இலங்கைச் சமூகத்தினர் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதொரு தலைவர் வரும்போதே மெய்யான மாற்றங்களுக்குச் சாத்தியமுண்டு என்று ஈரோஸ் இயக்கத்தின் தலைவரான வே. பாலகுமாரன் சொல்வதுண்டு. கால நெடுவழியில் அப்படியானதொரு தலைவராக அநுர குமார திசநாயக்க வந்திருக்கிறார்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்பேசும் மக்களின் முழுமையான ஆதரவை அநுர குமார பெற்றுக் கொள்ளாது விட்டாலும் அடுத்த மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், அநுரவின் NPP அரசாங்கம் அனைத்துச் சமூகங்களுடைய ஆதரவை – அங்கீகாரத்தை – நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இதுவரையிலும் எந்த ஆட்சித் தரப்பும் பெற்றுக் கொள்ளாத – எட்டாத ஒரு அரசியல் புள்ளி இது. ஆகவே நம்பிக்கை அளிக்கக் கூடிய பல மாற்றங்கள் நிகழும் – நிகழ்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பொருளாதார மறுசீரமைப்போடு நீடித்திருக்கும் இனப் புறக்கணிப்பு, இனப் பாரபட்சம், இன ஒடுக்குமுறை போன்றவற்றுக்கும் ஒரு முடிவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிலும் வடக்குக் கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படல், அரசியற் கைதிகளின் விடுதலை, காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்குத் தீர்வு, அகதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு, அதிகாரப் பகிர்வைச் செய்தல் அல்லது மாகாணசபைகளை நடைமுறைப்படுத்தல், நினைவு கூரல்களுக்கு இடமளித்தல் எனப் பல விடயங்களில் சுமுகமான நிலை ஏற்படும் எனக் கருத இடமுண்டு.
இதில் முதற்கட்டமாக வடக்கில் பிரதான வீதிகளில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகளையும் தடுப்புகளையும் அரசாங்கம் நீக்கியுள்ளது. இது தமிழ் பேசும் மக்களின் மத்தியில் வரவேற்பை – அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறே பலாலி விமானப்படைத் தளத்துக்கு அண்மையாக இருக்கும் வசாவிளான் – அச்சுவேலி வீதி பகுதியளவில் விடுவிக்கப்பட்டதும், வடமராட்சி – கற்கோவளம் படைத்தளம் மூடப்பட்டதும் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.
இதனுடைய தொடர்ச்சியாகவே வடக்குக் கிழக்கில் போரிலே இறந்த மக்களுக்கும் மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தி, அவர்களை நினைவு கூருவதற்கும் அரசு அனுமதியளித்துள்ளது. இங்கே அனுமதி அளித்துள்ளது என்பதை, நினைவு கூரல்களைத் தடுக்காமல் இயல்பாக விட்டுள்ளது என்றே நாம் வியாக்கியானப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கடந்த சில சந்தர்ப்பங்களில் படையினர் இதைக் கண்டும் காணாதும் விட்டதுண்டு. நல்லாட்சிக் காலம்(?) என்று சொல்லப்படும் மைத்திரி – ரணில் – சம்பந்தன் கூட்டாட்சிக் காலத்தில் (2015 – 2020) மெல்லிய நெகிழ்ச்சியும் முன்னேற்றமும் இருந்தது.
அதற்கு முன்பும் பின்பும் சிலபோது கடுமையான நெருக்கடிகளைப் படையினர் கொடுத்ததுண்டு. முக்கியமாக ராஜபக் ஷக்களின் காலத்தில். இந்த ஆண்டு, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு அவரவர் சுயாதீனமாக நினைவு கூரல்களைச் செய்ய முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. இது பாராட்டுக்குரியது.
இப்போது மாவீரர்களை நினைவு கொள்வதற்கான ஏற்பாடுகள் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் நடக்கின்றன. புதிய அரசாங்கம் வந்ததோடு பலருக்கும் பலவகையிலும் புதிய உற்சாகம் பிறந்துள்ளது.
இதற்கு அரசாங்கம் இடமளித்திருக்கிறது என்றால், அதை ஏற்று, நினைவு கூரலைச் செய்யும் மக்கள் பொறுப்போடு செயற்படுவது நல்லது. வழங்கப்பட்டிருக்கிற சுதந்திரத்தை – அல்லது உருவாகியுள்ள வாய்ப்பை பொறுப்பில்லாத முறையில் கையாண்டு, கடும்போக்குச் சிங்களத் தேசியவாதிகளின் எதிர்ப்புக்கு வாய்ப்பளிக்கக் கூடாது. அவர்கள் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்குவர்.
