மனித ஜீவிகளாகவே கருதப்படாமல், மிக இழிவாக நடத்தப்பட்டு, மலையக மக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்துமே நிராகரிக்கப்பட்டு, அவர்கள் இன வன்முறைக்கும் ஆளாக்கப்பட்ட இன அவலத்தைக் கண்டும் கேட்டும் அனுபவித்தும் வளர்ந்த தலைமுறையின் குரலாக மாத்தளை சோமு வெளிவருகிறார். நாடற்றவர்கள் உருவான அவலத்தை, ஸ்ரீமாவோ -சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் ‘ஒப்பாரிக் கோச்சியில்’ அந்த மக்கள் நாடு கடத்தப்பட்ட கொடூரத்தைக் கண்கொண்டு பார்த்தவர். தமிழகத்தில் திருச்சியில், துறையூரில் தாயகம் திரும்பிய மலையகத் தமிழரின் இன்னல்களை, ஏக்கங்களை நெருங்கி நின்று பார்த்தவர். தமிழகத்தின் வாழ்வியலை அந்த தேசத்தின் அங்கமாகவே நின்று தரிசித்தவர். அவுஸ்திரேலியக் கண்டத்தில் அவர் தரித்துநின்றபோது, புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் மக்களின் ஓர் கூறாகத் தன்னை அடையாளம் காண்கிறார். நாடுகள், தேசங்கள் என்ற எல்லைக்கோடுகளின் வெறுமையை அவதானிக்கிறார். ஒவ்வொரு வாசலிலும் விதம் விதமான பூசல்கள், பேதங்கள், முரண்பாடுகள் பொசிவதைக் கூர்ந்து நோக்குகிறார்.
தினபதி, தினகரன், வீரகேசரி, தினக்குரல், சிரித்திரன்,சிந்தாமணி, தீபம், குங்குமம், இந்தியா டூடே, அக்கினிக்குஞ்சு, கலைமகள், தினமணி சுடர், ஆனந்தவிகடன், தினமணி கதிர், பாரிஸ் ஈழநாடு, தாமரை, புதினம், கல்கி, ஓம் சக்தி, இனிய உதயம், தீராநதி, காமதேனு என்று இவ்வளவு பத்திரிகை களில் தமது எழுத்தைப் பதித்த வேறு ஒரு ஈழத்து எழுத்தாளரைச் சொல்வதற்கில்லை.
நாற்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், 1979 இல், தமிழகத்தில், அண்ணாசாலையில் சென்னை மாவட்ட மத்திய நூலகக் கட்டடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இலக்கியக் கூட்டமொன்றில் ஈழத்தின் வட, கிழக்கு இலக்கிய முயற்சிகள், மலேசிய இலக்கியங்கள் பற்றியெல்லாம் பேசப்பட்டபோது, மலையக இலக்கியம் பற்றி எதுவுமே பேசப்படவில்லையே என்ற ஆதங்கத்தில், மலையக எழுத்துகள் நூலுருப்பெறவேண்டும் என்ற வேணவாவில், மறு ஆண்டிலேயே மலரன்பன், மாத்தளை வடிவேலன், மாத்தளை சோமு ஆகிய மூவரின் சிறுகதைகளைத் தொகுத்து, ‘தோட்டக் காட்டினிலே’ (1980) என்ற தலைப்பில் வெளிக்கொணர்ந்ததில் தனது செயலூக்கத்தைக் காட்டியவர் மாத்தளை சோமு.
இன்று மலையக இலக்கியம் பல பரிமாணங்களில் ஆழக்காலூன்றி, வேரூன்றி, கிளைபரப்பி செழித்து நிற்கின்றதெனில், அதற்கு நீர்வார்த்த மலையக மண்ணின் புதல்வர் அவர்.
மாத்தளை சோமுவின் கதைகளில் உலாவரும் முதியோர் தோட்டங்களில் ஓடாய் உழைத்துத் தேய்ந்தவர்கள். சிலர் துணை யாருமற்ற தனியர்களாக உழல்பவர்கள். சிலர் தங்களின் சொந்த மகன்மார்களாலேயே உதாசீனப்படுத்தப்பட்டு வீடு,வாசலை இழந்து வீதிகளுக்கு வருபவர்கள். மாத்தளை சோமுவின் ஆரம்ப எழுத்துகளில், 1969-_ 1974 காலப்பகுதியில் எழுதப்பட்ட 10 கதைகளில் 6 கதைகளில் முதியோரே முக்கிய பாத்திரங்களாக வருகிறார்கள். ‘ஒரு கதாபாத்திரத்தின் முடிவுறாத கதை’ என்ற சிறுகதையில் மகனால் கைவிடப்பட்டு, சாப்பாட்டுக்கே வழியற்று நிற்கும் கிழவனின் பரிதாப நிலையை மாத்தளை சோமு நேர்த்தியாகக் கொண்டுவருகிறார். ‘ஒரு தெருவின் கீதம்’ என்ற கதையில் விழிப்புலன் இழந்த கிழவி, தனது கணவன் இறந்துபோனதை அறிந்து, ‘கெழவன் செத்துப் போயிட்டானா? அப்போ நா இனி எப்படி வாழ்வேன்?’ என்று புலம்புகிறாள். ‘என்னாலே முடிஞ்ச மட்டும் ஒங்களக் காப்பாத்திரேன்’ என்று கிழவியைக் காப்பாற்ற முன்வரும் ஒரு தாடிக்கார முதியவரை அறிமுகம் செய்கிறார் சோமு. எல்லாத் துர்ப்பாக்கிய சூழலிலும் எங்கோ மனிதாபிமானத்தின் கசிவு துலங்கத்தான் செய்கிறது என்பதைக் கோடி காட்டுகிறார்.
