உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழ்மொழி, 2500க்கும் மேற்பட்ட ஆண்டுகளைக் கடந்த பின்னரும்கூட இன்னமும் இளமையாகவே இருப்பதற்கு என்ன காரணம் என்கிற கேள்வி எழும். காலந்தோறும் கவிதையில் செழித்திருக்கும் ஒரு மொழி இளமையாய் இருப்பதில் வியப்பென்ன இருக்க முடியும்? என்கிற இன்னொரு கேள்வியே அதற்கான பதிலாக அமையும்.
தொல்காப்பிய காலத்திற்கு முன்பிரிந்தே, இலக்கண – இலக்கிய மரபுவழி நின்று, காப்பியங்களைப் படைத்த கவிதை மொழியான தமிழில், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கில மொழி கவிதைகளின் தாக்கத்தினால் மரபுகளைக் களைத்தெறிந்த வசன கவிதைகள் தமிழிலும் அறிமுகமாயின. அவையே காலப்போக்கில் புதுக்கவிதையாகவும் புத்துரு பெற்றன.
தமிழில் புதுக்கவிதை அறிமுகமான பின்னரே, கவிதைக்கான வாசகப் பரப்பும் பெருகியது. இலக்கண புலமை இல்லாவிட்டாலும் கூட கவிதை எழுதலாம் எனும் நம்பிக்கையோடு எளிய ஓசை நயத்தோடும், இறுக்கமில்லாத மொழிநடையிலும் புதுக்கவிதைகள் வலம்வரத் தொடங்கின. இன்று உலகக் கவிதைகளுக்கு நிகராகத் தற்காலத் தமிழ்க் கவிதைகளும் எழுதப்பட்டு வருகின்றன எனும் இடத்தில் வந்து நிற்கின்றோம்.
புதிய இலக்கிய வடிவங்களைத் தமிழில் அறிமுகப்படுத்தியவை சிற்றிதழ்களே. விற்பனை நோக்கமின்றி தமிழ் மொழியின் வளமைக்கும், புதிய படைப்பாளிகளின் வரவிற்கும் காரணமாய் விளங்கும் சிற்றிதழ்களின் பங்களிப்பு என்பது என்றும் பாராட்டுக்குரியது.
தமிழகத்தின் மையமாய், மலைக்கோட்டை மாநகரமாய் விளங்கும் திருச்சியில் 1997-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இதழான ‘இனிய நந்தவனம்’ இதழ், ‘மக்கள் மேம்பாட்டு மாத இதழ்’ எனும் முத்திரை தாங்கி, கடந்த 28 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவருகிறது என்பதே ஒரு சாதனை தான்.
‘இனிய நந்தவனம்’ இதழின் ஆசிரியராக இருப்பதினாலேயே ‘நந்தவனம் சந்திரசேகரன்’ என்று அழைக்கப்படவும், அறியப்படவும் தொடங்கிய சந்திரசேகரன், ஒரு படைப்பாளி என்பதைச் சற்றே தாமதமாகத்தான் நான் அறிந்துகொண்டேன். கட்டுரை, சிறுகதை, கவிதை, ஹைக்கூ, பயண இலக்கியம் என தனது பன்முகப்பட்ட எழுத்தாற்றலை எவ்வித ஆர்ப்பாட்டமுமில்லாமல் அமைதியாகத் தன்போக்கில் வெளிப்படுத்திக்கொண்டேயிருப்பவர். பல நேரங்களில் தான் எழுதுவதையும் குறைத்துக்கொண்டு, புதிய படைப்பாளர்களுக்குத் தனது இதழில் தளமமைத்துக்கொடுப்பவர் என்பது இவரது இன்னொரு சிறப்பு.
2010ஆம் ஆண்டு பெப்ரவரியில் ‘வண்ணத்துப்பூச்சிகளின் மீது நத்தைக் கூடுகள்’ எனும் தனது முதல் ஹைக்கூ நூலை மலேசிய மண்ணில் வெளியிட்ட பெருமையும் நந்தவனம் சந்திரசேகரனுக்கு உண்டு. இவரது தன்னம்பிக்கை கட்டுரைகள் அடங்கிய நூல்கள் பல பதிப்புகளைக் கண்டுள்ளன.
‘இனிய நந்தவனம்’ இதழின் வாசகனான நான், ஒவ்வொரு மாதமும் முதலில் படிப்பதும் தவறாமல் படிப்பதும் இதழின் கடைசிப் பக்கத்தைத்தான். ஏனென்றால், கவிஞர் நந்தவனம் சந்திரசேகரனின் கவிதை அந்தப் பக்கத்தில் தான் ‘நந்தவனன் கவிதைகள்’ எனும் தலைப்பில் இடம்பெற்றிருக்கும். வாழ்க்கையைக் குறுக்குவெட்டுப் பார்வையால் கேள்வியாக எழுப்பும், எளிய சொற்களால் பின்னப்பட்ட கவிதைகளை எழுதியிருப்பார் கவிஞர் நந்தவனம் சந்திரசேகரன்.
