கடந்த 9 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த மாஹோ சந்திக்கும் அனுராதபுரத்திற்கும் இடையிலான புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்பமானது ரஜரட்டவிற்கும் தலைநகருக்கும் இடையிலான உறவுகளை உறுதிப்படுத்துவதுடன் வடக்கு மற்றும் தெற்கையும் இணைப்பதாகவும் அமைந்துள்ளது.
வடக்கையும் தெற்கையும் இணைத்த யாழ்தேவியின் பெயர் வரலாற்றில் இருந்து என்றும் அழியாது. அந்தளவுக்கு யாழ்தேவி மக்களின் இதயங்களில் ஆழமாய் பதிந்துள்ளது.
1894ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி ஆங்கிலேயர்களால் வடக்கு ரயில் பாதையின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அது காதலர் தினத்தன்றாகும். 1905/1906ம் ஆண்டு காலப்பகுதியில் இந்தப் பாதையில் பயணிகள் புகையிரதம் சேவையைத் தொடங்கியது. அவ்வாறு தொடங்கப்பட்டது இரவு அஞ்சல் ரயில் சேவையாகும். சுமார் 12 மணிநேரத்தைக் கொண்ட இரவு அஞ்சல் புகையிரதத்திற்கு மேலதிகமாக பகல் நேர ரயில் தேவை என்பதால், யாழ்தேவி புகையிரதம் 1956 ஏப்ரல் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
யாழ்தேவி 1956இல் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கு 7 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் எடுத்தது. இது கொழும்பு திட்டத்தின் கீழ் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட M-2 வகை என்ஜினைப் பயன்படுத்தியாகும். அதன் பிறகு, 1975இல் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட M4 வகுப்பு என்ஜின்கள் பயன்படுத்தப்பட்ட பிறகு அதன் வேகம் அதிகரித்தது.
அதன்பிரகாரம், காலை 5.45 மணிக்கு பயணத்தை தொடங்கிய யாழ்தேவி, காலை 9.35 மணிக்கு அனுராதபுரத்தைச் சென்றடைந்து, மதியம் 1 மணிக்கு யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தது.
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக யாழ்தேவியின் பயணம் 1986ஆம் ஆண்டுக்குப் பின்னர் நிறுத்தப்பட்டது. வவுனியா வரையில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த யாழ்தேவி 1989ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கையின் கீழ் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், 1990ஆம் ஆண்டு முதல் 24 வருடங்கள் தடைப்பட்டிருந்தது.
2014 அக்டோபர் 13ஆம் திகதி மீண்டும் இப்புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டது இந்தியன் இர்கான் நிறுவனத்தால் புகையிரதப் பாதை முழுமையாக புனரமைக்கப்பட்டதன் பின்னராகும். ஓமந்தைக்குப் பிறகு, காங்கேசந்துறை வரையிலான அனைத்து ரயில் நிலையங்களும் நாட்டின் முக்கிய வங்கிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்டன.
அந்த பங்களிப்பு அவ்வாறு இருந்த போதிலும், மாஹோ தொடக்கம் ஓமந்தை வரையிலான புகையிரதப் பாதையில் தற்காலிகமான ப்ளாஸ்டர்களே போடப்பட்ட போதிலும், அதற்கான நிரந்தரத் தீர்வு வழங்கப்படவில்லை.
அப்போது கொழும்பிலிருந்து காங்கேசந்துறை வரை பயணிப்பதற்கு யாழ்தேவி விரைவு புகையிரதத்திற்கு 8 மணி நேரமும், நகரங்களுக்கு இடையேயான விரைவு புகையிரதத்திற்கு ஆறரை மணி நேரமும் எடுத்தது. கால அட்டவணையில் இவ்வாறு இருந்தபோதிலும், வீதியின் மோசமான நிலை காரணமாக பயணத்திற்கு மேலதிகமாக 45 நிமிடங்களுக்கு மேல் எடுத்தது.
இது தொடர்பில், இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் மாஹோ சந்திக்கும் ஓமந்தைக்கும் இடையிலான புகையிரதப் பாதையின் முழுமையான புனரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு, அது தொடர்பான நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்ட போதிலும், அது படிப்படியாக தடைப்பட்டு போனதோடு கொவிட் -19 தொற்றுநோய் காலத்தின் பின்னர், இது அத்தியாவசிய காரணிகளின் பட்டியலில் மேலும் கீழே தள்ளப்பட்டுப் போனது.
2014ஆம் ஆண்டு வடக்கு ரயில்வே பாதை நிர்மாணிக்கப்பட்ட பின்னர், இந்திய கடன் திட்டத்துடன் தொடர்புடைய மாஹோ ஓமந்தை புகையிரத வீதியின் நவீனமயமாக்கல் ஒப்பந்தம் ஆரம்பிக்கப்பட்டதோடு, அதற்கான விலைமனு 2019ஆம் ஆண்டில் கோரப்பட்டது. அதன்படி, மாஹோவிலிருந்து ஓமந்தை வரையிலான 128 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்ட புகையிரதப் பாதையின் நிர்மாணப் பணியையும் வடக்கு ரயில் பாதையை நிர்மாணித்த இந்திய அரச நிறுவனமான இர்கோனுக்கு வழங்கப்பட்டது.
