சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் அண்மையில் இடம்பெற்ற இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) ஏலம் எப்போதும்போல சுவாரஸ்யமானது. சில வீரர்களை வாங்குவதற்கு எல்லா அணிகளும் போட்டா போட்டி இட்ட அதே நேரம் சில வீரர்கள் கேட்பாரற்று விலை போகவில்லை. மொத்த 577 வீரர்கள் ஏலத்துக்கு வந்த மெகா நிகழ்வில் 62 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 182 வீரர்கள் விலைபோயினர்.
கடந்த ஒரு தசாப்தத்தை பார்த்தால் வெளிநாட்டு வீரர்களுக்கே அதிக கிராக்கி இருக்கும். ஆனால் இம்முறை அதிக விலைபோன ஐந்து வீரர்களும் இந்தியர்கள். இவர்கள் இந்திய நாணப்படி 18 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட தொகைக்கு வாங்கப்பட்டார்கள். ஆனால் இதற்கு முன்னர் அதிக விலைபோன முதல் மூவரும் இந்தியர்களாக இருந்தது இரண்டு முறை தான் நிகழ்ந்திருக்கின்றன. அது 2011 மற்றும் 2022 இல். அதிலும் 2011இல் அதிக விலைபோன முதல் ஏழு இடங்களையும் இந்திய வீரர்கள் தான் பிடித்தார்கள்.
இம்முறை ஏலத்திற்கு முன்னர் அதிக விலை கொடுக்கப்பட்ட இந்திய வீரராக யுவராஜ் சிங் இருந்தார். அவர் 2015 வீரர் ஏலத்தில் அப்போது டெல்லி டேர்டெவில்ஸாக இருந்த இப்போதைய டெல்லி கெபிடெல்ஸால் 16 கோடி இந்திய ரூபாவுக்கு வாங்கப்பட்டார்.
இதற்குப் பின்னர் இந்த ஏலத்தொகை ஆறு தடவைகள் மீறப்பட்டபோதும் அந்த அனைத்துத் தடைவையும் வெளிநாட்டு வீரர்களே வாங்கப்பட்டார்கள். இஷான் கிஷன் கடந்த 2022 இல் இதனை சற்றேனும் நெருங்கி 15.25 கோடி ரூபாவுக்கு விலைபோனார்.
எவ்வாறாயினும் இம்முறை ஏலத்தில் யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்த முதல் வீரர் அர்ஷ்திப் சிங். அவரை பஞ்சாப் கிங்ஸ் 18 கோடி ரூபாவுக்கு வாங்கியது. ஆனால் அடுத்த பத்து நிமிடங்களுக்குத் தான் அந்த சாதனையை அவரால் தக்க வைக்க முடிந்தது. ஷரேயஸ் ஐயரை அதே பஞ்சாப் கிங்ஸ் 26.75 கோடி ரூபாவுக்கு வாங்கியது.
இது இந்திய வீரரின் சாதனையாக மாத்திரம் அன்றி ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விலைபோன மிட்சல் ஸ்டார்க்கின் (24.75 கோடி ரூபா) சாதனையை முறியடித்தது. ஆனால் அது கூட சில நிமிடங்கள் தான் நிலைத்தது. அடுத்து ஏலத்திற்கு வந்த ரிஷப் பண்ட்டை லக்னோ சுப்பர் ஜயன்ட் 27 கோடி ரூபா விலைகொடுத்து வாங்கியது.
ஆனால் ஏலத்திற்கான அதிக நேர போட்டி ஷிராயஸை வாங்கவே இருந்தது. அவரை வாங்க மூன்று அணிகள் 103 முறை ஏலம் கோரின. அதுவே அர்ஷ்திப்பை வாங்க அதிகபட்சமாக ஏழு அணிகள் போட்டியிட்டன.
இந்த ஏலத்தில் 120 இந்திய வீரர்களை வாங்குவதற்கு பத்து அணிகளும் இந்திய நாணப்படி 383.4 கோடிகளை செலவிட்டன. அதில் பத்து வீரர்களுக்கு 10 கோடி அல்லது அதற்கு மேல் செலவிட்டன. அடுத்து இங்கிலாந்து வீரர்களே அதிக விலை போனார்கள். அவர்களில் 12 வீரர்களை வாங்க 70.25 கோடி ரூபா செலவானது.