அந்தப் பக்கத்தைப் படித்துவிட்டு, சட்டென கடந்துபோய்விட முடியாத ஏதோவோர் தாக்கத்தை, மெல்லிய மன அழுத்தத்தை அவரது கவிதைகள் வழி நான் அனுபவித்திருக்கின்றேன். ஒரு கவிதையோ அல்லது ஒரு பத்தியோ அல்லது ஏதேனும் ஒற்றை வரியோ என் மனதில் அப்படியே தங்கிநிற்கும். 2024 நவம்பர் மாத இதழினைப் படித்த பிறகும் என் மனதில் தங்கியிருக்கும் கவிதை வரிகளிவை;
‘பறப்பதற்கான கனவுகளில்
என்னை உள்நிறுத்திக் கொள்வதால்
சிறகை விரிக்கிறேன்
எனக்கான வானமெங்கும்.’
இந்த மண்ணில் பிறந்த எல்லோருமே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோம். எல்லோருக்குள்ளும் ஆயிரமாயிரம் கனவுகள் இருக்கின்றன. ஆனால் கனவுகள் மட்டுமே நம்மை ஒருபோதும் உயர்த்தி விடுவதில்லை. அந்தக் கனவுகளை நனவாக்க நாம் முன்னெடுக்கும் முயற்சிகளே கனவு நனவாகத் துணை நிற்கும். 24 வரிகளையுடைய கவிதையின் மேற்கண்ட நான்கு வரிகளை அந்தக் கவிதையைத் தாங்கிப் பிடித்து நிற்கின்றன.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) 2022-ஆம் ஆண்டின் புள்ளிவிவரமொன்று நம்மை பெருங்கவலை கொள்ள வைக்கிறது. பெண் குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு வன்கொடுமைகள் குறித்த குற்ற வழக்குகள் 2021-ஆம் ஆண்டைவிட, 2022-இல் 8.7% அதிகமாகி உள்ளதாம்.
நடப்பாண்டில் இது இன்னும் அதிகரித்தால்..? நாம் எப்படியான மனநிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய காலமாக இக்காலம் உள்ளது.
‘நம்புவதற்கு இல்லை என்றாலும்
நம்பித்தான் ஆக வேண்டும் நீங்கள்.
எது நடந்ததோ? அது நன்றாகவே நடந்தது
என்றெல்லாம் கடந்துபோக முடியாது.’
‘என் நினைவுப் பருக்கைகள்
திருடு போய் விடுகின்றன.
நீரோடை தேய்க்கும்
கூழாங்கற்களைப் போல’
‘மிகைப்படுத்திச் சொல்வதற்கு
என்னிடம் வார்த்தைகள் எதுவுமில்லை.
இலைகளற்ற இந்த மரங்களப் போலவே
எதார்த்தங்களை நிரப்பி வைத்திருக்கின்றேன்
சாயம் பூசிக்கொள்ளாமல்’
‘நாளைக்குக் கூடத்
தூங்கிக் கொள்ளலாம்
இதே கவிதை வருமென்று
சொல்ல முடியாது.’
‘வழி மறந்துபோன
வண்ணத்துப்பூச்சியாய்
அங்கும் இங்கும்
அலைந்துகொண்டே இருக்கிறது
நீ உதிர்த்துவிட்டுப்போன
புன்னகையொன்று’
‘நீயும் வந்து பருகிக்கொள்
என் ஆய்வுக்கூடம் முழுவதும்
கொதித்துக்கொண்டிருக்கிறது காதல்!’
‘சுவடுகளாவது மிச்சமிருக்கட்டும்
இருட்டு நெருங்கி வருகிறது
தயவுசெய்து என்னிலிருந்து விலகிவிடாதே!’
மேலே வாசித்த கவிதை வரிகளெல்லாம் இந்நூலிலுள்ள கவிதைகளின் தொடக்கத்திலும், இடையிலும், முடிவிலும் நான் ரசித்த, என்னை மிகவும் ஈர்த்த, என்னை வசியப்படுத்தியவைகளே. இப்படியாக நிறைய வரிகள் இருக்கின்றன.
புதுமையான சிந்தனைகளையுடைய கவிதை நூலாக இந்த நூல் வந்திருக்கிறது என்பதையே என் வாசக தீர்ப்பாகச் சொல்லி நிறைகிறேன்.
லகான் இல்லாத சாம்பல் நிறக் குதிரை – நந்தவனம் சந்திரசேகரன்
இனிய நந்தவனம் பதிப்பகம்,
திருச்சி – 620 003
பக்கம்: 168 விலை: ரூ.170/-
செல்: 94432 84823
மு.முருகேஷ்