இவ்வாறு இந்த வீதியை புனரமைப்பதற்கான பணிகள் ஒப்படைக்கப்பட்டாலும் இப்பணிகள் 2019ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை செயற்படுத்தப்படவில்லை. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் தலையீட்டின் மூலம், அப்போது இந்திய உயர்ஸ்தானிகராக பதவி வகித்த கோபால் பாக்லே, இந்திய கடனுதவியின் கீழ் உடனடியாக இவ் வீதியின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பிக்க விருப்பம் தெரிவித்தார்.
இதற்கமைய, இந்தியன் இர்கோன் நிறுவனத்தின் தலைமையில் மாஹோ முதல் ஓமந்தை வரையிலான 128 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்ட புகையிரதப் பாதையை இரண்டு கட்டங்களாக முழுமையாக புனரமைப்புச் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மாஹோ தொடக்கம் ஓமந்தை வரையிலான (128 கி.மீ.) புகையிரதப் பாதையின் புனரமைப்பு பணிகள் சம்பிரதாயபூர்வமாக மதவாச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், இந்த முழுத் திட்டமும் 91.27 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் முதலாம் கட்டம் தொடர்பாக, ஜனவரி 7, 2023 அன்று, அனுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையிலான 61.6 கி.மீ நீளமான ரயில் பாதை முற்றாக மூடப்பட்டு ரயில் பாதையின் புனரமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
அதன்பிரகாரம் முதலாம் கட்டத்திற்குரிய அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையான 61.6 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட புகையிரத வீதி முழுமையாக மூடப்பட்டு ரயில் பாதையின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதன் கீழ் அனுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையான பரசங்கஸ்வெவ, மதவாச்சி, வவுனியா வரையான 3 புகையிரத நிலையங்களும், மிஹிந்தலை சந்தி, சாலியபுர, மெதகம, புனேவ, இரட்டைபெரியகுளம், தாண்டிக்குளம் ஆகிய சகல உப நிலையங்களும் நவீனமயப்படுத்தப்பட்டன.
சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு, சோதனைப் பயணம் மிகவும் வெற்றிகரமாக அமைந்திருந்ததோடு, அதன் பின்னர் மீண்டும் கொழும்பிலிருந்து வடக்குக்கான புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதனால் நவீனமயப்படுத்தப்பட்ட யாழ்தேவியின் பயண நேரத்தை சுமார் ஏழரை மணிநேரமாகக் குறைக்க முடிந்துள்ளது. அனுராதபுரத்திலிருந்து காங்கேசந்துறை வரை மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடியதாக இருந்த போதிலும், மாஹோவிலிருந்து அனுராதபுரம் வரையான புகையிரதத்தின் வேகம் மணிக்கு 5 கிலோமீற்றர் முதல் 32 கிலோமீற்றர் வரையிலான மோசமான நிலையில் இருந்தது. எனவே, அனுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையிலான புகையிரத பாதையை முழுமையாக திருத்தியமைத்ததன் மூலம் அடைந்த முன்னேற்றத்தின் உண்மையான பெறுபேறுகளை அடைய முடியவில்லை. எனவே வடக்கு – தெற்கு ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு பல மாதங்களின் பின்னர் 2ஆம் கட்டமாக மாஹோ முதல் அனுராதபுரம் வரையிலான புகையிரதப் பாதைக்கான பணிகள் இந்த வருடம் ஜனவரி 7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இந்த செயற்பாடுகளை ஆரம்பித்து மக்கள் பயன்பெறும் நோக்கில் புகையிரத திணைக்களம் ஸ்ரீ மஹா போதிக்கு முன்பாக தர்ம போதனை நிகழ்வென்றை ஏற்பாடு செய்திருந்தது. போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் வழிகாட்டுதலிலும் முயற்சியிலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ஜனவரி 7ஆம் திகதி மாஹோ – -அனுராதபுரம் ரயில் பாதையை மேம்படுத்தும் பணிகள் கல்கமுவ நிலையத்தில் உத்தியோகபூர்வமாக அமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலாநிதி பந்துல குணவர்தன, மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மை செயலாளர் இரினா தாக்கூர், ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க, அப்போதைய ரயில்வே பொது முகாமையாளர் பதவியை வகித்த எச். எம். கே. டபிள்யூ. பண்டார, ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் இந்திய இர்கான் நிறுவனத்தின் பிரதிநிதிகள் உட்பட ஏராளமான அரசு அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கல்கமுவ புகையிரத நிலையத்தில் அனைத்து முக்கிய பிரமுகர்களின் பங்குபற்றலுடன் மாஹோ -– அனுராதபுரம் புகையிரத பாதை திறந்து வைக்கப்பட்டதுடன் பாரம்பரிய நிகழ்வுகளும் இடம்பெற்றன.
