ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்ததும் உடனடியாகவே தேசிய தேர்தலொன்றை நாடு எதிர்கொண்டுள்ளது. ஒருசில மாத இடைவெளியில் நடைபெறவிருக்கும் இரண்டாவது தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை முதல் ஏற்றுக்கொள்ளப்படத் தொடங்கியுள்ளன.
எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி பத்தாவது பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடத்தப்படவிருப்பதால் அரசியல் கட்சிகள் குறிப்பாக எதிர்க்கட்சிகள் விறுவிறுப்பாகச் செயற்படத் தொடங்கியுள்ளன.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ள வெற்றியின் காரணமாக பொதுத்தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. இதுவரையான இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்ததும் நடத்தப்பட்ட பொதுத்தேர்தல்களில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவருடைய கட்சிகளே பாராளுமன்றத்திலும் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைத்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாகத் தெரிவானதும் நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில் பொதுஜன முன்னணி ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்புடன் ஆட்சியமைத்தது. 2010ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையும் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னரான பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி பெரும்பான்மை ஆசனங்களை வென்றதுடன், 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன வென்றதும் நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியும், 2020ஆம் ஆண்டு கோட்டாபய ஜனாதிபதியாக வென்ற பின்னர் நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன பெரும்பான்மையையும் பெற்றிருந்தன.
இந்த வரிசையில் அநுர குமார திசாநாயக்க தேசிய மக்கள் சக்தி சார்பில் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள பின்னணியில் நடத்தப்படும் பொதுத்தேர்தலில் அந்தக் கட்சி பெரும்பான்மையைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. அது மாத்திரமன்றி, பல தசாப்தங்களாக அரசியலில் இருக்கும் பலருக்கு ஓய்வைக் கொடுக்கும் தேர்தலாகவும் 2024 பொதுத்தேர்தல் அமையப் போகின்றது.
ஆட்டம் கண்டுள்ள எதிர்க்கட்சிகள்:
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் அநுர குமாரவுக்குப் போட்டியாக விளங்கியிருந்தனர்.
ஜனாதிபதி வேட்பாளர்களை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு தரப்பினருக்கு ஆதரவாக செயற்படும் நிலைப்பாட்டை பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்திருந்தனர். கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதும் ஒட்டுமொத்த பொதுஜன பெரமுனவும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கி அவரை ஜனாதிபதியாக்கியது.
அவர் ஜனாதிபதியானதும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் ஆரம்பம் தொட்டே ரணிலுக்கு ஆதரவாகச் செயற்படத் தொடங்கினர். மறுபக்கத்தில் அவருடைய செயற்பாடுகளில் முரண்பாட்டைக் கொண்ட சில பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திற்குள் இருந்தனர். இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன தனக்கு ஒத்துழைப்பு வழங்கும் என ரணில் கருதியபோதும், நாமலைக் களமிறக்க அக்கட்சி தீர்மானித்தது.
இந்தத் தீர்மானத்தினால் ஏற்கனவே பிளவுபட்டிருந்த பொதுஜன பெரமுன கட்சி முழுமையாக சீர்குலைந்தது. 90 இற்கும் அதிகமான பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவாகச் சென்றனர். மிகவும் குறைந்தளவு உறுப்பினர்களே நாமலுடன் எஞ்சியிருந்தனர். கடந்த காலங்களில் வாய் திறந்தாலே மஹிந்த ராஜபக்ஷ என்பதை மாத்திரமே உச்சரித்த பலரும் நாமலைக் கைவிட்டு ரணிலுடன் சென்றிருந்தார்கள்.
மறுபக்கத்தில், எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் செயற்பட்டனர். அவர்களுடன் ஜீ.எல்.பீரிஸ், நாளக கொடஹேவா போன்ற பொதுஜன பெரமுன உறுப்பினர்களும் சஜித்துக்கு ஆதரவாக இருந்தனர்.
