இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்ட பின்னர் முதலாவது வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டு அநுர குமார திசாநாயக்க அண்மையில் இந்தியாவுக்குச் சென்று திரும்பியிருந்தார்.
அவர் தனது முதலாவது விஜயமாக இந்தியாவைத் தெரிவு செய்தமையானது அரசாங்கத்தின் புத்திசாலித்தனமாகவும், விவேகமான நடைமுறையாகவும், யதார்த்தம் மிக்கதாகவும் சர்வதேச ரீதியில் பார்க்கப்படுகின்றது. இலங்கையின் அயல்நாடு என்ற ரீதியில் நெருக்கமான உறவுகளைப் பேணிவரும் இந்தியா, இக்கட்டான பல சூழ்நிலைகளில் உதவிக்கரம் நீட்டியிருந்தது.
இவ்வாறான பின்னணியில் தமது நாட்டுக்குச் சென்ற இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியா சிறப்பான வரவேற்பை அளித்திருந்தது. ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் புவியியல் அமைவிடம் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.
இலங்கையைப் பொறுத்தவரையில் இந்தியா இவ்விடயத்தில் நெருக்கமாகவுள்ளது. அரசியல் ரீதியான வேறுபாடுகளைக் கடந்து இரு நாடுகளுக்கும் இடையில் எப்பொழுதும் பரஸ்பர உறவுகள் காணப்படுகின்றன.
இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகளைப் பறைசாற்றும் வகையில் ஜனாதிபதி அநுரவுக்கு இந்தியா சிறந்த வரவேற்பளித்திருந்தது. ஜனாதிபதி அநுரவின் இவ்விஜயத்துக்கு இந்திய ஊடகங்கள் அதிமுக்கியத்துவம் அளித்திருந்ததுடன், ஜனாதிபதியை வரவேற்பதற்காக புதுடில்லியின் பல்வேறு இடங்களில் சிங்கள மொழியையும் உள்ளடக்கிய பாரிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
அது மாத்திரமன்றி, இந்தியா சென்றடைந்த பின்னர் இந்தியப் படையினரின் மரியாதை அணிவகுப்புடன், கௌரவம் நிறைந்த செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உட்பட முக்கிய தலைவர்களின் பங்கேற்புடன் மாபெரும் வரவேற்பு இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது. இதற்கு முன்னர் இந்தியாவுக்குச் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டது போன்று சிறந்த வரவேற்பைக் கொடுத்திருந்தது இந்திய அரசாங்கம்.
இந்தியாவுக்கும் இலங்கைக்குமான இருதரப்பு உறவுகளின் திட்டம் 2022 கூட்டறிக்கையில் வகுக்கப்பட்டதுடன், இலங்கையின் அரசியல் மாற்றத்திற்குப் பின்னரும், ஜனாதிபதியின் விஜயத்தைத் தொடர்ந்து இது அடுத்தகட்ட நடவடிக்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையின்படி, இரு தலைவர்களும் கடனால் உந்தப்பட்ட முறையிலிருந்து விடுபட்டு, பல்வேறு துறைகளில் முதலீட்டு பங்காளித்துவத்தை நோக்கிய மூலோபாய மாற்றமானது பொருளாதார மீட்சி, அபிவிருத்தி மற்றும் செழிப்புக்கான நிலையான பாதையை உறுதி செய்யும் என்பதை ஏற்றுக் கொண்டிருந்தனர்.
இலங்கையில் பொருளாதார ஒத்துழைப்பின் அடிப்படையில் இலங்கை மீதான இந்தியாவின் கவனத்தில் இது ஒரு பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி அநுரவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பரஸ்பர நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் பரஸ்பர அக்கறைகளுக்கு முன்னுரிமை அளிப்பவையாக இருந்தன.
இந்த ஆண்டு இரு நாடுகளிலும் நடைபெற்ற தேர்தல்களில் இரு நாட்டு மக்களின் நம்பிக்கையையும் பெற்ற இரு தலைவர்களுக்கும் இடையே நெருங்கிய உறவை ஏற்படுத்துவதில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட வெற்றியான சந்திப்பாக இச்சந்திப்பு அமைந்துள்ளது.
இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களை அடிக்கோடிட்டுக் காட்டியதுடன், பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதிலும், சுதந்திரமான, திறந்த, பாதுகாப்பான இந்தியப் பெருங்கடலை உறுதி செய்வதிலும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
மின்சாரம், மற்றும் பெட்ரோலிய குழாய்களை நிறுவுதல் உள்ளிட்ட பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உறவுகளை அதிகரிக்க இந்தியாவும் இலங்கையும் ஒப்புக்கொண்டன. டிஜிட்டல் இணைப்பை முடிவு செய்தன.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது பேசப்பட்ட விடயங்களில் தமிழ் மக்களை குறிப்பாக வடக்கைச் சேர்ந்த மீனவர் சமூகத்தினரைப் பாதிக்கும் எல்லை தாண்டிய மீன்பிடி விவகாரம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது. நீண்ட காலமாகத் தீர்க்கப்படாதுள்ள இந்த எல்லை தாண்டிய மீன்பிடி விவகாரத்திற்கு நிரந்தரமான தீர்வொன்று வழங்கப்பட வேண்டும் என்பது மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
‘பொட்டம் ட்ரோலிங்’ எனப்படும் கடல்வளத்தை அளிக்கும் மீன்பிடி முறை நிறுத்தப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி வலியுறுத்திக் கூறியுள்ளார். இரு நாட்டுக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பித்து இவ்விவகாரத்திற்கு நிரந்தர தீர்வொன்றை வழங்குவது பற்றி கவனம் செலுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.
