கடந்த வாரம் ரஷ்யாவில் நடைபெற்று முடிந்துள்ள பிரிக்ஸ் மாநாடு, சர்வதேச அரசியலில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக சீன- – இந்திய தலைவர்களின் சந்திப்பு மற்றும் ரஷ்யா- உக்ரைன் போருக்கு பின்னர், ரஷ்யாவில் நடைபெறும் மாநாடு ஒன்றில் உலக தலைவர்களின் சந்திப்பு என்பன சர்வதேச அரசியலின் விவாதத்திற்கு பிரதான காரணமாகின்றது. அமெரிக்காவைப் புறந்தள்ளி புதிய உலக ஒழுங்கிற்கான மாற்றம் மற்றும் ஆசிய நூற்றாண்டு என்ற முன்வரையறைகள், சீனா அல்லது இந்தியாவை சுற்றியே உரையாடப்படுகின்றது. இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல், சீனா மற்றும் இந்தியாவின் சர்வதேச அரசியல் நுழைவு அதிக கவனத்தை குவித்து வருகின்றது. பிரிக்ஸ் அமைப்பில் அமெரிக்க தவிர்க்கப்பட்டு, சீனா,- இந்தியா-, ரஷ்யா,- பிரேசில்-தென்னாபிரிக்கா கூட்டின் உதயம் புதிய உலக ஒழுங்கு மாறுதலுக்கான எதிர்வுகூறலையும் விரைவுபடுத்தியது. இக்கட்டுரை 2024ஆம் ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக இடம்பெற்ற சீன — இந்திய தலைவர்களது சந்திப்பின் அரசியல் முக்கியத்துவத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 22 – 24, 2024ஆம் திகதிகளில் ரஷ்யாவின் கசானில் 16ஆவது பிரிக்ஸ் மாநாடு நடைபெற்று முடிவடைந்துள்ளது. இது தற்போதைய புவிசார் அரசியல் நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க பொருத்தத்தைக் கொண்டுள்ளது. வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் வேகமாக மாறிவரும் உலகில் தங்கள் செல்வாக்கை நிலைநாட்டுவதற்கு இது முக்கியமான தளமாக செயற்படுகின்றது. உலகின் கவனத்தை குவித்துள்ள தலைவர்களான ரஷ்யாவின் அரச தலைவர் விளாடிமிர் புடின், சீனாவின் அரச தலைவர் ஜீ ஜின்பிங் மற்றும் இந்தியாவின் அரச தலைவர் நரேந்திர மோடி ஆகியோர் ஒரே அரங்கில் சந்தித்துள்ளதுடன், இருதரப்பு சந்திப்புக்களையும் நிகழ்த்தியுள்ளன. கடந்த ஜூலை மாதத்திற்கு பின்னர் குறுகிய கால இடைவெளியில் விளாடிமிர் புடின் மற்றும் நரேந்திர மோடி இருவருக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அதேவேளை ஜீ ஜின்பிங் மற்றும் நரேந்திர மோடி ஆகிய இருவருக்குமிடையிலான இருதரப்பு கலந்துரையாடல் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர், பிரிக்ஸ் மாநாட்டையொட்டி ரஷ்யாவின் கசானில் அக்டோபர்- 23அன்று நடைபெற்றிருந்தது. 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் கல்வானில் பல உயிரிழப்புகளுக்கு வழிவகுத்த இராணுவ மோதலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, 2019ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் மோடி, ஜின்பிங்குடன் கடைசியாக உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இருபத்தோராம் நூற்றாண்டின் உலக ஒழுங்கின் மாற்றங்களில், இந்தியா மற்றும் சீனா சர்வதேச அரசியலில் கவனத்தை குவித்துள்ளன. குறிப்பாக இருபத்தோராம் நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டு என்ற வாதத்தில், இந்திய மற்றும் சீனா சார்பு கவனக்குவிப்பு, 1988ஆம் ஆண்டு சீன ஜனாதிபதி டெங் சியோபிங் மற்றும் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் சந்திப்பினை தொடர்ந்து முதன்மை பெற்றிருந்தது.
அமெரிக்காவின் காங்கிரஸிலும் அன்றைய காலப்பகுதியில் இவ்விடயம் உரையாடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சீனா மற்றும் இந்தியாவின் சர்வதேச அரசியல் நுழைவுகள் கவனக்குவிப்பை பெறலாயின. அதிலும் இரு தரப்பு தலைவர்களினது சந்திப்புக்களும் சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்திகளாகவும், ஆய்வாளர்களின் ஆய்வுக்குரிய விடயங்களாகவும் மாறியிருந்தன. எனினும் சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான எல்லைப்பிரச்சினை இரு தரப்பு உறவினையும் நிர்ணயம் செய்வதில் குழப்பகரமான சூழலை உருவாக்கியிருந்தது. 2020ஆம் ஆண்டு சீன- இந்திய எல்லைப்பகுதியில் ஏற்பட்ட பதற்றங்கள், இரு தரப்பு உறவின் நெருடலை உருவாக்கியிருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளிலும் பிரிக்ஸ் மாநாடு, ஜி-07 மாநாடு, ஜி-20 மாநாடு மற்றும் ஷங்காய் மாநாடு போன்ற பொதுவான அரங்குகளில் சீன மற்றும் இந்திய தலைவர்கள் கலந்து கொண்டிருந்த போதிலும், இரு தரப்பு சந்திப்புக்களை தவிர்த்திருந்தனர்.