66.4 கிலோமீற்றர் நீளம் கொண்ட இந்த நவீனமயமாக்கலின் கீழ், அம்பன்பொல, கல்கமுவ, செனரத்கம, தம்புத்தேகம, தலாவ மற்றும் ஷ்ரவஸ்திரிபுர புகையிரத நிலையங்கள் மற்றும் ரந்தேனிகம, அனுராதபுரம் புதிய நகர உப நிலையங்களும் முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ளன. அம்பன்பொல, தம்புத்தேகம மற்றும் தலாவ ஆகிய நிலையங்களில் இதுவரை ஒரே ஒரு ப்ளாட்போம் மட்டுமே இருந்த நிலையில் 2ஆவது தளமும் தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ரயில் பாதையின் நீளமும் அதிகரிக்கப்பட்டு, 20 பெட்டிகள் கொண்ட புகையிரதமும் கூட அந்த பாதையில் நிறுத்தப்படும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட 100 கிலோ மீற்றர் வேகத்தில் ரயிலை இயக்க முடியும் என்றாலும், படிப்படியாக வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறே ஆலோசனை வழங்கியுள்ளோம். கடவுப்பாதைகளைப் பயன்படுத்தும் மக்களுக்கும், புகையிரத பாதை முழுமையாக நவீனப்படுத்தப்பட்டிருப்பதால், அங்கீகரிக்கப்பட்ட வேகத்தை ஒரேயடியாக அடைய வேண்டாம் என்றே ஆலோசனைகளை வழங்கியுள்ளோம். கடந்த வாரம், சோதனைப் பயணத்தை இந்தப் பாதையில் மணிக்கு 102 கிலோ மீற்றர் வரை பயணம் செய்தோம். எந்தப் பிரச்சினையும் இல்லை”
இந்த ரயிலில் முழுமையான வர்ண சமிக்ஞைகள் இல்லாததால், தற்போது மாஹோ சந்தியில் இருந்து செனரத்கம மற்றும் செனரத்கமவில் இருந்து அனுராதபுரம் வரை இரண்டு பிரிவுகளின் கீழ் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. அதனடிப்படையில், மாஹோவிலிருந்து ஒரு புகையிரதம் புறப்பட்டதன் பின்னர், செனரத்கமவிலிருந்து மற்றொரு புகையிரதம் முன்னோக்கிப் பயணிக்காது. செனரத்கமவிலிருந்து அனுராதபுரத்திற்கு புகையிரதம் ஒன்று புறப்பட்டதன் பின்னர், அனுராதபுரத்திலிருந்து ரயில் இயக்கப்படாது. இது ஒரு தற்காலிக பாதுகாப்பு அமைப்பு என்பதோடு, சமிக்ஞை அமைப்பு முழுமையாக அமைக்கப்பட்டதன் பின்னர், இந்த இரண்டு பிரிவுகளுக்குப் பதிலாக இரண்டு முக்கிய நிலையங்களுக்கு இடையில் புகையிரதங்களைச் சேவையில் ஈடுபடுத்த முடியும்.
இங்கு மாஹோ முதல் அனுராதபுரம் வரையிலான ரயில் பாதை முழு வர்ண சமிக்ஞைகளுடன் பொருத்தப்படும். அதேநேரத்தில், அந்த வீதியில் பயன்படுத்தப்பட்ட சமிக்ஞை அமைப்பு (Samapho signal – tablet system) முற்றிலும் அகற்றப்படும். மேலும், இந்த வீதியில் நிறுவப்படும் வர்ண சமிக்ஞை அமைப்பு, தற்போது இந்த நாட்டில் பயன்பாட்டில் உள்ள அனைத்து வர்ண சமிக்ஞை அமைப்புகளையும் விட தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டதாகும்.
புதிய சமிக்ஞை முறைகளுக்கு அமைய, புகையிரதம் ஒன்று இருக்கும் இடத்தை எளிதாகக் கண்டு கொள்ள முடியும் என்பதோடு, எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்படாத நிலையங்களில், ‘டேப்லெட்’ சமிக்ஞையினைப் பெற்றுக் கொள்வதற்கு ரயிலின் வேகத்தை இனி பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.
புகையிரத வர்ண சமிக்ஞை அமைப்பை முழுமையாக நவீனப்படுத்துவதற்காக இந்திய கடன் உதவியின் கீழ் ஏற்கனவே 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த நவீனமயமாக்களின் காரணமாக கொழும்பில் இருந்து அனுராதபுரத்திற்கு 3 மணித்தியாலங்களுக்குள் பயணிக்க முடியும். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை இயங்கும் நகரங்களுக்கு இடையேயான விரைவு ரயிலின் பயண நேரம் ஒன்றரை மணியினாலும், யாழ்தேவி உள்ளிட்ட ஏனைய விரைவு ரயில்களின் பயண நேரம் சுமார் 2 மணிநேரத்தினாலும் குறைக்கப்படும். ரயில்வே வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இயங்கும் மிகச்சிறந்த திறன் கொண்ட புகையிரத சேவை என்ற பெருமையை இது பதிவு செய்யும்.
வடக்கையும், தெற்கையும் இணைக்கும் பாதுகாப்பானதும், மலிவானதுமான பயணமாக இருப்பது இந்த புகையிரத சேவையாகும்.
எம். எஸ். முஸப்பிர்