நாட்டின் அரசியல் மாற்றத்திற்கு புதிய பரிமாணத்தை வழங்கக்கூடிய நேர்மையான மற்றும் திறமையான அணியை மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான கட்சியின் ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து எம்முடன் அவர் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
கே: ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, பொதுத்தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் போட்டியிடவில்லை. நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த புதிய அரசியல் மாற்றத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்: உண்மையில் இது மக்கள் பெற்ற வெற்றியாகும். அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கிய ஆணையின் விளைவாக, எதிர்வரும் பொதுத்தேர்தலின் முடிவும் தெளிவாகியுள்ளது. இந்த அரசியல்வாதிகள், தாங்கள் மக்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்டதை முன்கூட்டியே உணர்ந்து தேர்தலில் போட்டியிடுவதில்லையென முடிவு செய்துள்ளனர். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அது வீணானது என்று நினைக்கின்றனர். வாகன அனுமதிப்பத்திரம், பாதுகாப்புப் பணியாளர்கள், உத்தியோகபூர்வ இல்லங்கள் போன்றவற்றைப் பெறமாட்டார்கள் என்பதும், ஊழலில் ஈடுபடும் நிலையில் இருக்க மாட்டார்கள் என்பதும் அவர்களுக்கு உறுதியாகத் தெரிந்துவிட்டது. எதிர்க்கட்சியில் இருந்தாலும், தங்களால் பழைய ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இதனால்தான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அரசியலில் இருந்து விலகி தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்க முடிவு செய்திருந்தனர்.
கே: தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே முதன் முறையாக ‘அரசியலில் ஓய்வு’ என்ற வார்த்தையை அரசியலில் அறிமுகப்படுத்தியிருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியிருந்தார். கடந்த காலங்களில் தோற்கடிக்கப்பட்ட அல்லது உயரிழந்த அரசியல்வாதிகளைத் தவிர வேறு எவரும் ஓய்வெடுக்கவில்லையென நீங்கள் கருதுகின்றீர்களா?
பதில்: ஓய்வு என்ற வார்த்தை இதுவரை அரசியலில் இல்லை. அரசாங்கத்துறையில் மட்டும்தான் ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை எட்டும்போது ஓய்வு பெறுகிறார்கள். அரசியலில் இதுபோன்ற ஓய்வுகள் இல்லை. அரசியல்வாதிகள் தேர்தலில் தோற்கடிக்கப்படுகிறார்கள் அல்லது இயற்கை எய்தினாலே அரசியலில் இருந்து விலகுகின்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் எடுத்த தீர்மானத்தினால் முதன்முறையாக ஓய்வு என்ற வார்த்தை அரசியலில் இடம்பெற்றது.
எனவே, புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வழிவகுத்துள்ளமையால் அந்த கௌரவமும் மக்களைச் சென்றடைய வேண்டும். இதற்கு முன்னர், அரசியல்வாதிகள் பலம் குன்றியவர்களாகி சக்கர நாற்காலியில் செல்லும்வரை அரசியலில் ஈடுபட்ட வரலாறு நமக்கு உண்டு. பரம்பரை பரம்பரையாக அரசியலைத் தொடரலாம் என்று அவர்கள் கருதினார்கள். இன்று ராஜபக்ஷ தலைமுறையினர் தமது அரசியலை முடித்து வைத்துள்ளனர். அதனால்தான் நாம் ஆரம்பத்திலிருந்தே, நாட்டின் அதிகாரம் மேல்தட்டு வர்க்கத்திலிருந்து சாதாரண மக்களுக்கு மாற்றப்பட வேண்டும் என்று கூறி வந்தோம்.
தற்போது புதிய அரசியல் மாற்றம் தொடங்கியுள்ளது. நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் நாட்டின் அரசியல் மாற்றத்திற்கு புதிய பரிமாணத்தை வழங்கக்கூடிய நேர்மையான மற்றும் திறமையான அணியை மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். அரசியல் எதிரிகளை அவமானப்படுத்தும், சேறு வாரி இறைக்கும் அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்.
கே: புதிய பாராளுமன்றத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திறமையான இளைஞர்களும் பெண்களும் புதிய பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
பதில்: கண்டிப்பாக. பாராளுமன்றத்தின் அதிகாரம் கொள்கை வகுப்பாளர்களின் குழுவிடம் செல்ல வேண்டும். குண்டர்கள், பணம் படைத்தோர் மற்றும் மேல்தட்டு வர்க்கத்திற்கு உட்பட்ட அரசியல் கலாசாரம் உண்மையான மற்றும் தகுதியான நபர்களுக்கு மாற்றப்படும்போது, இளைஞர்கள் பெரும் சக்தியாக இருக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பல்வேறு துறைகளில் வல்லுநர்களைக் கொண்டுள்ளது. முதன்முறையாக தேசிய மக்கள் சக்தி ஒரு வேட்புமனுப் பட்டியலை சமர்ப்பித்துள்ளது. இது மாற்றுத்திறனாளிகளுக்கு கூட பிரதிநிதித்துவம் அளிக்கிறது. தொழில்திறன் இல்லாத எவரும் எங்கள் தேசியப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. உண்மையில், இப்படித்தான் இருக்க வேண்டும். தமது மாவட்டங்களில் போட்டியிட முடியாதவர்களை தேசியப்பட்டியலில் முன்னிறுத்துவதற்குப் பதிலாக புதிய அரசியல் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இது நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வழிவகுக்கும் என நான் நினைக்கிறேன்.
