Home » எவராவது பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்தால் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது

எவராவது பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்தால் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது

இதுவே இறுதிச் சந்தர்ப்பம் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

by Damith Pushpika
September 15, 2024 6:00 am 0 comment

நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பதாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெற உள்ளது. இரண்டு கோடியே 31 இலட்சத்து 3 ஆயிரத்து 500 மக்கள் தொகையைக் கொண்ட இந்நாட்டில் ஒரு கோடியே 71 இலட்சத்து 80 பேர் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதோடு 39 பேர் அபேட்சகர்களாகவும் களமிறங்கியுள்ளனர். தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டுவரும் சூழலில் இத்தேர்தலில் சுயேட்சை அபேட்சகராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘தினகரன் வாரமஞ்சரி’க்கென விஷேட பேட்டியொன்றை அளித்துள்ளார்.

கேள்வி: இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நாட்டு மக்கள் உங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டுமெனக் கருதுகிறீர்கள்?

பதில்: நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்தவும் உறுதியான எதிர்காலத்தைக் கட்டியெழுப்பவும் வேண்டும் எனில் எனக்குத்தான் வாக்களிக்க வேண்டும். நாம் பொருளாதாரத்தில் ஸ்தீரநிலையை அடைந்துள்ளோம். அதனை உறுதிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் பழைய நிலைக்கு பின்னோக்கி செல்ல நேரிடும்.

தேசிய மக்களின் சக்தியின் (மாலிமாவ) யோசனைகளுக்கு அமைய அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை தயாரிக்குமாறு நிபுணர் ஒருவரிடம் கூறியிருந்தேன். அதற்கமைய தயாரித்த வரவு செலவுத்திட்டத்தில் வருமானத்திற்கும் செலவுக்குமான இடைவெளி 4000 பில்லியன் ரூபாவாக உள்ளது. அது மொத்த தேசிய உற்பத்தியில் 11.9 சதவீதமாகும். ஆனால் சர்வதேச நாணய நிதியத்துடனான (ஐ.எம்.எப்) இணக்கப்பாட்டின்படி துண்டுவிழும் தொகை 5 சதவீதமாக இருக்க வேண்டும். அப்போது தான் எம்மால் கடன் பெறலாம். அதற்கேற்பவே நாம் வரவு செலவுத்திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். இல்லாவிடில் டொலரின் பெறுமதி ரூ. 400-425 வரை கூட செல்லலாம்.

துண்டுவிழும் தொகை 11.9 சதவீதமாகக் காணப்படுமாயின் ஐ.எம்.எப். வும் ஏனைய 18 நாடுகளும் எங்களுக்கு அளிக்கும் ஒத்துழைப்பை நிறுத்தும். அப்போது டொலரின் பெறுமதி ரூ 500.00 வரை கூட அதிகரிக்கலாம். எமக்கு பணம் தேவை என்பதற்காக 5 சதவீதத்தை விடவும் அதிகமாகக் கடன் பெற்றால் மொத்த தேசிய உற்பத்தியில் தனியார் துறையினரிடம் உள்ள நிதி இல்லாமல் போகும். அச்சந்தர்ப்பத்தில் வட்டி 25 சதவீதம் வரை அதிகரிக்கும். அதனால் நாம் முன்னோக்கிச் செல்வதற்கு ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு செல்ல வேண்டும். இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுக்க வேண்டும். அத்தோடு வாழ்க்கை சுமையை இன்னும் இலகுபடுத்த வேண்டும்.

கேள்வி: நீங்கள் அடிக்கடி ‘எனது நண்பர் அநுர’ என அழைக்கிறீர்கள். உண்மையில் அநுர குமார திஸாநாயக்க உங்கள் நண்பரா?

