Home » சுகாதாரம், கல்வித் துறையின் பரிணாம வளர்ச்சியும் வீழ்ச்சியும்

சுகாதாரம், கல்வித் துறையின் பரிணாம வளர்ச்சியும் வீழ்ச்சியும்

by Damith Pushpika
September 17, 2023 5:42 am 0 comment

மலையக மக்கள் ஏனைய துறைகளை போலவே சுகாதார, வைத்திய துறைகளிலும் மலையகத் தமிழர் புறக்கணிப்பிற்கு ஆளாக்கப்பட்டோராக இருந்து வருகின்றனர், சுகாதாரம் என்பது வெறுமனே நோயற்ற, பலவீன நிலைமைகள் மட்டுமல்ல. அது பூரணமான உடல், உள, சமூக நன்னிலையினை உள்ளடக்கியதாகக் குறிப்பிடப்படுகின்றது. ஆகவே இது பூரணத்துவ வாழ்நிலையினைக் குறிக்கின்றது. இன, மத, அரசியல், பொருளாதார, சமூக பாரபட்சமின்றி அதிஉச்ச சுகாதார தரத்தினை அனுபவிப்பது ஒவ்வொருவரினதும் அடிப்படை உரிமை என்று ஐ. நா. சாசனம் கூறுகின்றது. மலையக மக்கள் இவ்விடயத்தில் அசமத்துவ நிலையில் இருப்பது வெளிப்படை உண்மை. இன்றைய பரம்பரையினரின் முன்னோர் தமிழ் நாட்டிலிருந்து இங்கு வந்த காலம் முதல் சுகாதார, வைத்திய வசதிகள் அற்றோராகவே இருந்துள்ளனர்.

குடியேற்ற நட்டு ஆட்சி காலத்தில் தோட்டத் தொழிலார்களின் சுகாதாரம் பாதுகாக்கப்படுவது பொருளாதார ரீதியில் முக்கியத்துவமானது என கருதியதாக வித்தியாசாகர எனும் நூலாசிரியர் கூறுகின்றார். (Health care in the Plantation sector -Vidyasaakara)சுகாதார, வைத்திய நிலைமைகளை அவர் மூன்று கட்டங்களாக ஆராய்ந்துள்ளார். குடியேற்ற அரசாங்க ஆட்சியின் பொது, தோட்டங்களில் நோய்களைக் குணப்படுத்துவதனை மையமாகக் சுகாதார சேவை இருந்துள்ளதனை அவர் குறிப்பிட்டுள்ளார். துரைமார் தம்மிடம் குறிப்பிட்ட அளவு மருந்துகளை வைத்துக் கொண்டு நோயாளர்களுக்கு கொடுத்துள்ளனர். பின்னர், சில தோட்டங்களை இணைத்து மருந்தகங்களை அமைத்து, வைத்தியர்களும் நியமிக்கப்பட்டனர். ஆளுநர்கள் காட்டிய அக்கறையின் காரணமாக 1865 இல் எஜமானர்கள், பணியாளர்கள் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, வேலை கொள்வோர் தொழிலாளர்கள் நோய்வாய்ப்படும்போது தங்க வைத்து, உணவளித்து, மருத்துவம் பார்க்கப்பட வேண்டியதாயிற்று.

