Home » ஒரு சுமைதாங்கி சுமையாகிறது…

ஒரு சுமைதாங்கி சுமையாகிறது…

by Damith Pushpika
September 24, 2023 6:27 am 0 comment

காலைச் சூரியன் தனது கடமைகளைச் செய்யத் தொடங்கிவிட்டான்… வழமையாகவே காலைச் சூரியனோடு போட்டி போடுவது போல் எழுந்து தொழுது தன் கடமைகளை முடித்துவிடும் மஜீத் நானா இன்று ஸுபஹு தொழுதபின் மீண்டும் படுக்ைகக்ேக சென்றுவிட்டார்….

அவருக்காகக் கொடுக்கப்பட்டிருந்த அறை, அறை என்பதை விட சமையலறையின் ஒரு பக்கமாக கார்ட் ​போர்ட் ஸீட்டால் மறைக்கப்பட்ட மறைவிடம் என்பதுதான் பொருந்தும்…. இருளாகவே இருக்கிறது.

அந்தவீடு அவரது சின்ன மகன் ரமீஸுடையது…. ரமீஸின் குடும்பத்தினர் விடுமுறைக்காக நுவரெலியா சென்று இரவு தான் திரும்பி இருந்தனர்…. இன்று எத்தனை மணிக்கு நித்திரை கொள்வார்களோ? ….

மஜீத் நானாவுக்கு ஒரு தேனீர் குடிக்க வேண்டும் போலிருந்தது. நேற்றே அதற்கான பொருட்கள் எல்லாம் காலியாகிவிட்டன…..

பொறுத்துக் கொண்டார்…..

பசி, தாகம் எல்லாம் பொறுத்துப் பொறுத்துப் பழகியாயிற்று..

முன்னரெல்லாம் எழுந்து ஒரு ‘டீ’ குடித்த பின் வீட்டைச் சுற்றிக் கூட்டிப் பெருக்கிச் சுத்தமாக்குவார்…. கடந்த சில நாட்களாக அதற்கும் மனமில்லாமலேயே இருக்கின்றார்.

மெதுவாக எழுந்து சத்தமில்லாது கதவைத் திறந்து வெளியே சென்றபின் மெதுவாகவே சாத்திவிட்டு பாதையோரமாக நடக்கத் தொடங்கினார்.

ஜப்பார் நானாவின் தேனீர்க் கடை சலசலப்படைந்து கொண்டிருந்தது. பல தெரிந்த முகங்கள்…. பலர் ஸ்லாம் கூறினர்….

“மஜீத் மச்சான்… வாங்கோ…. ஒரு ‘டீ’ குடிப்பம்” கூப்பிட்டது ரஸ்ஸாக்.

கையில் காசே இல்லை…. இப்படி?

“என்ன மச்சான்…. வாங்க… இண்டைக்கு ஏன்ட கணக்குல டீ குடிங்க….” இந்த வார்த்தை மஜீத் நானாவுக்கு பெரிய ஆறுதலாக இருந்தது. அந்த ‘டீ’ அவருக்கு அமுதமாயினித்தது.

கூட்டம் கடையைவிட்டுச் சிறிது சிறிதாக கரைய, மஜீத் நானாவும் வெளியேறி தன்பாட்டில் நடக்கத் தொடங்கினார்.

கால்கள் முன்னோக்கி நடக்க மனமோ பின்னோக்கி நகரத் தொடங்கியது….

இதே ஊரில் பிறந்து இங்கேயே ஓஎல்வரை படித்து சிறிதாக வியாபாரத்தை தொடங்கி… வளர்ச்சியடைந்து ராசிதாவைத் திருமணம் செய்து ஆணும் பெண்ணுமாய் நான்கு பிள்ளைகளைப் பெற்று இரவு பகலாய் உழைத்து அவர்களை எல்லாம் படிப்பித்து நல்ல நிலைகளுக்குக் கொண்டுவந்த…. ஆட்கொல்லி கொரோனாவால் ராசிதாவை இழந்து மனமெல்லாம் பற்றி எரிய ராசிதாவை தீக்கு உணவாக்கி….

