Home » பதற்றங்களை தணித்து சுற்றுலாத்துறையின் மறுமலர்ச்சியை பேணல்
அறுகம்பை :

பதற்றங்களை தணித்து சுற்றுலாத்துறையின் மறுமலர்ச்சியை பேணல்

by Damith Pushpika
October 27, 2024 6:00 am 0 comment

கண்ணையும் சிந்தையையும் கவரும் இயற்கை வனப்பு, செழுமையான கலாசார பாரம்பரியம் மற்றும் அன்பான விருந்தோம்பல் எனபனவற்றிற்கு பெயர் பெற்ற தீவு நாடான இலங்கை, தற்போது சிக்கலான மற்றும் சவாலான நெருக்கடிமிக்க சூழலில் பயணிக்கிறது. அறுகம்பைல் சமீபகால பதற்றங்களைத் தொடர்ந்து – நீர்ச்சறுக்கு விளையாட்டுக்குப் பெயர்பெற்ற அழகிய கடற்கரைகளைக் கொண்ட நாடாக, அதன் சுற்றுலாத்துறையில் மற்றுமொரு சவாலை அண்மையில் சந்தித்தது. பாதுகாப்புக்கும் சுற்றுலாவுக்கும் இடையிலான சமநிலை மீண்டும் இங்கு பரீட்சிக்கப்படுகின்றது.

சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் குறித்து வெளிநாட்டு தூதரகங்கள், குறிப்பாக அமெரிக்க தூதரகத்தின் எச்சரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை அதிகப்படுத்தியது. உல்லாசப்பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. உலக நாடுகளின் பயண எச்சரிக்கையானது பொருளாதாரத்தின் முக்கிய தூணான சுற்றுலாத் துறையை பாதிப்படையச் செய்யலாம் என்ற அதிகரித்துவரும் கவலை தவிர்க்க முடியாததாகின்றது.

அறுகம்பையை இலக்காகக் கொண்ட தாக்குதல் பற்றிய நம்பகமான தகவல்கள் எச்சரிக்கையைத் தூண்டியதாக அமெரிக்கத் தூதரகத்தின் பயண ஆலோசனை கூறியது. இதைத் தொடர்ந்து, ரஷ்ய தூதரகம் இதேபோன்ற ஆலோசனையை வழங்கியது, அதன் நாட்டவர்கள் விழிப்புடன் இருக்கவும், சன நெரிசல்மிக்க இடங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியது. இந்த வகையான பரந்த பயண எச்சரிக்கைகள் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாக இலங்கை போன்ற ஒரு நாட்டில், பொருளாதார மீட்சிக்காக சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியுள்ள ஒரு நாட்டுக்கு அவை பாதகத்தையே தரும்.

அறுகம்பை அழகான கடற்கரையுடன் பெரும்பாலும் அமைதியானதாக தென்பட்டாலும் உள்ளூர் பதற்றங்களின் மையப் புள்ளியாக இருந்து வருகிறது, குறிப்பாக இப்பகுதியின் மக்கள் தொகையில் கணிசமான பகுதியைக் கொண்ட முஸ்லிம் சமூகத்திற்கும், முக்கியமாக இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்குமிடையே பல காரணங்களால் பதற்றம் நிலவுகின்றது.

அறுகம்பையின் உள்ளூர் பொருளாதாரத்தின் குறிப்பிடத்தக்க பகுதி இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் வரவால் நிகழ்கின்றது. இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் பலர் இராணுவ சேவையை முடித்த பிறகு இலங்கைக்கு வருகை தருகின்றனர். வெளிநாட்டு நாணயங்களைப் பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகளால் நடத்தப்படும் சட்டவிரோத வணிகங்களால் மோதல்கள் ஏற்படுகின்றன. இது உள்ளூர் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துகின்றது. அப்பயணிகளின் விசாவுக்கான கால அவகாசம் தொடர்பான சிக்கல்கள் திறம்பட நிர்வகிக்கப்படவில்லை, இது உறவுகளை மேலும் சிக்கலாக்குகிறது.

அங்கு ஏற்கனவே இருந்த மத ஸ்தாபனத்துக்கு அருகில் இன்னொரு மத ஸ்தாபனத்தை நிறுவியதும் சிக்கலை அதிகரித்துள்ளது. இத்தகைய செயற்பாடுகள் தவறான புரிதல்களுக்கும் மோதல்களுக்கும் வழிவகுக்கும், காசா மற்றும் லெபனானில் நடந்து வரும் மோதல்களுக்கு விடையிறுக்கும் வகையில், இலங்கையின் முஸ்லிம் சிறுபான்மை மக்கள் கிழக்கு கடற்கரையோரத்தில் இஸ்ரேலிய வணிகங்களை புறக்கணிக்கும் போராட்டங்கள் மூலம் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தின. இது குறித்த சமூக ஊடகப் பிரசாரங்கள், உள்ளூர் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் அதே வேளையில், சமூகங்களுக்கு இடையே இருக்கும் பதற்றங்களையும் அதிகப்படுத்துகின்றன.

