ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துக்களும் விமர்சனங்களும் முரண்பட்ட கூற்றுக்களும் மீண்டும் புதிய வடிவில் வெளிப்பட்டு வருவதை இக்காலங்களில் காணமுடிகிறது.
அது தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு அது தொடர்பான சில விசாரணை அறிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ள நிலையிலும், நீதிமன்றத்திலும் அது தொடர்பான வழக்குகள் இடம்பெற்று வருகின்ற நிலையிலும் அண்மையில் செனல் – 4 தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்பியுள்ள அது தொடர்பான காணொளியினால் இந்த விவகாரம் வேறு கோணத்தில் பார்க்கப்படுவதுடன் அந்த காணொளியின் உண்மைத் தன்மை தொடர்பில் உறுதிப்படுத்தும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் பல தரப்புகளிலிருந்தும் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என இதுவரை காலமும் கூறப்பட்டு வந்தவர்கள் மற்றும் அவ்வாறு சம்பந்தப்பட்டவர்கள் என தெரிவித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மற்றும் வழக்குகளுடன் தொடர்புடையவர்கள் தற்போது சற்று தலைநிமிர்ந்து நாங்கள் அதனுடன் தொடர்புடையவர்கள் அல்ல. அதற்கு செனல் – 4 அலைவரிசையில் காணொளி சான்றாக உள்ளது என்பதை தெரிவித்து வருகின்ற காலம் இது.
அந்த வகையில் சாதாரணமாக சென்று கொண்டிருந்த இந்த விவகாரம் செனல் -4 காணொளி வெளியீடு மூலம் குழப்பங்கள், முரண்பாடுகள் மற்றும் திருப்பங்களுக்கு வழி வகுத்துள்ளன. பாராளுமன்றத்தில் அது தொடர்பில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சியினால் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறெனினும் இரு தரப்பில் இருந்தும் சர்வதேச விசாரணையொன்று நடத்தப்படுவது சிறந்தது என்ற கூற்று வெளிப்பட்டு வருவதையும் காணமுடியும். செனல்-4 அலைவரிசை கடந்த காலங்களிலும் இவ்வாறான காணொளிகளை வெளியிட்டு வந்துள்ளது என்பதால் அந்த வகையில் இது ஒன்றும் புதிதல்ல என்றும், நாட்டில் குழப்ப நிலை ஒன்றை தோற்றுவிப்பதற்காக தொடர்ச்சியாக அந்த அலைவரிசை இத்தகைய காணொளிகளை ஒளி பரப்பி வருவதாகவும், இது இந்த நாட்டின் அரசியலில் ஒரு தரப்பினரை குறி வைத்து வீசப்படும் சேறு என்றும் சிலரால் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
என்றாலும் சர்வதேச ரீதியில் இந்த விவகாரம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில், தாக்குதல் சம்பவம் நடைபெற்ற காலத்தில் அரசியலில் ஈடுபட்டவர்கள் தமது நிலைப்பாட்டை அது தொடர்பில் முன்வைத்து வருகின்றமையும் இடம் பெறுகின்றது. முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக் ஷ அது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இது ராஜபக் ஷ குடும்பங்களை பழி வாங்குவதற்காக திட்டமிடப்பட்டு முன்வைக்கப்படும் விவகாரம் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ அது தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுள்ள நிலையில், அந்த காணொளியின் உள்ளடக்கங்களை முற்றாக நிராகரிப்பதாகவும் அவை உண்மைக்குப் புறம்பானவை மற்றும் அவை சோடிக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தரப்பில் அமைச்சர்கள் பலரும் அது தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன் வைத்துள்ள நிலையில், செனல்- 4 காணொளி ஒலிபரப்பிய விடயங்கள் உண்மையானால் அது தொடர்பில் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கூற்றை நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அது தொடர்பில் தெரிவிக்கையில், அரசாங்கம் அந்த விவகாரம் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தியுள்ளதாகவும் அது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் காணப்படுவதுடன் ஜனாதிபதி அதற்காக துறை சார்ந்த நிபுணர்களை உள்ளடக்கிய விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவ்வப்போது கருத்துக்களை முன்வைத்து வரும் கத்தோலிக்க சமூகத்தின் தலைவர் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, மேற்படி விவகாரத்தில் செனல்- 4 காணொளி புதிய திருப்புமுனையாக அமைவதுடன் அது தொடர்பில் சர்வதேச விசாரணையே அவசியம் என்பதையும் வலியுறுத்தி வருகின்றார்.