கே: நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்குப் பின்னர் பலமான பாராளுமன்றம் உருவாக்கப்படுமென ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தீர்கள். தேர்தலுக்குப் பிறகு இதுபோன்ற மக்களுக்கு நெருக்கமான பாராளுமன்றத்தை உருவாக்க முடியுமென நினைக்கின்றீர்களா?
பதில்: நிச்சயமாக. மக்கள் பெற்ற வெற்றியை விட்டுக்கொடுக்க நாம் தயாராக இல்லை. எங்கள் பயணத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு பேரம் பேசும் சக்தியை நாங்கள் விரும்பவில்லை. வடக்கு, கிழக்கு மற்றும் மலையக வாக்குகளை இலக்காகக் கொண்டு நாங்கள் சலுகைகள் மற்றும் அமைச்சுப் பதவிகளை வழங்கவில்லை. அதிகாரத்தை உறுதிப்படுத்த இலஞ்சம் கொடுக்கும் அரசியலில் ஈடுபடாமல், மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டும். அரசியல் எதிரிகளின் கருத்துகளுக்கு செவிசாய்த்து மதிக்கும் அரசும், ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைக்கும் எதிர்க்கட்சியும் பாராளுமன்றத்தில் உருவாகும் என நம்புகிறோம்.
கே: உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகளை புதிய அரசாங்கம் அமைக்கும் என்று உங்களால் உறுதியளிக்க முடியுமா?
பதில்: கண்டிப்பாக. நாங்கள் மக்களுக்கு வழங்கிய முக்கிய உறுதிமொழிகளில் இதுவும் ஒன்று. எங்களின் அரசியல் விஞ்ஞாபனத்திற்கு மட்டுமே நாங்கள் பொறுப்புக்கூற வேண்டியவர்கள். எங்களுக்கு தனிப்பட்ட தொடர்புகள் கிடையாது. எனவே, சட்டம் ஒழுங்கை சரியாகவும் சமமாகவும் செயற்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். குறிப்பாக சமீப காலமாக அரசாங்க நிதி மற்றும் சொத்துகளை தவறாக பயன்படுத்தியவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவார்கள் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஊடகவியலாளர்களுக்கு பல்வேறு துன்புறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளன. சில ஊடகவியலாளர்கள் காணாமல் போன சம்பவங்களும் எமக்குத் தெரியும். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது குறித்து கடந்த பல தேர்தல்களின் போது விவாதிக்கப்பட்டது. முன்னாள் தலைவர்கள் சிலர் இந்தச் சம்பவங்கள் குறித்து சாக்குப்போக்காகக் கூறி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று உறுதியளித்தனர். இந்தச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள், ஆனால் சட்டத்தை கையில் எடுக்க மாட்டோம்.
கே: முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்திருந்தால், தாம் தேர்தலில் வெற்றி பெற்றிருப்போம் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அவர்களின் இந்தக் கருத்துப் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: இது தேர்தல் முடிவுகள் குறித்து அவர்கள் கூறிய வெறும் யூகமே. இதை அவர்கள் முன்பே யோசித்திருக்க வேண்டும், அரசியல் என்றால் அதுதான். ரணில் விக்கிரமசிங்கவும் அவ்வாறு கூறலாம்.
கே: ஐக்கிய மக்கள் சக்திக்குள் குழப்பங்கள் அதிகரித்து அதன் பங்காளிகளும், உறுப்பினர்களும் அதிருப்தியடைந்துள்ளனர். இது பற்றி உங்கள் பார்வை என்ன?
பதில்: இந்த அரசியல் கட்சிகள் சில தனிநபர்களை மையமாக வைத்து செயல்படுகின்றன. அதனால்தான் அந்தக் கட்சிகளில் இத்தகைய நெருக்கடிகள் மேலெழுகின்றன. உண்மையில், அவர்கள் அரசியல் கட்சிகளை உருவாக்கி அரசியலில் ஈடுபடுவதில்லை. குறிப்பிட்ட சில நபர்களை ஊக்குவித்து அரசியலில் ஈடுபடுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் நெருக்கடியைச் சந்திக்கும் போது, இறுதியில் அவர்களது கட்சிகளும் நெருக்கடியை சந்திக்க நேரிடும். நாங்கள் அவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள். நாம் பூஜ்ஜியத்திற்கு வந்தால், அத்தகைய நெருக்கடியை நாங்கள் சந்திக்க மாட்டோம், ஏனென்றால் நாங்கள் கட்சிகளை உருவாக்குகிறோமே அன்றி நபர்களை அல்ல. அதனால்தான் நமது வாக்கு சதவீதம் வெறும் மூன்று சதவீதமாக குறைந்தபோது, அப்படிப்பட்ட தனிப்பட்ட நெருக்கடிகளை நாங்கள் சந்திக்கவில்லை. அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது வாக்குகள் 3 வீதத்திலிருந்து 42 வீதமாக அதிகரிக்கப்பட்டதுடன் இரண்டாவது வாக்கு எண்ணிக்கையின் போது அது 55 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உண்மையில், ஐக்கிய மக்கள் சக்தி விரும்பினால், அவர்கள் எங்களிடமிருந்து புதிய பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும்.