பதில்: பாராளுமன்றத்தில் அவரை விளிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறே விழிக்கிறேன். அவர் அவ்வாறு விழிக்க வேண்டாம் என்கிறார். அவர்களது அரசியல் பீடத்தில் அது தொடர்பில் பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை முன்னாள் விவசாய அமைச்சர் என்று தான் விளிக்க வேண்டியுள்ளது. அவ்வாறும் அழைக்க வேண்டாமென இப்போது கூறுகிறார். ஏனெனில் அவ்வாறு அழைத்தால் அவரும் அரசாங்கத்தின் பங்காளராக இருந்திருப்பது தெரிகிறதே.

கேள்வி: நீங்கள் ஐக்கிய மக்கள் சக்தியினதும் தேசிய மக்கள் சக்தியினதும் கொள்கைப் பிடகடனங்களை படித்துள்ளீர்களா?

பதில்: ஆம். இரண்டையும் படித்துள்ளேன்.

கேள்வி: அப்படியென்றால் உங்களது பொருளாதார வேலைத்திட்டங்களின் படி அவ்விரு கொள்கைப் பிரகடனங்களிலும் காணப்படும் குறைபாடுகள் மற்றும் மாற்றங்களாக எவற்றைக் காணுகிறீர்கள்?

பதில்: ஐ.ம.சக்திக்கு இரண்டு விஞ்ஞாபனங்கள் உள்ளன. ஒன்று சகலருக்கும் வெற்றி. மற்றையது Economic Blue Print 3. அவற்றில் அவர்களது வேலைத்திட்டங்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் செல்லும் இடங்களிலும் இலவசமாக தருவதாக எதையாவது வாக்குறுதியாக வழங்குகிறார். இல்லாவிட்டால் பொருட்களின் விலைகளை மேலும் குறைப்பேன் என்கிறார்.

நான் அவர்களது அணியினருடன் கதைத்து கேட்டால், அவர் இன்று என்ன வாக்குறுதி வழங்கினார் என்பதை நாங்கள் அறியாதுள்ளோம் என்கின்றனர். அதனால் இவரது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமென நான் நினைக்கவில்லை.

இவர்களது கொள்கையில் விவசாயிகளுக்கு கடனுதவி, நிவாரண உதவி தருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த கொள்கைப் பிரகடனத்தில் அது இல்லை.

உல்லாசப் பயணத்துறை குறித்து பரஸ்பரம் முரண்பாடான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவற்றை சுட்டிக்காட்டினால் அவர் சென்று மேலும் வாக்குறுதிகள் வழங்குகிறார்.

தற்போது இராணுவ திணைக்களமொன்றை உருவாக்குவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இவர் குறிப்பிடும் அனைத்தும் புதிய செலவுகளாகும்.

மாலிமாவவின் கொள்கை பிரகடனம் 232 பக்கங்களைக் கொண்டுள்ளது. அதனைப்படிக்கவே ஒரு இரவே செலவானது. அதில் பொருளாதார திட்டங்கள் குறித்து தெளிவில்லை.

ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு செல்வதா? இல்லையா என்பது தொடர்பில் பெரிய பிரச்சினை உள்ளது.

முன்னாள் விவசாய அமைச்சரான அநுர குமார, களனியில் ஏற்றுமதிப் பொருளாதாரம் என்றார். ஆனால் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இரத்து செய்யப்படும் என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு செல்ல முடியாது.

அதேநேரம் சுனில் ஹந்துன்நெத்தி, பொருளாதார பரிமாற்ற வரைவு அரசியலமைப்புக்கு முரண் எனக் குறிப்பிட்டு ஏற்றுமதி பொருளாதாரமும் அரசியலமைப்புக்கு முரணானது என்கிறார். அத்தோடு டொக்டர் சூரிய பெருமவும் பொருளாதார மாற்ற வரைவுக்கு எதிராகக் குறிப்பிட்டிருந்தார். அதனால் இவர்களுக்கு மத்தியில் பரஸ்பர முரண்பாடுகள் உள்ளன. மேலும் இதில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி விபரங்களை நோக்கினால் ஐ.எம்.எப். இன் இலக்குகள் அனைத்தும் மாற்றமடையும். அதனால் அவ்வேலைத்திட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து குறிப்பிட வேண்டும். இப்படி சென்றால் பணம் அச்சிட வேண்டிவரும்.

