ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் கடந்த 15ஆம் திகதி ஆரம்பமானது. ஜனாதிபதி தனது முதலாவது உத்தியோகபூர்வ பயணமாக அண்டை நாடான இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இந்தியா சென்ற ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ‘ராஷ்டிரபதி பவனில்’ இடம்பெற்றது.
முழுமையான அரச மரியாதையுடன் 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரவேற்கப்பட்டார். அங்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை குதிரைப் படை வீரர்கள் அணிவகுத்து ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்துச் சென்றதன் பின்னர், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரால் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
செங்கம்பளத்தினூடாக ஜனாதிபதி மாளிகைக்கு ஜனாதிபதி அழைத்து வரப்பட்டார்.
அதன்பின், இரு நாட்டு தலைவர்களுக்கும் இரு தரப்பினர்களின் பிரதிநிதிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். வரவேற்பு நிகழ்வின் பின்னர், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்.
அதன்பின், தனது முதல் வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயத்தை நினைவுகூரும் வகையில், ராஜ்காட்டின் காந்தி தர்ஷன் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்ட ஜனாதிபதி, சிறப்பு விருந்தினர் ஏட்டிலும் கையெழுத்திட்டார்.
அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்றும், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்றும் இடம்பெற்றது. அதேபோன்று இந்திய துணை ஜனாதிபதி ஜக்தீப் டங்கர் மற்றும் நிதி மற்றும் நிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரையும் ஜனாதிபதி சந்தித்தார். இந்த விஜயத்தின் போது இந்தியாவின் மிகவும் சிறப்பு வாய்ந்த பிரதிநிதிகளான வர்த்தகர்களைச் சந்தித்து இந்த நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்தும் ஜனாதிபதி கலந்துரையாடினார்.
ஜனாதிபதி புத்தகயாவிற்கு விஜயம் செய்தமையும் இந்த விஜயத்தின் விசேட நிகழ்வாக அமைந்ததுடன், ஜனாதிபதிக்கு இந்து முறைப்படி அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கை ஜனாதிபதி, இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய மூவரும் கீழ் மட்டத்திலிருந்து தமது பயணத்தை ஆரம்பித்து ஒரு நாட்டின் ஆட்சியாளர்களாக மாறியவர்கள் என்பதோடு, அவர்கள் சிவப்பு கம்பளத்தில் அமர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றியது வரலாற்று நிகழ்வாகும்.
இந்தியப் பிரதமருடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்ததன் பின்னர் ஜனாதிபதி, முதலில் இந்தியாவுக்கு இலங்கையின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
2022ஆம் ஆண்டில் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போதும் அதற்குப் பின்னரும் இலங்கை மக்களுக்கு இந்தியா வழங்கிய ஒத்துழைப்பிற்காக இது அமைந்திருந்தது.
இந்தியாவின் ‘அண்டைக்கு முதலிடம்’ என்ற கொள்கை மற்றும் ‘SAGAR’ என்ற தொலைநோக்கினுள் இலங்கைக்கு கிடைக்கும் சிறப்பு இடம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.
4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அவசரகால நிதி மற்றும் அந்நிய செலாவணி உதவி உட்பட பன்முக ஒத்துழைப்புக்கள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு இந்தியா வழங்கிய உதவிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார் ஜனாதிபதி, உத்தியோகபூர்வ கடனாளிகள் குழுவின் இணைத் தலைவர் என்ற வகையில் மேற்கொண்ட வகிபாகம் உட்பட இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு இந்தியா வழங்கிய ஒத்துழைப்புக்களையும் அவர் பாராட்டினார். கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை சரியான நேரத்தில் முடிப்பதற்கு அது மிகவும் முக்கியமானதாக இருந்தாலும், கடன் சுமையினை குறிப்பிடத்தக்களவுக்கு குறைத்து தற்போது நடைமுறைப்படுத்தப்படும் கடன் வசதிகளின் கீழ் முடிக்கப்பட்ட வேலைத் திட்டங்களுக்காக இலங்கை செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்துவதற்காக 20.66 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியதற்காகவும் இந்திய அரசாங்கத்திற்கு ஜனாதிபதி தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். கடன் மறுசீரமைப்பு தொடர்பான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நாட்டுத் தலைவர்கள் அறிவுறுத்தினர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் ஊடாக பல பயனுள்ள முடிவுகள் எமக்குக் கிடைத்துள்ளன.