இதுவே இம்முறை மெகா ஏலத்தில் விலைபோன இலங்கை வீரர் ஆறு பேரையும் வாங்க ஐ.பி.எல். அணிகள் செலவிட்ட மொத்தத் தொகை 13.19 ஆகும். அதிகபட்சம் வனிந்து ஹசரங்க 5.25 கோடி ரூபாவுக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
சிறப்பு வீரர்களுக்கான கேள்வி
அணிகள் சிறப்பு பந்துவீச்சாளர்கள் மற்றும் துடுப்பாட்ட வீரர்களுக்கு அதிகம் செலவிட்டதை பார்க்க முடிகிறது. போட்டியின் நிலைமைக்கு ஏற்ப சிறப்பு வீரர்களை களமிறக்கும் ‘இம்பெக்ட் பிளேயர் விதி’ இதற்குக் காரணமாக இருக்கலாம்.
இதில் பந்துவீச்சாளர்களாக பதிவு செய்யப்பட்ட 71 வீரர்களை வாங்க 284.05 கோடி ரூபா செலவிடப்பட்டிருப்பதோடு 32 சிறப்பு துடுப்பாட்ட வீரர்களுக்கு 117.05 கோடி ரூபா செலவானது. இதில் 28.85 வீதமானது ஷரேயஸ் ஐயருக்கு மாத்திரம் செலவாகி இருக்கிறது. ஐ.பி.எல். அணிகள் 60 சகலதுறை வீரர்களை வாங்க 160.3 கோடியை செலவிட்டது.
அதாவது ஒவ்வொரு சகலதுறை வீரர்களுக்கும் செலவிடப்பட்ட தொகை 2.67 கோடி ரூபா. இது துடுப்பாட்ட வீரர்கள் (3.66), விக்கெட் காப்பாளர்கள் (4.09) மற்றும் பந்துவீச்சாளர்கள் (4) ஆகிய மற்ற மூன்று துறைகளுக்கும் செலவிடப்பட்டதை விடவும் குறைவு.
யுஸ்வேந்திரா சஹால் அதிக விலைபோன சுழற்பந்து வீச்சாளராக சாதனை படைத்தார். அவரை பஞ்சாப் கிங்ஸ் 18 கோடி ரூபா கொடுத்து வாங்கியது. முன்னர் அதிக விலைபோன சுழற்பந்து வீச்சாளராக 2022 இல் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் 10.75 கோடிக்கு வாங்கப்பட்ட வனிந்து ஹசரங்க இருந்தார்.
ஐ.பி.எல். இனை விடவும் இளமையானவர்
ஏலத்தின் இரண்டாவது நாளான கடந்த நவம்பர் 25 ஆம் திகதிக்கு 13 வயது மற்றும் 243 நாட்களாக இருந்த விபவ் சூர்யவன்சி ஐ.பி.எல். ஏலத்தில் விலைபோன மிக இளமையான வீரராக வரலாறு படைத்தார். ராஜஸ்தான் றோயல்ஸ் அவரை 1.1 கோடிக்கு வாங்கியது. இந்திய ரூபாவில் 30 இலட்சம் அடிப்படை விலைக்கு ஏலத்திற்கு வந்த அவர் பிறந்தது 2011 மார்ச் 27 இல். அதாவது அவர் 2008 இல் ஆரம்பமான ஐ.பி.எல். கிரிக்கெட்டை விடவும் இளமையானவர்.
முன்னர் ஐ.பி.எல். இல் வாங்கப்பட்ட இளம் வீரராக பிரயாஸ் ராய் பர்மன் இருந்தார். 2019 பருவத்தில் அவரை றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 1.5 கோடி ரூபாவுக்கு வாங்கியது. பர்மனுக்கு அப்போது 16 வயது மற்றும் 54 நாட்களாக இருந்தது. அப்போது அவர் 20 இலட்சம் ரூபா அடிப்படை விலைக்கு ஏலத்திற்கு வந்தார்.