1872 ஆம் ஆண்டின் 14 ஆம் இல சட்டம் துரைமாரால் மேற்கொள்ளப்பட்ட வைத்திய வேலைத் திட்டம் அரசாங்கத்தின் கட்டுப்பாடோ, மேற்பார்வையோ இன்றி எல்லைக்குட்பட்டதாக இருந்ததாகக் கூறியதோடு அதன் தோல்வியினையும் குறிப்பிட்டது. இதன் போதாமையை 1879 ஆம் ஆண்டு விசாரணைக்குழு கண்டறிந்தது. இதனை நிவர்த்தி செய்வதற்காக 1880 இல் 17 ஆம் இல. வைத்திய சேவைகள் சட்டம் இயற்றப்பட்டது. இதில் காணப்பட்ட முக்கிய விடயம் தொழிலாளர்களை வைத்திய சேவைப் பொறுப்பினை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்பதாகும். இதன்படி, தோட்டங்கள் குழுக்களாக அமைக்கப்பட்டு,ஒவ்வொரு பகுதிக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்காக மாவட்ட வைத்திசாலைகள் அமைக்கப்பட்டு,ஒரு மாவட்ட வைத்திய அதிகாரியும்,2 உதவியாளர்களும் நியமிக்கப்பட்டனர். என்றாலும், அனுமதிக்கப்பட்ட நோயாளர்களின் மரண வீதம் அதிகரித்தே காணப்பட்டது. இதனால், வைத்தியசாலை மரணம் பற்றிய ஆணைக்குழு தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங்களுக்கு அருகிலேயே வைத்திய வசதிகளைச் செய்யும்படி பரிந்துரைத்தது. இதன் பலனாக வைத்திய உதவி மருத்துவரின் கீழ் இயங்கும் தோட்ட மருந்தக முறைமை உருவானது. இதன்படி 1876 இல் 15 மருந்தகங்கள் அமைக்கப்பட்டு 1903 இல் அவை 143 ஆக விரிவடைந்தன. 1912/20 ஆம் இல. வைத்திய தேவைகள் சட்டத்தின் படி சுகாதார ஏற்பாடுகள் வைத்திய அதிகாரிகளால் மேற்பார்வை செய்யப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. அதனோடு பிரசவ தொழிலார்களுக்கு உதவுவதற்காக வரி விலக்கும் கொடுக்கப்பட்டது. எனினும் பயிற்சி பெற்ற தாதியர் பற்றாக்குறை தொடர்ந்தது. நாடு சுதந்திரம் பெற்றதன் பின்னர் மலையகத்தார் பல்வேறு முறையில் தொல்லைகளுக்கும்,துன்பங்களுக்கும் ஆளாக்கப்பட்டனர். திட்டமிட்டவாறும், நிறுவன மயமானதாகவும் ஒடுக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டு உரிமை கோர முடியாத பிரிவினராயினரின் இதனால் குடியுரிமைப் பிரச்சினை தீர்க்கப்பட்டு, பெயரளவிலான குடியுரிமை கொடுக்கப் படும் வரையில் சுகாதார, வைத்திய வசதிகளும் மங்கத்தொடங்கின. எனினும் அவர்களது உழைப்பினால் கிடைத்த செல்வத்தால் மற்ற சமூகங்களின் சேமநலத் திட்டங்கள் உத்வேகத்தோடு விரிவாக்கப்பட்டது. பீட்டரிடம் கொள்ளையிட்டு பவுலுக்கு தானம் செய்வது என்ற ஆங்கில பழமொழிக்கேற்ப அவை பீறிட்டு விரிந்தன.

குடியுரிமையும், வாக்குரிமையும் கிடைத்ததன் பின்னர் தேர்தல்களில் ஓட்டு யாசகத்திற்காக புதிய முனைப்புகள் தோன்றின. இதில் இடைத்தரகர்களாக மலையக தொழிற்சங்க முதலாளிகள் ஈடுபட்டு, அவர்களையும் வளர்த்துக்கொண்டனர். 1972 இல் தோட்டங்கள் அரசுடமை ஆக்கப்பட்ட பின்னர் சுகாதார, வைத்திய சேவைகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாயிற்று. ம. தோ. அபி. வி. சபை/அ. பெ. தோ. யா. ஆகியன முகாமைத்துவ பொறுப்பாளிகள் ஆகின. இவற்றின் அதிகாரத்தின் கீழிருந்த சமூக அபிவிருத்திப் பிரிவு தோட்டங்களின் நலன்புரி வேலைகளுக்கு பொறுப்பாளியாகியது, ஆங்கிலேயர் காலத்தில் பல தோட்டங்களில் பிரசவ விடுதிகள் அமைக்கப்பட்டதன் பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி ஆகியவற்றின் நிதி உதவியோடு சில தோட்டங்களில் பிரசவ விடுதிகள் அமைக்கப்பட்டன.

