இதுவரையான ஜனாதிபதித் தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிட்ட தேர்தலாக நேற்றைய தேர்தல் அமைந்திருந்தது. வேட்பாளர்களுக்கிடையில் பலமுனைப் போட்டி இத்தேர்தலில் நிலவியிருந்தது. இவ்வாறு பல்வேறு விடயங்கள் இத்தேர்தலைப் பரபரப்பாக்கியிருந்தன.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் பின்னரான சவால்களையடுத்து நடைபெற்ற தேர்தல் இதுவாகும்.
ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமா, இல்லையா என்ற சந்தேகம் ஆரம்பத்தில் காணப்பட்டாலும் தேர்தல்கள் ஆணைக்குழு உரிய நேரத்தில் தேர்தலுக்கான அறிவித்தலை விடுத்து தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பர் 21ஆம் திகதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதிலிருந்து கடந்த 18ஆம் திகதி நள்ளிரவு வரை தேர்தல் களம் பரபரப்பாகவே காணப்பட்டது. கடந்த கால ஜனாதிபதித் தேர்தல்களைவிட இம்முறை தேர்தலில் 38 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். இவ்வாறு வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் ஒரு வேட்பாளர் இயற்கை எய்தியிருந்தார்.
இவ்வாறான நிலையில் நேற்றையதினம் ஜனாதிபதித் தேர்தல் சுமுகமான முறையில் நிறைவடைந்துள்ளது. 17 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததுடன், இதில் கணிசமானவர்கள் நேற்றையதினம் தமது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியிருந்தனர்.
நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டிருந்த 13,421 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்றிருந்தன. இம்முறை தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தாலும், போட்டி என்னவோ பிரதான சில வேட்பாளர்கள் மத்தியில் மாத்திரமே காணப்பட்டிருந்தது.
வேட்பாளர்கள் மத்தியில் போட்டி அதிகமாக இருந்தபோதும் ஒப்பீட்டளவில் தேர்தல்கால வன்முறைகள் மற்றும் தேர்தல் விதிமீறல்கள் குறித்த சம்பவங்கள் குறைவாகவே காணப்பட்டுள்ளன. தேர்தல் காலத்தில் பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லையென தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அது மாத்திரமன்றி, தேர்தலில் சமூக ஊடகங்களின் வகிபாகம் அதிகமாக இருந்ததையும் காணக் கூடியதாகவிருந்தது. இலங்கையின் தேர்தல் வரலாற்றில 2015ஆம் ஆண்டே முதன் முறையாக சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. இந்த நிலைமை இம்முறை கணிசமாக அதிகரித்திருந்ததைக் காண முடிந்தது.
இளம் வாக்காளர்கள் தமது கருத்துகளையும், மாற்றுக் கருத்துகளையும் முன்வைப்பதற்கு சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்தியிருந்தனர். பிரதான ஊடகங்களைவிட சமூக ஊடகங்களை மையமாகக் கொண்ட பிரசாரங்களுக்கு அரசியல் கட்சிகளும் முக்கியம் கொடுத்த போக்கையும் இம்முறை காண முடிந்தது.
இது முன்னேற்றகரமான நிலைமையாக இருந்தபோதும், சமூக ஊடகங்களினால் முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் குறித்த விமர்சனங்களும் அதிகம் என்றே கூற வேண்டும். போலியான சமூக ஊடகக் கணக்குகள் பல ஆரம்பிக்கப்பட்டு ஒருவர் மீது ஒருவர் சேறுபூசும் வகையிலான சம்பவங்கள் அதிகரித்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
குறிப்பாக தேர்தல் கணிப்பீடுகள் அல்லது மக்களின் கருத்துக்களை அறியும் விதத்தில் சமூக ஊடகங்களினால் முன்னெடுக்கப்பட்ட கணிப்பீடுகள் வாக்காளர்களைக் குழப்பும் வகையில் அமைந்திருந்தன. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவும் கவனம் எடுத்திருந்தது. எதிர்காலத்தில் இது பற்றிய தீர்மானங்கள் எடுக்கப்படலாம்.
எனினும், மாற்றமொன்றை எதிர்பார்த்து இந்தத் தேர்தலை மக்கள் அணுகியிருந்தனர். பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகள், மக்களுக்கான சலுகைகள், ஊழல் ஒழிப்பு போன்ற பல்வேறு விடயங்கள் பொதுவானவையாகக் காணப்பட்டிருந்தன. நாட்டு மக்கள் பெரும்பாலும் எதிர்பார்க்கும் விடயங்களுக்கு அவற்றில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டிருந்ததாக அரசியல் அவதானிகள் பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
2022 ஆம் ஆண்டு மக்கள் வீதியில் இறங்கிப் போராடிய நிலையில் நேற்றையதினம் மக்கள் ஜனநாயக ரீதியான அமைதிப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். தமது எதிர்பார்ப்பு என்ன என்பதை தமது ஜனநாயக உரிமையின் மூலம் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்கள். மக்களின் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. யார் தமது தலைவர் என்பதை அவர்கள் தெரிவு செய்து விட்டார்கள்.
மக்களின் ஆணையைப் பெற்ற தலைவருடன் அனைத்து அரசியல் தரப்பினரும் ஒத்துழைப்புடன் செயற்படுவதே நாட்டின் எதிர்காலத்திற்கு சிறந்ததாக அமையும். தேர்தல் காலத்தில் வேட்பாளர்களும், அவர்களுக்கு ஆதரவானவர்களும் அரசியல் போட்டியான கருத்துகளை மாற்றுத்தரப்பினர் மீது முன்வைத்திருந்தனர். இம்முறை தேர்தல் பலமுனைப் போட்டியாக அமைந்ததால் தேர்தல் களத்தில் ஒருவர் மீது ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களும், கருத்துக்களும் காரசாரமாகவே இருந்தன. இந்த நிலையில் நேற்று மக்கள் தமது வாக்கு மூலம் இவற்றுக்குப் பதில்களை வழங்கி விட்டார்கள்.
எனவே, தேர்தல் காலத்தில் ஒருவரை ஒருவர் தாக்குவதற்குப் பயன்படுத்திய விடயங்களை இனியும் பொருட்படுத்தியவாறு மற்றையவர்களுடன் எதிர்ப்பைக் கடைப்பிடிப்பது நாகரிகமாக அமையாது. மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு தலைவணங்கி நாட்டை எவ்வாறு தொடர்ந்தும் முன்னோக்கிக் கொண்டு செல்வது என்பதைப் பற்றியே அனைவரும் சிந்திக்க வேண்டும்.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியின் மத்தியில் பெரும்பான்மையான மக்களின் ஆதரவுடன் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி முன்னிலையில் பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன. குறிப்பாக பொருளாதாரப் பிரச்சினைகளை சீர்செய்து நாட்டையும், மக்களையும் அதிலிருந்து மீட்சிக்குக் கொண்டுவரும் பாரிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பொறுப்பை அவரால் தனியாக நின்று நிறைவேற்ற முடியாது என்பதால் அனைத்துத் தரப்பினரினதும் ஒத்துழைப்பும் இதற்கு அவசியமாகின்றது. எனவே, அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்படுவதே நாட்டின் நலனுக்கு சாதகமாக அமையும்.
பி.ஹர்ஷன்