ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து பாகிஸ்தான் நடத்திய இத்தாக்குதலில் மொத்தம் 15 பேர் பலியாகி உள்ளனர். ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் நள்ளிரவு முதல் இத்தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது.
இத்தாக்குதலுக்கு பதிலடி நிச்சயம் கொடுக்கப்படுமென ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான்கள் எச்சரித்துள்ளனர். இத்தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் பலியாகினர்.
பக்திகா மாகாணத்தில் நள்ளிரவில் 7 இடங்களில் பாகிஸ்தானின் விமானப்படையின் ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. பலியானோர் ஐவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். 15 பேர் பலியான நிலையில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
பாகிஸ்தானின் இந்த வான்வழித் தாக்குதலில் பர்மால் மாவட்டத்தில் முர்க் பஜார் என்ற பகுதியே முழுமையாக அழிக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் தரப்பில் கூறப்படுகிறது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலைக் கண்டித்து ஆப்கானை ஆளும் தலிபான்களின் பாதுகாப்பு அமைச்சகம், “இத்தாக்குதலுக்கு பதிலடி தருவோம்” என எச்சரித்துள்ளது.
வஜிரிஸ்தானி அகதிகளை இலக்கு வைத்தே பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி இருக்கிறது. “வஜிரிஸ்தான் அகதிகள் இறைமையுடன் சுய உரிமையுடன் தங்கள் நிலத்தில் வாழ உரிமை கொண்டவர்கள்” என்று ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் இராணுவத்தினர் மீது அண்மைக் காலமாக ‘பாகிஸ்தான் தலிபான்கள்’ என அழைக்கப்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இப்பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்கள்தான் ஆதரவு வழங்குகின்றனர் என்பது பாகிஸ்தானின் குற்றச்சாட்டு. இந்த தலிபான்களின் மறைவிடங்களை இலக்கு வைத்து பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் மையங்கள், தளவாடங்கள் மீது திடீரென பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் உள்ளேயே தலிபான் ஆதரவு -மற்றும் எதிர்ப்புக் குழுக்கள் உள்ளன. அந்நாட்டு அரசிலேயே தலிபான் ஆதரவு – எதிர்ப்புக் குழுக்கள் உள்ளன. இவ்வாறான நிலையில்தான் தலிபான் நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தளவாட பகுதி என்று கருதப்படும் பக்திகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில் பாகிஸ்தான் இத்தாக்குதலை நடத்தியுள்ளது.
இரவு நேரம் நடந்த இத்தாக்குதல்களில் லாமன் உட்பட ஏழு கிராமங்கள் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலை பாகிஸ்தான் ஜெட் விமானங்களே நடத்தியுள்ளன.
வான்வழித் தாக்குதல்கள் காரணமாக 15 இற்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து வீழ்ந்தன, பலர் கடுமையாக காயம் அடைந்தனர். பாகிஸ்தான் இத்தாக்குதலை நடத்தி இருக்கும் பட்சத்தில் அது இரண்டு நாட்டு மோதலாக உருவெடுக்க வாய்ப்புகள் உள்ளன.
ஆப்கானிஸ்தானில் உள்ளது போலவே பாகிஸ்தானிலும் தலிபான் அமைப்பு உள்ளது. இந்த தலிபான் அமைப்பின் இரகசிய தாங்கும் இடங்கள், தளவாடங்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளன.
தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) என்று பாகிஸ்தான் தலிபான்கள் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்து பாகிஸ்தான் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துவது வழக்கம். ஆப்கானிஸ்தானில் உள்ள சில பயங்கரவாத அமைப்புகளுக்கும் – இவர்களுக்கும் குரோதம் உள்ளது. பாகிஸ்தான் இராணுவத்தினருக்கும் இவர்களுக்கும் கூட மோதல் உள்ளது.
தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) 2007 இல் உருவாக்கப்பட்டது, பல்வேறு கடுமையான சன்னி இஸ்லாமிய குழுக்களின் அமைப்பாக இது உருவாக்கப்பட்டு வந்தது. பாகிஸ்தானில் தனித்தனியாக செயல்பட்டு வந்த பழங்குடி போராளி குழுக்கள் எல்லாம் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கின.