“ஓ….. ராசிதாவே ஒங்களோடேயே நானும் மௌத்தாகி இருக்கக் கூடாதா?” வாய்விட்டே சப்தமிட வேண்டும் போல் மனதில் ஒரு வெறி…

சிறிது சிறிதாக வியாபாரமும் குறைய…. மனதோடு உடம்பும் தளர….

மஜீத் நானா… நடைப் பிணமானார்.

மூத்த மகன் ரம்ஸீன் “வாப்பா புள்ளைய ஸ்கூலுக்கு சேர்க்கணும்…. ஊட்டுட உறுதி ஏன்ட பேருக்கு இரிக்கணுமாம்…. தண்ணி பில், கரன்ட் பில் எல்லாம் ஏண்ட பேருக்ேக இரிக்கணுமாம்” என்று மஜீத் நானாவிடம் கெஞ்சினான்.

“மவன் ரம்ஸீன்…. அதெப்புடி ஒங்கட பேருக்கு மட்டும் மாத்துறது…. ஊடு நாலு பேருக்கும் தானே……?” என்று நிலைமையை விளக்கினார்.

நாலு பேரும் கதைத்தார்கள்…. கதைத்தார்கள்…. சிறு சண்டைகளும் பிடித்தார்கள்….

பாடாய் பட்டு உழைத்து வீணாக்காமல் மிச்சப்படுத்தி…. வீட்டைக் கட்டிய மஜீத் நானாவின் அபிப்பிராயத்தைக் கேட்காமலேயே அவர்களாக ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

“வாப்பா…. நாங்க நாலுபேரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்துட்டோம்…. இந்த ஊட்ட வித்து நாலுபேரும் காச பிரிச்சுக் கொளறோம்….. அவங்கவங்க பங்குக் காசுல ஊடுகள வாங்கிக்கவோ வேறு என்னமாவது செய்யவோ முடியும்….. என்ன சொல்றீங்க வாப்பா….”

இந்த முடிவைக் கேட்டபோது துக்கம் அவரது தொண்டையை அசுரத்தனமாக இறுக்கியது.

ராசிதா இருந்திருந்தாலாவது ஏதாவது செய்திருக்கலாம்.

நாலு பிள்ளைகளும் வீட்டை விற்றுப் பணமாக்கிப் பிரித்துக் கொள்வதில் ஒற்றைக் காலில் நின்றார்கள்.

கடைசியில்

மஜீத் நானாவின் வீட்டுக்கு பக்கத்து ஊர் திஸாநாயக முதலாளியின் வீடானது.

பணத்தைப் பிரித்தார்கள்.

மிகுந்த கவலையோடு பார்த்துக் கொண்டிருந்த மஜீத் நானா காணி விற்பனையில் கையெழுத்திட்டார். கையெழுத்திட்ட கையில் பிள்ளைகள் பத்தாயிரம் ரூபாயை வைத்தனர்.

எடுக்க மனம் வரவில்லை. ஆனாலும் எடுத்தார்.

“இந்த பத்தாயிரம் ஏன்ட மையத்து செலவுக்கு…. ஏன்ட மையத்து செலவு ஏன்ட காசிலிருந்தே நடக்கட்டும்” என்று பிள்ளைகளுக்கும் காணி உறுதியை எழுதியவர்களுக்கும் கேட்கும்படியே சொல்லிவிட்டு வெளியேறினார்.

நேரே பள்ளிவாசலுக்குச் சென்றார்.

இரண்டு ரச்-அத் தொழுதார்.

உட்கார்ந்து அழுதார்….