இளையோருக்கு வாய்ப்பு
இம்முறை ஐ.பி.எல். மெகா ஏலத்தில் வாங்கப்பட்ட 20 வயது அல்லது அதற்கு குறைவான 13 வீரர்களில் ஒருவரே சூர்யவன்சி. அதுவே 36 அல்லது அதற்கு மேற்பட்ட வீரர்களில் ஒன்பது வீரர்களை மாத்திரமே அணிகள் வாங்கின. அதிலும் ஆறு வீரர்களை அவர்களின் அடிப்படை விலைக்கே வாங்கியது.
அந்த ஒன்பது வீரர்களுக்கும் செலவிட்ட மொத்தத் தொகை 23.2 கோடி ரூபா. இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 38 வயது அஷ்வினை வாங்குவதற்கு மாத்திரம் 9.75 கோடி ரூபாவை செலவிட்டது. இதற்காக வீரர்களின் அனுபவத்திற்கு அணிகள் செலவிடவில்லை என்று அர்த்தமில்லை. 31 மற்றும் 35 வயதுக்கு இடைப்பட்ட 42 வீரர்கள் விலைபோனதோடு அவர்களை வாங்குவதற்கு அணிகள் 242.75 கோடி ரூபாவை செலவிட்டன. அதாவது அவர்களில் ஒருவரை வாங்குவதற்கு அணிகள் சராசரியாக 5.78 கோடியை செலவிட்டிருக்கிறது.
பரபரப்பு காட்டிய பஞ்சாப்பும் மலிவு விலை கொடுத்த மும்பையும்
பஞ்சாப் கிங்ஸ் 110.50 கோடி ரூபாவுடன் எலத்திற்கு வந்தது. இது ஏலத்திற்கு நுழைந்த மற்ற அணிகளின் கையிருப்புத் தொகையை விடவும் மிக அதிகம். அதாவது அதிக வீரர்களை தமது அணியில் தக்க வைக்காததாலேயே பஞ்சாபுக்கு அதிக பணம் மிஞ்சியது. இதனால் அதிக வீரர்களை வாங்க வேண்டி இருந்ததோடு அது ஏலத்தில் அதிக பரபரப்புக் காட்டியது.
அந்த அணி 19 வீரர்களை ஏலம் கேட்டு அவர்களை வங்க முடியாமல் தோற்றது. இது மற்ற அணிகளின் முயற்சியை விடவும் அதிகம். இந்த ஏலத்தில் பஞ்சாப் வாங்கிய 23 வீரர்களில் ஏழு பேர் அவர்களின் அடிப்படை விலைக்கே வாங்கப்பட்டனர். ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட ஐந்து வீரர்களில் மூவரை பஞ்சாபே வாங்கியது.
இதிலே அடிப்படை விலைக்கே குறைவான வீதத்தில் வீரர்களை வாங்கிய அணியாக ராஜஸ்தான் உள்ளது. ராஜஸ்தான் வாங்கிய 14 வீரர்களில் நால்வர் மாத்திரமே அவர்களின் அடிப்படை விலைக்கு வாங்கப்பட்டனர்.
மும்பை இந்தியன்ஸ் மிகக் குறைவான கையிருப்புத் தொகையாக வெறும் 45 கோடி ரூபாவை வைத்துக் கொண்டே ஏலத்திற்கு வந்தது. அந்த அணி இந்திய டி20 அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் மற்றும் இந்திய டி20 அணியின் முன்னணி வீரர்களான ஹார்திக் பாண்டியா, ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் ரோஹித் ஷர்மா உட்பட ஐந்து வீரர்களை தமது அணியில் தக்கவைத்துக்கொண்டே இந்த ஏலத்திற்கு வந்தது.
மும்பை அணி 15 வீரர்களை ஏலம் கேட்டு தோற்றது. இது பஞ்சாபுக்கு அடுத்து (19) அதிகம். என்றாலும் மும்பை அணி தனது இடைவெளி இருக்கும் 20 வீரர்களில் 18 வீரர்களை நிரப்ப வேண்டி இருந்தது. இதில் 12 வீரர்களை அவர்களின் அடிப்படை விலைக்கே வாங்கிய மும்பை மற்ற ஆறு வீரர்களுக்கும் 37.8 கோடி ரூபாவை செலவிட்டது. அந்த அணி மொத்தமாக செலவிட்ட தொகை 44.8 கோடி ரூபா.