தற்போது நடைமுறையில் உள்ள கடன் மறுசீரமைப்புக்கு மத்தியிலும் கூட முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு இந்தியா வழங்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் ஜனாதிபதி பாராட்டினார். இரு நாடுகளுக்குமிடையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்திய வேலைத் திட்டங்களை எதிர்காலங்களிலும் தொடர்வதற்குத் தேவையான பின்னணி குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாவது மற்றும் நான்காம் கட்டங்கள் மற்றும் வடக்கில் மூன்று தீவுகளில் நடைமுறைப்படுத்தப்படும் கலப்பின புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை விரைவாக செயல்படுத்துவது குறித்தும், கிழக்கு மாகாண மற்றும் இலங்கையின் மதஸ்தலங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் வழங்குவது தொடர்பான திட்டங்களை உரிய காலத்தில் செயல்படுத்துவதற்கு முழு ஒத்துழைப்பை வழங்குவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இந்தியாவில் உள்ள நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் ஊடாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களைச் சேர்ந்த 1,500 அரச ஊழியர்களுக்கான பயிற்சிச் சந்தர்ப்பங்களை ஏற்பாடு செய்வதற்கும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை வழங்குவது மற்றும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அதிக திறன் கொண்ட மின்சாரக் கட்டமைப்பு தொடர்புகளை ஏற்படுத்துவது குறித்தும் இதன்போது பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.
டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் இந்தியாவின் வெற்றிகரமான அனுபவத்தை இனங்கண்டு இந்தியாவின் ஒத்துழைப்புடன் அத்தகைய கட்டமைப்புகளை இலங்கையில் அமைப்பது குறித்து ஆராய்வதற்கும் முடிவு செய்யப்பட்டது.
விவசாயம், மீன்வளர்ப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் பரஸ்பரம் ஆர்வத்தைக் காட்டும் பிற துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடரவும், விவசாயத்தை நவீனமயமாக்கவும் இதன்போது இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பாதகமான எந்தவொரு நோக்கத்திற்காகவும் இலங்கைப் பிரதேசத்தை பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என்ற இலங்கையின் நிலைப்பாட்டை ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார்.
இலங்கையின் பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு தேவைகளை மேம்படுத்துவதன் மூலம் கடல்சார் சவால்களை வெற்றிகொள்வதற்கும் பிராந்திய போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவது பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அதேபோன்று, பயங்கரவாதம், போதைப்பொருள், போதைப்பொருள் கடத்தல், பணமோசடி போன்ற பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்த கட்டமைப்பை தயாரிப்பது குறித்தும் பேசப்பட்டது.
இலங்கையில் விமான நிலையங்களை அபிவிருத்தி செய்தல் தொடர்பிலும், சமய மற்றும் கலாசார சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்காக வசதிகளை வழங்கக்கூடிய கட்டமைப்பை ஏற்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இந்திய- – இலங்கை பயணிகள் போக்குவரத்து படகு சேவையை மேலும் மேம்படுத்தி, இராமேஸ்வரம் – தலை மன்னார் ஆகியவற்றுக்கு இடையே பயணிகள் போக்குவரத்து படகு சேவையை விரைந்து தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் இலங்கையில் உள்ள கங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைக்க ஒன்றிணைந்து செயற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
அத்துடன் இருதரப்பிலும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் வாழ்வாதாரங்களை கருத்தில் கொண்டு மனிதாபிமான ரீதியில் தீர்வுகளை தொடர்ந்து பெற வேண்டியதன் அவசியம் குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களுக்கு மத்தியில் இணக்கம் எட்டப்பட்டது.
பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தை இந்திய உதவியுடன் அபிவிருத்தி செய்தல், காரைநகர் படகுத் தளத்தை புனரமைத்தல், மீன் வளர்ப்புத் துறையின் ஒத்துழைப்பு உள்ளிட்ட இலங்கையின் மீன்பிடித் தொழிலின் நிலையான மற்றும் வர்த்தக அபிவிருத்திக்காக இந்தியா எடுத்துள்ள முயற்சிகளுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
எம். எஸ். முஸப்பிர்