Home » பெயர்ப் பட்டியலை தேர்தலுக்கு முன்னர் வெளியிட வேண்டும்
மதுபானசாலை அனுமதிப் பத்திரம்

பெயர்ப் பட்டியலை தேர்தலுக்கு முன்னர் வெளியிட வேண்டும்

வடக்கு மக்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

by Damith Pushpika
October 20, 2024 6:00 am 0 comment

பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ள நிலையில், வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தற்போது பேசுபொருளாக உள்ளது “பார் பொமிட்”.

அதாவது யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் புதிதாக மதுபான சாலைகளை அமைப்பதற்கான அனுமதிப் பத்திரங்களை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டார்கள், அல்லது அவர்களது சிபாரிசில் வேறு நபர்கள் பெற்றுக்கொண்டார்கள் என்பதே …

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அண்மைக்காலத்தில் புதிதாக 26 மதுபான சாலைகளுக்கான அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 18, யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 08 வழங்கப்பட்டுள்ளன.

தாமதமாகும் அனுமதி

இந்த 26 மதுபான சாலைகளில் 18 மதுபான சாலைகளை திறப்பதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏனைய 08 மதுபான சாலைகளை திறப்பதற்கான அனுமதிகள் தாமதமாகின்றன.

குறித்த பிரதேசங்களில் புதிய மதுபான சாலைகளை திறப்பதற்காக பிரதேச செயலகங்களில் அனுமதி கோரப்பட்ட நிலையில் கிளிநொச்சியின் 18 மதுபான சாலைகளில் 17 மதுபான சாலைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒன்றுக்கான அனுமதி தாமதப்படுகிறது.

அதேபோன்று யாழ்ப்பாணத்தில் 08 மதுபான சாலைகளில் ஒன்றுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏனைய 07க்குமான அனுமதிகள் இன்னமும் கிடைக்கவில்லை.

அனுமதிகள் தாமதமாவதற்கு மக்கள் எதிர்ப்பு, ஆலயங்கள், பாடசாலைகளுக்கு அருகில் அவை இருப்பது போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன. அவ்வாறான காரணங்களை நிவர்த்தி செய்த பின்னர் அனுமதி வழங்கப்படும்.

யாழில் ஒன்றுக்கே அனுமதி

யாழ்ப்பாண மாவட்டத்தில் சங்கானை, தெல்லிப்பளை, உடுவில் மற்றும் கரவெட்டி ஆகிய பிரதேச செயலக பிரிவில் தலா ஒரு மதுபான சாலைக்கும், நல்லூர் மற்றும் கோப்பாய் ஆகிய பிரதேச செயலக பிரிவில் தலா இரண்டு மதுபான சாலைகளுக்குமான அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றில் கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் மாத்திரம் மக்கள் எதிர்ப்பு இல்லாததால் ஒரு மதுபான சாலையை திறப்பதற்கான அனுமதியை பிரதேச செயலர் வழங்கியுள்ளார். ஏனைய 07 மதுபான சாலைகளுக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவற்றுக்கான அனுமதிகள் வழங்கப்படவில்லை.

கிளிநொச்சியில் 17 மதுபான சாலைகளுக்கு அனுமதி

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 12க்கும், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 04க்கும் பளை மற்றும் பூநகரி பிரதேச செயலர் பிரிவுகளில் தலா ஒரு மதுபானசாலைக்குமான அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவற்றில் கரைச்சியில் 12க்கும் கண்டாவளையில் 04க்கும் பளையில் ஒன்றுக்கும் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. பூநகரியில் மாத்திரம் மக்கள் எதிர்ப்பால் அனுமதி வழங்கப்படவில்லை.

புதிதாக மதுபான சாலைகளுக்கு அனுமதிகள் வழங்கப்படுவதால், கலாசார சீரழிவுகள், பொருளாதார பாதிப்புகள் ஏற்படும் என பிரதேச செயலர்கள் அறிக்கையிட்டுள்ளதால் அனுமதிகள் தொடர்பில் மீள் பரிசீலினை செய்யுமாறு யாழ் . மாவட்ட செயலர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு

இவ்வாறான நிலையியே தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமது பெயர்களில் மதுபான சாலைகளை பெற்று வேறு நபர்களுக்கு அவற்றினை விற்பனை செய்துள்ளதாகவும் , சிலர் மதுபான சாலைகளை பெறுவதற்கான சிபாரிசு கடிதங்களை வழங்கியமையால் அவர்களின் சிபாரிசில் வேறு நபர்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் மதுபான சாலைகளுக்கான அனுமதிகள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி தேர்தல் காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

வடக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்

வடக்கில் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் மதுபான சாலைக்கான அனுமதியினை பெற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

அது தொடர்பில் அவரிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட போது, தான் மதுபான சாலை அனுமதிப் பத்திரத்தை பெறவில்லை எனவும், தாய் தந்தையை இழந்த பெண்ணொருவர் மதுபான சாலைக்கான அனுமதியினை பெறுவதற்கான சிபாரிசு கடிதம் கேட்ட போது தான் அதனை வழங்கியதாகவும் ஒப்புக்கொண்டார். அதேபோன்று பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனும் மதுபான சாலைக்கான அனுமதியை தான் பெறவில்லை எனவும் , முல்லைத்தீவு பகுதியில் உள்ள ஒருவருக்கு சிபாரிசு கடிதம் வழங்கியதாகவும் கூறினார்.

பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரான கு. திலீபன் மதுபான சாலைக்கான அனுமதியை பெற்றுக்கொண்டதாக ஊடகம் ஒன்றில் செய்திகள் வெளியான நிலையில், மதுபான சாலைக்கான அனுமதியை தான் பெறவில்லை எனவும், அதொரு பொய்யான செய்தி எனவும் அவர் மறுத்ததுடன், அவ்வாறு செய்தி வெளியிட்ட ஊடக நிறுவனத்தின் ஆசிரியர் மற்றும் செய்தியாளர் ஆகியோருக்கு எதிராக முறைப்பாடும் செய்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது தந்தையின் பெயரில் மதுபான சாலைக்கான அனுமதியை பெற்றுக்கொண்டதாக சமூக ஊடகங்களில் சில ஆவணங்கள் பகிரப்பட்ட , செய்திகள் பகிரப்பட்டன.

அது தனது தந்தையின் பெயரில் முன்னரே இருந்த மதுபான சாலை எனவும், அதனை புதுப்பிக்க கையளிக்கப்பட்ட ஆவணங்களே தவறான நோக்குடன் பகிரப்பட்டதாகவும், தனது சிபாரிசில் மதுபான சாலைக்கான அனுமதிகளை பெற்றுக்கொடுக்கவில்லை என சத்திய கூற்று முடித்து, அதனை அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளதுடன், பொய்யான செய்திகளை சமூக

ஊடகங்களில் பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் மதுபான சாலைக்கான அனுமதிகளை பெற்று விற்பனை செய்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டன.

அவற்றினை மறுத்துள்ள சிறிதரன் தனக்கு அவதூறு ஏற்படுத்தும் விதமாக பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய நபர்களுக்கு எதிராக “சைபர் க்ரைம்” பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். அதன் அடிப்படையில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மதுபான சாலைகளுக்கான அனுமதிகளை பெற்றவர்கள் தொடர்பிலான பட்டியல் தம்மிடம் உள்ளதாகவும், அவற்றினை வெளியிடுவதாகவும் தேசிய மக்கள் சக்தியினர் கூறி வந்தனர்.

ஜனாதிபதி தேர்தலும் முடிவடைந்து, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று மூன்று வாரங்களுக்கு மேல் கடந்துள்ள போதிலும் ஏன் அந்த பட்டியலை வெளியிடப்படவில்லை என கேள்வி எழுப்பப்படுகிறது.

பட்டியலை வெளியிட ஏன் தாமதம் ?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன், மதுபான சாலைகளுக்கான அனுமதிகளை பெற்றவர்கள் அல்லது அதற்கான சிபாரிசுகளை வழங்கியவர்கள் பெயர்ப் பட்டியலை ஜனாதிபதி உடனடியாக வெளியிட வேண்டும் எனக் கோரி வருகின்றார்.

ஊழலற்ற நேர்மையான அரசாங்கத்தை தாம் அமைப்போம் என மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிபீடம் ஏறிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை காப்பாற்றும் முகமாக மதுபான சாலை அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டு, மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என அவர் கோரியுள்ளார்

அதேவேளை “தேர்தல் காலத்தில், முன்னைய அரசாங்கத்திடம் மதுபான சாலைக்கான அனுமதிகளை பெற்றுக்கொண்டவர்களின் விபரங்கள் தம் வசம் உண்டு எனவும் அதனை வெளியிடுவோம் என கூறியவர்கள் ஏன் இன்னமும் அதனை வெளியிடவில்லை? அவ்வாறு பெயர்ப் பட்டியலை வெளியிடாது இருப்பது, சந்தேகத்தைத் தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் மதுபான சாலைக்கான அனுமதிகளை பெற்றவர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டு, அவர்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அதேவேளை பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் தாம் யாரும் மதுபான சாலைக்கான அனுமதியை பெறவில்லை என சத்திய கடதாசி முடித்து தர சொல்லுகிறோம். நான் யாருக்கும் மதுபான சாலைகளை பெற்றுக்கொடுக்கவோ, எனது பெயரில் பெறவோ இல்லை என சத்திய கடதாசி முடித்துள்ளேன்.

அது போல ஏனையவர்களும் சத்திய கடதாசி முடித்து தரட்டும்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் கீத்நாத் காசிலிங்கம் யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் மதுபான சாலைகளை பெற்றுக்கொண்ட அல்லது அதற்கான சிபாரிசு கடிதங்களை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை ஜனாதிபதி வெளியிட்டால், நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அது தாக்கத்தை ஏற்படுத்தும்.

அவ்வாறு பெயர்ப் பட்டியல் தேர்தல் காலத்தில் வெளியாகும் போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். வாக்களிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆனால் மக்கள் புதிய ஜனாதிபதியிடம் எதிர்பார்ப்பது, நேர்மையான ஊழலற்ற ஆட்சியை, மக்களின் எதிர்ப்பார்ப்பை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும்.

தேர்தல் முடிவடைந்த பின்னர் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டால் பட்டியலில் உள்ள சிலர் பாராளுமன்றில் இருக்கலாம். பாராளுமன்றம் சென்றவர்கள் சென்றவர்களாகவே இருப்பார்கள். ஆகவே தான் தேர்தலுக்கு முன்பாக பெயர்ப் பட்டியலை வெளியிட வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை ஜனாதிபதி பூர்த்தி செய்வாரா ?

மயூரப்பிரியன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division