எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயுத் தட்டுப்பாடு, வீதிகளில் மக்கள் வரிசைகள், மக்கள் போராட்டங்கள் என்று பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் நாட்டைப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொருளாதார ரீதியில் ஏற்பட்ட பாதிப்பைச் சரி செய்வதற்குத் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
நாட்டின் தலைமையைப் பொறுப்பேற்பதற்கு எவரும் தயாராக இல்லாத சந்தர்ப்பத்தில் தாமாக முன்வந்து பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவர், மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகளின் காரணமாக சீரான பாதையை நோக்கி நாடு செல்லத் தொடங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கு கடந்த அரசாங்கம் யோசித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், உறுதியான முடிவை எடுத்து சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்ததில் ஆரம்பித்து பல்வேறு முன்னேற்றகரமான செயற்பாடுகள் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சர்வதேச மட்டத்தில் காணப்படும் தொடர்புகள் நாட்டைப் பொருளாதார ரீதியில் முன்கொண்டு செல்வதற்குப் பெரும் உதவியாக அமைந்து வருகின்றன. கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்புணர்வுகள் காரணமாக ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. எனினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று சிறிது காலத்துக்குள் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் புதுப்பிக்கப்பட்டு, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான கடன் மறுசீரமைப்பு விடயத்தில் மத்தியஸ்தம் வகிக்க ஜப்பான் உதவியிருந்தது. ஜனாதிபதிக்கு சர்வதேச நாடுகள் மத்தியில் காணப்பட்ட வரவேற்புக்கு இது சிறந்ததொரு உதாரணமாகக் காணப்படுகிறது.
இவ்வாறான பின்னணியில் அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு பல்வேறு உலகத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்கும், காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச சவால்களை முகங்கொடுப்பதற்கும் இந்தச் சந்திப்புக்கள் பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளன.
உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவுடன் நடத்திய சந்திப்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் முன்னெடுக்கப்படும் பொருளாதார மற்றும் சமூக மறுசீரமைப்பு வேலைத் திட்டங்கள் பாராட்டப்பட்டன. இலங்கையின் புத்தாக்கப் பாதைக்கான பிரவேசம் குறித்தும் உலக வங்கியின் தலைவர் மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்தார்.
தென்கொரிய ஜனாதிபதி யூன் செக் யெயோல் உடன் நடத்திய கலந்துரையாடலில், தென்கொரியா இலங்கைக்கு வழங்கிவரும் தொடர்ச்சியான உதவிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்றி பாராட்டியிருந்ததுடன், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களை மேலும் ஏற்படுத்த உதவுவதாக தென்கொரிய ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்ததுடன், தெற்காசிய பிராந்தியத்தின் நாடுகளாக, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு நாட்டுத் தலைவர்களும் விரிவாக கலந்துரையாடியதுடன், கடந்த சவாலான காலகட்டத்தில் இலங்கைக்கு பங்களாதேஷ் வழங்கிய அசைக்க முடியாத ஆதரவுக்கான நன்றியைத் தெரிவித்திருந்தார்.
இது மாத்திரமன்றி நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், ஈரான் ஜனாதிபதி கலாநிதி செய்யித் இப்ராஹிம் ரைசி, அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் ஆகியோரையும் ஜனாதிபதி நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். எதிர்காலத்தில் இலங்கைக்கும் அந்த நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது மற்றும் வர்த்தக ரீதியான ஒத்துழைப்புக்களை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்தச் சந்திப்புக்களின் போது கலந்துரையாடப்பட்டன. இலங்கைக்குத் தொடர்ந்தும் தம்மாலான உதவிகளை வழங்குவதாக இந்த உலகத் தலைவர்கள் உறுதியளித்திருந்தனர்.
உலக நாடுகளின் தலைவர்களை மாத்திரமன்றி, சர்வதேச அமைப்புக்களின் பிரதானிகளையும் சந்தித்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்திருந்தார். சட்டரீதியாக மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ள மறுசீரமைப்புக்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்ற பின்னர் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைகள் என்பவை குறித்து ஜனாதிபதி இதன்போது விரிவான விளக்கங்களை வழங்கியிருந்தார்.
இதன் ஒரு அங்கமாக நியூயோர்க் நகரத்தில் உள்ள ஐ.நா சபையின் இணைக்காரியாலயத்தில் ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் பற்றி சுருக்கமான விளக்கமளித்த ஜனாதிபதி, அதனை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் இங்கு எடுத்துரைத்திருந்தார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவிற்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு மற்றுமொரு முக்கியத்துவமான சந்திப்பாக அமைந்தது. இலங்கையின் நிதித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.
இலங்கையில் பணவீக்கத்தைக் குறைத்ததுடன், நாட்டில் வர்த்தகத்திற்கு பொருத்தமான சூழலை உருவாக்கியமை மற்றும் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் மீளாய்வுப் பணிகளுக்காக இலங்கை வந்திருக்கும் சூழ்நிலையில் இந்த உயர்மட்டச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுவரும் முன்னேற்றம் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் சாதகமான கருத்தை வெளியிட்டிருப்பது நம்பிக்கை ஏற்படுத்தும் சமிக்ஞையாக அமைந்துள்ளது.
அதேநேரம், சமூக ஊடக நிறுவனமான நியூயோர்க் மெட்டா (முகப்புத்தகம் போன்ற சமூக ஊடகங்களின் உரிமையைக் கொண்ட நிறுவனம்) நிறுவனத்தின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் சேர். நிக் கிளெக் அவர்களையும் ஜனாதிபதி நியூயோர்க்கில் சந்தித்திருந்தார். இதன்போது, இணையத்தளம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் வெறுப்புப் பேச்சுக்கள் மற்றும் போலிச் செய்திகளை மட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் புதிய நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுத்துக் கூறினார்.
அது தொடர்பில் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தபடவுள்ள உத்தேச சட்டமூலத்தின் மூலம், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உயர்நீதிமன்றத்தின் ஊடாக எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.
இதுபோன்ற உயர்மட்டச் சந்திப்புக்களுக்கு அப்பால், ஐ.நா பொதுச்சபை அமர்வுக்கு சமாந்தரமாக நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி, தனது அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள் மற்றும் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை பற்றிய தெளிவான விளக்கங்களை வழங்கியிருந்தார்.
நியூயோர்க் நகரில் நடைபெற்ற கடல்சார் நாடுகளுக்கான 3 ஆவது இந்து – பசுபிக் தீவு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த ஜனாதிபதி, இந்து-பசுபிக் பிராந்தியத்தில் பெரும் வல்லரசுப் போட்டி நிலவிய போதிலும், இந்து சமுத்திரம் மற்றும் தென்பசுபிக் சமுத்திர தீவு நாடுகளின் சுதந்திரம், அவற்றின் உள்ளக விவகாரங்களில் தலையிடாமை மற்றும் அவர்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பிராந்தியத்தின் அனைத்து நாடுகளும் அர்ப்பணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
இதற்கும் அப்பால், ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தின் 78 ஆவது அமர்வில் உரையாற்றியிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உலக நாடுகள் பொதுவாக எதிர்கொண்டுள்ள காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்துச் சுட்டிக்காட்டியிருந்ததுடன், இதிலிருந்து உலகைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார். இது விடயத்தில் தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றது என்பதையும், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகள் பற்றியும் ஜனாதிபதி விளக்கமளித்திருந்தார்.