Home » தி.மு.கவுக்குள் கோலோச்சும் வாரிசு அரசியல்!

தி.மு.கவுக்குள் கோலோச்சும் வாரிசு அரசியல்!

by Damith Pushpika
October 6, 2024 6:00 am 0 comment

தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டுள்ளமை, மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழகத்தில் குடும்ப அரசியல் கோலோச்சுவதாக எதிரணிகள் கடுமையாக் கண்டனம் தெரிவிக்கின்றன. அதேவேளை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்துக்குள்ளும் அதிருப்தி நிலவுகின்றது.

தி.மு.கவுக்குள் சிரேஷ்ட தலைவர்கள் பலர் இருக்கையில் முதல்வர் ஸ்டாலின் தமது புதல்வருக்கு மகுடம் சூட்டி விட்டாரென்று கட்சிக்குள் பலரும் புழுங்குகின்றனர். அதாவது தி.மு.கவுக்குள் நான்காவது தலைமுறை தொடங்கிவிட்டது எனப் பேசி வருகின்றனர். அதாவது அண்ணா, கருணாநிதி, ஸ்டாலினை அடுத்து உதயநிதி நான்காம் தலைமுறை தலைவராகப் பார்க்கப்படுகிறார்.

ஆனால், உண்மையில் என்ன சாதித்தார் என்பதற்காக தி.மு.க தலைமை உதயநிதிக்கு துணைமுதல்வர் பதவியை வழங்க முடிவு செய்தது என்னும் கேள்வி கட்சிக்குள் எழுந்துள்ளது.

தற்போதைய தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் தனது கட்சி அரசியலை 1983 ஆம் ஆண்டு தி.மு.க இளைஞர் அணி செயலாளராக தொடங்கினார். பின்னர் 1989 ஆம் ஆண்டு எம்.எல்.ஏ, 2006 ஆம் ஆண்டு உள்ளாட்சித் துறை அமைச்சர், 2009 ஆம் ஆண்டு துணை முதல்வர். இறுதியாக 2021 ஆம் ஆண்டு முதல்வராகப் பதவியேற்றார்.

உதயநிதிக்கு 2019 ஆம் ஆண்டு இளைஞர் அணி செயலாளராகப் பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர் 2021 ஆம் ஆண்டு எம்.எல்.ஏ பதவி, 2022 ஆம் ஆண்டு அமைச்சர் பதவி, 2024 ஆம் ஆண்டு துணை முதல்வர்.

தன் தீவிர அரசியல் பயணத்தைத் தொடங்கிய 5 ஆம் வருடத்தில் ‘துணை முதல்வர்’ பதவியைப் பெற்றிருக்கிறார். ஆனால் அவரது தந்தை ஸ்டாலின் துணை முதல்வர் என்னும் பொறுப்பை ஏற்க கட்சியில் 26 ஆண்டு காலம் உழைக்க வேண்டியிருந்தது. இந்த வேறுபாட்டால்தான் உதயநிதியின் அனுபவம், அரசியல் தெளிவு, கொள்கை, புரிதல் போன்றவற்றின் மீது மக்களுக்கு கேள்வி எழுகிறது. உதயநிதி துணை முதல்வராக சாதிப்பாரா என்பது அடுத்த கேள்வி. எதன் அடிப்படையில் உதயநிதிக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது?

உதயநிதி விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் அத்துறைக்கு சிறப்பு கவனம் கொடுக்கப்பட்டது. தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட், கேலோ இந்தியா, பார்முலா கார் ரேஸ் என முக்கியமான போட்டிகளைத் தலைமை ஏற்று நடத்தி கவனத்தைப் பெற்றார். விளையாட்டுத் துறையில் அனைவரின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினார்.

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டார் உதயநிதி. அந்தத் தேர்தலில் 38 இடங்களை வென்றது திமுக. இதற்குக் காரணம் உதயநிதியின் தேர்தல் பிரசாரம்தான் என தி.மு.கவினரால் சொல்லப்பட்டது. தி.மு.கவின் முக்கிய வாக்குறுதிக்காகக் கட்சி அளவில் சில முன்னெடுப்புகளைச் செய்தார். ‘Ban NEET’ என்னும் பெயரில் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கினார். அப்போது நீட் பிஜி தேர்வில் பூஜ்ஜியம் வீதம் எடுத்தாலும் மருத்துவப் படிப்பில் சேரலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், முட்டையைக் காண்பித்து கவனத்தை ஈர்த்தார்.

