அம்பாறையிலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த திலீபனின் நினைவு ஊர்தி திருகோணமலை பகுதியினூடாகச் செல்லும்போது அப்பகுதி மக்கள் சிலரால் தாக்குதலுக்கு உள்ளானது.
இச்சம்பவத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இச்சம்பவமானது வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் மாத்திரமன்றி தென்னிலங்கை அரசியலிலும் கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
திருகோணமலை சம்பவம் இவ்வாறிருக்கையில், கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் திலீபனின் நினைவு தினத்தை முன்னெடுப்பதற்கு நீதிமன்றத்திடமிருந்து பொலிஸார் தடையுத்தரவைப் பெற்றுள்ளனர்.
திலீபனின் நினைவுதின அனுஷ்டிப்பு சம்பந்தமாக தென்னிலங்கை பெரும்பான்மை அரசியல்வாதிகள் பலர் எதிரான கருத்துகளை வெளியிட்டுள்ளனர். அதாவது திலீபனின் நினைவு தினம் அனுஷ்டிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்பதே இவர்களது வாதம்.
மறுபுறத்தில் நோக்கும் போது இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிலதரப்பினர் கண்டனங்கள் வெளியிட்டு வருகின்றனர்.
குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது பொதுமக்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தியிருப்பது அவருடைய சிறப்புரிமையை மீறும் செயல் என்பது பாராளுமன்றத்தில் பலரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தென்பகுதி அரசியல்வாதிகள் சிலர் கூட இதனைக் கண்டித்திருந்தனர்.
கடந்த வருடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வீடுகள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்துக்கு ஒப்பானதாக இந்தத் தாக்குதலை சிலர் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதுபோன்ற தாக்குதல் சம்பவமானது கண்டிக்கத்தக்கது மாத்திரமன்றி, தடுக்கப்பட்டிருக்க வேண்டியது என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கின்றது.
திலீபன் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்த போதிலும், அவர் அஹிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தவர் என்பதால் நினைவுதினம் அனுஷ்டிப்பதில் தலையீடு செய்யலாகாது என்பது ஐக்கியத்தின் வழியில் சிந்திக்கின்ற அரசியல்வாதிகளின் கருத்தாக இருந்தது.
கடந்த காலங்களிலும் இவ்வாறான நினைவுதின நிகழ்வுகள் ஆங்காங்கே எதிர்ப்புக்களின் மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இருந்தபோதும், இம்முறை அம்பாறையிலிருந்து யாழ்ப்பாணம் வரையில் நினைவு ஊர்தியைக் கொண்டு சென்றமையின் பின்னணியில் இருக்கக் கூடிய அரசியல் பற்றியும் நோக்க வேண்டியுள்ளது.
ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று அஹிம்சைவாதி ஒருவரை நினைவுகூர்வதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது என்றாலும், ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் தற்போதைய நிலையில் இவ்வாறானதொரு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டதன் பின்னணியில் அரசியல் உண்டு என்பதை மறுக்க முடியாது.
ஐ.நா மனித உரிமை பேரவையின் அமர்வுகள் நடைபெறும் மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் வடக்கு, கிழக்கில் இவ்வாறான நிகழ்வுகள் அரங்கேற்றப்படுவது அவ்வப்போது சந்திக்கின்ற நிகழ்வுகளாகியுள்ளன. தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்கான கோரிக்கைகளை வலியுறுத்துவது ஒருபுறம் இருந்தாலும், இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கான நிகழ்ச்சி நிரல்களும் அரங்கேற்றப்படுகின்றன.
குருந்தூர் மலை விவகாரம் உள்ளிட்ட சில சம்பவங்களைப் பயன்படுத்தி சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமையொன்றை உருவாக்குவதற்கு இருதரப்பிலும் சிலர் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என்று செய்திகள் வெளிவந்திருந்தமை நினைவிருக்கலாம்
நிலைமை இவ்வாறு இருக்கும்போதே, திலீபனின் நினைவு ஊர்திப் பயணம் சிங்கள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாததாகும்.
அது மாத்திரமன்றி, சிங்கள மக்கள் வாழும் பகுதியின் ஊடாகப் பயணித்த திலீபனின் நினைவு ஊர்தியில் அங்குள்ள மக்கள் புரிந்து கொள்ளும் மொழியில் எவ்விதமான வெளிப்படுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டிருக்காமை சந்தேகத்தை வலுவடையச் செய்திருக்கலாம் என்று சாதாரண மக்களே பேசிக் கொள்கின்றனர். மறுபக்கத்தில், இனங்களுக்கிடையில் எப்பொழுதும் முரண்பாட்டை வைத்திருப்பதன் ஊடாக தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கும் பெரும்பான்மை அரசியல்வாதிகள் சிலரின் தூண்டுதலின் பேரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
திருகோணமலை சம்பவத்தின் போது தாக்குதல் நடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், கடந்த காலங்களிலும் திலீபனின் நினைவு தினம் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இதுபோன்ற ஊர்திகளைக் கொண்டு செல்ல ஒரு சில தமிழ் அரசியல் தரப்புக்கள் முன்னெடுத்திருந்த நடவடிக்கை தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்ற கவலை தமிழ் மக்கள் மத்தியில் நிலவுவதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
வடபகுதி அரசியல் களத்தை எடுத்து நோக்குவோமானால் அங்குள்ள ஒரு சில தரப்பினர் மாத்திரமே இதுபோன்ற செயற்பாடுகளை முன்னெடுத்து அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கு தொடர்ச்சியாக வழிவகுப்பதைக் காணக்கூடியதாகவிருக்கின்றது.
தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் அனுபவிக்கின்ற பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு இந்த அரசியல்வாதிகள் முற்படுவதில்லை. அதில் அவர்களுக்கு ஈடுபாடும் இல்லை.
அரசாங்கத்திடம் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கான பேரம்பேசும் சக்தியைக் கொண்டிருக்காத இத்தரப்பினர், தமிழர்களுக்கும் சிங்கள மக்களுக்குமிடையில் முரண்பாட்டைத் தூண்டும் வகையில் செயற்பட்ட வருவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வடக்கிலும், தெற்கிலும் மக்களின் உணர்வுகளைத் தூண்டி அதன் ஊடாக அரசியல் செய்யும் தரப்புக்களே இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். உண்மையில் வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் நீண்டகாலம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் படிப்படியாக பிரச்சினைகளிலிருந்து மீண்டுவரும் போது, நாளாந்தம் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
அரசியல் ரீதியான உணர்வுகள் மக்களுக்கு இருந்தாலும் அதனைவிடப் பாரிய நடைமுறைப் பிரச்சினைகள் அவர்களுக்குக் காணப்படுகின்றன. இவ்வாறான சவால்களையும், பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதே காலத்தின் தேவையாகும். இதனைத் தமிழ் அரசியல் தரப்புக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
உணர்வுபூர்வமான விடயங்களை கையில் எழுக்கும் தமிழ்த் தரப்பினர் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் விடயத்தில் ஏனைய கட்சிகளுடன் இணைந்ததாகப் பதிவுகள் இல்லை. ஏனைய தமிழ் அரசியல் தரப்புக்களுடன் இணைந்து கொள்ளாது தாம் தனித்துவமானவர்கள் என்பதைக் காண்பிப்பதற்கான முயற்சியாகவும் இதனைப் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற அரசியல் நோக்கம் கொண்ட தரப்புக்களின் செயற்பாடுகளுக்கு இரு தரப்பிலும் உள்ள மக்கள் இடமளிப்பதும் புத்திசாலித்தனமல்ல!
பி.ஹர்ஷன்