Home » இஸ்ரேல் – மேற்குலக கூட்டின் அடுத்த இலக்கு ஹவுத்தி கிளர்ச்சி குழுவா?

இஸ்ரேல் – மேற்குலக கூட்டின் அடுத்த இலக்கு ஹவுத்தி கிளர்ச்சி குழுவா?

by Damith Pushpika
January 5, 2025 6:00 am 0 comment

மேற்காசிய அரசியலின் போக்கானது மனித உரிமைகளையும் மனிதாபிமான சட்டங்களையும் முற்றாக நிராகரிக்கின்ற படுகொலை களமாக மாறி வருகின்றது. இஸ்லாமியர்களுக்கு எதிரான போரை நிகழ்த்தும் இஸ்ரேலும் மேற்குலகமும் தொடர்ச்சியாக சர்வதேச சட்டங்களை மட்டுமல்ல இயற்கை நியதிகளையும் பின்பற்ற முடியாத ஒரு சூழலை ஏற்படுத்தி வருகின்றது. அண்மையில் அமெரிக்க காங்கிரஸில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றும் போது fight is your fight win is your win என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரைப் பார்த்து தெரிவித்தார். இவ்வாறு அமெரிக்காவை நோக்கி அவர் முன்வைத்திருக்கும் கோஷம் இஸ்ரேல் நடத்தும் போரின் தனித்துவத்தை புரிந்து கொள்ள உதவும். இக்கட்டுரையும் இஸ்ரேல் மேற்குலகின் அடுத்த இலக்கு யெமன் நாடும் ஹவுத்தி கிளர்ச்சி குழுக்களுமாகும் என்பதாக அமையவுள்ளது.

கடந்த வாரம் யெமன் நாட்டை நோக்கி இஸ்ரேலிய விமானங்கள் (28) தாக்குதலை மேற்கொண்டிருந்தன. அதனை அடுத்து புதிய ஆண்டின் இரண்டாவது நாளிலேயே கிளர்ச்சிக் குழுக்களை நோக்கி யெமன் நாட்டின் நகரங்கள் மீது பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் விமானங்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளன. யெமன் நாட்டின் அல் ஹிடெடா அட்ஹயாதா மற்றும் அல் பேசா பகுதிகளை நோக்கி மேற்கு நாட்டு விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளன. மனித அழிவுகளைப் பொறுத்து தாக்குதல் விளைவுகள் தொடர்பில் தகவல்கள் இல்லாத போதும் மனித அழிவுகளை தவிர்த்து கட்டடங்களும் சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. யெமன் நாட்டின் இறைமையை முழுமையாக இஸ்ரேல் மீறியுள்ளது. ஹவுத்தி கிளர்ச்சிக் குழுவை நோக்கி தாக்குதல் நடத்துவதற்கு தாம் திட்டமிட்டதாகவும் அதன் அடிப்படையிலேயே யெமன் நாட்டின் நகரங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது எனவும் மேற்கு நாடுகள் தெரிவித்துள்ளன. ஹவுத்தி கிளர்ச்சிக்குழு செங்கடலையும் அதன் அண்டிய பிரதேசங்களையும் மேற்கு நாடுகளின் கப்பல்கள் மற்றும் இஸ்ரேலுக்கான ஆயுத விநியோகத்தை மேற்கொள்ளும் கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதல் நிகழ்த்தி வருகின்றது. ஈரானை தளமாகக் கொண்டு இயங்குகின்ற ஹவுத்திக் கிளர்ச்சி குழு யெமனின்; ஆதரவோடு செயற்படுவதாக தெரியவருகிறது. கடந்த காலங்களில் இஸ்ரேல் மேற்கு நாடுகளின் அணி, காசா மீது மேற்கொண்டது போன்றே திட்டமிட்டு நகர்த்தி வருகின்றது. அதன் பின்புலங்களை அழித்தல் அதற்கான ஆதரவுத் தளங்களை இல்லாமல் செய்தல் மற்றும் கிளர்ச்சி குழுக்களின் தலைமைகளை முடிவுக்கு கொண்டு வருதல் என்ற அடிப்படையில் மேற்கொண்டுவருகிறது.