அதனால் தான் அநுர திஸாநாயக்கவை விவாதத்துக்கு அழைக்கிறேன். ஏற்றுமதி பொருளாதாரமா? இறக்குமதி பொருளாதாரமா? அவரது பொருளாதார கொள்கை என்பதைக் குறிப்பிட வேண்டும். அப்போது ஐ.எம்.எப் உடன் எம்மால் பேச்சுவார்த்தை நடாத்த முடியும். இப்போதே குறிப்பிட்டால் ஐ.எம்.எப். க்கு பிரச்சினைகளைக் குறிப்பிடலாம். அதன் பின்னர் விவாதம் நடாத்த முடியும்.

கேள்வி: வெளிநாட்டு கடனை கடந்த காலத்தில் செலுத்தாததன் பயனாகவே பொருளாதார நெருக்கடியை வெற்றி பெற முடிந்தது என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகின்றனரே?

பதில்: நாம் வெளிநாட்டு கடன்களின் வட்டியை கடந்த ஒவ்வொரு வருடமும் ரூபாவில் செலுத்தியுள்ளோம். ஆனால் ஐ.எம்.எப். இன் ஊடாக வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்த எமக்கு கால அவகாசம் கிடைக்கப்பெற்றுள்ளது. அது சிறிய தொகையாகும். எமது கடன்களின் நிலைபேறுதன்மை இரண்டு காரணிகளில் அமைந்துள்ளது. அவற்றில் ஒன்று செலவுக்கு பணம் இருக்க வேண்டும். மற்றையது தங்களது கடன்களை செலுத்த பணம் இருக்க வேண்டும். நாம் நிலைபேறு தன்மையை நோக்கி செல்வதை ஐ.எம்.எப். ஏற்றுக்கொண்டுள்ளது.

நாம் மீண்டும் வங்குரோத்து அடைய மாட்டோம் என்ற நிலையை நோக்கி பயணிக்கிறோம். இதன் ஊடாக எமக்கு மேலும் வெளிநாட்டு உதவிகள் கிடைக்கப்பெறும். அப்போது வாகன இறக்குமதிக்கும் அனுமதி வழங்க முடியும். நாம் நாட்டுக்குத் தேவையான நிதியை திரட்டியுள்ளோம். அவை நாட்டின் வருமானம் மூலமும் கடன்கள் மூலமும் ஈட்டப்பட்டுள்ளன. எம்மால் கடன்களை செலுத்த முடியும். ஆனால் அன்று இவர்கள் இந்நாடு கிரேக்கம் போன்றாகும் எனக் குறிப்பிட்டு இதனைப் பொறுப்பெடுக்காது பின்வாங்கி ஓடினர்.

கேள்வி: உங்களால் இத்தேர்தலில் வெற்றி பெற முடியுமா?

பதில்: இல்லாவிட்டால் நான் போட்டியிட மாட்டேனே.

கேள்வி: இத்தேர்தலில் ஏனைய அபேட்சகர் எவராவது வெற்றி பெற்று நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள்ளானால் அச்சந்தர்ப்பத்தில் நாட்டை கட்டியெழுப்ப நீங்கள் மீண்டும் முன்வருவீர்களா?

பதில்: அவ்வாறு நிகழ வாய்ப்பில்லை. எவராவது இந்நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சிக்கு உட்படுத்தினால் மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. இதுவே இறுதி சந்தர்ப்பம்.

கேள்வி: வடக்கு, கிழக்கில் அரசியல் பிரச்சினை உள்ளது. அப்பிரச்சினையைத் தீர்க்க நீங்கள் முன்வைக்கும் யோசனைகள்?

