 55 கிலோகிராம்வரை இலவசமாக பொருட்களை எடுத்துச் செல்லலாம்.
இறுதியாக 1984ஆம் ஆண்டு தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் கப்பல் சேவை இடம்பெற்றிருந்தது. நாட்டில் நிலவிய உள்நாட்டு யுத்தத்தை தொடர்ந்து கப்பல் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. யுத்தம் முடிவடைந்து 14 வருடங்களின் பின்னர் மீண்டும் கப்பல் சேவை இப்போது ஆரம்பமாகியுள்ளது.
அதனால் 40 வருடங்களின் பின்னர் இலங்கைக்கும் தமிழகத்துக்குமிடையில் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
இதேவேளை, நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு வருவதற்கு ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து ஒருவழிக்கட்டணமாக 7,670 ரூபா அறவிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..
இதனை www.kpvs.in. என்ற இணையதளத்துக்குச் சென்று பயணத் திகதி, கடவுச்சீட்டு நகல், விசாவின் நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து பணத்தை ஒன்லைனில் செலுத்தி டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.
இலங்கையின் இணையத்தளம் அல்லது அருகிலுள்ள சுற்றுலா நிறுவனங்களை அணுகி கப்பல் பயணத்துக்கானன சுற்றுலா வீஸாவை ஒரே நாளில் பெற்றுக்கொள்ளலாம்.
முதல் நாள் பயணத்துக்கு கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜி.எஸ்.டி. வரி, 75 சதவீத சிறப்பு சலுகையுடன் ரூ.2,803 மட்டும் வசூலிக்கப்பட்டது.
இந்தப் பயணிகள் கப்பல் மணிக்கு 36 கிலோமீற்றர் வேகத்தில் செல்லக்கூடியது. இதில் பயணிகளுக்குத் தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்கள், நொறுக்கு தீனிகள் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏ.சி. வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ள கப்பலில் பொழுதுபோக்குக்காக 6 தொலைக்காட்சி பெட்டிகளுடன் தேவையான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனியே கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆபத்துக் காலங்களில் உயிர் காக்கும் மிதவைப் படகுகள், மருத்துவ உபகரணங்கள், தீயணைப்புக் கருவிகள் அனைத்தும் உள்ளன.
இந்தப் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை 10 நாட்கள் மட்டுமே நடைபெறவுள்ளது. அதன் பின்னர், வட கிழக்கு பருவமழை காலமென்பதால் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் சில மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் மார்ச் மாதம் முதல் தினமும் போக்குவரத்து தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருச்சி எம்.கே.ஷாகுல் ஹமீது, யாழ் விசேட நிருபர் மயூரப்பிரியன்