வடக்கில் இம்முறை தேசிய மக்கள் சக்தியின் மூன்று பிரதிநிதிகள் தேர்தெடுக்கப்பட்டிருக்கின்றார்கள், அதனால் பிராந்திய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடாதென்கிறார் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர். அவர் தினகரன் வார மஞ்சரிக்கு வழங்கிய செவ்வியில் யாழ். மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்கைப் பெற்ற இளங்குமரனும் பிராந்திய அரசியலைச் சார்ந்தவர்தானென்கிறார். அவரதுசெவ்வி விபரமாக…
கே : ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வட மாகணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பாரிய அளவிலான வாக்குகள் கிடைக்கவில்லை. ஆனால் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த மிகக் குறுகிய காலத்திலேயே, அதாவது பொதுத் தேர்தலில், மிகப்பெரிய வெற்றியை வடக்கு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு தந்திருக்கிறார்கள். இது எவ்வாறு சாத்தியமாகியது? இது நீங்கள் அமைதியான முறையில் அங்கு மேற்கொண்ட முயற்சிகளின் பலன் என்று குறிப்பிடலாமா?
பதில் : நிச்சயமாக இது எனது தனிப்பட்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றி அல்ல. இதில் ஒரு கூட்டு முயற்சி, குறிப்பாக எங்களுடைய கட்சியினது அயராத முயற்சி இருக்கிறது என்று கூட சொல்லலாம்.
இந்த வெற்றிக்கான காரணத்தை நாங்கள் ஆராயப் போனால் இன்னும் நாங்கள் சற்று பின்னே திரும்பி பார்க்க வேண்டும். நாங்கள் 2010 ஆம் ஆண்டு தொடக்கமே யாழ்ப்பாணத்தில் எங்கள் செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கிறோம்.
குறிப்பாக 2015 க்கு பிறகு மேலும் தீவிரமாக யாழ்ப்பாணத்தில் செயற்பட ஆரம்பித்தோம். 2015 ஆம் ஆண்டு முதல் நான் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் தான் இருந்திருக்கிறேன். அப்போதிலிருந்து எங்கள் தோழர்கள் யாழ்ப்பாண மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதிலும், அவற்றைத் தீர்க்க வேண்டும் என்பதற்காகவும் அர்ப்பணிப்போடு செயற்பட்டு வந்திருக்கிறார்கள்.
அதுமாத்திரமல்ல நாட்டில் ஏற்பட்ட அரசியல், பொருளாதார மாற்றங்கள் மற்றும் அந்த மாற்றங்களால் மக்களின் மனங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் அந்த மாற்றங்களுக்கு அமைவாக தேசிய மக்கள் சக்தி தன்னை வளர்த்துக் கொண்டமை என்று காரணங்களை அடுக்கலாம். ஆனால் நாங்கள் தங்களது பிரச்சினைகளைத் தீர்ப்போம் என்று யாழ். மக்கள் நம்பினார்கள். அதுமாத்திரமல்ல ஜனாதிபதித் தேர்தலில் தோழர் அநுர குமார திசநாயக்க வெற்றி பெற்றது, தேர்தலை தொடர்ந்து ஜனாதிபதியின் எளிமை, அவரது செயற்பாடுகள் தொடர்பில் மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை, விருப்பு எல்லாம் தான் யாழ். மக்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்று நான் நம்புகிறேன்.
கே : தேர்தலுக்கு முன்னர் நீங்கள் வடக்கில் பேசும் போது, வடக்கு மக்களின் பிரச்சினைகளை நன்கறிந்தவர்கள் தேசிய மக்கள் சக்தியினர் என்று பல தடவைகள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு குறிப்பாக வடக்கை மையமாகக் கொண்டு அரசியல் செய்பவர்கள் எல்லோரும் வடக்கு மக்களை ஏமாற்றுகிறார்கள், என்று சொல்லியிருக்கிறீர்கள், அவ்வாறானால் வடக்கு மக்களின் பிரச்சினைகளாக நீங்கள் எவற்றை இனக்கண்டு கொண்டிருக்கிறீர்கள் அவற்றுக்கான தீர்வாக நீங்கள் எவற்றை முன்மொழிவீர்கள்?