இந்நிலையிலேயே ரஷ்யாவில் நடைபெற்று முடிந்த 2024ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக, சீன மற்றும் இந்திய தலைவர்களின் இரு தரப்பு சந்திப்பு நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின் உரையாடல் தொகுப்பு இரு தரப்புக்களிடையேயான சுமுகமான அரசியல் திருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது. சீன,- இந்திய தலைவர்களின் சந்திப்பில் இரு பகுதியின் எல்லையான கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு வழியாக வழக்கமான ரோந்துப் பணியை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் உடன்பாட்டை எட்டியதாக அறிய முடிகின்றது. இது இருதரப்பு உறவில் முன்னேற்றகரமான பகுதியாகும். இரு தரப்பு உறவு நெருக்குவாரத்துக்குள் நுழைந்த பகுதியிலிருந்து தளர்வுடன், புதிய உரையாடலை ஆரம்பித்திருப்பது நம்பிக்கையான பக்கங்களை வெளிப்படுத்தியுள்ளது.
லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் சில புள்ளிகளில் இரு நாடுகளும் விலக ஒப்புக்கொண்ட பிறகு, ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் இடையே சந்திப்பு ஒரு குறிப்பிடத்தக்க இராஜதந்திர நிகழ்வைக் குறித்தது. பகைமையை தற்காலிகமாக நிறுத்துவதை உள்ளடக்கிய இந்த ஒப்பந்தம் ஒரு நேரான நடவடிக்கையாகவே அவதானிக்கப்படுகின்றது. ஆனால் இது அர்த்தமுள்ள நிலையான தளர்வுக்கு வழிவகுக்குமா என்பதில் இந்திய அரசியல் ஆய்வாளர்களிடம் அதிக சந்தேகங்கள் காணப்படுகின்றன. இதனை ஆழமாக நோக்குதல் அவசியமாகின்றது.
முதலாவது, இந்திய- – சீன தலைவர்களின் சந்திப்பும் சுமுகமான முன்னேற்றமும் இந்திய நோக்கு நிலையில் அமெரிக்காவிற்கான எதிர்வினையாக அவதானிக்கப்படுகின்றது. சமகாலத்தில் இந்திய, அமெரிக்க உறவில் உள்ளார்ந்த நெருடல்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதை அரசியல் நிகழ்வுகள் உறுதி செய்கின்றது. குறிப்பாக கனடா,- இந்திய இராஜதந்திர முறுகலில் அமெரிக்காவின் நிலைப்பாடுகள் அதனை உறுதி செய்கின்றது. கடந்த கால அனுபவங்களில் கனடா போன்ற நாடுகள் பல அமெரிக்காவின் பினாமி அரசியலையே தமது வெளியுறவுக்கொள்கைளில் பேணி வந்துள்ளன. இந்த பின்னணியிலேயே கனடா- இந்திய இராஜதந்திர நெருக்கடியில் கனடாவின் பின்னணியில் அமெரிக்காவின் ஆர்வம் சந்தேகிக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் கனடாவில் இயங்கும் கலிஸ்தான் செயற்பாட்டு தலைவரின் மரணத்தில் இந்தியாவின் ஈடுபாட்டை அமெரிக்க புலனாய்வே கனடாவிற்கு வழங்கியிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த பின்னணியிலேயே அமெரிக்காவிற்கு சவால் செய்யும் வகையில் ஆசியாவின் வெளியுறவுக்கொள்கையில் இந்தியா தனித்துவமான பாதையை சீரமைத்து கொள்வதனை மூன்று நிகழ்வுகள் உறுதி செய்கின்றன. ஒன்று, இந்தியா, ரஷ்யாவிற்கு அளிக்கும் முக்கியத்துவம்.
ரற்யா,- உக்ரைன் போரை காரணப்படுத்தி, ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ளன. இவ்வாறான சூழலில் கடந்த ஜூலை மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
தற்போது குறுகிய கால இடைவெளியில் மீளவும் அக்டோபரில் பிரிக்ஸ் மாநாட்டிற்காக ரஷ்யாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
இது ரஷ்யா சர்வதேச அரசியலில் தனது அங்கீகாரத்தை உறுதிப்படுத்தும் இராஜதந்திர நகர்வாகும். அதற்கான ஒத்துழைப்பை இந்தியா வழங்குவது, அமெரிக்காவினை நேரடியாக சவாலுக்குட்படுத்துவதாக அமைகின்றது.இரண்டு, சீன தலைவருடனான சந்திப்பும், இருதரப்பு உறவை புதுப்பித்தலும். பனிப்போர் அரசியலில் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு ரஷ்யா தலைமையிலான சோவியத் ஒன்றியம் ஏற்படுத்திய சவாலுக்கு அதிகமாகவே, தற்போதைய உலக ஒழுங்கில் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு சீனாவின் மென் தாக்குதல் அமைகின்றது.
இந்நிலையில் இரு பெரிய பொருளாதார சக்திகளும் எல்லை முரண்பாட்டை இடைநிறுத்தி, சுமுகமான நிலைக்கு செல்வது அமெரிக்காவுக்கு எச்சரிக்கையானதாகவே அமைகின்றது. The Federal பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் கே.தக்ஷணாமூர்த்தி, “மேற்கத்தேய நாடுகளின் சமீபத்திய அழுத்தங்களுக்கு பதிலளிக்கும் விதமாக சீனாவுடன் சூடுபிடிப்பதன் மூலம் இந்தியா தனது பந்தயத்தை தடுக்கக்கூடும் என்று பரிந்துரைத்தது” எனத் தெரிவித்துள்ளார்.