இ,தொ,கா வின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்….
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு நீங்கள் தயாராக இருக்கின்றீர்களா.?
ஒரு பொற்காலத்தில் அமைச்சை பொறுப்பேற்கவுள்ளோம்.
கடந்த அரசாங்க காலப் பகுதியில் கொரோனா தொற்று, பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி போன்றவை ஏற்பட்டன. இக் காலப்பகுதியில் மலையக மக்களின் வறுமை 23 சதவீதத்திலிருந்து 57 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது. நாட்டின் பணவீக்கும் 23.8 சதவீதமாக காணப்பட்டது. உணவு பண வீழ்ச்சி 200 சதவீதத்தை தொட்டது. இவ்வாறான ஒரு நிலைமையிலேயே நாம் ஆட்சியை பொறுப்பேற்றோம்.
முக்கியமாக சம்பள பிரச்சினைக்கு இரண்டு தடவைகள் தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளோம். 2024ஆம் ஆண்டு 1350 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுத்துள்ளோம். எனவே, இம்முறை தேர்தலில் மக்கள் மலையக பிரதிநித்துவத்தை பாதுகாக்க சிந்தித்து வாக்களிப்பார்கள் என நினைக்கின்றேன்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1700 சம்பள உயர்வென்பது வெறும் கண்துடைப்பு என்று கூறுவோருக்கு உங்களது பதில் என்ன?
1700 ரூபா சம்பளத்தை பெற்றுத்தருவதாக நாம் தொழிலாளர்களுக்கு கூறினோம். அதன்படி, அடிப்படைச் சம்பளமாக 1350 ரூபாவும் மேலதிக கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்கப்படும் என வர்த்தமானி வெளியானது. இதனை கண்துடைப்பு என கூறியவர்களும், மே தினத்துக்கு பின்னர் இந்த சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கு ஒத்துழைத்தார்கள். இந்த சம்பள அதிகரிப்புக்கு இடைக்கால தடைவிதித்ததன் பின்னரே அந்த ஒருசிலர் இதனை கண்துடைப்பு எனக் கூறினர். இவ்வாறான அரசியல் விமர்சனங்களுக்கு பதில் கூறுவதற்கு நான் தயாரில்லை.
எவ்வாறாயினும், 1350 ரூபா அடிப்படை சம்பளத்தை நாம் பெற்றுக்கொடுத்துள்ளோம். ஜனாதிபதியாக, ரணில் விக்கிமசிங்க தெரிவுசெய்யப்பட்டிருந்தால் 350 ரூபாவான ஊக்குவிப்புத் தொகையையும் நிச்சயமாக பெற்றுக்கொடுத்திருப்போம். அதாவது, பெருந்தோட்ட நிறுவனங்களால் ஒவ்வொரு ஏக்கருக்கும் செலுத்தப்படும், நில வரி உட்பட இதர செலவினங்களை குறைத்து இந்த 350 ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கான திட்டமொன்று எம்மிடம் இருந்தது.
தற்போது இதனை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு புதிய அரசாங்கத்தின் கையில் உள்ளது. ஏனெனில் 1750 ரூபா சம்பள அதிகரிப்பை தீர்மானிக்கும்போது, ஜக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கங்கள் அதற்கு எதிராக வாக்களித்தன. சம்பள உயர்வாக 2000 ரூபாவை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அவை வலியுறுத்தின.தற்போதைய ஆளும் தரப்பின் தொழிற்சங்க தலைவர், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாவை அடிப்படைச் சம்பளமாக வழங்குவோம் என பிரதி நிதிகள் சபையில் தெரிவித்தார். அந்த 2000 ரூபா சம்பளத்தை அவர்கள் வழங்குவார்கள் எனின் அதற்கு நாமும் முழுமையான ஆதரவை வழங்குவோம்.
என்னால் முடிந்த சம்பள உயர்வை நான் பெற்றுக்கொடுத்துள்ளேன். இன்று வெளியிலிருந்து விமர்சிப்பவர்களால் 10 ரூபாவை கூட பெற்றுக்கொடுக்க முடியாது.
உங்களுக்கும் தோட்ட தலைமைத்துவத்துக்கும் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளமை அதிகளவில் பேசப்பட்டதல்லவா?