அதுமாத்திரமன்றி, இந்தியாவின் பாதுகாப்பிற்கோ அல்லது பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கோ அச்சுறுத்தலாக அமையும் வகையில் இலங்கையைப் பயன்படுத்துவதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படாது என்ற உறுதிமொழியை இந்தியாவுக்கு வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பு, காற்றாலை மின்பிறப்பாக்கம் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க சக்தித்துறையை மேம்படுத்துவது, அரசாங்க சேவையை வலுப்படுத்தும் வகையில் அரசாங்கப் பணியாளர்களின் திறன்மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பை வழங்குவது போன்ற விடயங்கள் குறித்தும் ஜனாதிபதியின் விஜயத்தின் போது விரிவான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
இருந்தபோதும், தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷையாக இருக்கும் அதிகாரப் பகிர்வு குறித்து இவ்விஜயத்தின் போது விரிவாகப் பேசப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைய மாகாணங்களுக்கு முழுமையான அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் இரு தலைவர்களும் பேசியதாக எந்தத் தகவல்களும் இல்லை.
புதிய அரசியலமைப்பொன்று தொடர்பில் தேசிய மக்கள் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதால், மாகாணசபைக்கான அதிகாரங்கள் குறித்த விடயத்தில் புதிய அரசியலமைப்பின் ஊடாகத் தீர்வொன்றுக்குச் செல்வது பற்றியே கவனம் செலுத்தப்படுகின்றது. அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவின் மூலம் அண்மையில் வெளிப்பட்டிருந்தது. எனவே, இது விடயத்தில் இம்முறை பேசப்பட்டிருக்கவில்லையென்றே தெரிகின்றது.
இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான நெருக்கமான உறவு புதிய ஜனாதிபதியின் ஊடாக மற்றுமொரு கட்டத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ள போதும், அரசியல் ரீதியாக வங்குரோத்து நிலையை அடைந்துள்ள சில அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை விதைக்கத் தொடங்கியுள்ளனர்.
ஜனாதிபதி அநுரவின் விஜயத்தின் போது எட்கா என அழைக்கப்படும் பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருப்பதாக சந்தேகத்தை மக்கள் மத்தியில் விதைக்கும் கைங்கரியத்தில் உதய கம்மன்பில ஈடுபட்டுள்ளார். பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தமொன்றை இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் ஏற்படுத்துவது தொடர்பில் 2016ஆம் ஆண்டு பேச்சுக்கள் இடம்பெற்றன.
எனினும், அவ்வாறான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டால் இந்தியாவின் ஆதிக்கம் மாத்திரமன்றி, இலங்கையில் பலருக்கு வேலைவாய்ப்புக்கள் கூட இழக்கப்படும் என்ற அச்சம் இலங்கை அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டிருந்தது. இதனால் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை.
இந்த நிலையில் மீண்டும் இவ்விடயத்தை கையில் எடுப்பதற்கு உதய கம்மன்பில போன்ற வங்குரோத்து அடைந்துள்ள அரசியல்வாதிகள் முனைகின்றனர்.
எனினும், எட்கா ஒப்பந்தம் எதுவும் கைச்சாத்திடப்படவில்லை என்றும், குறித்த ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது பற்றியே கலந்துரையாடப்பட்டிருந்தாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். உதய கம்மன்பில போன்றவர்கள் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதற்கு கடந்த காலங்களிலும் செயற்பட்டுள்ளார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம். உதாரணமாகக் கூறுவதாயின், ‘சுவசெரிய’ அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டபோது அதற்கு எதிராக மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை உருவாக்கியிருந்தனர்.
இருந்தபோதும், கொவிட் உள்ளிட்ட இக்கட்டான சூழ்நிலைகளில் சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவை ஆற்றிய பங்கு அளப்பரியது. அது மாத்திரமன்றி, நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த சந்தர்ப்பத்தில் உடனடியாக ஓடிவந்து ஒத்துழைப்பு வழங்கியது இந்தியா.
சுனாமிப் பேரலைத் தாக்கம் போன்ற இயற்கை அனர்த்தங்களின் போதும் கூட உடனடியாக இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டும் நாடாக இந்தியா இருந்தது. இவ்வாறான நிலையில், சுயநல அரசியல் நோக்கத்திற்காக தேவையற்ற வகையில் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை சிலர் கையில் எடுத்துச் செயற்படுகின்றனர்.
இருந்தபோதும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் விஜயத்தின் மூலம் இருதரப்புக்கும் இடையிலான நட்புறவு மேலும் வலுப்பெற்றுள்ளது. இந்தியாவின் உதவியில் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அவற்றைத் தொடர்ந்தும் முன்கொண்டு செல்வது தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைத் தொடர்ந்து பெறுவதில் கடன்மறுசீரமைப்பு விடயத்தில் இந்தியாவின் முழுமையான ஆதரவு குறித்த விடயங்கள் பற்றியும் இங்கு ஆராயப்பட்டுள்ளது.
இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது ஜனாதிபதி அநுரவின் இந்திய விஜயமானது இரு நாட்டுக்கும் இடையிலான உறவகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கான ஆரம்பப் படியாக அமைத்துள்ளது என்றே கூற வேண்டியுள்ளது.