இவ்வாறு ரணிலும், சஜித்தும் பாரிய கூட்டணிகளை அமைத்துக் களமிறங்கிய பின்னணியில், கடுமையான போட்டிக்கு மத்தியில் அநுர குமார திசாநாயக்க வென்றிருந்தார். ஜனாதிபதித் தேர்தல் களம் சூடுபிடித்திருந்த நேரத்தில், சஜித்தும் ரணிலும் இணைந்தாலே அனுரவை வெல்ல முடியும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இருந்தபோதும், ஜனாதிபதித் தேர்தலில் அதுபற்றிய இணக்கப்பாடுகள் இரு தலைவர்களுக்கும் இடையில் ஏற்படவில்லை. அது மாத்திரமன்றி, ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரங்களில் ஐக்கிய தேசியக் கட்சியினர் முழுமையாக இறங்கிச் செயற்பட்டதாகவும் தெரியவில்லை. பொதுஜன பெரமுனவிலிருந்து சென்றவர்களே பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தனர்.
அது மாத்திரமன்றி, பொதுத்தேர்தலை இலக்கு வைத்து ரணிலுக்கு ஆதரவாகச் செயற்பட்ட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் புதிய கூட்டணிகளைத் தமக்குள் உருவாக்கியிருந்தனர். சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஏனையவர்கள் இணைந்து ‘பொதுஜன ஐக்கிய முன்னணி’ என்ற பெயரில் முதலில் கூட்டணியொன்றை உருவாக்கியிருந்தனர். இதன் சின்னமாக கதிரைச் சின்னம் தெரிவு செய்யப்பட்டது.
இதில் நிமல் சிறிபால டி சில்வா, லசந்த அழகியவண்ண, அநுர பிரியதர்ஷன யாப்பா, நிமல் லான்சா போன்றவர்கள் அங்கம் வகிக்கின்றனர். இதன் பின்னர் தினேஷ் குணவர்தன தலைமையில் வெற்றிக்கிண்ணச் சின்னத்தில் ‘பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி’ என்ற புதிய கூட்டணியொன்று உருவாக்கப்பட்டது.
தோல்வியில் முடிந்த பேச்சுக்கள்:
இவ்வாறு கூட்டணிகள் ஏற்கனவே அமைக்கப்பட்ட பின்னணியில், ஜனாதிபதித் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்கத் தொடங்கின. இதற்கிடையில் ரணில் விக்கிரமசிங்க தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாகவும், தேசியப் பட்டியலில் கூட பாராளுமன்றத்திற்குச் செல்ல மாட்டார் என்றும் ருவன் விஜயவர்த்தன அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஐ.தே.க ஐ.ம.ச இணைப்புக் குறித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தும் பொறுப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்த்தன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் லக்கி பொன்சேகா ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இவர்கள் இருவருக்கும் இடையில் சுமார் ஏழு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதும் இது தோல்வியில் முடிந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியினர் விதித்த நிபந்தனைகளே இந்தத் தோல்விக்குக் காரணம் எனச் சொல்லப்படுகின்றது.
இருதரப்பும் இணைந்தால் ரணில் விக்கிரமசிங்க ஐ.தே.கவின் தலைமைப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற நிபந்தனை முதலில் முன்வைக்கப்பட்டது. இந்நிபந்தனைக்கு ஐ.தே.க சரியெனக் கூறியபோதும், எதிர்வரும் பொதுத்தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் ஐக்கிய மக்கள் சக்தியிலேயே போட்டியிட வேண்டும், ஐ.தே.கவின் தலைமைப் பதவி சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டன.
அது மாத்திரமன்றி, ரணிலுக்கு ஆதரவாக பொதுஜன பெரமுனவில் இருந்து வந்த எவருக்கும் இடமளிக்கப்படக் கூடாது என்ற விடயங்களும் முன்வைக்கப்பட்டமையால், ஐ.தே.க தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்படவில்லையெனக் கூறப்படுகின்றது.
மறுபக்கத்தில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவாக பொதுஜன பெரமுனவில் இருந்து வந்தவர்களின் நிலைமை மிகவும் இக்கட்டான நிலைக்குச் சென்றது. ஒருவேளை ஐ.தே.கவும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்துகொண்டால் தமக்கு என்ன நிகழும் என்ற சந்தேகம் அவர்களுக்கு உருவானது. இதனால், ரணிலைத் தலைமையாகக் கொண்ட கூட்டணியொன்றுக்கான முயற்சி பற்றியே அவர்கள் தொடர்ச்சியாகப் பேசி வந்தனர்.
