மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பாராளுமன்ற பலத்தைக் கொண்டுள்ள புதிய அரசாங்கம் பொறுப்பேற்றிருக்கும் இவ்வேளையில் பிறந்திருக்கும் புதிய வருடமான 2025ஆம் ஆண்டு இலங்கையைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானதொரு ஆண்டாக அமையப் போகின்றது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து படிப்படியாக மீண்டுவரும் இலங்கையை சரியான பாதையில் வழிநடத்தும் பொறுப்பு புதிய அரசு மீது சுமத்தப்பட்டிருப்பதுடன், அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய பொறுப்பு நாட்டின் பிரஜைகளான அனைத்து மக்களுக்கும் உள்ளது.
இதற்கு இணங்க 2025ஆம் ஆண்டான புதிய ஆண்டு ‘கிளீன் ஸ்ரீலங்கா’ என்ற தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் ஆரம்பமாகியுள்ளது. கடந்த வருட இறுதிப் பகுதியில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ‘பாராளுமன்றத்தைச் சுத்தம் செய்வோம்’ என்ற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தி மக்களின் ஆணையை வேண்டி நின்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீது நம்பிக்கை கொண்டு மக்கள் பாராளுமன்றத்தைத் தூய்மைப்படுத்துவதற்கான வாக்குப்பலத்தை வழங்கியிருந்தனர்.
பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்றதற்குப் பின்னரான இலங்கை அரசியல் வரலாற்றில் பாரம்பரிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் குறித்து மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை வீழ்ச்சியுற்று, கடந்த சில ஆண்டுகளாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வெறுக்கும் அளவுக்கு மக்கள் மாறியிருந்தனர். குறிப்பாக மலிந்து போயுள்ள ஊழல் மோசடிகள், அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்படுகின்ற வீண்விரயங்கள் எனப் பல்வேறு குற்றச்செயல்கள் இந்த வெறுப்புக்குக் காரணமாகியிருந்தன.
இவ்வாறான நிலையிலேயே பாராளுமன்றத்தைத் தூய்மைப்படுத்துவதற்கான ஆணையைக் கோரி தேசிய மக்கள் சக்தி பிரசாரம் செய்திருந்தது. அவர்களின் கோரிக்கையை ஏற்று மக்கள் ஆணை வழங்கியிருந்தனர். அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்த பொதுத்தேர்தல் முடிவுகளின் ஊடாக ஒழுக்கம் நிறைந்த அரசியல் கட்டமைப்பொன்றையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மக்களின் எதிர்பார்ப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்ற ரீதியில் அநுர குமார திசாநாயக்க ‘கிளீன் ஸ்ரீலங்கா’ எனும் தேசிய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தார். இதற்காக உருவாக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியில் முப்படைத் தளபதிகள், துறைசார் நிபுணர்கள் உட்பட 18 பேர் உள்ளடங்குகின்றனர். இத்திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு புத்தாண்டு தினமான கடந்த 01ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
அரசாங்க நிறுவனங்களிலும் புதுவருடத்துக்கான சத்தியப் பிரமாணம் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவானதாக அமைந்திருந்தது. நாட்டை பௌதீக ரீதியாக சுத்தமாக வைத்திருப்பது மாத்திரமன்றி, சமூக ரீதியாகவும், பிரஜைகளின் நடத்தைகள் ரீதியாகவும் சகல துறைகளிலும் சிறந்ததொரு இடத்திற்குக் கொண்டு செல்வது இத்திட்டத்தின் பிரதான நோக்கம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பௌதீக ரீதியாக ஏற்படக்கூடிய அசுத்தங்களை அகற்றுவதற்கு அப்பால், மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கும் விடயங்களை சுத்தப்படுத்தி நாட்டை சிறந்ததொரு இடத்திற்கு இட்டுச் செல்வதையே ஜனாதிபதி இத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கின்றார்.
கடந்த வருடத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களின் ஊடாக ஏற்பட்ட அரசியல் கலாசார மாற்றத்தை சரியான பாதையை நோக்கிக் கொண்டு செல்லும் தொடர் வேலைத்திட்டமாகவே இத்திட்டம் பார்க்கப்படுகின்றது.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்ற பின்னர் சுவர்களில் ஓவியம் வரைந்து நாட்டை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தை இளைஞர்கள் தாமாக முன்வந்து மேற்கொண்டிருந்தனர். இருந்தபோதும் அவ்வாறான அழகுபடுத்தும் வேலைத்திட்டம் வெறுமனே சுவர்களில் ஓவியங்கள் வரைவதுடன் மட்டுப்படுத்தப்பட்டது. நடத்தை ரீதியான மாற்றங்களையோ அல்லது சமூக ரீதியான மாற்றங்களையோ ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் எதுவும் கோட்டாபயவின் ஆட்சியில் முன்னெடுக்கப்படவில்லை.
இவ்வாறான பின்னணியில் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ எனும் திட்டத்தை விஞ்ஞான ரீதியில் வடிவமைத்துள்ளது.
தமது அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் இந்த ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டமானது ஓரிரு வருடங்களில் மட்டுப்படுத்தப்படும் வேலைத்திட்டம் அல்ல, குறிப்பிட்ட கால இடைவெளியில் உலகில் ஏற்படும் மாற்றங்களுக்கு அமைய நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டிய யோசனைகளை உள்ளடக்கிய திட்டமாக இது இருக்க வேண்டும் என ஜனாதிபதி கடந்த 01ஆம் திகதி உரையாற்றும்போது கூறியிருந்தார்.