பதில் : நிச்சயமாக. இது நிச்சயம் பேசப்பட வேண்டிய ஒரு விடயம்.
அதுவும் தற்காலத்தில் நிச்சயமாக கதைக்கப்பட வேண்டிய ஒரு விடயம்.
வடக்கை இதுவரை காலமும் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் தலைவர்களும் ஆட்சியாளர்களும் அந்த மக்களை பகடைக்காய்களாகத்தான் பயன்படுத்தி வந்தார்கள். மக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் அப்படியே வைத்துக் கொண்டு அந்தப் பிரச்சினைகளை ஏலம் போட்டு அவற்றிலே குளிர் காய்ந்தவர்கள் தான் வடக்கு தமிழ் மக்களுக்கான அரசியல் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள்.
அதுதான் அங்குள்ள நிலைவரம். அதுதான் அவர்களது அரசியல் வரலாறாகவும் இருந்திருக்கிறது.
அதற்காகவே இனவாதம், மதவாதம் என அஸ்திரங்களையும் அவர்கள் ஏவினார்கள். மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தினார்கள். மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படக்கூடாது என்பதற்காகவே செயற்பட்டார்கள் .
அதற்காகத்தான் நாங்கள் பத்து வருட காலமாக வடக்கில் இருந்து அந்த மக்களோடு செயற்பட்டோம், அந்த மக்களின் பிரச்சினைகள் எவை என ஆராயந்தோம். குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின் போது நேரடியாக ஜனாதிபதி அங்கு சென்று மக்களிடம் குறிப்பிட்டார். நாங்கள் உங்களிடம் வந்திருப்பது உங்களுக்கு 13 தருவதற்கோ அல்லது 13 பிளஸ்ஸை தருவதற்கோ, சமஷ்டியை தருவதற்கோ அல்லது தனிநாட்டை தருவதற்கோ, அல்ல. உங்களது பிரச்சினை என்பது உங்களுக்கு மத்திரமானது அல்ல. மாறாக அது இலங்கையில் உள்ள அனைத்து மக்களினதும் பிரச்சினை. உங்களது பிரச்சினைக்கான மூல வேர் வேறு எதுவுமல்ல. கடந்த 76 வருடங்களாக எமது நாட்டை ஆண்ட ஆட்சியாளர்கள்தான். அந்த ஆட்சியாளர்களின் அரக்கத்தனமான செயற்பாடுகளே இவற்றுக்கெல்லாம் மூலகாரணம் என்றார். அவர்களது அரக்கத்தனத்தாலேற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும், அதற்கான நடவடிக்கை எடுக்கும் பெரியதொரு கொடுக்கல் வாங்கல்தான் எங்களுக்கு தமிழ் மக்களுடன் இருக்கிறது என்றார். நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் அவ்வாறான கொடுக்கல் வாங்கல்தான் இருக்கும், அந்தவகையில் தமிழ்மக்களின் பிரச்சினையை இலங்கை மக்களின் பிரச்சினையாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம்.
கே: தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதிநிதிகளையும் உள்வாங்குவீர்களா?
பதில் : நிச்சயமாக. தமிழ் மக்களின் பிரச்சினைகளை அணுகுவதற்கு நான்கு வகையான அணுகுமுறைகளைக் கையாள வேண்டுமென்று நாங்கள் கூறுகின்றோம். முதலாவது நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவாகவுள்ள பிரச்சினைகள். அவை வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு, போதைவஸ்துப் பாவனை என்பனவாக அமையலாம். முதலில் அந்த பிரச்சினைகளில் இருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும். அதற்கான தீர்வை வழங்கும்போது பல்வேறு பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
ஆகவே இவற்றிலிருந்து நாம் மக்களை மீட்டெடுக்க வேண்டும். இப்பிரச்சினைகளுக்கான தீர்வு இது நாள் வரைக்கும் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குக்கென தனித்தனியாக இருந்து வந்துள்ளது. எனவே முதலாவதாக இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது பல்வேறு பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும்.