இந்த அமைப்பு மறைந்த பைத்துல்லா மெஹ்சூத் தலைமையில் உருவாக்கப்பட்டது. TTP ஆப்கானிஸ்தான்_பாகிஸ்தான் எல்லையில் தற்போது மிகப்பெரிய போராளி அமைப்பாக உள்ளது. அவ்வமைப்பில் 30,000 முதல் 35,000 உறுப்பினர்கள் உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, ‘பாகிஸ்தானில் தலிபான் ஆட்சியை நிறுவ வேண்டும். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை தூக்கியெறிய வேண்டும்’ என்பதே இந்த அமைப்பின் குறிக்கோளாகும். பாகிஸ்தானை தாக்கி சீர்குலைப்பதே அந்த அமைப்பின் முக்கிய குறிக்கோள் ஆகும். பல தற்கொலை குண்டுவெடிப்புகள், தாக்குதலை இந்த அமைப்பு பாகிஸ்தானில் நடத்தி உள்ளது.
“இது மிருகத்தனமான தாக்குதல். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வாகாது. இதை ஆப்கானிஸ்தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இந்த கோழைத்தனமான செயலுக்கு பதிலடி கொடுப்போம். எங்கள் பகுதிகளை பாதுகாப்பதே எங்களின் நோக்கம். அதற்காக எந்த எல்லைக்கும் செல்வோம். எங்கள் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உள்நாட்டுப் பிரச்சினைகளை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. தொடர்ந்து மோசமாகி வரும் நாட்டின் பொருளாதாரம், அரசியல் ஸ்திரமின்மை, அதிகரித்து வரும் தீவிரவாத சம்பவங்கள் பாகிஸ்தானை பல முனைகளில் சிக்க வைத்துள்ளன.
இத்தகைய சூழ்நிலையில், ஈரானுடனான சமீபத்திய பதற்றநிலை பாகிஸ்தானுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கின்றதென்பதும் குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் கிழக்கு மற்றும் மேற்கு அண்டை நாடுகளான இந்தியா, ஆப்கானிஸ்தானுடனான உறவுகள் ஏற்கனவே மோசமாக உள்ளன.
இதேவேளை கடந்த ஜனவரியில் இரவு நேரம், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் ‘சப்ஸ் கோ’ பகுதியில் ஜெய்ஷ் அல்-அட்ல் என்ற போராளிகள் அமைப்பின் மறைவிடங்கள் மீது ஈரான் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர், மூன்று பெண்கள் காயமடைந்தனர். ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மறுநாள் காலை ஈரானின் சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தில் தீவிரவாதிகள் என்று கூறப்படுபவர்களின் மறைவிடங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்கியிருந்தது. இதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதை ஈரானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருந்தனர்.
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க நட்பு நாடுகளிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த மேலும் காலஅவகாசத்தை கோர வேண்டிய நிலையில் உள்ளது பாகிஸ்தான்.
சமீபத்தில் பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலுக்குப் பிறகு, உள்நாட்டுப் பிரச்சினைகளால்தான் இந்தியா, ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய மூன்று அண்டை நாடுகளுடன் பாகிஸ்தான் இப்போது எல்லைச் சண்டையில் ஈடுபட்டிருப்பதாக ஒரு கருத்து உருவாகி வருகிறது.
இந்நிலையில் பிராந்திய அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாக அவதானிகள் கூறுகின்றனர்.
கடந்த காலத்தில் பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினைகளைத் தவிர, மதக்குழுக்களாலும் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் சுமார் 8 முதல் பத்தாயிரம் வரையிலான கூலிப்படை தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் பலமுறை குரல் கண்டனம் தெரிவித்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
2000 களில், ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்த போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டது.
சமீபத்தில் பாகிஸ்தான் அரசு இலட்சக்கணக்கான அகதிகளை ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு திருப்பி அனுப்புவதாக அறிவித்த பிறகு இரு நாட்டு அரசுகளுக்கும் இடையேயான பிரச்சினை அதிகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் விடயத்தைப் பொறுத்தவரை, இலட்சக்கணக்கான அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது, நிதி உதவி செய்வது என ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் எப்போதும் உதவி வந்துள்ளது.
இதுஒருபுறமிருக்க, ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்வதன் மூலம் பாகிஸ்தானில் பதற்றநிலையை உருவாக்க இந்தியா முயற்சி செய்வதாக பாகிஸ்தான் தரப்பினால் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எஸ்.சாரங்கன்