பூச்சிகள், ஈசல்கள் விளக்கு வெளிச்சத்துக்கு ஈர்க்கப்படுவது தவிர்க்க முடியாதது. இருளில் ஏதோ ஒரு வெளிச்சத்திற்கு பூச்சிகள் சூழ்ந்துகொண்டு நச்சரிக்கத் தொடங்கிவிடும். நாம் ஒரு முறையாவது இந்த அசௌகரியத்தை அனுபவித்திருப்போம்.
கணிக்க முடியாத இந்த நிகழ்வுக்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம்?
ஒரு ஆராச்சியாளர் குழு ஏன் பூச்சிகளுக்கு வெளிச்சத்தின் மீது இப்படியொரு ஈர்ப்பு இருக்கிறது என்பதைக் கண்டறிந்தனர். நீண்ட காலமாக இதற்கு சொல்லப்பட்டு வந்த விளக்கம், “இரவில் திரியும் பூச்சிகள், எல்லா வெளிச்சமும் நிலவில் இருந்து அல்லது வானியல் பொருட்களில் இருந்து வருவதாக கருதுகின்றன. இவற்றை வைத்து தான் பூச்சிகள் செல்லும் வழியைத் தீர்மானிக்கும் என்பதனால் அவை வெளிச்சத்தை சுற்றி சுற்றி வரும்” என்பதாகும்.
லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி மற்றும் புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியலாளர்கள்; பூச்சிகள் செயற்கையான ஒளி, வானத்தில் இருளில் இருந்து வருவதாக நினைத்துக்கொள்ளும் என்கின்றனர்.
இதனால் மேலும் கீழுமாக அதனை பார்க்கின்றன. பின்னர் அவற்றின் உள்ளுணர்வின் அடிப்படையில் வெளிச்சத்தை நோக்கி பறக்கின்றன.
விளக்குகளைச் சுற்றி தும்பி, பட்டாம்பூச்சிகள் மற்றும் ஈசல்கள் ஒவ்வொன்றும் என்னென்ன பாதையில் பறக்கின்றன என்பதை ஆய்வு செய்துள்ளனர்.
இதற்காக அதி நவீன கெமராக்களைப் பயன்படுத்தி பூச்சிகள் பறக்கும் பாதையின் 3D மாதிரிகளை உருவாக்கினர்.
பகலில் பூச்சிகள் சூரியனின் நிலையை வைத்து திசையை அறிந்து சூரிய ஒளிக்கு முதுகைக் காட்டியபடிப் பறக்கும். இரவில் செயற்கை விளக்குகளுக்கு இடையில் இந்த திறனை பூச்சிகள் இழக்கின்றன. இரவில் திறனை இழப்பது பகலிலும் பூச்சிகளின் பயணத்தை பாதிக்கிறது. செயற்கை விளக்குகளால் பூச்சிகள் அதிக அளவில் அழிந்துவருவதாக அறிவியலாளர்கள் எச்சரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.