தோட்டங்கள் கம்பனிகளிடம் மீள கையளிக்கப்பட்ட பின்னர் தோட்ட மருந்தகங்களும், பிரசவ விடுதிகளும் கைவிடப்பட்டு பாழடைந்து போயுள்ளன. பெருந்தோட்ட சுகாதார சேவை நலன்புரி அமைப்பிடம் சுகாதார, வைத்திய வசதிகளின் பொறுப்பு கம்பனிகள் சட்டத்தின் கீழ் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தோட்ட வைத்திய அதிகாரிகளின் மூலமாக பெருந்தோட்ட அபிவிருத்தி நிதியத்தால் தோட்ட முகாமைத்துவத்தின் பொறுப்பில் இச்சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இன்று தோட்டங்கள் யாவும் 88 மருத்துவ சுகாதார அதிகாரிகள் பிரிவுகளாக எல்லை படுத்தப்பட்டு பொது சுகாதார பரிசோதகர்கள் மூலமாக வைத்திய சுகாதார அத்தியட்சகர்களின் மேற்பார்வையின் கீழ் தோட்ட சுகாதார வைத்திய சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறான அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள போதிலும் தோட்ட மக்களுக்கு திருப்திகரமான சுகாதார வைத்திய சேவைகள் கிடைப்பதில்லை. ஒப்பீட்டளவில் தற்போது இச்சேவைகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. தோட்டங்களில் நன்றாக இயங்கிக்கொண்டிருந்த மருந்தகங்களும், பிரசவ விடுதிகளும் மூடப்பட்டு கைவிடப்பட்டுள்ளன. அதேவேளை தோட்ட வைத்திய அதிகாரிகளின் தொகை பெருமளவு குறைந்துள்ளன. பல தோட்டங்கள் ஒருவரால் சுழற்சி முறையில் பராமரிக்கப்படும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

குழம்பிபோயுள்ள நாடு நிலமையைப்போன்று தோட்ட சுகாதார, வைத்திய நிலைமைகள் சீர்கெட்டு, தொழிலாளர்கள் நிவாரண மார்க்கமின்றி அல்லற்படுகின்றனர். சிவில், தொழிற்சங்க அமைப்புகள் இதன்பால் கவனத்தை செலுத்தி நிவாரணம் தேட வேண்டும். தொழிலாளர்கள் உடனடியாக நிவாரணம் பெறக்கூடிய தோட்டங்களுக்கான பிரத்தியேக சுகாதார, வைத்திய நலன்களுக்கான அமைப்பினை ஏற்படுத்துவதே இதற்கான சரியான பொறிமுறையாகவும் இருக்கும்.

மலையக மக்கள் சுய முயற்சியால் உயர்த்திக்கொண்ட ஒரு துறை கல்வித் துறையாகும். கல்வி தனி மனிதனின் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுய தேடலை ஊக்குவித்து, வாழ்க்கையின் மேனிலை நோக்கிய நகர்வுக்கு வழிகாட்டுகின்றது. அது கலாசார விழுமியங்களையும், நியதிகளையும் போதிப்பதன் மூலமாக குழந்தைகளை சமூக மாயமாக்குகின்றது என்று கூறப்படுகின்றது. அவர்களை சமூகத்தின் ஆக்கச் செயல்பாட்டாளர்களாக ஆக்குவதற்கான திறன்களைக் கொடுக்கின்றது. விசேடமாக ஒரு பாடசாலையில் முறைமைப் படுத்தப்பட்ட போதனையை நல்கும் செயல்முறையாக அது அமைகின்றது. இவ்வாறான கல்வி வாய்ப்புகளை பூரணமாக அனுபவிக்கக் கிட்டாதவர்களாக மலையக மக்கள் இருந்துள்ளது வரலாறு கூறும் உண்மை.

வேறு வார்த்தைகளில் கூறுவதெனில் மலையக மக்களின் கல்வி உரிமை மறுக்கப்பட்டு நீண்டகாலமாக இருந்துள்ளனர். கோப்பித் தோட்டங்களில் வேலைசெய்த 1823 – -68 கட்டத்தில் அவர்களது கல்விக்கான பயன்தரத்தக்க ஏற்பாடுகள் இருக்கவில்லை. மக்கள் வாழ்க்கையின் இருண்ட யுகத்தினை இறுக அழுதிக்கொண்டிருந்த பெரிய கங்காணிமார் இவ்விடயத்தில் கருணை உள்ளோராக இருந்துள்ளனர். லயக் காம்பராக்களில் சிறார்களுக்கு எழுத, வாசிக்க உதவி செய்துள்ளனர். லயக் காம்பராக்களே மலையகத்தின் அரும்புநிலை முறைசாரா போதனா மையம். கிறிஸ்தவ மத பரப்புரைக்காக வந்த போதகர்கள் அடுத்த கட்ட நகர்வினை மேற்கொண்டனர்.