பதில்: இந்நாட்டில் பல ஜனாதிபதித் தேர்தல்கள் ஏற்கனவே நடைபெற்றுள்ளன. அவற்றில் முதற்தடவையாக இத்தேர்தலில் தான் இன, மத ரீதியிலான பிரச்சினைகள் இல்லாதுள்ளது.

உண்மையில் வடக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து நாம் பல தடவைகள் கலந்துரையாடியுள்ளோம். அவற்றில் 13 ஆவது திருத்தம் குறித்தும் பேசியுள்ளோம். இப்போது அவற்றை முன்கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

வடக்கு மாத்திரமல்லாமல் ஒன்பது மாகாணங்களும் பாரிய அபிவிருத்திக்கான முக்கிய ஆயுதங்களாகத் திகழ வேண்டும். அபிவிருத்தி நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும். காணிப் பிரச்சினைக்கு நாம் தீர்வுகளை வழங்கி வருகிறோம். அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் ரி.ஆர்.சியை நாங்கள் உருவாக்குவோம். நவாஸ் ஆணைக்குழு செயற்படுகிறது. அவை பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குகிறது. அவற்றைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நாம் தயாராக உள்ளோம். அத்தோடு காணாமல் போயுள்ளவர்களின் பிரச்சினைக்கு அடுத்துவரும் மூன்று வருடங்களுக்குள் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதேபோன்று முஸ்லிம்களுக்கு அவர்கள் மரணமடைந்த பின்னர் பூதவுடல்களை அடக்கம் செய்வதா? அல்லது எரிப்பதா? என்பது முக்கிய பிரச்சினையாக இருந்தது. அது தொடர்பிலும் நாம் சட்ட வரைவொன்றை முன்வைத்துள்ளோம். அதனால் இந்தப் பிரச்சினையும் இனி இல்லை.

கேள்வி: நீங்களும் உங்கள் அணியினரும் எங்களைத் தவிர வேறு யாரும் நாட்டை ஏற்றால் பொருளாதார வேலைத்திட்டங்கள் சிதைவடைந்துவிடும் என்று கூறிவருகிறீர்கள். அப்படியென்றால் நீங்கள் இல்லாவிட்டால் பொருளாதாரம் வீழ்ச்சியடையக்கூடிய வகையிலா திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன?

பதில்: அப்படி இல்லை. நாம் தயாரித்து முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களை எவரும் முன்னெடுக்கலாம். ஆனால் அத்திட்டங்களுக்கு அவர்கள் விருப்பமில்லை. தேசிய மக்கள் சக்தி அத்திட்டங்களுக்கு வெளியில் செல்ல முயற்சிக்கிறது. அப்படியானால் அத்திட்டங்கள் வீழ்ச்சியடையும். எவரும் பயணிக்கக்கூடிய சரியான பாதையை நாம் காட்டியுள்ளோம். அப்பாதையில் பயணிக்க வேண்டும்.

கேள்வி: நீங்கள் அரச நிதியையும் அரச வளங்களையும் தேர்தலுக்காகப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறதே?

பதில்: நான் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுத்ததற்காகவே அவ்வாறு கூறப்படுகிறது. அது ஒரு குற்றச்செயலா? எனது பொக்கற்றில் போட்டுக்கொள்வதற்காக நான் அவ்வாறு செய்யவில்லை. சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு பகுதியினர் எனக்கு வாக்களிக்கவும் மாட்டார்கள். தங்களால் முடியாததை அடுத்தவர்கள் செய்யவும் இவர்கள் விடுவதாக இல்லை.

கேள்வி: இற்றைக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரிய போது, சம்பள உயர்வு வழங்குவதாயின் வற் வரியை அதிகரிக்க வேண்டும் என்று நிதியமைச்சு செயலாளர் குறிப்பிட்டார். அப்படியாயின் இப்போது சம்பள உயர்வு வழங்க நிதி உள்ளதா?