ஹமாஸ் அமைப்பின் மீதான தாக்குதலை தொடங்கிய போது இஸ்ரேல் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது. தெளிவானதும் துல்லியமானதுமான தாக்குதலை நிகழ்த்துகின்ற மறுபக்கத்தில் கிளர்ச்சி அமைப்பின் இராணுவ தலைமைகளையும் அரசியல் தலைமைகளையும் இலக்கு வைத்து அவர்கள் மீதான தாக்குதலையும் அமைப்பு மீதான தாக்குதலையும் நிகழ்த்தி வருகிறது. இதன் மூலம் ஹமாஸ் அமைப்பின் அனைத்து வாய்ப்புகளையும் அழித்ததோடு இஸ்ரேல் மீதான தாக்குதலையும் தடுத்திருந்தது. இஸ்ரேல் மண் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துவதில் ஹமாசின் அரசியல் தலைமைகளையும் இராணுவ தலைமைகளையும் அழிப்பதன் மூலம் வெற்றி கண்டது. அவ்வாறே ஹிஸ்புல்லாக்களையும் அதன் அரசியல் தலைமைகளையும் இராணுவ தளபதிகளையும் இலக்கு வைத்து தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியது. அதற்காக லெபனான், சிரியா போன்ற நாடுகள் மீது பாரிய தாக்குதலை நிகழ்த்தியது. ஈரான் மீதும் அதன் தாக்குதல் விரிவாக்கம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டது. ஏறக்குறைய ஹமாஸ், ஹிஸ்புல்லா ஆகிய இரண்டு அமைப்புகளும் போரின் எல்லையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. நேரடியான தாக்குதலுக்கான வாய்ப்புகளை இஸ்ரேல் மட்டுப்படுத்தியுள்ளது. ஆனாலும் குழுக்களின் முழுமையான நகர்வுகள் முடிவுக்கு வந்ததாக தகவல் இல்லை. அவை தொடர்ந்து தாக்குதலுக்கான திட்டமிடல்களையும் உத்திகளையும் வகுப்பதாக தெரியவருகிறது. மீண்டும் ஒரு தாக்குதலை இஸ்ரேலின் மண்ணில் நிகழ்த்துவதற்கு அக்குழுக்கள் தயாராவதாக தகவல்கள் உண்டு. இதன் முயற்சியினால் ஹவுத்தி கிளர்ச்சி குழு மீது இஸ்ரேல் மற்றும் மேற்குலகத்தின் கவனம் திரும்பி உள்ளது. அதற்கான அடிப்படை காரணங்கள் விளங்கிக் கொள்ளப்பட வேண்டும்.

முதலாவது ஹவுத்தி கிளர்ச்சி குழு மேற்கு நாடுகளின் பொருளாதார வாய்ப்புகளை அழிப்பதில் கவனம் கொள்கிறது. குறிப்பாக கப்பல்களின்; செங்கடல் வழித்தடத்தை நெருக்கடிக்குள்ளாக்குவதில் ஹவுத்தி கிளர்ச்சி குழுக்களின் பாரிய பங்கு காணப்பட்டது. உலகளாவிய ரீதியில் பொருளாதார போக்குவரத்தின் மையமாக கடல்களும் கால்வாய்களும் காணப்படுகின்றன. இத்தகைய சூழலை கருத்தில் கொண்டே மேற்காசியாவின் பெற்றோலியத்தை மேற்கு நாடுகள் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை முற்றாக முடக்குகின்ற விதத்தில் கிளர்ச்சிக் குழுவின் தாக்குதல் அமைந்துள்ளது. மேற்கு நாடுகள் தங்களது அடிப்படைத் தேவைகளையும் மற்றும் பொருளாதார வாய்ப்புகளையும் மேற்கு ஆசியாவில் தருவிக்கப்படும் பெற்றோலியத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்டு வருகின்றன. ரஷ்யாவின் மேற்குலக நாடுகளுக்கான பெற்றோலியம் மற்றும் எரிவாயு நிறுத்தம் என்பது மேற்காசியாவில் முழுமையாக தங்கி இருக்கும் நிலையை, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. எனவே தான் கிளர்ச்சிக் குழுக்களின் தாக்குதலில் விளைவுகள் நேரடியாகவே மேற்கு நாடுகளுடைய பொருளாதாரத்தை பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறன. இதனை தடுப்பது மேற்கு நாடுகளின் பிரதான உத்தியாக காணப்படுகிறது. தாக்குதல்களை ஹவுத்தி கிளர்ச்சி குழு மீது இஸ்ரேலும் மேற்கு நாடுகளும் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன. செங்கடலுடன் கப்பல் வழித்தடம் என்பது போக்குவரத்து மட்டுமின்றி பொருளாதார இயங்கு திறனை கொண்ட மையமாகும்.

இரண்டாவது இஸ்ரேல் நாட்டுக்கான இராணுவ தளபாடங்களை பரிமாற்றம் செய்யும் பிரதான வழித்தடமாக செங்கடல் பகுதி காணப்படுகிறது. அத்தகைய பரிமாற்றத்துக்குரிய ஊடகமும் கப்பல் போக்குவரத்தாக உள்ளது. அதற்கான போக்குவரத்தை பாதுகாப்பதே இந்த தாக்குதலில் தீவிரமானதாக உள்ளது. இராணுவத்திற்கான ஆயுங்களும் புலனாய்வு தகவல்களும் இலகுவாக பரிமாற்றப்படுவதோடு மேற்காசிய அரசியலை இராணுவ ரீதியில் தக்க வைக்க மேற்குலகம் கூட்டாக செயல்பட வாய்ப்பு ஏற்படும். அதனால் இஸ்ரேலிய இராணுவ இலக்குகளை பாதுகாக்கும் வல்லமையை பலப்படுத்தும் நோக்கோடு கப்பல்போக்குவரத்து முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதனை மேற்கு நாடுகளும் இஸ்ரேலும் கருதுகின்றன. இதனால் ஹவுத்தி கிளர்ச்சி குழுவின்; பின்புலங்களை தேடி அழித்து ஒழிப்பதன் ஊடாக மேற்காசிய பிராந்தியத்தில் இஸ்ரேலின் இருப்பையும் மேற்குலகத்தின் இருப்பையும் தக்க வைத்துக் கொள்ள முடியும் என கருதுகின்றன. இதுவே தாக்குதலில் திசையை யெமன் நோக்கி திருப்பி உள்ளதற்கான பிரதான காரணமாகும்.

