ஆளில்லா விமானங்களைக் கையாளுதல் மற்றும் கப்பல்களில் என்ஜின்களைப் பழுதுபார்த்தல் போன்றவற்றுக்கு 15,000 பெண்களுக்கு பயிற்சி அளிக்க இந்தியா தயாராக உள்ளது. தமிழக அரசு அதில் முன்னிலை பெற்றுள்ளது. ஆளில்லா விமானங்களை இயக்க பெண்களுக்கு அனுமதி வழங்கவும், விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு உரம் மற்றும் இரசாயனங்களைப் பயன்படுத்துவதற்காக ட்ரோன்களை வாங்குவதற்கு கடன் வசதிகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர் பற்றாக்குறைக்குத் தீர்வாக, விவசாயம் தற்போது நவீன தொழில்நுட்பத்திற்கு மாற்றமடைந்துள்ளது. பெண்களுக்கு ட்ரோன்களைக் கையாள அனுமதிப்பத்திரத்தை வழங்குவதன் மூலம் மீண்டும் பெரிய அளவிலான விவசாயத்தை குடும்பத் தொழிலாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய மக்கள் தொகையில் 51 சதவீதமானோர் பெண்கள். 2004 ஆம் ஆண்டு தரவுகளின்படி 35 சதவீத பெண்கள் தொழில் புரிகிறார்கள். கொவிட் தொற்று சூழ்நிலையுடன், இது 25 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதற்கிடையில் வைத்தியம், சட்டம், தொழில்நுட்பம் மற்றும் வணிகத்துறைகளில் இந்தியப் பெண்கள் பரவலாக அதிகாரத்தைப் பெற்று வருகின்றனர். பெண் விமானிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளதோடு, சமீபத்தில் வெற்றிகரமான சந்திரயான் விண்வெளித் திட்டத்துக்கு பெண் ஒருவர் தலைமை தாங்கினார்.
வேகமான பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தித் திட்ட முன்னேற்றத்தின் பின்னணியில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கு குறிப்பிடத்தக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில்துறை, விவசாயம் மற்றும் சேவைத் துறைகளின் பங்களிப்பில் புதிதாக சேர்க்கப்பட்ட ட்ரோன் பயன்பாடும் இங்கு குறிப்பிடத்தக்கது. ட்ரோன்களின் உபயோகம் காரணமாக ஒரு மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என நம்பப்படுகிறது.
இந்திய அரசாங்கம் தனது ஒன்பது பல்கலைக்கழகங்கள் மற்றும் 15 தனியார் பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதுடன், புதிய பாடநெறிகள் மூலம் இந்த இடைவெளியை நிரப்புவதற்கான பொறுப்பை வழங்கியுள்ளது. அமெரிக்கா, சீனா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ட்ரோன் உற்பத்தி மற்றும் நுகர்வில் உலகின் முன்னணி நாடுகளாக மாறியுள்ளதுடன், 2030 ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் மூன்றாவது இடத்தைப் பிடிக்க இந்தியா தயாராகி வருகிறது. இங்கு பெண்களின் உழைப்பு மற்றும் அவர்களின் தொழில்நுட்பத்திறன் மீது அதிக எதிர்பார்ப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
பழைய இந்திய கலாசார கட்டமைப்பு மற்றும் உற்பத்தி செயற்பாட்டில் பெண்கள் புறந்தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலைமையுடன் ஒப்பிடுகையில், தற்போதைய நுழைவு ஒரு புரட்சிகர மாற்றமாகும். ஐந்தாம் தலைமுறை தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் உடல் உழைப்பை தோற்கடித்து புத்திசாலித்தனத்தால் சம்பாதிக்கும் சமுதாயம் உருவாகி அதில் பெண்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
இந்தியாவில் விவசாயம் மற்றும் சேவைகளுக்கான தேவைகள் அதிகரித்துள்ளன. உற்பத்திக்காக பெண்களின் பிரதிநிதித்துவம் இன்றியமையாத காரணியாக மாறியுள்ளது. பெண்களின் பிரதிநிதித்துவம் முக்கியமானது என இந்திய நாடாளுமன்றமும் முடிவு செய்தது. அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் மாநில அரசு மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் முப்பது சதவீத பெண்களின் பிரதிநிதித்துவத்தை கட்டாயமாக்கியுள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவது சவாலானது. 33 சதவீத பிரதிநிதித்துவத்தை கட்டாயமாக்கும் சட்டத்தை முன்வைப்பதும் மற்றொரு சவாலாக இருந்ததாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த யோசனை 1996 இல் முதன்முதலில் முன்வைக்கப்பட்டது. ஆனால் 2023 வரை சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. இந்திய அறிக்கைகளின்படி, பிராந்திய அரசுகள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்த சதவீதமே உள்ளது. குஜராத் பிராந்தியத்தில் உள்ள 190 மக்கள் பிரதிநிதிகளில் 8 பேர் மட்டுமே பெண்கள். ஹிமாலய மாநிலத்தில் உள்ள 69 அமைச்சர்களில் இரண்டு பெண் அமைச்சர்களே உள்ளனர். பாராளுமன்றத்தில் 28 பெண்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சர்வதேச தரவரிசைப்படி 193 நாடுகளில் 149 வது இடத்தில் இந்தியா உள்ளது.