ஐயருக்கு இலாபம் கரன்டுக்கு நட்டம்
ஐயர்களான ஷ்ரேயாஸ் மற்றும் வெங்கடேஷ் முந்தையை விலையை விடவும் தற்போதைய ஏலத்தில் தனது விலையை அதிகரித்துக் கொண்டுள்ளனர். வெங்கடேஷ் முந்தைய ஏலத்தில் 8 கோடிக்கு விலைபோன நிலையில் தற்போது 23.75 கோடியாக அதிகரித்து 15.75 கோடி ரூபா உச்சம் பெற்றுள்ளார். இதுவே ஷரேயஸ் 14.25 கோடி ரூபா மேலதிக தொகைக்கு விலைபோயுள்ளார். கடந்த முறை 12.5 கோடி இருந்த அவரது விலை தற்போது 26.75 கோடி ரூபாவாகியுள்ளது. இந்தப் பட்டியலில் அர்ஷ்தீப் சிங் மூன்றாம் இடத்தில் உள்ளார். அவர் தனது விலையை 14 கோடி ரூபாவால் அதிகரித்துக்கொண்டுள்ளார்.
அவரது முந்தைய சம்பளம் 4 கோடி ரூபாவாகவே இருந்தது.
என்றாலும் ஜிடேஷ் சர்மா அதிகபட்சமாக தனது சம்பளத்தை 54% வீதமாக அதிகரித்துள்ளார். அவர் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருக்கு 11 கோடி ரூபாவுக்கு விலைபோனார். முன்னர் அவர் பஞ்சப் கிங்ஸுக்கு ஆடியபோது அவரது சம்பளம் 20 இலட்சம் ரூபாவாக இருந்தது.
அதுவே ரசிக் சலாம் தனது அடிப்படை விலையை பல மடங்கு அதிகரித்துக் கொண்ட வீரராக இருந்தார். அவர் 30 இலட்சம் ரூபாவுக்கு ஏலத்திற்கு வந்த நிலையில் அதன் 20 மடங்காக றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அவரை 6 கோடி ரூபா கொடுத்து வாங்கியது.
மறுபுறம் இங்கிலாந்தின் சாம் கரன் இம்முறை ஏலத்தில் அதிக இழப்பை சந்தித்த வீரராக இருந்தார். 2023 வீரர்கள் ஏலத்தில் அவரை 18.5 கோடி ரூபாவுக்கு பஞ்சாப் கிங்ஸ் வாங்கியது. ஆனால் இம்முறை சென்னை சுப்பர் கிங்ஸ் அவரை 2.4 கோடி ரூபாவுக்கே வாங்கியது. ஸ்டார்க்கை டெல்லி கெபிடல்ஸ் 11.75 கோடி ரூபாவுக்கு வாங்கியது. கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரை வாங்கிய 24.75 கோடி ரூபாவை விடவும் இது 13 கோடி குறைவாகும்.
ஐம்பதை பூர்த்தி செய்த ஸ்டார்க்
ஸ்டார்க்கின் சம்பளத்தில் குறைவு ஏற்பட்டாலும் ஐ.பி.எல். ஏலங்களில் 50 கோடி ரூபாவுக்கு மேல் சம்பாதித்த இரண்டாவது வீரராக அவர் பட் கம்மின்ஸ் உடன் இணைந்தார். ஐ.பி.எல். ஏலத்தில் நான்காவது முறை பங்கேற்ற ஸ்டார்க் மொத்தம் 50.90 கோடி ரூபாவை ஈட்டி இருக்கிறார். இது கம்மின்ஸ் ஈட்டிய 54.15 கோடி ரூபாவுக்கு அடுத்து அதிகமாகும்.
கிளன் மெக்ஸ்வெலும் 50 கோடியை நெருங்கி இருக்கிறார். அவர் ஆறு ஏலங்களில் பங்கேற்று 49.5 கோடியை ஈட்டி இருக்கிறார். ஜெய்தேவ் உதத்கட் 13 தடவைகள் ஐ.பி.எல். ஏலங்களில் விலைபோயுள்ளார். வேறு எந்த வீரரும் ஏழு தடவைக்கு மேல் ஐ.பி.எல். ஏலத்தில் விலைபோனதில்லை.
எஸ்.பிர்தெளஸ்