கிளர்ச்சிக் குழுக்களை நாடுகளின் ஆட்சியாளர்கள் முன்னிறுத்திக் கொண்டு செயல்படுவதன் ஊடாகவே இஸ்ரேல் மீதும் மேற்கு நாடுகள் மீதும் நெருக்கடியையும் கட்டுப்பாட்டையும் சாத்தியப்படுத்திக் கொள்ள முடியுமென கருதுகின்றன. இதனால் இத்தாக்குதல்கள் மிகப் பிரதான மாற்றத்தை பிராந்திய அரசியலில் ஏற்படுத்தக் கூடியதாக அமையவுள்ளது.

மூன்றாவது ஹமாஸ் ஹிஸ்புல்லாக்களை தோற்கடித்த அதே பாணியில் ஹவுதிக்களையும் முடிவுக்கு கொண்டு வருவது இலகுவானதென இஸ்ரேல் கருதுகிறது. அதற்கு அமைவாகவே யெமன் நாட்டின் மீதான தாக்குதலை வடிவமைத்துள்ளது. பிராந்தியத்தில் எழுந்துள்ள வலுச்ச சமநிலையில் பங்குதாரரான ஈரானை முடிவுக்கு கொண்டு வருவதே இஸ்ரேலினதும்; மேற்கு நாடுகளினதும் பிரதான இலக்காக உள்ளது. அத்தகைய இலக்கை நோக்கிய தாக்குதல் கட்டமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியிலும் இராணுவ ரீதியிலும் வலிமை கொண்ட மேற்கு இஸ்ரேலிய கூட்டு இலகுவாக கிளர்ச்சி குழுக்களை முடிவுக்கு கொண்டு வரலாமெனக் கருதுகின்றன.

எனவே மேற்கு நாடுகளின் உத்திகளுக்குள்ளாகப்பட்டுள்ள மேற்காசிய அரசியல் தலைமைகளையும் கிளர்ச்சிக் குழுக்களின் தலைமைகளையும் அரசின் தலைமைகளையும் ஆட்சியாளர்களையும் பலி எடுத்து வருகின்றது. ஹமாசின் தாக்குதலின் விளைவுகள் அபாயகரமாவையாக மாற்றம் பெறத் தொடங்கியுள்ளன. சிரியாவினுடைய வளர்ச்சியும், ர‌ஷ்யாவினுடைய வீழ்ச்சியாக கருதப்படுகின்ற நிலையும் மேற்காசிய அரசியலில் இஸ்ரேல்_ மேற்குலகத்தின் கூட்டு, வலுவான நிலையை காட்டியுள்ளது. பாரிய மனித அழிவுகளையும் சிதைவுகளையும் பயன்படுத்துவதில் பின்னிற்காத மேற்கு இஸ்ரேலியக் கூட்டு தொடர்ச்சியாக பாலஸ்தீனரின் நிலப்பரப்பின் மீது தாக்குதலை நிகழ்த்தி வருகின்றது. உலக பரப்பின் நியதிகளையும் விதிகளையும் மேற்குலகம் தனக்கானதாக தயார் செய்து வைத்திருக்கின்றது. கிழைத்தேசங்கள் ஒவ்வொன்றும் அத்தகைய மேற்குலகின் விருப்புக்கு அடிபணிகின்ற சூழலையே வெளிப்படுத்துகின்றது.

அடிப்படையில் அதற்கு தவறுகின்ற அரசுகள் மீதும், ஆட்சியாளர்கள் மீதும் ஏதோ காரணங்களை முன்வைத்து தாக்குதலை முன்னிறுத்துவதே மேற்கு உலகத்தின் தாராள ஜனநாயகத்தின் வடிவமுமாகும்.

அதனை நோக்கி மேற்காசிய அரசியல் படுகொலைகளின் மையமாக மாறியிருக்கின்றது. மனித உரிமைகளையும் மனிதாபிமான சட்டங்களையும் நியாயாதிக்கங்களையும் விரிவாக முன்வைக்கும் மேற்கு நாடுகள் மேற்காசிய அரசியலில் அவற்றுக்கு எதிரான பாரிய வன்முறையை மேற்கொண்டு அழிவுகளையும் படுகொலைகளையும் அரங்கேற்றி வருகின்றன.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division