உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தைப் பற்றிச் சிறு வயதிலிருந்தே பாடங்களில் படித்திருப்போம்.
ஒவ்வொரு ஆண்டும் எழுபது இலட்சம் பேர் வரை ஏறி இறங்கும் இடமாக ஈபிள் கோபுரம் இருக்கிறது என்கிறது பிரான்ஸ் நாட்டுச் சுற்றுலாத் துறைப் புள்ளிவிவரம்.
அந்நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரின் அடையாளமாகவும் மாறிவிட்ட ஈஃபிள் கோபுரம், 1889ஆம் ஆண்டில்தான் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டது. ஒட்டுமொத்தக் கோபுரத்தையும் கட்டிமுடிக்கும் திட்டத்தை நிறைவேற்றிய நிறுவனத்தின் உரிமையாளர் தான், கஸ்டவ் ஈஃபிள்.
சரியாகச் சொன்னால் இருபது ஆண்டுகள் வரை தாக்குப் பிடிக்கக்கூடிய ஒன்றாக இருந்தால் போதும் என்றே, ஈஃபிள் கோபுரப் பணி தொடங்கப்பட்டது.
1887 தொடக்கம் 1889 வரையான காலப்பகுதியில், இவ்வமைப்பு, பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான, எக்ஸ் பொசிஷன் யூனிவர்சல் (1889) என்னும் உலகக் கண்காட்சி விழாவுக்கு, நுழைவாயில் வளைவாகக் கட்டப்பட்டது. 1889, மார்ச் 31ஆம் திகதி தொடக்கவிழா நடைபெற்று, மே 6 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விவரப்படி, மொத்த ஈஃபிள் கோபுரத்தையும் கட்டிமுடிக்க 2 ஆண்டுகள் 2 மாதங்கள் 5 நாட்கள் எடுத்துக்கொண்டுள்ளனர்.
இக் கோபுரக் கட்டுமானத்தில் பணியாற்றிய பொறியியலாளர்கள், அறிவியலாளர்கள், கணிதவியலாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அவர்கள் அனைவரின் பெயர்களும் கோபுரத்தின் பக்கவாட்டில் பொறித்து வைக்கப்பட்டுள்ளது. இப்படி மொத்தம் 72 பேரின் பெயர்கள் அங்குப் பதியப்பட்டிருக்கின்றன.
ஹிட்லர், இரண்டாவது உலக யுத்தத்தின்போது, பாரிஸுக்கு விஜயம் செய்தபோது, அவர் 1792 படிகளையும், ஏறியே உச்சிக்குச் செல்லட்டும் என்பதற்காக, பிரெஞ்சுக்காரர் அதன் உயர்த்திகளைச் செயலிழக்கச் செய்தனர்.
அதனைப் பழுதுபார்க்கத் தேவைப்படும் உதிரிப்பாகத்தைப் பெற்றுக்கொள்வது, யுத்தச் சூழலில் முடியாது என்று கருதப்பட்டதெனினும், நாஸிகள் புறப்பட்டுச் சென்ற சில மணி நேரத்திலேயே அது செயல்படத் தொடங்கிவிட்டது. ஹிட்லர் கீழேயே நின்றுவிட்டுச் சென்றுவிட்டார்.