இந்தியாவில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு புதிய அரசியல் மாற்றத்தின் தொடக்கமாக அரசியல் கட்சிகள் கொண்டாடத் தொடங்கியுள்ளன. இந்தக் கட்டுரை வெளியாகும் நேரத்தில் இரண்டு மாநில தேர்தங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். மகராஷ்டிராவில் பா.ஜ.க தலைமையிலான கட்சி ஆட்சி அமைந்திருக்கலாம். தேர்தலுக்கு பின்னான கருத்துக் கணிப்புகளும் இதையே முன்வைத்திருந்தன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடித்திருக்கலாம். ஆனால், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இரண்டு மாநிலத்திலும் பா.ஜ.க கூட்டணியே வெற்றி பெற்றிருந்தால் அரசியலில் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். எத்தகைய மாற்றமாக இருக்கும் என்றால், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி போக்குவரத்துத்துறை அமைச்சருமான கைலாஷ் கெலாட் தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு, பா.ஜ.கவில் சேர்ந்தது போல மற்றக் கட்சிகளிலும் மாற்றங்கள் வரலாம். டெல்லி அரசியலில் ஆம். ஆத்மி கட்சியின் பலத்தை உடைக்க வேண்டும் என்ற பா.ஜ.கவின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
கடந்த 9 ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியில் இருக்கிறது. மதுபானக் கொள்கை நடைமுறையில் ஊழல் நடைபெற்றதாக முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போதே அக்கட்சியின் பலத்தை அசைக்கும் முயற்சியை மத்திய அரசு எடுத்துள்ளது. சிறையிலிருந்து வெளியே வந்த கெஜ்ரிவால் மீண்டும் மக்களை சந்தித்து வெற்றி பெற்ற பின்புதான் முதல்வர் நாற்காலியில் அமர்வேன் என்று தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்தார். விரைவில் நடைபெற இருக்கும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு குற்றமற்றவன் என்று நிரூபிப்பேன் என்று. கெஜ்ரிவால் கூறிய நிலையில் கைலாஷ் கெலாட் கட்சியிலிருந்து விலகியிருப்பது, ஆம் ஆத்மா கட்சிக்குள் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.
ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருப்பதால் பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இது போன்ற குழப்பங்களை ஏற்படுத்தி, தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் கர்நாடக மாநிலத்தில்ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால், தென்மாநிலங்களில் பா.ஜ.கவின் இது போன்ற முயற்சிகள் வெற்றி பெறாது என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆதரவு கொடுத்ததால் அங்கே பா.ஜ.க கொஞ்சம் கொடியை நாட்டியுள்ளது.
இந்திய அரசியலில் இவ்வாறான பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கான அனைத்துக் கட்சிகளின் கூட்டம் இன்று நவம்பர் 24ஆம் திகதி நடைபெறுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரையில் நடைபெற இருக்கிறது. இந்தக் குளிர்கால கூட்டத் தொடரில் வக்பு வாரிய திருத்த மசோதாவையும், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மசோதாவையும் நிறைவேற்ற ஒன்றிய அரசு அழுத்தம் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இதைவிட முக்கிய பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதில் அனைத்துக் கட்சிகளுக்கும் உடன்பாடு இல்லை என்பதால் அந்த மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போகலாம்.
குறிப்பாக மணிப்பூரில் பற்றி எரியும் கலவரம் பற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பலாம், பா.ஜ.க ஆட்சி நடைபெறும் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதில் ஒன்றிய அரசு ஏன் தடுமாறுகிறது என்ற விவாதமும் சூடுபிடிக்கலாம். இவ்வளவு கலவரம் நடந்துவரும் நிலையில், நாட்டின் பிரதமர் ஏன் அங்கு சென்று பார்வையிடவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்படலாம்
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட மாநில தேர்தல் முடிவுகள் பாராளுமன்றத்திலும் எதிரொலிக்கலாம். இதில் யாருக்கு வெற்றி தோல்வி என்றாலும், பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும். காங்கிரஸ் வாக்காளர்களுக்கு வாக்குறுதி கொடுத்துள்ள ஜாதிவாரி கணக்கெடுப்புக்கும், எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுக்கலாம். கடந்த சில மாதங்களாக டெல்லியில் காற்றுமாசின் அளவு அபாய நிலையில் காணப்படுகிறது. இதற்கான தீர்வு வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கலாம்.
ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு ஆகியவை விவசாயிகளையும், சிறு வணிகர்களையும் கொல்லும் ஆயுதமாக மாறியுள்ளது. நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருவதால் சமூகத்தில் வெறுப்பு பரவுகிறது என்று தேர்தல் பரப்புரைகளில் ராகுல் காந்தி முன்வைத்த கருத்துக்களை எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையில் பாராளுமன்றத்திலும் முன் வைக்கலாம்.
மொத்தத்தில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் பரபரப்பான விவதங்களுடன் சூடுபிடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சரியான பதில்களை கொடுக்க பா.ஜ.க தலைமையிலான ஒன்றிய அரசும் தயாராகலாம். மக்களாட்சி நடைபெறும் நாட்டில் சர்வாதிகாரத்தை முழுமையாக முன்னிறுத்த முடியாது, என்பது ஆளும் அரசுக்கும் தெரியும் என்பதால், மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெறும் விதத்திலேயே அவர்களின் நகர்வும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.