கிறிஸ்தவ மிஷனரிகளின் வற்புறுத்தலால் 1869 இல் வெளியிடப்பட்ட விசேட அறிக்கை தோட்ட உரிமையாளர்கள் பாடசாலைகளை அமைப்பதற்கு ஊக்கப்படுத்தியதோடு, நிதி உதவியும் செய்யப்பட்டன. இதனால் லயக் காம்பராக்களில் இயங்கி வந்த பாடசாலைகள் படிப்படியாக தனி கட்டடங்களில் இயங்கும் நிலை ஏற்பட்டது. தோட்ட உரிமையாளர்களே ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுத்தனர். ஆசிரியர்கள் மதியம்வரை ஆசிரியப் பணியாற்றி, பின்னர் தோட்ட அலுவலகங்களில் எழுதுவினைஞராக பணியாற்றினர். ஆரம்பத்தில் குடிபெயர்த்தோரில் ஓரளவு கல்வித் தகமை உடையோர் ஆசிரியர்களாக இருந்தனர். அவர்களுக்கு ஆசிரிய பயிற்சி இருக்கவில்லை. ஆண்டுக்கு ஒரு முறை கல்வி அதிகாரி வந்து பரிசோதனை செய்து வகுப்பேற்றம் செய்தனர்.

நாளடைவில் வடபுலத்து ஆசிரியர்கள் வந்து இப்பணியினை சிறப்பாக முன்எடுத்துச் சென்றனர். அவர்களும் பயிற்சி பெறாதவர்களாவே இருந்து 1980 க்கு பின்னர் படிப்படியாக பயிற்சி பெற்றோராய் ஆகினர். இதனால் முறைசார் கல்வி முறை விரிவடைந்தது. இதற்கு வடபுல ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு காரணமாக இருந்தது. தோட்டங்களில் பாடசாலைகள் அமைக்கப்பட்டதன் பின்னர் லயங்களில் இரவுப் பாடசாலைகள் தொடர்ந்து இயங்கின. இதன் தொடர்ச்சி 1970 வரை தொடர்ந்தது. போதிய அளவு பாடசாலைகள் இல்லாததால் தனியார் பாடசாலைகள் உருவாகின. ‘இவை கற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை தந்ததோடு, கல்வி அபிவிருத்திக்கும் உதவின. குறிப்பாக மஸ்கெலியா, சாமிமலை, ரசாத்தோட்டம், அக்கரப்பத்தன, லிந்துலை போன்ற பகுதிகளில் இவை பெரும் பங்காற்றியுள்ளன.

பௌத்த மடாலயம்சார் போதனா முறையாக மாற்றப்பட மிஷனரிகளே முன்னோடிகளாக இருந்துள்ளதோடு, தோட்டப் பகுதிகளுக்கும் அதனை விரிவாக்கினர். இதன் சாதக அம்சங்கள் பேரினவாத கண்ணோட்டத்தோடு பார்க்கப்பட்ட அளவுகோல் மலையகத்துக்கு பொருந்தாது. தேசாபிமானி வேடமிட்ட பல சிங்கள அரசியல்வாதிகளின் நாமாவளி பெயர்களை கொண்டு இதனை விளங்கிக்கொள்ளலாம். தமிழர் பகுதிகளில் கல்வி விரிவாக்கத்திற்கு வழிஅமைத்தது மிஷனரிகளே. தோட்டங்களிலும், அவற்றை அண்டிய நகரங்களிலும் பாடசாலைகளை அமைத்து கல்வி விரிவாக்கத்தினை ஏற்படுத்தியது அவையேயாகும்.

