தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. ரசிகர்களால் நேஷனல் கிரஸ் என அழைக்கப்பட்டு வரும் இவரது நடிப்பில் ‘புஷ்பா’ இரண்டாம் பாகம் விரைவில் திரையிடப்படவிருக்கிறது. இதற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இப்படத்திற்காக சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனா தனது வருங்கால கணவர் குறித்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. ‘சுல்தான்’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். இதனையடுத்து தமிழில் விஜய்க்கு ஜோடியாக ‘வாரிசு’ படத்திலும் நடித்தார். கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் இணைந்து நடித்த பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் காதலித்து வருவதாக நீண்ட காலமாகவே ஒரு தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதே போல் இருவரும் ஒன்றாக டேட்டிங் சென்று வருவதாகவும் ஊடகங்களில் அவ்வப்போது செய்திகள் வெளியாவது வழக்கம்.