இத்தகைய பின்னணியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலும் உயிர்த்த ஞாயிறு குண்டுதாத்தாக்குதல் தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்த ஆணைக் குழுவின் ஆணையாளர் அது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கு ஐ. நா வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பதிலளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பணியானது உலகளாவிய பாரபட்சமற்ற தன்மை, புறநிலை மற்றும் தேர்ந்தெடுக்காத தன்மை, ஆக்கபூர்வமான சர்வதேச உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் கொள்கைகளால் வழிநடத்தப்படல் வேண்டும் என்பதே தீர்மானங்கள் 60/251 மற்றும் 48/141 இன் தேவைப்பாடாகும்.
துரதிர்ஷ்டவசமாக, இலங்கையைப் பொறுத்தமட்டில் அது அவ்வாறு இருப்பதாகத் தெரியவில்லை. 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. எனினும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் தனது பகுப்பாய்வில் பக்கச்சார்பான ஆதாரங்கள் மூலம் பெறப்பட்ட தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல்களைப் பயன்படுத்த முற்பட்டமை வருத்தமளிக்கிறது.
இலங்கை பலமுறை அறிவித்துள்ளபடி, இந்த தாக்குதல்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உட்பட பல விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அரசாங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அவுஸ்திரேலிய பொலிஸ், அமெரிக்காவின் எப்.பி.ஐ. மற்றும் இன்டர்போல் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விடயங்களில் 79 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்களின் போது ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபர், அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மீதான தீர்ப்பை இலங்கை உயர் நீதிமன்றம் 2023 ஜனவரி 12ஆம் திகதி வழங்கியுள்ளது.
அத்துடன் பொதுவாக சமூகத்தில் வெளிப்படும் கவலைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அது தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசரின் தலைமையிலான குழுவொன்றும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது என்பதையும் இலங்கைக்கான வதி விடப் பிரதிநிதி தமது பதிலில் சுட்டிக் காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பலரின் கருத்துக்களையடுத்து சபையில் அது தொடர்பில் தெரிவித்த ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, புலனாய்வு அமைப்புகள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரை குற்றஞ்சாட்டி நிறைவேற்றுத்துறை, பாராளுமன்றம் மற்றும் நீதித்துறையை அழிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது.
இந்த விவகாரம் தொடர்பில் நீதித்துறை மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் சிலர் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்ட அமைச்சர், இது மிகவும் ஆபத்தான நிலை என்றும் இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டுவதற்கான மறைமுக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நீதித்துறை மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் சிலர் சில யோசனைகளை உருவாக்கி வருகின்றனர். இது மிகவும் ஆபத்தான நிலைக்கே வழிவகுக்கும்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை எந்த அரசியல் கட்சியோ அல்லது நபரோ அங்கீகரிப்பதாக நான் நினைக்கவில்லை. அந்த வகையில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களை மறைக்க தற்போதைய ஜனாதிபதி முயற்சிப்பதாக சிலர் குற்றம் சாட்ட முயற்சிக்கின்றனர்.அந்த காலங்களில் பாதுகாப்பு சபைக் கூட்டத்திற்கு கூட தற்போதைய ஜனாதிபதி அழைக்கப்படவில்லை என்பது முழு நாடும் அறிந்த உண்மை. தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் அப்போது அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் அது தொடர்பில் விசாரணை செய்வதற்கு பாராளுமன்றக் குழுக்கள் நியமிக்கப்பட்டன. இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் எப்.