தோட்டப் பகுதி கல்வி நிலை பற்றி ஆய்வு செய்த ஏஞ்செலா லிட்டில் அதன் வளர்ச்சிப் படி நிலையினை, 1. குடியேற்ற ஆட்சி காலத்தில் 1830 -1920 கட்டங்களில் ஏற்பட்ட வளர்ச்சி. 2. குடியேற்ற ஆட்சி அரசாங்கத்தால் 1920 -48 கட்டங்களில் ஏற்பட்ட சட்டபூர்வமான வளர்ச்சி. 3. குடியேற்ற ஆட்சிக்கு பிந்திய அரசாங்க தலையீட்டுடனான 1948 -77 கட்ட வளர்ச்சி. இந்தியாவில் ஆங்கிலக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே இங்கும் அவர்கள் அக்கறை காட்டத்தொடங்கினர். 1903 இல் இங்கிலாந்து பாராளுமற்றதில் நடத்தப்பட்ட விவாதத்தின் விளைவாக தோட்ட உரிமையாளர்கள் கல்வித் பொறுப்பினை ஏற்பதற்கான அழுத்தம் கொடுக்கப்பட்டது. மதம் சார்ந்த கல்வி அதிலிருந்து விடுபட்ட காலமும் இதுவே.

1945 இல் இலவசக் கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதோடு, அடிமட்ட மக்களின் குழந்தைகள் கல்வி பெறக்கூடிய வாயில் திறக்கப்பட்டது. சுதந்திர இலங்கையின் தேச பிதா குடி உரிமையையும், வாக்குரிமையும் பறித்து மலையக மக்களை முடமாகியது போன்றே இலவசக் கல்வியின் தந்தையும் மலையகக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை நிராகரித்து இனவாதியாக நடந்து கொண்டார்.

அப்போது இயற்றப்பட்ட சட்டம் தோட்டங்களில் பள்ளிகளை அமைப்பது அரசாங்கத்தின் கடமை என்று விதித்த போதிலும் புதிதாக பாடசாலைகள் உருவாக்கப்படவில்லை. மாறாக 1948 -51 காலத்தில் பெருந்தொகையான பாடசாலைகள் மூடப்பட்டன அல்லது இணைக்கப்பட்டன. 1948 க்கும் 1955 க்கும் இடையில் 24 பாடசாலைகள் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டன. மொழி ரீதியான பாகுபாட்டால் இதில் அசமந்த போக்கும், பின்னடைவும் தொடர்ந்துகொண்டே இருந்தது. 1972 இல் தோட்டங்கள் அரசுடைமையாக்கப்பட்டதன் பின்னர் தோட்டத்துறை மந்தமாகி,பொருளாதாரம் வீழ்ச்சி உற்றதால் கல்வி மோசமாக பாதிக்கப்பட்டதோடு, தோட்ட முகாமையாளர்கள் இதில் அக்கறை அற்றோராய் மாறினர்.

1980 களில் ஏற்பட்ட உள்நாட்டு, பிராந்திய அரசியல் போக்குகளின் புதிய பரிமாணம் மலையகத்தாருக்கு குடி உரிமையும், வாக்குரிமையும் கொடுக்கப்பட நிர்ப்பந்தித்தது. இதன் விளைவாக அரசியல் அதிர்வுகளை தீர்மானிக்கக்கூடிய வாக்கு பலமும், பேரம் பேசும் சக்தியும் மலையகத்தாருக்குக் கிடைத்தது. துரதிஷ்டமாக சோரம்போன அரசியல் தரகு செயற்பாட்டால் இதன் மூலமாக பெற்றிக்கக்கூடிய பலாபலன்களை பூரணமாக பெறமுடியாமல் போனது. 2008 இல் பிரித்தானிய தொழிற்கட்சியினை சேர்ந்த குழு ஓன்று மலையக மக்களின் நிலைமைகளை கண்டறிவதற்காக நுவரெலியாவில் நடத்திய கலந்துரையாடல் ஒன்றின் போது கட்டுரையாளர் மலையக மக்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தபோது குறுக்கிட்ட ஒருவர் முகத்தில் அடித்தாற்போல 1980 கு பின்னர் அமைக்கப்பட்ட எல்லா மந்திரி சபைகளிலும் உங்கள் சமூகத்தைச் சார்ந்த ஒருவரோ, இருவரோ அமைச்சர்களாக இடம்பெற்று வந்துள்ள நிலையில் நீங்கள் எப்படி இவ்வாறு கூறமுடியும் என்று கேட்டபோது இதன் தாற்பரியத்தினை புரிந்துகொள்ள முடிந்ததோடு, வாய்ப்புகளை தவறவிட்ட உண்மையினையும் உணர முடிந்தது. 1990 களில் சுவீடன் நாட்டின் நிதி உதவியோடு மேற்கொள்ளப்பட்ட சீடா நிறுவன செயற்திட்டத்திலும் இக்கறை படிந்த மறைக்கரம் பூரண பலனை பெற்றுக்கொள்வதில் சாபமாக படிந்தது. இடமாற்றத்திற்கு உள்ளான பெண் அதிபர் ஒருவர் வழக்கு தாக்கல் செய்யப்போவதாகக் கூறிவிட்டு தமிழ்நாட்டிற்கு போய்விட, அதற்குக் காரணமானவர் அங்கு போய் பாவ மன்னிப்பு கோரி அவரது கணவருக்கு சீடா திட்ட அதிகாரியாக நியமனம் தருவதாக வாக்களித்து நிறைவேற்றிய தகவல் உண்டு. சாமி வரங்கொடுத்தும் பூசாரி தட்டிப் பறித்த கதையாக, கிடைக்கப்பட்ட வாய்ப்புகள் முடமாக்கப்பட்டமை கல்வி வளர்ச்சியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