இங்கு பிரச்சினைகளை தட்டிக்கேட்டாலும் கேட்காமல் இருந்தாலும் தவறு. மாத்தளையில் ரத்வத்தை என்ற இடத்தில் தோட்டத்தொழிலாளியின் மகன் ஒருவர், திருமணமாகி தனது கைக்குழந்தையுடன், தனது தாயாரின் வீட்டுக்கருகில் வீடொன்றை அமைத்து வாழ்ந்து வந்துள்ளார். அதனை 10 பேரை கொண்டு தோட்ட நிர்வாகம் உடைத்தெறிந்துந்துள்ளது. இதனை நான் தட்டிக்கேட்டது தவறு.
அடுத்ததாக இரத்தினபுரி கஹவத்தை என்ற இடத்தில் பெண் தொழிலாளி ஒருவர் தாமதமாக தொழிலுக்குச் சென்றமையினால் அப் பெண்ணின் கணவர் தாக்கப்பட்டுள்ளார். இதனை நான் தட்டிக்கேட்டது தவறு.
மலையக மக்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகளுக்கும் மேலாகியும் அவர்கள் அடிமைகளாவே நடத்தப்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இதனை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?
இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. மலையகத்திலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் அடிமைகளாக இருக்கின்றார்கள். அவர்கள் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரஜைகளாக இருக்கின்றார்களே தவிர இலங்கை பிரஜைகளாக இன்னும் முழுமையாக மாறவில்லை. இதற்காக முழு மலையக வம்சாவளி தமிழர்களும் அடிமைகளாக இருக்கின்றார்கள் எனவும் கூறிவிட முடியாது. இன்று மலையகத்தில் ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், வைத்தியர்கள் உருவாகியிருக்கின்றார்கள். இங்கு பிறந்து வளர்ந்தவர்கள் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் தொடர்பற்றவர்கள் நல்ல நிலைமையிலேயே உள்ளனர். மலையகத்தில் பல நகரங்களும் உள்ளன. வியாபாரிகள், வர்த்தகர்கள் உள்ளனர்.
தோட்ட தொழிலாளர்கள் செய்யும் தொழிலுக்கு உரிய அங்கீகாரமும் கௌரவமும் சட்ட பாதுகாப்பும் இல்லை. அதற்காக முழு மலையக சமூகமும் அடிமையாக இருப்பதாக கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
உண்மையாகவே மலையக மக்களின் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பது என்ன?
பெருந்தோட்ட நிறுவனங்களின் சச்சரவு அதிகம். சாதாரண மைதானம் ஒன்றை அமைக்கவேண்டும் என்றாலும் கூட, அங்குள்ள ஆளுங்கட்சி, தொழிற்சங்க தலைவர், தோட்டதுறை, அமைச்சர், மாவட்ட செயலாளர், பிரதேச செயலகம், கிராமசேவகர் போன்ற பல அரச அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். இதில் ஒரு தரப்பு நிராகரித்தாலும் கூட மீண்டும் ஆரம்பத்திலிருந்து ஒவ்வொருவரிடமும் அனுமதி பெற வேண்டும்.
நாம் இலங்கை பிரஜைகளாக மதிக்கப்பட வேண்டும். தோட்டங்களை கிராமங்களாக அங்கீகரிக்கும்போது யாரிடமும் கேட்டவேண்டிய தேவை கிடையாது. நேரடியாக அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். காணி உரிமை இல்லாமலேயே வீடு கட்டுவதில் கூட பிரச்சினையாக உள்ளது.
தோட்டத்தொழிலளர்களின் சம்பளப் பிரச்சினை, வீட்டு, காணி உரிமைகள் தொடர்பாக நீங்கள் முன்வைக்கும் தீர்வுகள் எவை?
நான் ஒரு உறுப்பினராக பாராளுமன்றத்தில் 88 தடவைகள் கதைத்துள்ளேன். இதில் அதிகளவில் காணி உரிமை தொடர்பாகவே கதைத்திருக்கின்றேன். மலையக மக்களின் ஒரு பிரதிநிதியாக, காணி உரிமையை பேசுபொருளாக மாற்றினேன். அதன்படி, காணி உரிமைக்கு அதிகளவில் முக்கியத்துவம் வழங்கி சௌமியமூர்த்தி திட்டத்தை உருவாக்கி முதற்படியாக 1171 காணிகளை வழங்கியுள்ளோம். அதுமட்டுமன்றி வீடு கட்டும் திட்டத்தையும் ஆரம்பித்துள்ளோம். தோட்டத்தில் தொழில் புரிந்தால் வீடு, பிறந்தால் வீடு என்றளவுக்கு வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். வரலாற்றில் இல்லாதளவு இரண்டு வருடத்தில் இரு முறை சம்பள அதிகரிப்பை வழங்கினோம். மேலும், ஒரு வருடத்தில் அதிகளவான நிதி ஒதுக்கீடு எனது அமைச்சிலேயே சாத்தியமானது நுவரெலியா மாவட்டத்துக்கு 550 மில்லியன், பதுளை மாவட்டத்துக்கு 160 மில்லியன், கண்டிக்கு 150 மில்லியன், கேகாலைக்கு 50 மில்லியன் இரத்தினபுரிக்கு 80 மில்லியன் என உட்கட்டமைப்பு என்றால் என்வென்று அறியாத ஏனைய மாவட்டங்களுக்கும் இவ்வாறு நிதி ஒதுக்கியுள்ளோம். அத்துடன், இந்தியாவிலிருந்து 19 ஆசிரியர்களை வரவழைக்கப்பட்டு, 2250 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளோம். அந்த திட்டமும் தற்போது நிறைவடைந்திருக்கின்றது.