இவ்வாறான சவால்கள் இருந்தபோதிலும், இப்பகுதியில் வன்முறைகள் பதிவாகியதாக வரலாறு இல்லை என்பதை குறிப்பிடுவது முக்கியமானது. பயணிகள் சந்தேகத்திற்கிடமான செயல்களைப் புகாரளிக்க ஹொட்லைன் உட்பட, அதிகரித்த பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்கியதன் மூலம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உள்ளூர் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இலங்கையின் சுற்றுலாத் துறையானது மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து படிப்படியாக மீண்டு வருகிறது, இது 2019 இல் தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்களை குறிவைத்த பேரழிவுதரும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பால் மோசமடைந்தது. இந்தத் தாக்குதல்களின் வீழ்ச்சியானது சுற்றுலாப் பயணிகளின் வருகையில் செங்குத்தான சரிவுக்கு வழிவகுத்தது, இது தொழில்துறையைச் சார்ந்திருக்கும் உள்ளூர் பொருளாதாரங்களை கணிசமாக பாதித்தது.

கொவிட்-19 கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு நாடு மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கியது. இருப்பினும், முக்கிய தூதரகங்களின் சமீபத்திய பயண ஆலோசனைகள், இந்த மீட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றது.

இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள அதிஉயர் பொலிஸ் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அர்ப்பணிப்பைக் காட்டுகின்றது. எந்தவொரு சாத்தியமான அச்சுறுத்தல்களையும் கண்காணிக்கவும் முறியடிக்கவும் உளவுத்துறை தயாராக உள்ளது பாதுகாப்பான பயண இடமாக மீண்டும் நாட்டை நிலைநிறுத்துவதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.

தகவல் தெரிவிக்கப்படும் விதம் சுற்றுலாப் பயணிகளின் நடத்தையை கணிசமாக பாதிக்கும். இலங்கை போன்ற ஒரு நாட்டில், சுற்றுலாத் தொடர்பு பெரும்பாலும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், வெளிநாட்டு பயண ஆலோசனைகளின் தாக்கம் குறிப்பாக எதிர்மறையான தாக்கத்தையே விளைவிக்கும். தூதரகங்கள் தங்கள் குடிமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பது இன்றியமையாததாக இருந்தாலும், ஒரு முழு நாட்டின் பாதுகாப்பு குறித்த தவறான எச்சரிக் கைகள் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும்.

இராஜதந்திரிகள், எதிர்காலப் பயணிகளிடையே தேவையற்ற அச்சத்தைத் தூண்டாமல், உண்மை நிலவரத்தை பிரதிபலிப்பனவாக அமைய வேண்டும் . தவறான தகவல்கள் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவதற்கு வழிவகுக்கும், சுற்றுலாவை நம்பியிருக்கும் எண்ணற்ற நபர்களின் வாழ்வாதாரத்தை மேலும் இலங்கை தனது மீட்சியை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், உள்ளூர் பதற்றங்களுக்கு பங்களிக்கும் சட்டவிரோத வணிக நடவடிக்கைகளை தடுப்பதற்கும் விசா பிரச்சினைகளை நிர்வகிப்பதற்கும் அரசாங்கம் முனைப்பான நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியமானது. உள்ளூர் சமூகங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே திறந்த தொடர்பாடல் வழிகளை வளர்ப்பதன் மூலம், அதிகாரிகள் தவறான புரிதல்களைத் தணித்து, மிகவும் இணக்கமான சகவாழ்வை ஊக்குவிக்க முடியும்.

மேலும், வெளிநாட்டுத் தூதரகங்கள் தங்கள் ஆலோசனைகளில் மிகவும் துல்லியமான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது இன்றியமையாதது. தெளிவான மற்றும் நுணுக்கமான தகவல்தொடர்பு, பயணிகள் இலங்கையை ஆபத்து நிறைந்த இடமாக பார்க்காமல் வரவேற்கும் இடமாக கருதுவதை உறுதிசெய்ய உதவும்.

இலங்கையர்கள் எப்பொழுதும் தங்களுடைய விருந்தோம்பலில் பெருமை கொள்கிறார்கள், இதுவே தேசத்தின் அடையாளமாகவும் உள்ளது. பதற்றத்திற்கான மூல காரணங்களை நிவர்த்தி செய்வதன் மூலமும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதன் மூலமும், பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சிகரமான பயண அனுபவத்தை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பை இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு உறுதிப்படுத்த முடியும்.

இலங்கை நெருக்கடி மிக்க காலகட்டத்தில் பயணிக்கும் போது, பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், சுற்றுலாப் புகலிடமாக நாட்டின் நற்பெயரை நிலைநிறுத்துவதற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்துவது அவசியம். சரியான நடவடிக்கைகளுடன், சமூகங்களை மேம்படுத்தும் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மீட்சிக்கு பங்களிக்கும் ஒரு செழிப்பான சுற்றுலாத் துறையை இலங்கை ஊக்குவிக்க முடியும்.

- அபி

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division