பி.ஐ.விசாரணைகளை நடத்தியது. அந்த அறிக்கையும் வழங்கப்பட்டது. அந்த அறிக்கை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். எப்.பி.ஐ.யை விட மேலும் சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் என்றால், அது எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானிக்கலாம் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.இந்த தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் எம்பி அது தொடர்பில் சபையில் தெரிவிக்கையில், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் இன்னும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவிகளை விடுதலைசெய்து. உண்மையான சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதற்காக சர்வதேச விசாரணை ஒன்றுக்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் என சபையில் கேட்டுக்கொண்டார்.ஆட்சிக் கதிரையில் ஏறவேண்டும் என்பதற்காகவே சில தரப்பினரால் ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது செனல் 4 வெளியிட்டிருக்கும் புதிய காணொளி தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தாம் ஜனாதிபதியைக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். செனல்-4 காணொளி விவகாரம் தொடர்பில் உள்ளக விசாரணை மட்டுமின்றி சர்வதேச விசாரணைக்கும் அரசாங்கம் தயாராக உள்ளனெ்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார். செனல் – 4 காணொளியில் வெளியிடப்பட்டவாறு சம்பவங்கள் இடம்பெற்றிருக்குமானால் அது தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் எமது நாட்டுக்கு எதிராக பல்வேறு அறிக்கைகளும் காணொளிகளும் வெளியிடப்படுகின்றன. புலம்பெயர்ந்தோர் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நாம் பிரச்சினைகள் தொடர்பில் புலம்பெயர் அமைப்புக்களின் தலைவர்களுடனும் கலந்துரையாடியுள்ளோம். ஈஸ்டர் தாக்குதலுக்கு 29 மாதங்களுக்கு முன்னர் அதுதொடர்பாக பாராளுமன்றத்தில் நான் விசேட உரையாற்றியிருந்தேன். அப்போதிருந்த அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் உள்ளிட்டோர் என் மீது குற்றச் சாட்டுக்களை முன்வைத்தனர். தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கவே நான் அவ்வாறு தெரிவிப்பதாக அவர்கள் கூறினர். அன்று எனது கூற்றுக்களை கவனத்தில் எடுத்து ஆராய்ந்திருந்தால் அப்பாவியான மக்கள் இன்றும் உயிருடன் இருந்திருப்பார்கள். ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி இருப்பதாக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தான் ஓய்வுபெற்று செல்லும் போதே கூறியிருந்தார். ஆனால் அவரிடம் அது தொடர்பில் வாக்குமூலம் பெறச் செல்லும் போது நீதிமன்றத்தின் ஊடாக அதற்கு தடை யுத்தரவைப் பெற்றுக்கொண்டார்கள். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக தற்போது 42 வழக்குகள் உள்ளன. அதேபோன்று தாக்குதல் தொடர்பாக உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச விசாரணையை நடத்தவும் அரசாங்கம் தயாராகவே உள்ளது. அதை வேளை இன்று சர்வதேச விசாரணைகளை கோருபவர்களும் ஈஸ்டர் பயங்கரவாத குண்டுத்தாக்குதலின் போது அரசாங்கத்தில் இருந்தனர் என்பதையும் குறிப்பிட வேண்டும். செனல்- 4 என்பது புலம்பெயர் மக்களுடன் இணைந்து செயற்படும் ஒரு ஊடக அமைப்பாகும். அந்த ஊடகம் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் இறந்த மக்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்கும் நேர்மையான நிலைப்பாட்டில் செயற்படும் ஒரு அமைப்பல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எவ்வாறாயினும் செனல் 4 ஒளிபரப்பியவாறு சம்பவங்கள் நடந்திருந்தால் அது தொடர்பில் ஆராய்ந்து முழுமையான விசாரணை நடத்தப்படும் அதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் நீண்ட காலமாக இழுபறி நிலையில் உள்ள இந்த விவகாரம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்பதே அனைவரதும் வேண்டுகோளாக உள்ளதுடன் எமது தாழ்மையான கருத்துமாகும்.