மலையகம் எவ்வாறு மாற்றமடையவேண்டுமென நீங்கள் நினைக்கின்றீர்கள்
மலையகத்தை பொறுத்தமட்டில் கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற்றம் தேவை. கடந்த ஒன்றரை வருடத்தில் எனது அமைச்சில் அதிகளவில் நிதி, கல்விக்காக ஒதுக்கியுள்ளேன். 1200 மில்லியன் ரூபா கல்விக்காக ஒதுக்கியுள்ளேன். சலுகைகளையும் தாண்டி நிரந்தர தீர்வையே வழங்க வேண்டுமென நினைக்கின்றேன். மலையகத்தின் எதிர்காலத்தை மாற்றுவதற்கு மக்களும் தயாராக வேண்டும்.
நான் அரசியலுக்கு வரும்போது அரசியல் கலாசாரமும் மாற்றம்பெறவேண்டும் என நினைத்தேன். அதனால் அனைத்து வாகனங்களையும் ஒப்படைத்துவிட்டு ஒன்று அல்லது இரண்டு வாகனங்களிலேயே பயணித்தேன். இதேபோன்று ஒரு சில செயற்பாடுகளை தவிர்த்தேன். மக்கள் என்னை விமர்சித்தனர். அரசியல் தலமைத்துவத்தை பொறுத்தமட்டில் யாருடைய தலைமைத்துவம் தேவையென்பதை மக்களே தீர்மானிப்பர்.
மலையகம் முன்னேற வேண்டுமானால் கல்விக்கு முன்னுரிமையளிக்கப்படவேண்டும்.
பாராளுன்ற தேர்தல் நீங்கள் உட்பட மூவர் போட்டியிடுகின்றீர்கள் அல்லவா? உங்களின் வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது?
மூவரும் பாராளுமன்றம் செல்வீர்கள் என நினைக்கின்றீர்களா?
இவ்விடயம் தொடர்பாக ஆம், அல்லது இல்லை என்று சொல்வதற்கு நான் விரும்பவில்லை. என்னை பொறுத்தவரை இது வரலாறு காணாத தேர்தல். மக்கள் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டிய தேர்தல். 10 பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்றுக்கு குறைய பெரியளவில் வாய்ப்புண்டு. மலையக தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா தனியொருவராக பாராளுன்றம் சென்று 10 உறுப்பினர்களை உருவாக்கினார். அவர் உண்டாக்கிய 10ஐயும் ம் பிரிவினையால் உடைப்போமாகவிருந்தால் அதனை விட பாரிய துரோகம் எதுவும் கிடையாது. இ.தொ.காவிலிருந்து எத்தனை பேர் பாராளுமன்றம் செல்கின்றார்கள் என்பதை விட மலையகத்தை பாதுகாக்க கண்டிப்பாக 10 உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்றாக வேண்டும்.
இந்த பாராளுமன்ற தேர்தலில் இனந்தெரியாத முகங்கள் அநேகமானவர்கள் பாராளுமன்றத்துக்கு தாம் செல்வது உறுதி என சவால் விடுக்கின்றார்களே…
அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அவர்களின் கருத்துக்களை மக்கள் கேட்கலாம். ஆனால், இன்று வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதென்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். எனது பிரசாரங்களிலும் கூட செலவு குறையும் என நான் ஒருபோதும் மக்களிடம் கூறியது கிடையாது. மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை நாம் சந்திக்கக் கூடாது.
நீங்கள் வெல்லும் பட்சத்தில் தேசிய மக்கள் சக்தி ஆதரவாகச் செயற்படுவிர்களா? நீங்கள் யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கு காரணம்?