எனவே கிடைத்துள்ள வாய்ப்புச் சூழலை நிதானமற்ற வகையில் கையாண்டு, மிதமிஞ்சிய அளவில் கட்டுப்பாடற்று இந்த நிகழ்வைக் கொண்டாட்டமாக்கிக் கெடுக்கக் கூடாது. அல்லது அரசியற் கட்சிகளின் தலையீட்டினால் ஏட்டிக்குப் போட்டியாக நிகழ்வை நடத்த முற்பட்டுச் சர்ச்சையாக்குவது ஏற்புடையதல்ல. அதாவது தமிழ் அரசியல்வாதிகளின் கைகளில் நினைவு கூரல்களை ஒப்படைத்து, அரசியற் போட்டிக்குள்ளும் சீரழிவுக்குள்ளும் தள்ளக் கூடாது. இதை மீளவும் ஏன் வலியுறுத்த வேண்டியுள்ளது என்றால், அரசியற் தரப்புகளே, தமது அரசியல் நலன்களுக்காக கனிந்து வரும் சாதகமான நிலைமைகளையும் பாதகமான எதிர்நிலைக்குத் தள்ளுவது.
ஆகவே அப்படி நடப்பதற்கு இடமளிக்கவே கூடாது.
அப்படி இடமளித்தால் அதனுடைய விளைவுகள் இரண்டு வகையில் நிகழும். ஒன்று இந்த அரசாங்கம் கட்டுப்பாடில்லாமல் – தளர்ச்சியாக இருப்பதன் மூலம் விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சிக்கு வாய்ப்பளிக்கிறது என்ற வாதத்தைச் சிங்களக் கடும்போக்காளர்கள் உருவாக்கி, அரசாங்கத்துக்கு நெருக்கடிகளை உருவாக்குவர். அதற்கு இடமளிக்காமல் விட்டாற்தான் அரசாங்கம், அரசியற் கைதிகளின் விடுதலை, நில விடுவிப்பு தொடக்கம் அரசியற் தீர்வு வரையிலான ஏனைய விடயங்களை துணிச்சலாகவும் அமைதியாகவும் சாதுரியமாகவும் செய்யக் கூடியதாக இருக்கும். முக்கியமாக அரசியலமைப்பை பன்மைத்துவம், பல்லினத்தன்மை, அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் உருவாக்க முடியும்.
இரண்டாவது, தமிழ் அரசியற் கட்சிகளும் தலைமைகளும் சீரழிவின் உச்சத்தில் நிற்கின்றன. அவை பொறுப்புடன் எந்தச் செயற்பாடுகளையும் மேற்கொள்ளும் தரப்புகளாக இல்லை. இந்த மாதிரி நினைவு கூரல்கள்தான் அவற்றிற்கு இலகுவான அரசியல் முதலீடாகும். ஆகவேதான் இவற்றைத் தாம் முன்னின்ற நடத்துவதற்கு முண்டியடிக்கின்றன. இதனால் மெய்யான நினைவு கூரலுக்கு இடமற்றுப் போய் விடுகிறது. நினைவு கூரல் என்பது மக்களுடைய விடுதலைக்காகவும் சமூக மேம்பாட்டுக்காகவும் தியாகம் செய்தோரை மதிப்போடு மனதிற்கொண்டு உணர்வு பூர்வமாக அவர்களுக்கு – அவர்களுடைய அர்ப்பணிப்புக்கு – மதிப்பளிப்பதும் அஞ்சலி செலுத்துவதுமாகும்.
இங்கே அரசியற் கட்சிகளால் நடத்த விளைவது அஞ்சலியோ மதிப்பளித்தலோ மெய்யான நினைவு கூருதலோ அல்ல. அவற்றின் மரபிலோ மனதிலோ இத்தகைய உணர்வு கிஞ்சித்தும் கிடையாது. இதை இந்தக் கட்சிகளின் ஆதரவாளர்கள் நிச்சயமாக மனதிற் கொள்ள வேண்டும்.
அப்படி இந்தக் கட்சிகளின் மரபிலும் மனதிலும் இந்த முன்னோடித் தியாகிகளுக்கான மதிப்பான இடம் இருக்குமானால் அவை தற்போதுள்ள சமூகத்துக்கு இந்த முன்னோடிகளின் வழியில் தம்மை அர்ப்பணித்துச் செயலாற்றுவர். மக்களின் துயரைத் தீர்த்திருப்பர். மக்களுடைய கஷ்ட நஷ்டங்களில் பங்கேற்றிருப்பர். மக்களோடு இணைந்து வாழ்ந்திருப்பர். இப்படிப் பிரமுகர் அரசியலில் ஈடுபட்டிருக்கவே மாட்டார்கள்.