ரம்ஸீன் எப்படியோ சிறிய வீடொன்றை வாங்கினான்… மகள்மார் பணத்தை என்ன செய்தார்கள் என்று அவர் கேட்கவில்லை…. கடைசி மகன் ரமீஸ் பணத்தை வியாபாரத்தில் போட்டுவிட்டு இப்போது வாடகை வீட்டில் இருக்கிறான்….

மஜீத் நானா ஒவ்வொரு மாதம் ஒவ்வொரு வீட்டில் இருக்க வேண்டும் என்று ஒப்பந்தம். இப்போது ரமீஸின் வீட்டில்…. நாளையோடு மாறவேண்டும்…..

ஒவ்வொரு பிள்ளை பிறந்த போதும் அவரும் ராசிதாவும் மகிழ்ந்த மகிழ்ச்சிதான் என்ன? பார்த்துப் பார்த்து அந்தப் பிள்ளைகளை ஒரு குறையும் இல்லாமல் வளர்த்தது தான் என்ன?

ஒரு நிமிடமாவது இந்தப் பிள்ளைகளைத் தங்களுக்குப் பாரமாக சுமையாக நினைத்திருப்பார்களா? பிள்ளைகளின் ஒவ்வொரு செயல்களையும் சுவையாக அல்லவா நினைத்துப் பூரித்தார்கள்!

மஜீத் நானாவின் கால்கள் எப்படியோ பஸ் நிலையம் வரை வந்துவிட்டன….. அங்கு போடப்பட்டிருந்த பென்சில் உட்கார்ந்து கொண்டார். இலேசாக உடம்பு வியர்க்கத் தொடங்கியது…..

இங்கே எதற்கு வந்தாரென்று அவருக்ேக தெரியவில்லை….

அடுத்து அவர் போக வேண்டியது மூத்த மகனின் வீடு…. ஒரு மாதம் அங்குதான் இருக்க வேண்டும்.

அவருக்கு அங்கு செல்ல விருப்பமே இல்லை…. எப்பொழுதுமே கடுகடுப்பாக இருக்கும் மருமகள்…. சதாவும் தொல்லைதரும் பேரப்பிள்ளைகள். முன் விறாந்தாயில் ஒரு மூலையில் அவரது படுக்ைக…. அது எல்லோரும் படுத்த பின்னர்தான் விரிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை! உடம்பு எவ்வளவு அசதியாக இருந்தாலும் பகலில் சாய்ந்துகொள்ள ஒரு இடம் இல்லை.

மஜீத் நானாவின் நெஞ்சின் ஆழத்திலிருந்து ஒரு பெருமூச்சு வந்தது…..

பஸ் நிலையத்தின் ஒரு மூலையில் தனது உடைமைகளோடு உட்கார்ந்திருக்கும் ஒரு யாசகனைப் பார்த்த ​போது “ஏன் நானும் இப்படியாவது இருக்கக் கூடாது” என்ற எண்ணம் தலைதூக்கியது.

புறங்கையால் கண்களைத் துடைத்துக்ெகாண்டார் மஜீத் நானா.

வந்த வழியே மீண்டும் நடக்கத் தொடங்கினார். பசி வயிற்றைக் குடைந்தது.

திடீரென வந்த பெரிய கார் ஒன்று பிரேக் பிடித்து நின்றபோது அவர் ஆடிப்போனார்.

கார் கண்ணாடியைத் திறந்து பார்த்த ஒருவர் கார்க் கதவைத் திறந்து கொண்டு அவசரமாக இறங்கி மஜீத் நானாவின் கைகளைப் பற்றிக் கொண்டார்.

“மொதலாளி….. என்னா இது…. எங்க போறீங்க….” ​பேச முடியாது திணறியபடியே கண்கள் கலங்க நின்றவர் கணபதி.

கணபதி…. பல வருடங்களுக்கு முன் மஹீத் நானாவின் கடையில் கணக்குப் பிள்ளையாக பணியாற்றியவர்…. அவரது சம்பளத்தில் சிறு தொகையை மாத்திரமே எடுத்துக் கொண்டு மிச்சத்தை மஜீத் நானாவிடமே கொடுத்து வைத்து, பின்னர் மொத்தமாக எடுத்து, கொழும்பு சென்று சிறிதாக வியாபாரம் தொடங்கி….