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை பொறுத்தவரை அவர் மக்கள் ஆதரவை இழந்துக்கொண்டு வருகின்றார். ஆளும் தரப்பை பொறுத்த வரையில் இதுவரை வழங்கிய வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்ற வில்லை. விலைகளை குறைப்போமென ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் இன்று முட்டை, தேங்காய் மற்றும் அரிசியின் விலைகள் அதிகரித்துள்ளன. பெற்றோல் விலையும் 26 ரூபாவினால் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், மலையக மக்கள் தொடர்பாக தற்போதைய ஜனாதிபதி அவருடைய தேர்தல் பிரசாரத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் தேர்தலுக்குப் பின்னர் மலையக மக்கள் தொடர்பாக எந்தவொரு கருத்தையும் வெளிப்படுத்தவில்லை.
ஜனாதிபதியை நான் விமர்சிக்க விரும்பவில்லை. அவரால் விலைவாசிகளை குறைக்க முடியாது. ஏனெனில் தற்போதைய நாட்டின் நிலையை காப்பாற்ற வேண்டும்.
எதிர்க்கட்சிக்கு 113 ஐ எடுப்பதற்காக பலம் உண்டா? என்பது எமக்குதெரியாது. அந்த 113 ஐ எடுத்தால் கூட எதிர்க்கட்சியில் உள்ள சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வாரா என்பதும் சந்தேகம்தான். ஏனென்றால் அவர் நிபந்தனைகளை முன்வைத்தால் மீண்டும் பிரச்சினையே தோற்றுவிக்கும். அத்துடன் ரணில் விக்கிமசிங்க பாராளுமன்றத்தில் இல்லை. எனினும் அவரின் ஆலோசனைக் கிணங்கவே நாம் யானைச் சின்னத்தில் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம். அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றால் வழங்குவோம். எதிர்க்க வேண்டும் என்றாலும் எதிர்ப்போம். இதுவே எமது நிலைப்பாடு. பொருளாதாரத்தை பாதுகாக்க இந்த அரசாங்கத்துக்கு தேவையான நேரத்தில் எமது ஆதரவை வழங்குவோம்.
ஜனாதிபதி தேர்தலில் நினைத்து பார்க்க முடியாதளவுக்கு ரணில் விக்கிமசிங்க தோல்வியடைந்தாரே
ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தார் என்பதை விட மக்கள் தோல்வியடைந்தார்கள் என்பதே சரியாகயிருக்கும். ரணில் விக்கிமசிங்க ஜனாதிபதியாக செயற்பட்டபோது, மலையக மக்களுக்கு அதிகளவான முக்கியத்துவத்தை வழங்கினார். காணி உரிமை வழங்குவதாக கூறினார். அவரின் தோல்வியினுடாக நாம் மிகப்பெரிய சந்தர்ப்பத்தை இழந்துவிட்டோம். காணி உரிமை கிடைத்தால் அதனை மக்கள் விற்றுவிடுவார்கள் என அநேகமானவர்கள் கூறினார்கள். விற்பதும் வைத்துக்கொள்வதும், மக்களின் விருப்பம். ஆனால் காணி உரிமை கிடைத்திருந்தால், 90 சதவிதமான மக்கள் தங்களுக்கான வீடுகளை கட்டியிருப்பர். அதேநேரம் ரணில் விக்கிமசிங்க வெற்றிபெறவில்லையென்றாலும் அவரின் சிந்தனைகள் வெற்றிபெற்றுள்ளன.
இந்த தேர்தலில் உங்களுக்கு போட்டியாக நீங்கள் யாரை நினைக்கின்றீர்கள் எனக்கு போட்டி நான் மட்டுமே
இறுதியாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
மக்கள் உணர்வுபூர்வமாக சிந்திக்க வேண்டும். மலையகத்தில் தலைமைத்துவம் போதாது. முக்கியமாக பெண்கள் விவகாரம், சிறுவர் பாதுகாப்பு மற்றும் கல்வி போன்றவற்றில் கூடுதல் கரிசனை செலுத்தவேண்டும். அத்துடன் 2022 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டி வரை போதை பாவனைக்கு முற்றிப்புள்ளி வைத்தேன். மலையத்தில் மதுபான அரசியல் ஒழிக்கப்பட வேண்டும். மக்கள் சிந்தித்தி ஆரோக்கியமான ஒரு முடிவை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
காயத்ரி சுரேஷ்