ஆண்டுதோறும் நாம் கொண்டாடும் கிறிஸ்மஸ் பெருவிழா மீண்டும் ஒருமுறை நம்மை மகிழ்விக்க வந்துள்ளது.
அமைதி வாழ்விற்கும் அர்த்தமுள்ள பணிகளுக்கும் ஒருங்கிணைந்து வாழும் உறவிற்கும் நம்மை இந்த கிறிஸ்மஸ் விழா அழைக்கின்றது.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக யூத மக்கள் எதிர்பார்த்த மெசியாவின் பிறப்பு அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் எளிமையாக, ஏழ்மையாக, ஏமாற்றமாக அமைந்தது.
எளிய பெற்றோர் வறிய சூழல், கைவிடப்பட்ட நிலை, தங்க இடமின்றித் தவித்த அவலம், மாட்டுக் குடிலில் பிறப்பு, ஏழை இடையோர் சந்திப்பு, தீவனத் தொட்டியில் தாலாட்டு என எல்லாமே எதிர்பார்ப்பிற்கு மாறாகவே நடந்தது.
இன்றைய சூழலில் கிறிஸ்துவின் பிறப்பு விழா புதிய பார்வையில் புதிய சிந்தனையை உருவாக்குகின்றது.
இன்றைய சமூக சூழல்களும் சிந்தனைப் போக்குகளும் நம்மிடையே மனித மாண்பு உரிமைகள் பற்றிய பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.
உலகமயமாக்களால் உலகின் பல இன, மத, மொழி, நாடு சார்ந்த ஒன்றிணைப்பதாக கூறி முன்னேறிய நாடுகளும் தொழில்,வர்த்தக உரிமையாளரும் தங்களுடைய தனிப்பட்ட அடையாளம் தேடும் குழுக்களும் வாழ்வில் ஆதாரங்களை இழந்து தவிக்கும் உழைப்பாளிகளும் ஏழைகளும் முன்னேற்றம் என்ற போர்வையில் கடன் தந்து ஏழை நாடுகளை தங்கள் முதலாளித்துவ கருத்தியல் பிடியில் வைத்திருக்கும் சர்வதேச நிறவனங்களைப் பார்க்க முடிகிறது.
முன்னேற்றப் பாதையில் தங்கள் சுய தன்மைகளை, மரபுக் கூறுகளை இழந்து நிற்கும் எம்போன்ற நாடுகளும் மேனாட்டு கலாசாரங்களை வாரி இறைக்கும் ஊடகங்களையும் பார்க்க முடிகிறது.
சமுதாயத்தில் கடை நிலையில் உள்ளோரைக் கவனியாது வளர்ந்தோரை மையப்படுத்தும் திட்டங்களும் சட்டங்களும் அடிப்படை வசதிகளும் பூர்த்தி செய்யப்படாமல் ஆராய்ச்சி செய்வதும் நியாயமான உரிமைகளுக்குப் போராட தடை விதிப்பதும் இயேசு பிறந்த அக்கால சமூக சூழலுக்கே மீண்டும் எம்மை அழைத்துச் செல்கின்றன. இயேசுவின் பிறப்பை நமது சமூகச் சூழல்களின் பின்புலத்தில் பார்க்கும் போது அவை எமக்கு மூன்று அறை கூவல்களை விடுக்கின்றன. ஒன்று நமது ஆன்மிகம் சமூகம் பற்றிய நமது பார்வை. நம்மில் பலருக்கு இவ்விரண்டும் வெவ்வேறானவை வேறுபட்டவை.
ஆன்மீக வாழ்வு அன்றாட அவலங்களுக்கு அப்பாற்பட்டது. அது விண்ணகத்திற்கு இட்டுச் செல்ல வேண்டியது என்னும் பார்வை. இயேசுவின் பிறப்பு இந்தப் பார்வையை மாற்றி யமைக்கிறது.
விண்ணையும் மண்ணையும் இயேசுவின் பிறப்பு ஒன்றாக இணைப்பதன் மூலம் விண் சார்ந்தவையென நாம் கருதியவைகளை மண் சார்ந்தவைகளில் தேட அழைப்பு விடுக்கிறது. கடவுளாக வாழ்ந்தவர் மனிதரானதால் இனிமேல் காணவியலாத இடத்தில் வாழ்பவரல்ல மாறாக அவர் மாந்தர் நடுவில் வாழும் இறைவன்.
தேடல்களில் இடர்களில் தேவைகளில், தன்னையும் இணைத்துக் கொள்ளும் இறைவன் மனிதரோடு மனிதராக வாழ்வின் உறவுகளில் சங்கமிக்கும் இறைவன் மனித வாழ்வு புனிதமானது என்பதை தன்னலமில்லா உள்ளத்தால் உணர்த்தும் உன்னத இறைவன். எனவே இறைவனை மண் மாந்தரில் தேடும் மாற்றுப் பார்வைக்கும் நம்மை அழைக்கிறது.
இரண்டாவது பிறப்பு இறைவன் மனித நிலையை தேர்ந்து கொண்டதை மட்டும் உணர்த்தவில்லை. ஆனால் எத்தகைய மாந்தரோடு தன்னை இணைத்துக் கொண்டார் என்பதை அழுத்தமாக உரைக்கின்றது.
இன்று புலம் பெயர்ந்து மற்றும் தாய் மண் மரபுகள் பண்பாடுகளை இழந்து பிற நாடுகளிலும் நகரங்களிலும் தவிக்கும் அகதிகளோடு சொந்த நாட்டிலே தமக்கென காணி நிலமின்றி பரிதவிக்கும் மக்களோடு தன்னை இணைத்துக் கொள்கிறார்.
இன்று ஏரோதுக்களாக சிலரே அரண்மனைகளில் மகிழ்ந்திருக்க உண்ணவும், உடுக்கவும், உறங்கவும் வகையில்லாமல் வாழும் பல்லாயிரக்கணக்கான வறியவர்களோடு தன்னை ஐக்கியப்படுத்துகிறார்.மூன்றாவதாக இயேசுவைக் காணவந்த ஞானிகள் அவர் பிறப்பை மாற்றுக் கலாசாரத்தின் தொடக்கமாக காண்கின்றனர். அவர்களே மாற்றுக் கலாசார இயக்கமாக உருவெடுக்கின்றனர்.
ஏரோது என்னும் அரசனை சார்ந்திருப்பதை விடுத்து விடியலான இயேசுவை சார்த்திருக்கும் இயக்கமாக மாறுகின்றனர். வந்த பாதையை மாற்றுகின்றனர்.
செல்வம், பதவி என்னும் மேடுகள் தகர்ந்த சமத்துவப் பகிர்வு பாசமென்னும் சமநிலை குழுமங்களோடு இணைகின்றனர். இடையரைப் போன்றோரோடு தோழமைகொண்டு ஏரோது போன்றோரை விலக்குகின்றனர். இவற்றை உணரும் நாமும் அர்த்தமுள்ள கிறிஸ்மஸ் கொண்டாடுவோம்.
அம்புறோஸ் பீற்றர் (மறையாசிரியர்)