அதுவே தியாகம் செய்த முன்னோடிகளுக்கான முதலாவது, மெய்யான மதிப்பளித்தலாகும். அப்படி மக்களுக்காக அர்ப்பணிப்பான பணிகளை ஆற்றி விட்டு வந்து நினைவு கூரலைச் செய்ய வேண்டும். அதாவது அதற்கான தகுதியை உருவாக்கிக் கொண்டு வந்து நினைவு கூரல்களில் பங்கேற்க வேண்டும். அதை விட்டு விட்டு, மாவீரர் நாள், முள்ளிவாய்க்கால் நாள் என திடீரென வந்து திவசத்துக்கு நிற்பதைப்போல நிற்பதல்ல.
இப்படி வந்து படங்காட்டுதலும் அல்ல. இது ஏமாற்று, பொய் நாடகம். மெய்யாகத் தம்மை அர்ப்பணித்துத் தம்முடைய இன்னுயிரை ஈந்த மாவீரர்களுக்கும் மக்களுக்கும் இழைக்கப்படும் துரோகமாகும். அவர்களுடைய ஈகத்தை வியாபாரப் பொருளாக்குவதாகும்.
ஆகவே இதைக்குறித்து மக்கள் மிகுந்த விழிப்புணர்வோடும் எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும்.
நினைவு கூரல்கள் மக்களுக்கானவை. இழப்புகளைச் சுமந்து நிற்கும் உறவுகளுக்கானவை, அந்த உணர்வோடிருப்போருக்கானவை. நிச்சயமாக அரசியற் கட்சிகளுக்கானவை அல்ல. அப்படி அரசியற் கட்சிகள் தங்களுடைய உறுப்பினர்களுக்கு நினைவு கூருதல்களைச் செய்ய வேண்டுமானால், அதை அவற்றின் இடத்திலோ அல்லது அந்த நினைவு கூருதல்களுக்குரிய நாட்களிலோ அமைதியாகச் செய்து கொள்ளலாம்.
இது போரிலே உயிரை இழந்தோருக்கான நினைவு கூரல் என்பதால் மக்களே இதை முன்னின்று செயற்படுத்த வேண்டும். அவர்களுக்கே இதில் முழுமையான உரித்தும் உரிமையும் உண்டு.
எனவே மாறிவரும் நற்காலச் சூழலை இந்தத் தீய சக்திகள் சீரழிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு மக்களுக்குண்டு. குறிப்பாக சமூகத்தில் நல்லன விளைய வேண்டும் என்று கருதுவோருக்குள்ளது. அவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் தவறான செயற்பாடுகளுக்கு எதிராக உறுதியாகக் குரல் கொடுக்க வேண்டும்.
புதிய அரசாங்கம் பல விடயங்களில் புரிந்துணர்வுடன் நெகிழ்ச்சியைக் கடைப்பிடிக்கிறது. அப்படி நடப்பதற்கு முயற்சிக்கிறது. அதை மக்களோ எதிர் அரசியற் தரப்பினரோ பலவீனமாகக் கருதுவது நல்லதல்ல. வழங்கப்பட்டிருக்கின்ற செயற்பாட்டுச் சுதந்திரத்தை அல்லது உருவாகியிருக்கின்ற வாய்ப்பைத் தவறான முறையில் பயன்படுத்தும்போது, அதையே எதிர் ஆயுதமாக எதிர்க்கட்சிகளும் தீய சக்திகளும் எடுத்தாளக்கூடிய அபாயமுண்டு. முன்னரும் அப்படிப் பல நற்காரியங்கள் கெடுக்கப்பட்டுள்ளன. இது வரலாற்றுப் பாடமாகும். ஆகவே அவற்றைப் படிப்பினையாகக் கொண்டு மிக நிதானமாக – பொறுப்போடு நடந்தால் நன்மைகள் அதிகம்.
நினைவு கூரல்களைச் செய்வதற்கும் பொறுப்புணர்வு, கட்டுப்பாடா? என்று யாரும் கொக்கரிக்கக் கூடும்.
75 ஆண்டுகால மோசமான இனவாத ஆட்சிக்குப் பிறகு, அனைத்துத் தரப்பின் ஆதரவோடும் அங்கீகாரத்தோடும் முற்றிலும் புதிய தரப்பொன்று இப்போதுதான் அரங்குக்கு வந்துள்ளது. வந்திருக்கும் தரப்பைப் பலப்படுத்துவதே முக்கியமானது. அதைத் தோற்கடித்து எப்படியும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று ஐ.தே.க, சு.க, பொதுஜன பெரமுன உள்ளிட்ட அரசியற் சக்திகளும் தீவிரச் சிங்கள இனவாதத் தரப்புகளும் கடுமையாக முயற்சிக்கின்றன. அவற்றின் எதிர்நிலைகளுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய தவறுகளாலும் பொறுப்பின்மைகளாலும் தீனி போட முடியாது.