முன்மொழியப்பட்டுள்ள இத்திட்டத்தில் அரசாங்கத் துறையை வினைத்திறனாக மாற்றும் யோசனைகள் உள்ளிட்ட பல விடயங்களும் அடங்கியுள்ளன. இலங்கையின் அரசாங்கத் துறையைப் பொறுத்தவரையில் பாரியதொரு மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டிய துறையாக அத்துறை உள்ளது. அரசாங்க நிறுவனங்களினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் துரிதப்படுத்தப்பட்டு, மக்கள் அலைக்கழிக்கப்படாமல் விரைவான சேவைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஊழலில் நெடுங்காலமாக பழகிப் போன பல்வேறு அமைச்சுக்கள், அரசதுறை நிறுவனங்கள் ஆகியவற்றில் தூய்மைப்படுத்தல் பணி தொடங்கப்பட வேண்டும். இதனைச் செய்வதற்கு இடையூறுகள் விளைவிக்கப்பட்டாலும், முன்னெடுத்த பணியைத் தொடர்ந்து முன்கொண்டு செல்ல அனைவரினதும் ஒத்துழைப்பும் அவசியமென ஜனாதிபதி தனது உரையில் கோரியுள்ளார்.
கடந்த காலத்திலும், பல தலைவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் இதுபோன்ற தூய்மைப்படுத்தல் பணிகளை மேற்கொள்வதாக உறுதியளித்தபோதும், அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னொரு தடவை, மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் காலிமுகத்திடலில் பகிரங்கப்படுத்தப் போவதாக உறுதியளித்த போதும், இதுவரை எவரும் அவ்வாறு செய்தது கிடையாது.
இதுபோன்று கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்தவர்கள் வழங்கிய உறுதிமொழிகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது மக்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது. எனவே, ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் மூலம் புதியதொரு இலங்கையை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
‘கிளீன்’ செய்யும் செயற்பாடு என்பது கடந்த கால உயர்மட்டத்தில் இருந்து தொடங்கப்பட வேண்டும். ஊழல் குற்றச்சாட்டுகள், குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படுவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
அதனை நிறைவேற்றாது போனால், நாடு முன்னேற்றமடைவதில் முட்டுக்கட்டை காலவரையின்றி தொடரவே செய்யும். நாட்டைக் கொள்ளையடித்தவர்களைத் தேடி, கொள்ளையடித்தவற்றை, பொதுமக்களுக்கு மீட்டுத் தருவோம் என்பதுதான் தேசிய மக்கள் சக்தியானது தனது தேர்தல் பிரசாரத்தின் போது வழங்கிய முக்கிய உறுதிமொழி என்பதால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு சிறந்ததொரு வாய்ப்பு இந்த கிளீன் ஸ்ரீலங்காவின் ஊடாகக் கிடைத்துள்ளது.
இத்திட்டத்தை கிராம மட்டக்களுக்குக் கொண்டு செல்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பது மாத்திரமன்றி, நாட்டை சரியான பாதையில் கொண்டு சென்று உலகில் சிறந்ததொரு இடத்திற்கு இலங்கையை நிலைப்படுத்துவதில் ஒத்துழைப்பு வழங்க விரும்புபவர்கள் பங்கெடுக்கும் வகையில் நிதியமொன்றும் உருவாக்கப்படவுள்ளது.
சர்வதேச ரீதியில் நாட்டுக்கு காணப்படும் நற்பெயரை மேலும் மேம்படுத்தி உயர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்ல வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் விரும்புவதாயின், இந்த நிதியத்தின் ஊடாக இணைந்து அரசிற்கு ஒத்துழைப்பு வழங்க முடியும். வெறுமனே சட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் விரும்பவில்லையென்றும், பிரஜைகளின் நடைமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி அதன் ஊடாக நாட்டை ‘கிளீன்’ செய்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டியிருந்தார்.
இலங்கையைப் பொறுத்தவரையில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும், நாட்டின் நற்பெயரை மேம்படுத்துவதற்கும் இப்போது அரியதொரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பு இறுதியான வாய்ப்பா இல்லையா என்பதற்கு அப்பால் தற்பொழுது நல்லதொரு வாய்ப்புக் கிடைத்துள்ளது என்பதுதான் முக்கியம். இதனைச் சரியாகப் பயன்படுத்த அனைவரும் முன்வரவேண்டும் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.
பொருளாதார ரீதியில் நாடு அடைந்த பின்னடைவிலிருந்து மீள்வதற்கு இன்னமும் சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச கட்டமைப்புக்களில் தங்கியிருக்க வேண்டியிருப்பதால், நாட்டில் அதிகரித்துள்ள ஊழல் மற்றும் வீண்விரயங்களைக் கட்டுப்படுத்துவதற்கு இதுபோன்ற தேசிய வேலைத்திட்டங்கள் நிச்சயமாக உதவியாக இருக்கும்.
ஜனாதிபதி செயலகம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள், அரசாங்க நிறுவனங்கள் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது அனைத்து விடயங்களையும் ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டு வர முடியும். அதுபோன்ற, கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் மூலம் பௌதீக ரீதியாக ஏற்படக்கூடிய குறிப்பாக வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தங்களையும் தவிர்க்க முடியும்.
பௌதீக மாற்றம் மற்றும் சமூகக் கட்டமைப்பு மாற்றம் என்பன ஒருங்கே நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் ‘கிளீனான’ ஸ்ரீலங்காவை நம் அனைவராலும் இணைந்து கட்டியெழுப்ப முடியும் என்பதுதான் உண்மை.