இரண்டாவதாக, தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் தனித்துவமான பிரச்சினை. தமிழர் என்ற காரணத்தினால் அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறை, மொழி ரீதியிலான பாகுபாடு போன்றவற்றிலிருந்து தமிழ் மக்களை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதற்கு உதாரணமாக, 99 சதவிதமான தமிழ்மக்கள் வாழ்கின்ற வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணத்தில் தமிழ் பொலிஸ் உயரதிகாரிகளோ குறைந்தபட்சம் தமிழ் OIC கூட யாழ். மாவட்டத்தில் கிடையாது. இதுபோன்ற பிரச்சினைகள் இங்கு காணப்படுகின்றன..
அத்துடன், இன்று அரசாங்க திணைக்களங்களுக்குச் சென்று தமிழில் முறைப்பாட்டு கடிதமொன்றைக்கூட வழங்கமுடியாதநிலையே உள்ளது. தமிழர்கள் என்ற உணர்வோடு, அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளது. இவையனைத்தும் தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் தனித்துவமான பிரச்சினைகள். எனவே இந்த பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற விடயத்தில் நாம் தெளிவாகவுள்ளோம். அவற்றை தீர்ப்போம்.
மூன்றாவதாக மாகாண சபை தேர்தலை அடுத்த வருடம் நடத்துவோம். மாகாணசபை தேர்தல் தொடர்பாக பலரும் பலவிதமான கருத்துக்களை கூறுகின்றார்கள். அவை ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்கள் ஆகும். ஏனெனில் நாம் எமது கொள்கை விளக்க உரைகளில் நாம் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். மாகாணசபை தேர்தல் நடத்தப்படும், அதனூடாக அதன் பிரதிநிகள் தெரிவுசெய்யப்படுவார்கள்.
13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ்உள்ள மாகாணசபை தேர்தலை நாங்களும் உள்வாங்கிகொண்டிருக்கின்றோம். அந்த வகையிலேயே மாகாண சபை தேர்தலும் நடத்தப்படுகின்றது.
நான்காவதாக புதிய அரசியலமைப்பாகும். இந் நாட்டில் உருவாக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு, சட்டமூலங்கள் அனைத்தும் இதுவரைக்காலமும் ஆட்சிசெய்த ஆளுந் தரப்பினரின் விருப்பமாகவே இருந்திருக்கின்றதே தவிர, மக்களுடைய விருப்பம் அல்ல.
எனவே, மக்களுடைய விருப்பத்தை உள்வாங்கி ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
அதற்காக நாட்டிலுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவர் உட்பட நாட்டில் வாழும் அனைத்து இன மக்களின், புத்திஜீவிகளின் கருத்துக்களை உள்வாங்கி நீண்டு நிலைக்கக்கூடிய ஒரு நிரந்தரமான அரசியலமைப்பொன்றே எமக்கு தேவையாக வுள்ளது.
அதன்படி, 2015 ஆம், 2019 ஆம் ஆண்டுகளில் விவாதிக்கப்பட்டு இன்று கைவிடப்பட்டுள்ள இந்த அரசியலமைப்பை கவனத்திற்கொண்டு, அதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை மேற்கொண்டு, இலங்கை மக்களின் அரசியலமைப்பாக உருவாக்குவதே எமது நோக்கமும் அணுகுமுறையுமாகும்.
அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துக்கும், இந்த அரசியலமைப்பினூடாக உள்வாங்கப்படும்.
கே : வடக்கில் ஏற்பட்ட ஜே.வி.பி அலை, இத்தனை காலமும் அங்கிருந்த அனைத்து கட்சிகளையும் அடித்துச் சென்றுள்ளது. ஆகையால் பிராந்திய அரசியல் இல்லாமல் போவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதா? ஜே.வி.பி தன்னை இன்னும் பலப்படுத்திக்கொள்ளுமா?
பதில் : யாழ். மாவட்டத்தில் எமது கட்சியின் இளம் குமரன் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டார். வடக்கிலுள்ள அரசியல் கட்சிகள், அங்குள்ள இளைஞர்கள் மற்றும் மக்களாலேயே தோற்கடிக்கப்பட்டன.
அத்துடன், பிராந்திய, தேசிய அரசியல் என்பதை விட, இதுநாள் வரை காலமும் வடக்கில் ஆட்சி செய்தவர்கள், யாருக்காக எதனை செய்துள்ளார்கள்? அதன் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன? பிராந்திய அரசியல், தமிழ் மக்களின் அரசியல் என கூறிக்கொண்டு இவர்கள் எதனை நிலைநாட்டியுள்ளார்கள்? போன்ற கேள்விகள் மக்கள் மத்தியில் உள்ளன.
இந்த கேள்விகளுக்கு தேசிய மக்கள் சக்தி மூலம் விடைகிடைக்கும் என்ற நம்பிக்கையினால், யாழ். மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட பிரதிநிதிகள் வென்றுள்ளார்கள்.
வென்றவர்களும் அந்த பிராந்திய அரசியலை சார்ந்தவர்களே.
கே : கடற்றொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கின்றீர்கள் உங்களின் வெற்றிக்கு, வடக்கு கடற்றொழில் சங்கங்கள் அதிகமாக உழைத்திருப்பதாக தெரிய வருகின்றது. எனவே கடற்றொழிலார்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நீங்கள் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்கள்?
பதில் : தேசிய மக்கள் சக்தி என்பது இலங்கை மக்கள் சக்தியே என்பதை நாம் மிகவும் தெளிவாக கூறுகின்றோம். எங்களுடைய முதலாவதும் இரண்டாவதும் மூன்றாவதும் மக்களே… எனவே, மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்கும் திசையை நோக்கி எமது நகர்வு அமைந்திருக்கும்.
அதேபோன்று அளப்பரிய சேவையளித்து எமது வெற்றிக்கு உறுதுணையாகவிருந்த மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும், இதுவரைகாலமும் இல்லாத வகையில் கரிசனையுடனும் செயற்படுவோம் என்ற உறுதிமொழியை மக்களுக்கு வழங்கியுள்ளோம்.
கே : ஜனாதிபதியின் இந்திய பயணம் பற்றி?
இந்தியாவிற்கு ஜனாதிபதி செல்கின்றார். இதன்போது மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக நிச்சயம் ஆராயப்படும். அத்துடன் சுமூகமான நியாயமான தீர்வை எட்டுவதற்கே நாம் முயற்சிக்கின்றோம்.
கே : இந்திய தூதுவருடனான உங்கள் சந்திப்பு பற்றி கூற முடியுமா?
பதில் : ஆம். இந்திய மீனவர்களின் பிரச்சினைகள், இந்திய மீனவர்கள் கைது மற்றும் அவர்களின் விடுதலை தொடர்பான பிரச்சினைகள் பற்றி பேசப்பட்டது.
அதேபோன்று, இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு, எமது கடல் மீதான கொள்ளை தொடர்பாக பேசப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமான முறையில் நடைபெற்றிருந்தது. மேலும் இந்த பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கான நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம்.
எனவே, பிரச்சினைகளை பேசி தீர்க்க முடியுமாவிருந்தால் அதுவே வரவேற்கத்தக்க விடயம். இது மிகவும் ஆரோக்கியமான கலந்துரையாடலாக அமைந்திருந்தது.
கே : மீனவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான சவால்கள் என்ன என நீங்கள் நினைக்கின்றீர்கள்?
பதில் : சவால்கள் என்று கூறுவதற்கு ஒன்றுமே இல்லை. நாம் ஆட்சியை பொறுப்பேற்று ஒரு மாத காலமே ஆகின்றது. அதற்குள் தடைகள், சவல்கள் என கேட்க முடியுமா?
நேர்காணல் வாசுகி சிவகுமார்