1970 க்கு பின்னர் மலையக இளைஞர்களுக்கு ஆசிரியர் நியமனம் கிடைக்கப்பட்டு, அவர்களின் தொகை படிப்படியாக அதிகரிக்கத்தொடங்கியது. இடமாற்றப்பட்ட ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி ஆகிவற்றின் மூலமாக பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் மூலம் கல்வியில் தொகை மாற்றமும், பண்பு மாற்றமாகும் ஏற்பட தொடங்கியது. இதேவேளை பல்கலைக் கழகங்களில் அனுமதி பெறும் மாணவர்களின் தொகை அதிகரித்து, பின்னர் பட்டதாரி ஆசிரியர் நியமனம் பெற்றோரின் சேவையாலும் கல்வித் தரம் உயரலாயிற்று. இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் திறந்த பல்கலைக்கழகம், தேசிய கல்வி நிறுவனம்,வெளிவாரி கற்கை ஆகிவற்றின் மூலம் தமது கல்வித்தரத்தினை உயர்திக்கொள்கின்றனர். இதன் பெறுபேறாக 5 ஆம் தர புலமை பரிசில்பரீட்சை, க. பொ. சா/உ தர பரீட்சைகளில் சித்தி பெறுவோரின் தொகை அதிகரித்து வருகின்றது. சமூக உணர்வாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகிவற்றின் உதவிகளும் கல்வி வளர்ச்சிக்கு உதவி வருகின்றன. உயர்கல்வி மாணவர்களுக்கு நிதி உதவி நல்கும் அமைப்புகளும் உதவிகள் புரிகின்றன. சில தொண்டு நிறுவனங்களாலும், பிரிடோ போன்ற அமைப்புகளாலும் முன் கல்வி போதனையும் வளற்சி பெற்று வருகின்றது. 1980 களில் அறிமுகப் படுத்தப்பட்ட இலவச பாடநூல் வினியோகம்,1993 இல் தொடக்கப்பட்ட இலவச சீருடை விநியோகம் ஆகியவற்றால் மலையக பெற்றோரின் சுமை சிறிது குறைந்தது.

இலங்கையில் இன்று கல்வி வணிகமயமாகியுள்ளது. மாணவர்கள் மகிழ்ச்சியினை தொலைத்த கூட்டத்தினராக மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சாப்பிட, விளையாட, ஓய்வுபெற நேரம் இன்றி படிப்புப் பளு கூடியுள்ளது. ஆசிரியர்கள் சிறுவோர் உளவியலை ஒதுக்கி வைத்துள்ளனர். தலைமுறை மாற்றத்தோடு மூளை வளர்ச்சியும் உயர்கின்றது. இந்த உண்மையினை கல்விப் புலத்தோர் ஏற்காதோராக இருப்பதாக எண்ணத்தோன்றுகிறது. வகுப்பறை போதனைக்கு மேலதிகமாக மாணவர்களை வருத்த வேண்டுமா என்ற தேடல் இன்று தேவைப்படுகின்றது. மன உளைச்சலும், விரக்தியும் இளம் சமுதாயத்தினரை கொள்ளை அடிக்க வேண்டுமா என்று ஆழ்ந்து சிந்திப்போமா?

பீ. மரியதாஸ்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division