ஆர்.பி.பிலிம்ஸ் சார்பில் ஆர். பி. பாலா தயாரிக்கும் படம், ‘கொலைச்சேவல்’. அறிமுக இயக்குநர் வி. ஆர். துதிவாணன் இயக்கும் இந்தப் படத்தில் கலையரசன், தீபா பாலு முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். பால சரவணன், அகரன் வெங்கட், ஆதவன், கஜராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். பி. ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு சாந்தன் இசையமைத்துள்ளார்.
படம் பற்றி தயாரிப்பாளர் ஆர்.பி.பாலா கூறும்போது, “இதற்கு முன் மலையாளப் படங்களான புலிமுருகன், லூசிஃபர் உட்பட ஏராளமான டப்பிங் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறேன். பரத் நடித்த ‘லவ்’ என்ற படம் மூலம் தயாரிப்பாளர் ஆனேன். அது வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அடுத்து ‘கொலைச்சேவல்’ படத்தைத் தயாரித்துள்ளேன்.
எழுத்தாளர் இமையம் எழுதிய ‘கொலைச்சேவல்’ கதைக்கும் இந்தப் படத்துக்கும் தொடர்பு இல்லை. இந்தக் கதைக்கு அந்தத் தலைப்பு பொருத்தமாக இருந்ததால், அவரிடம் அனுமதி வாங்கி பயன்படுத்தி இருக்கிறோம். இது காதல் கதை. சமுதாயத்துக்குத் தேவையான முக்கியமான விஷயத்தையும் இந்தப் படம் பேசும். ஜவ்வாதுமலை பின்னணியில் கதை நடக்கிறது. கடைசி 20 நிமிடம் மனதை உலுக்குவதாக படம் உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்துவிட்டது” என்றார்.