தோட்டங்களில் நிர்வாகப் பணிகளில் இருக்கும் கண்டக்டர்மார் போன்றோர் தொழிலாளர்களை இழிவாக நடத்தும் போக்கினை ‘லயத்துப்பயல்’ என்ற கதை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. அதிகாரமும் சுரண்டலும் மலையகத் தமிழர் வாழ்வில் சகல தளங்களிலிருந்தும் செயற்படுவதை மாத்தளை சோமுவின் அனைத்துக்கதைகளுமே பிரதிபலிக்கின்றன. மலையகத்துச் சிறுவர்கள் நகர்ப்புறங்களில் வீட்டுவேலைகளில் ஈடுபடுத்தப்படும் நிலைமைகளில், சிறுவர்கள் வேதனையுறுவதையும் பெற்றோர் பணத்தையே குறியாகக் கருதிச் செயற்படுவதையும் ‘பகல் நேரத்து நட்சத்திரங்கள்’ கதை பேசுகிறது. இன்று தலைநகர் கொழும்பில் மலையகத்து இளம் பெண்கள் சித்திரவதைக்குள்ளாகி, கொலை செய்யப்படும் வரை குரூரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
1983 இன வன்முறையைத் தொடர்ந்து தமிழகம் சென்ற மாத்தளை சோமுவுக்கு தமிழகத்தின் வாழ்வியலில் தன்னையும் இணைத்துக் கொள்வதில் எந்தச் சிரமும் இருந்திருக்கவில்லை. சோ.சிவபாதசுந்தரம், தர்மு சிவராம், பாலுமகேந்திரா, செ.கணேசலிங்கம் போன்றோர் தமிழகத்தையே தங்கள் வாழிடமாகத் தேர்ந்தனர். தமிழகத்தின் கலை, இலக்கியத்தில் ஆழ்ந்த தடங்களையும் விட்டுச் சென்றுள்ளனர்.
மாத்தளை சோமுவுக்கு திருச்சியில் அவரது பூர்வீகக் கிராமமான துறையூர் இன்றும் அவரை அடையாளம் கண்டுகொள்ளும் கிராமமே. அந்தத் தொடர்புகள் அவருக்கு உயிர்ப்புள்ளவை.
அவரது எழுத்து வாழ்க்கையிலும் ஜெயகாந்தனே அவருக்கு ஆதர்சமாக இருந்திருக்கிறார்.’கவிதைகள், பேட்டிகள், கட்டுரைகள் எழுத ஆரம்பித்த நான், சிறுகதை எழுத்தாளனாக ஆரம்பித்தது 1967ஆம் ஆண்டில். அதற்கு முழுக் காரணகர்த்தா ஜெயகாந்தன். அவருடைய சிறுகதைகளைப் படிக்க ஆரம்பித்த பின்னர்தான் நான் சிறுகதை எழுத ஆரம்பித்தேன். எழுத்து ஏன் எழுதப்படவேண்டும், எழுத்தின் மூலமாக இந்தச் சமுதாயத்துக்கு எதனை அடையாளம் காட்டவேண்டும் என்பதை எல்லாம் ஜெயகாந்தன் மூலமாகவே நான் படித்துக் கொண்டேன். பிறகு ஒவ்வொரு சிறுகதை எழுதும்போதும் மானசீகமாக ஜெயகாந்தனைத் துணையாகக் கொண்டே எழுதுவேன். சிலர் பிள்ளையார் சுழி போட்டுக்கொள்வதுபோல்! அவ்வாறு எழுதினால்தான் எனக்கொரு நிறைவு. அதனால்தான் போலும் எனது சிறுகதைகள் ஜெயகாந்தன் கதைபோல் இருப்பதாகச் சிலர் சொன்னார்கள்’ என்று மாத்தளை சோமு ‘அவன் ஒருவனல்ல’ என்ற தனது சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய தன் முன்னுரையில் குறிக்கிறார்.
மாத்தளை, திருச்சி என்ற இடங்களைத் தாண்டி, அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்து, சிட்னியில் வாசம் கொண்ட காலப்பகுதியிலிருந்து சோமு எழுதிய கதைகள் வாழ்வின் புதிய தரிசனங்களை அவருக்கு உணர்த்தியிருக்கின்றன. புலம்பெயர் இலக்கியத்தின் முக்கிய கூறாக மாத்தளை சோமுவின் கதைகள் இலங்குகின்றன.
மலையகத்தைப் பின்புலமாககொண்டு எழுதப்பட்ட கதைகளுக்கு நிகராக, ஏறத்தாழ 40 கதைகளை புலம்பெயர் வாழ்வின் பின்னணியிலும் சோமு எழுதியிருக்கிறார். மலையகம், தமிழகம், புலம்பெயர் வாழ்வு என மூன்று புலங்களில் ஊற்றெடுக்கும் இலக்கியமாக, திரிவேணி சங்கமமாக மாத்தளை சோமுவின் எழுத்துகள் தமிழ் இலக்கியத்தில் தனிச் சிறப்பிடம் பெறுகின்றன.
மாத்தளை சோமுவின் புனைவுலகின் பெருஞ் சாதனையாக, அவரின் நூறு சிறுகதைகள் கொண்ட இத்தொகுப்பு கொண்டாடப்படும் என்பதில் ஐயமில்லை.
மு. நித்தியானந்தன்