2024 மக்களவைத் தேர்தலின்போது சனாதனம் குறித்து உதயநிதி பேசியது சர்ச்சையானது. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் இதனை ரசிக்கவில்லை. இந்தப் பேச்சு இந்தியா கூட்டணிக்குப் பின்னடவை ஏற்படுத்தும் என சொல்லப்பட்டது. இருப்பினும் தன் கருத்தில் இருந்து பின்வாங்காமல் இருந்தார் உதயநிதி. இது திமுகவின் கொள்கைகளை உள்வாங்கியவர்களிடம் கவனம் பெற்றது.

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இளைஞர் அணி மாநாடு திருநெல்வேலியில் நடைபெற்றது. அதற்கு தலைமை ஏற்றிருந்தார் ஸ்டாலின். அதன்பின் இரண்டு ஆண்டுகளில் துணை முதல்வர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், 17 ஆண்டுகள் கடந்து இரண்டாவது இளைஞர் அணி மாநாடு உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் நடந்தது. இதை வெற்றிகரமாக நடத்தி முடித்த சில மாதங்களில் துணை முதல்வர் அரியணையில் ஏறியுள்ளார் உதயநிதி.

ஆனால் உதயநிதி செய்ததை விட கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்கள் பல வெற்றிகளைக் கட்சிக்குப் பெற்று தந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு இந்தப் பொறுப்பு மறுக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட தலைவர்கள் எத்தனையோ பேர் இருக்கும்போது உதயநிதிக்கு எந்த தகுதி அடிப்படையில் துணை முதல்வர் வழங்கப்படுகிறது? என்னும் கேள்வியை எழுப்புகிறார்கள் பலர்.

தற்போது துணை முதல்வராக உதயநிதி அறிவிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்தமாக அதிகாரம் அவருக்குச் செல்லும் நிலையைத்தான் குறிக்கிறது. எனவே, இந்த வருத்தங்களை எல்லாம் உதயநிதி எப்படி அனுசரித்து செல்லப்போகிறார் என்னும் கேள்வி இருக்கிறது.

வாரிசு அரசியல் என்னும் விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் வைக்கத் தொடங்கிவிட்டன. இது மக்களிடையே என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது? 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் இது எதிரொலிக்கலாம்.

இதேவேளை தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மூன்று பேர் நீக்கப்பட்டு நான்கு பேர் இணைக்கப்பட்டுள்ளனர். இதுவரை இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த உதயநிதி ஸ்டாலினுக்கு, தற்போது கூடுதலாக திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை ஆகியவை அளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கட்சியில் செயல்பட ஆரம்பித்து சில காலத்திலேயே துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு அளிக்கப்பட்டு உள்ளதாகவும், ஆனால் மிக அனுபவ அரசியல்வாதியான துரைமுருகன் மற்றும் கட்சிக்காக உழைத்த மூத்த அமைச்சர்கள் யாருக்கும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

அமைச்சரவையில் பத்தாவது இடத்தில் இருந்த உதயநிதி, முதல்வருக்கும் துரைமுருகனுக்கும் அடுத்த இடத்துக்கு முன்னேறியிருக்கிறார்.

“எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. நான் என்பாட்டுக்கு படங்கள் தயாரிப்பு, விநியோகம், நடிப்பு எனப் போய்க்கொண்டிருக்கிறேன். நான் அரசியலுக்கே வரப்போவதில்லை” என முன்னொரு காலத்தில் சூளுரைத்த உதயநிதி, காலம் மாறுவதையும் அதிகாரத்தின் அவசியத்தையும் ‘சில சம்பவங்களால்’ புரிந்துகொண்டு, சட்டென கரைவேட்டி கட்டி அரசியலுக்குள் நுழைந்துவிட்டார். இதுவரையில் தமிழக அரசியல் வரலாற்றில், இப்படியொரு வளர்ச்சியை இளம்வயதில் யாரும் அடைந்ததில்லை என்பதுதான் உண்மை.

எஸ்.சாரங்கன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division