கணபதியின் கைகளில் மஜீத் நானாவின் கண்ணீர்த்துளிகள் பட்டுச் சிதறின.

கணபதி அப்படியே கட்டித் தழுவிக் கொண்டார்….

“ஏறுங்க…. எங்கயாவது போய் ஆறுதலாகப் பேசுவோம்” கணபதியின் கட்டளையை மீற முடியவில்லை.

சற்று தூரத்திலிருந்த ஹோட்டல் வரை காரை ஓட்டிச் சென்று நிறுத்திவிட்டு உள்ளே அழைத்துச் சென்ற கணபதி காலைச் சாப்பாட்டுக்கு ஓடர் கொடுத்தார்.

கதைக்கத் தொடங்கிய போது தனது நிலைபற்றிச் சொல்வதா வேண்டாமா என்று தயங்கிய மஜீத் நானா, எல்லா விடயங்களையும் கொட்டித் தீர்த்துவிட்டார்.

இப்போது இருவரும் அழுதனர்.

மற்றவர்கள் பார்க்கின்றார்களே என்ற உணர்வுகளுக்ெகல்லாம் அப்பாற்பட்டு உணர்ச்சிச் சிதறல்கள்.

வெளியே வந்தபின் மீண்டும் காருக்குள் ஏறிக்கொண்டனர். கார் புறப்படவில்லை. கணபதிதான் கதைக்கத் தொடங்கினார்.

“மொதலாளி…. இப்ப எங்கப் போகப் போறீங்க?”

இனி மூத்த மகனின் ஊட்டுக்கு போவணும்….. அங்க போவ எனக்குப் புரியமே இல்ல….. பேசாம மௌத்தாகிட்டாலும் பரவாயில்லை”

“சே…. சே…. அப்புடி எல்லாம் சொல்லாதீங்க… ஒங்கட உப்ப திண்டு மனுஷனாகினவன் நான்…. பேசாம என்னோட வாங்க…. ஏன்ட கடையில பின்பக்கம் ரெண்டு ரூம் இருக்கு…. அதுல இரிங்க…. மொதலாளி….. கடைசி வரைக்கும் நான் ஒங்கள பாத்துக்கறேன்…. கொஞ்சம் தள்ளியே பள்ளிவாசலும் இருக்கு….”

மஜீத் நானா இப்போது வாய்விட்டே அழத்தொடங்கி விட்டார்.

“க…ண….ப…தி… நீங்க…. நீங்க….” அவரால் பேசவே முடியவில்லை.

ரமீஸின் வீட்டிற்குப் போய் அவரது உடமைகளாக இருந்த சிறிய ட்ரவலிங் பேக்ைக எடுத்துக்ெகாடுக்க கணபதி அதைக் கார் பின்சீட்டில் வைத்தார். ஏதோ ஞாபகம் வந்தவராக அதை எடுத்துத் திறந்து கையைவிட்டு அடியில் ஒரு என்வலப்பை எடுத்தார். பக்கத்தில் வந்து நின்ற மகன் ரமீஸிடம் கொடுத்துச் சொன்னார்.

“இதுல நான் ஏன்ட மையத்து செலவுக்காக ஊடுவித்தகாசில இருந்து எடுத்து வச்சிருந்த பத்தாயிரம் ரூபா இரிக்கி…. இதையும் நீங்க நாலுபேருமே பிரிச்சி எடுத்துக்ேகாங்க….. நான் போறேன்….”

இலேசான மனதுடன் காரில் ஏறினார், கார் புறப்பட்டது.

சுமைதாங்கிகள் சுமையாகிப் ​போகும் கதைகள் முடிவு காணப்படுமா?

(யாவும் கற்பனையே)

நயீமா சித்தீக்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division