இந்த நிலையில், ஐ.தே.க-, ஐ.ம.ச பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காத நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியும் அவர்களுடன் இருக்கும் முன்னாள் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் இணைந்த கூட்டணியும் புதிய ஜனநாய முன்னணியில் போட்டியிடத் தீர்மானித்துள்ளன. இதனால் முதன் முறையாகப் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னம் போட்டியிடாமல் போகப்போகின்றது.
இதற்கு அமைய கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சிலிண்டர் சின்னத்தை புதிய ஜனநாயக முன்னணிக்குப் பெற்றுக்கொள்ளும் முயற்சி எடுக்கப்பட்டது. சிறிமணி அத்துலத் முதலியால் ஆரம்பிக்கப்பட்ட ஜனநாயக ஐக்கிய தேசிய லலித் முன்னணி என்ற கட்சியே 2009 ஆம் ஆண்டு ‘புதிய ஜனநாயக முன்னணி’ எனப் பெயர் மாற்றப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சிக்காரரிடம் காணப்படும் இந்தக் கட்சி கடந்த பல தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவும், 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவும், 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவும் அன்னம் சின்னத்தில் புதிய ஜனநாயகக் கட்சியிலேயே போட்டியிட்டிருந்தனர்.
இந்த நிலையில், தற்பொழுது மீண்டும் இந்தக் கட்சியைப் பொதுத்தேர்தலில் பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டவாறு காஸ்சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவது பொருத்தமாக இருக்கும் என முன்வைக்கப்பட்ட கருத்தையடுத்து, இக்கட்சியின் சின்னமான அன்னம் சின்னத்துக்குப் பதிலாக காஸ்சிலிண்டர் சின்னத்தைப் பயன்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆணைக்குழுவிலிருந்து இதற்கு அனுமதி வழங்கப்பட்டதால் புதிய ஜனநாயக முன்னணி சிலிண்டர் சின்னத்தில் களமிறங்கும் எனக் கூறப்படுகிறது. எனவே, ஐக்கிய தேசியக் கட்சியினர், தினேஷ் குணவர்தன தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி உள்ளிட்டோர் இணைந்து காஸ்சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகியுள்ளன.
அரசியலுக்கு முடிவுகட்டும் பலர்:
இவ்வாறு பொதுத்தேர்தலுக்குக் கூட்டணிகள் வகுக்கும் முயற்சிகள் ஒருபுறம் இருக்க, நீண்ட காலமாக அரசியலில் இருக்கும் பலர் ஓய்வு பெறுவதற்குத் தீர்மானித்துள்ளனர்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது ஓய்வை அறிவித்துள்ளார். இது மாத்திரமன்றி, நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பலர் தாம் ஆதரித்தவர்களை வெற்றிபெற வைக்கத் தவறியமையால் அரசியலில் இருந்து ஓய்வுபெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக கடந்த காலங்களில் ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களைக் கொண்டுள்ள அரசியல்வாதிகள் இம்முறை தேர்தலில் வெற்றிபெறுவது சிரமம் என்பதை உணர்ந்து கொண்டிருப்பதால், தாமாகவே அரசியலில் இருந்து விலகியிருப்பதற்குத் தீர்மானித்துள்ளார்கள்.
இதற்கும் அப்பால் ‘பார் லைசன்ஸ்’, எரிபொருள் நிலைய லைசன்ஸ் போன்றவற்றைப் பெற்றுக்கொண்ட அரசியல்வாதிகளின் பெயர்கள் வெளியாகி வருவதால், அவ்வாறானவர்கள் எதிர்வரும் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புக்களும் அதிகரித்து வருகின்றன.
எனவே, நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் புதிய முகங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம். இந்தப் புதிய முகங்கள் புதிய அரசியல் கலாசாரத்துக்கான அடித்தளத்தை இட்டு அப்பழுக்கற்ற அரசியலைச் செய்ய வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். இந்த மாற்றம் ஏற்படுமா அல்லது புதியவர்களும் பழைய அரசியல் பாதையைத் தெரிவுசெய்வார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.