இலங்கையின் நிலைமையைப் பரிசீலித்தால், பாராளுமன்றத்தில் பெண்களுக்கு கிடைத்துள்ள இடம் என்ன? சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் 2019 ஆண்டு தரவுகளின்படி, உலகில் உள்ள 193 நாடுகளில் இலங்கை 182 ஆவது இடத்தில் உள்ளது. அதுவும் இந்தியாவை விட குறைவாக உள்ளது. உலகின் முதல் பெண் பிரதமரை தெரிவு செய்த நாடு என்ற கௌரவம் இருந்தாலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை புறக்கணிப்பது தகுந்த சூழ்நிலையல்ல.
அரசியல் விவகாரங்களில் வன்முறையைக் குறைக்கவும், ஒழுக்கத்தை வளர்க்கவும் இலங்கையின் பாராளுமன்றம், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு போதிய பெண்கள் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில் சுகாதாரம் மற்றும் சட்டப்பிரிவுகளில் பெண்கள் அதிகம் ஈடுபட்டுள்ளார்கள். நடுநிலையாக செயற்படுவதோடு பெண்களின் அர்ப்பணிப்புக்கு சமூகத்தில் மரியாதையும் உள்ளது. குடும்பத் தலைவன் என்ற ரீதியில் தந்தையை முன்னிலைப்படுத்திய சமூக அமைப்பு காணப்பட்டாலும், குடும்பத்தில் தாய்க்கான இடத்தை சமன் செய்ய முடியாது. பொருளாதாரத்திலும் நாட்டிற்குத் தேவையான சமூகச் செயற்பாடுகளிலும் பெண்களுக்கான சரியான சந்தர்ப்பத்தை திறந்து விடுவது அவசியம்.
தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறையில் இந்திய அணுகுமுறைகளுக்கு ஏற்ப நாடு எடுக்கக்கூடிய முடிவுகள் குறித்து கவனமாக இருக்க வேண்டியது அவசியம். போர் முடிவடைந்து பதினான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். இலங்கையில் ட்ரோன் செயற்பாட்டை வியாபாரமாக கொண்டு செல்ல அனுமதி பெறுவது இன்னும் கடினமாகவே உள்ளது. ட்ரோன்களின் மூலம் பெறப்படும் பொருளாதாரம் கவனிக்கப்பட வேண்டியதாகும்.
இரண்டு ஆண்டுகளில், ட்ரோன் செயற்பாடுகளின் அடிப்படையில் அவர்களின் பொருளாதாரத்திற்கு கிடைக்கக்கூடிய பணம் 54 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என இந்தியா கூறுகிறது. இலங்கை ஒரு துறையின் மூலம் பெறுகின்ற அதிகூடிய அந்நிய செலாவணியின் தொகை சுமார் ஆறு பில்லியன் அமெரிக்க டொலர் என்பதுடன் அதுவும் மத்திய கிழக்கு மற்றும் ஏனைய நாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் பணம் என்பதை மறந்துவிடக் கூடாது.
ஏற்றுமதி வருமானத்தைப் போன்று சுமார் ஐந்து மடங்கு என்று குறிப்பிடுவது அவசியம். புதிய துறைகளில் கவனம் செலுத்துவது மற்றும் பெண்களின் உழைப்பு மற்றும் அவர்களின் புத்திசாலித்தனத்தை வளர்ச்சிக்கு மாற்றியமைப்பது பயனுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் ஏற்பட்டுள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு புத்திசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுவதாக சர்ச்சை எழுந்துள்ள காலம் இது. அதற்கான காரணத்தைக் கண்டறிவதும் அவசியம். தொழில்துறைகளை விரிவுபடுத்தாமல், வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளைத் திறக்காமல், தொழில்கள் மற்றும் வணிகங்களில் ஈடுபடாமல் நாட்டை விட்டு வெளியேறும் மக்களைத் தடுக்க முடியாது என்பதையும் வலியுறுத்த வேண்டியுள்ளது.
தமிழில்: வீ.ஆர்.வயலட்