தேர்தலில் அனைத்துத் தரப்பு மக்களும் அனைத்துப் பிராந்திய மக்களும் இணைந்து, மாற்றத்துக்காகவும் நல்லன விளைவதற்காகவும் NPP அரசாங்கத்தையும் அநுர குமார திசநாயக்கவையும் தெரிவு செய்திருக்கலாம். ஆனால், நடைமுறையில் இன்னும் சமூக, பிராந்திய இடைவெளிகள் துலக்கமாகவே உண்டு. அரசியல் வேறுபாடுகளால், பண்பாட்டு மாறுபாடுகளால், தொடர்பாடற் குறைபாடுகளால் என இந்த இடைவெளி அப்படியேதான் உள்ளது. குறிப்பாக போரிலே கொல்லப்பட்ட அல்லது மாண்டுபோன இராணுவ வீரர்களைச் சிங்கள மக்கள் வணங்குகிறார்கள். அவர்களை நினைவு கூருகிறார்கள். ஆனையிறவு உப்பளத்துக்கு முன்னே நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இராணுவ வீரரின் நினைவுச் சிலைக்கு தினமும் மலர் வளையமோ மலர் வணக்கமோ நடக்கிறது. இதைச் சிங்கள மக்களே செய்கிறார்கள்.
இதேவேளை போராட்டத்திலே உயிர் நீத்த போராளிகளுக்கான அஞ்சலியை – வணக்கத்தை மாவீரர் துயிலுமில்லங்களில் தமிழ் மக்கள் மட்டுமே செய்கிறார்கள்.
இரண்டு தரப்பும் போரின்போது தம் உயிர்களை ஈகம் செய்ததே. சிங்களத் தரப்பின் நோக்கு நிலையில் நாட்டுக்காக – பிரிவினையைத் தடுப்பதற்காக – உயிர்த்தியாகம் செய்தவர்கள் படையினர் என்ற எண்ணமே உண்டு. அதனால்தான் அவர்கள் படையினருக்கான வணக்கத்தை – மரியாதையைச் செலுத்துகிறார்கள்.
தமிழ் மக்களின் நோக்கு நிலையில் இனவிடுதலைக்காக – தமிழர் தேசத்துக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்கள் போராளிகள் (மாவீர்கள் – இதில் அனைத்து இயக்கங்களைச் சேர்ந்தோரும் அடங்குவர்) என எண்ணுகிறார்கள். அந்த அடிப்படையிற்தான் மதிப்பளிக்கிறார்கள். நினைவு கூரல்களைச் செய்கிறார்கள்.
இரண்டும் வெவ்வேறான அடிப்படைகளையும் தளங்களையும் கொண்டவை. ஆனால், அடிப்படையில் மக்களின் நல்வாழ்வுக்காகவே மேற்கொள்ளப்பட்டவை. அந்தந்தத் தரப்பின் நல்வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் அந்தந்தத் தரப்பினர் தம்மை ஈகம் செய்துள்ளனர். இதை ஒரு பொது உணர்நிலைக்கும் பொதுக்கருதுகோளுக்கும் வளர்த்து எடுக்க வேண்டும். அதைச் செய்வதற்கு NPP அரசாங்கத்தினால் முடியும்.
ஏனென்றால், NPP அரசாங்கத்தில் பங்கேற்கும் தரப்பினரில் பாதிப்பேருக்கு ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்ட அனுபவமுண்டு. அதன்போது உயிரிழந்தோரைக் கொண்ட வரலாறுண்டு.
அவர்களை எந்த நோக்கு நிலையில் எடுத்துக் கொள்வது என்ற வரலாற்றுச் சிக்கலைச் சந்தித்த நிலைமையுண்டு. இந்த அனுபவங்களின் அடிப்படையில் அவர்களால் ஒரு புதிய – பொது உணர்நிலைக்கும் பொதுக் கருதுகோளுக்கும் வர முடியும். அப்படி வருவதன் மூலமாக எதிர்காலத்தில் இடைவெளிகளை நிரப்ப முடியும்.
இலங்கைத்தீவின் எதிர்காலத்தைச் செழிப்பாக்குவதற்குப் பல முனைகளில் சீரான வேரோட்டம் நிகழ வேண்டும்.
அதில் ஒன்று நினைவு கூரல்கள். அவற்றில் நிகழும் கூட்டுத் தன்மையே எதிர்காலத்துக்கான அடிக்கல்லாகும்.
சிவபாக்கியன்