பதில்: சம்பளம் தொடர்பான உதய செனவிரத்னவின் அறிக்கை 2025, 2026 இல் தான் நடைமுறைக்குவரும். இவ்வருடம் சம்பள உயர்வு வழங்க பணம் இல்லை. இருந்திருந்தால் அதிகரித்திருப்பேன். பொருளாதாரத்தை சரியான முறையில் கையாளுவதன் பயனாக அடுத்தாண்டில் சம்பள உயர்வுக்கு பணம் உள்ளது. இவ்வருடம் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு தான் எம்மால் வழங்க முடிந்தது.

கேள்வி: உங்களுக்கு சவால் சஜித்தா? அநுரவா?

பதில்: இருவர்கள் மாத்திரமல்லாமல் நாமல் உள்ளிட்ட எவரும் எனக்கு சவால் இல்லை. நாட்டில் நடைமுறைப்படுத்த முடியாதவை அவர்களது கொள்கைகள். அது தான் பாரிய சவால்.

எமது அயல்நாடான மாலைதீவு இப்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் செல்கிறது. பங்களாதேசத்தில் நிர்வாகமே இல்லாமலால் போயுள்ளது. நாம் அத்தகைய இடத்துக்கு செல்ல வேண்டுமா? அல்லது இதே பாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டுமா? சஜித்தும் அநுரவும் இதற்கு பதிலளிப்பதாக இல்லை. அவர்கள் பழைய அரசியல் முறைமையில் செல்கின்றனர்.

நான் புதிய அரசியல் பாதையில் பயணிக்கிறேன். புதிய முறைமையை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது இலக்கு. அது புரட்சிகரமானது. அவர்களிடம் அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை.

கேள்வி: நீங்கள் அரகல போராட்டத்தின் பங்காளர் என்றும் அந்த போராட்டத்தை ஒழித்துக்கட்டவே உங்களுக்கு வாய்ப்பளித்ததாக நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிடுகிறாரே?

பதில்: நாட்டின் அரசியல் முறைமையையும் சமூக முறைமையையும் மாற்றுவதற்கு நான் எதிர்ப்பில்லை.

அம்முயற்சியை வன்முறையாக மேற்கொள்வதற்கே நான் எதிர்ப்பு. அதனால் தான் பதவிக்கு வந்ததும் போராட்டத்தைக் கட்டுப்படுத்தினேன்.

இந்நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார முறைமைகளை மாற்ற வேண்டுமாயின் ஏற்றுமதி பொருளாதாரத்தைக் கொண்டு வர வேண்டும். அதன் மூலம் மாற்றங்களை நான் மேற்கொள்வேன்.

கேள்வி: அண்மையில் இடம்பெற்ற அரசியல் கூட்டமொன்றில் எதிர்க்கட்சி தலைவர் சஜித்தின் பலவீனத்தின் விளைவாக அநுர குமார திஸாநாயக்க உருவானார். முன்னைய காலங்களில் அவ்வாறு இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டிருந்தீர்களே?

பதில்: பொதுவாக எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் இரண்டு பிரதான அரசியல் முகாம்கள் இருக்கும். ஒரு சில நாடுகளில் மாத்திரம் மூன்று அணிகள் உள்ளன. அந்தவகையில் இலங்கையில் சுதந்திரத்தின் பின்னர் இரண்டு பிரதான அரசியல் முகாம்கள் தான் இருந்து வந்தன. அதாவது ஜனாதிபதி அல்லது பிரதமர் ஒரு முகாமிலும் எதிர்க்கட்சித் தலைவர் மற்றொரு முகாமிலும் இருப்பர். 60 களில் மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமராக இருந்த போது மறைந்த டட்லி சேனநாயக்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அதேபோன்று டல்லி பிரதமராக இருந்த போது ஸ்ரீமாவோ எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். ