நாலா புறமும் கடலால் சூழப்பட்டுள்ள இலங்கைத் தீவின் வட மாகாணத்திலுள்ள யாழ். குடாநாட்டில் காய்ச்சலைப் பிரதான அறிகுறியாகக் கொண்டிருந்த சிலர் கடந்த சில தினங்களாக மரணமடைந்தனர். அவர்களது மரணமும் காய்ச்சலும் யாழ்ப்பாணம் உட்பட முழு நாட்டிலும் பரபரப்பு நிலையை ஏற்படுத்தியது.
அதாவது பருத்தித்துறையைச் சேர்ந்த 40 வயதுடைய நபரொருவர் சாதாரண காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறிகளுடன் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டார்.
அதேபோன்று நாவற்குழி பகுதியைச் சேர்ந்த நபரொவரும் இதே அறிகுறிகளுடன் இவ்வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அத்தோடு கிளிநொச்சி வைத்தியசாலையிலும் இக்காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 28 வயதுடைய நபரும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு காய்ச்சலைப் பிரதான அறிகுறியாகக் கொண்டிருந்த 07 பேர் யாழ் குடாநாட்டில் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவரென சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு சமூக மருத்துவர் துஷானி தபரேரா குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரி, பருத்தித்துறை மற்றும் கரவெட்டி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் தான் இக்காய்ச்சலுக்கு அதிகம் உள்ளானவர்களாக இனம் காணப்பட்டுள்ளனர். யாழ் குடா நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை வரையும் 70 காய்ச்சல் நோயாளர்கள் சிகிச்சை பெற்று வந்ததாக வடமாகாண சுகாதார பணிப்பாளர் சமன் பத்திரன தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் இக்காய்ச்சலின் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஆர். கேதீஸ்வரன் பருத்தித்துறை, சாவகச்சேரி, கரவெட்டி ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு நாள் காய்ச்சல் காணப்பட்டாலும் தாமதியாது அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
யாழ். குடா நாட்டில் காய்ச்சலைப் பிரதான அறிகுறியாகக் கொண்ட நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதும் சிலர் உயிரிழந்திருப்பதும் யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்லாமல் நாடெங்கிலும் பரபரப்பை தோற்றுவித்திருந்தது. இது பெரும் பேசுபொருளான விடயமாகவும் விளங்குகிறது. மருத்துவர்களும் பொதுமக்களும் இக்காய்ச்சலுக்கான காரணிகளைக் கண்டறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டியுள்ளனர்.
இப்பின்புலத்தில் இக்காய்ச்சல் காரணமாக மரணமடைந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட குருதி உள்ளிட்ட உடல் பாக மாதிரிகள் ஆரம்பத்திலேயே கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிலையத்துக்கும் கண்டி போதனா வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டு ஆராய்ச்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் தடுப்பு பிரிவில் இருந்து விஷேட மருத்துவ நிபுணர் பிரபா அபேகோன் உள்ளிட்ட குழுவும் இந்நோய் தொடர்பில் ஆராயவென அவசர அவசரமாக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இத்தகைய சூழலில் யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ நிபுணர் பேரானந்தராஜா இக்காய்ச்சல் குறித்து ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது, ‘கடந்த இரண்டு வாரங்களாக காய்ச்சலைப் பிரதான அறிகுறியாகக் கொண்ட பலர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலரது சுவாசப்பையில் இரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. இது சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தி இருந்தது. அதனால் தான் சிகிச்சை அளித்தும் சில நோயாளர்களைக் காப்பாற்ற முடியாமல் போனது. பொதுவாக கிருமித் தொற்று நோய் ஏற்படும் போது காய்ச்சலுடன் சுவாசப்பையிலும் தாக்கங்கள் ஏற்படலாம். அவ்வாறு தாக்கம் ஏற்பட்டால் குருதிக் கசிவு ஏற்பட்டு ஒட்சிசன் பரிமாற்றத்தில் குறைபாடு ஏற்பட வழிவகுக்கும். அது மூச்செடுப்பத்தில் சிரமத்தை ஏற்படுத்தும். அத்தகையவர்களை செயற்கை சுவாசம் அளித்தும் காப்பாற முடியாத நிலை ஏற்படலாம் என்று கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்திலும் நாட்டின் பல பிரதேசங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த இக்காய்ச்சலினால் மரணமடைந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவர்களுக்கு எலிக்காய்ச்சல் ஏற்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் சமூக மருத்துவர் துஷானி தபரேரா குறிப்பிட்டிருக்கிறார். என்றாலும் சுவாசக் கோளாறுடன் கூடிய ஒரு வகை காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் 40 க்கும் மேற்பட்டவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறியுள்ளார்.
இவரது அறிவிப்பு யாழ். குடாநாட்டின் காய்ச்சலை பிரதான அறிகுறியாகக் கொண்ட நோய் நிலை குறித்து ஏற்பட்டிருந்த பரபரப்பு நிலையை தணித்துள்ளது. ஆனாலும் இந்நோய்க்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்படுபவர்கள் தினமும் பதிவாகவே செய்கின்றனர். அதனால் காய்ச்சலைப் பிரதான அறிகுறியாகக் கொண்ட நோய் நிலைகள் குறித்து கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுமாறும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எலிக்காய்ச்சல் என்பது ஆளுக்காள் தொற்றிப் பரவும் ஒரு நோயல்ல. அதன் மூல காரணி லெப்டோஸ்பைரோசிஸ் என்ற பக்றீரியாவாகும்.
இப்பக்றீரியாவின் தாக்கத்திற்கு எலிகள், பூனை, நாய், மாடு, பன்றி உள்ளிட்ட விலங்குகள் உள்ளாக முடியும். அத்தகைய விலங்குகளின் சிறுநீரகங்களில் இந்த பக்றீரியா அதிகளவில் காணப்படும். அவற்றின் சிறுநீர் ஊடாக இப்பக்றீரியா வெளியேறி சுற்றாடலிலும் குறிப்பாக சேறு சகதி மிக்க பகுதிகளிலும் காணப்படும். எலிகள் மூலம் தான் இப்பக்றீரியா அதிகளவில் பரப்பப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வயல், வடிகான்கள் உள்ளிட்ட சேறு, சகதி மிக்க பகுதிகளில் காணப்படுகின்ற இப்பக்றீரியா மழையுடன் சேர்த்து செயலூக்க நிலையை அடையும்.
அதனால் தான் மழைக் காலநிலையைத் தொடர்ந்து வயல், வடிகான் உள்ளிட்ட சேறு சகதி மிக்க பிரதேசங்களில் நடமாடுபவர்களும் விளையாடுபவர்களும் தொழில்களில் ஈடுபடுபவர்களும் இந்நோய்க்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்படுகின்றனர்.
பொதுவாக இப்பக்றீரியாவானது கை, கால் உள்ளிட்ட உடல் பாகங்களில் காணப்படும் புண்கள், காயங்கள் மற்றும் கீறல்கள், காயங்கள் மூலமும் நீரோட்டமின்றி காணப்படும் குளங்கள், வயல்கள், நீர்த்தடாகங்களில் குளிக்கும் போதும், முகம் கழுவும் போதும் கண், மூக்கு, வாயினுள்ள மென் சவ்வு என்பவற்றின் ஊடாகவும் சுகதேகியின் உடலுக்குள் சென்றடைகிறது.
என்றாலும் இப்பக்றீரியா தொற்றுக்கான அறிகுறிகள் வெளிப்பட 7 முதல் 14 நாட்கள் செல்லலாம். அதனால் வயல், வடிகான் உள்ளிட்ட சேறு, சகதி மிக்க இடங்களில் தொழில்புரிபவர்கள் பிரதேசதத்திலுள்ள மருத்துவ அதிகாரியின் ஆலோசனையுடன் எலிக்காய்ச்சல் தவிர்ப்புக்கான மாத்திரையை இலவசமாகப் பெற்று பயன்படுத்தி பணிகளில் ஈடுபடுமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.
அதேநேரம் இந்நோய் தொற்றுக்கு உள்ளானால் கடும் காய்ச்சல், உடல் வலி, கண்கள் சிவத்தல், குமட்டல் போன்றவாறான அறிகுறிகள் வெளிப்படலாம். அத்தோடு ஒரு சில தினங்கள் செல்லும் போது வாந்தி, கடும் தலைவலி, சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல், சிறுநீரில் இரத்தம் வெளிப்படல், உடலில் பலவீனம் உள்ளிட்ட அறிகுறிகளையும் அவதானிக்க முடியும். இத்தகைய அறிகுறிகள் பெரும்பாலும் இந்நோய் ஆபத்தான கட்டத்தை அடைந்திருப்பதன் வெளிப்பாடாக அமையும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சிறுநீரகம், இதயம், மூளை, நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புக்களின் செயலிழப்பின் வெளிப்பாடாகவே இத்தகைய அறிகுறிகள் வெளிப்படலாம்.
அதனால் தான் காய்ச்சலைப் பிரதான அறிகுறியாகக் கொண்ட நோய் நிலை காணப்படுமாயின் கவனயீனமாகவோ அசிரத்தையாகவோ நடந்து கொள்ள வேண்டாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் எலிக்காய்ச்சல் என்பது முழுமையாகத் தவிர்த்துக் கொள்ளவும் குணப்படுத்திடவும் கூடியதொரு நோய். எலிகள் நடமாட்டத்திற்கு இடமளிக்காத வகையில் சுற்றாடலை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு எலிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அத்தோடு தற்போதைய சூழலில் காய்ச்சலை பிரதான அறிகுறியாகக் கொண்ட நோய் நிலை காணப்படுமாயின் ஆரம்ப கட்டத்திலேயே உரிய சிகிச்சை பெற்று நோயைக் குணப்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.
என்றாலும் காய்ச்சல் குறித்து மக்கள் மத்தியில் காணப்படும் கவனயீனம், அசிரத்தை காரணமாக இவ்வருடம் 12 ஆயிரத்து 82 பேர் கடந்த 12 ஆம் திகதி வரையும் எலிக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்திருக்கிறார்.
ஆனால் கடந்த வருடம் நாட்டில் 09 ஆயிரம் பேர் தான் இக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 200 பேர் மரணமடைந்தனர் என்று தொற்று நோயியல் தடுப்புப் பிரிவு தரவுகள் தெரிவித்துள்ளன. இதன்படி கடந்த வருடத்தை விடவும் இவ்வருடம் இந்நோய்க்கு உள்ளாகியுள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
அதேநேரம் எலிக்காய்ச்சலானது இந்நாட்டில் 10- – 12 மாவட்டங்களில் பதிவாகும் நோயாக இருந்து வந்தது. அவற்றில் கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, குருநாகல், கம்பஹா உள்ளிட்ட மாவட்டங்களில் இந்நோயாளர்கள் அதிகம் இனம் காணப்படுவர். ஆனால் யாழ். குடாநாட்டிலும் இக்காய்ச்சலுக்கு உள்ளானவர்கள் பதிவாகும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
அநுராதபுர மாவட்டத்திலும் கடந்த 11 மாதங்களில் 10 பேர் இக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தின் தொற்று நோய்கள் பிரிவு மருத்துவர் தேஜன சோமதிலக்க குறிப்பிட்டிருக்கிறார். இவை இந்நாட்டில் எலிக்காய்ச்சல் பரவி வருவதையே எடுத்துக்காட்டுகிறது.
தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் விஷேட மருத்துவ நிபுணர் குமுது வீரக்கோனின் கருத்துப்படி, நாடு அண்மையில் முகம் கொடுத்த மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நாட்டில் எலிக்காய்ச்சலுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட வழிவகுத்திருக்கிறது. தற்போது பெரும்போக நெற்செய்கையும் ஆரம்பமாகியுள்ளதால் இந்நோய்க்கு உள்ளானவர்களாக இனம் காணப்படக்கூடியவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க முடியும்.
ஆகவே யாழ் குடா நாடு உட்பட முழு நாட்டிலும் எலிக்காய்ச்சல் தொடர்பில் முன்னெச்சரிக்கையுடனும் விழிப்புடனும் செயற்படுவது இன்றியமையாததாகும். அப்போது எலிக்காய்ச்சல் என்பது அச்சுறுத்தலாகவே இராது.
மர்லின் மரிக்கார்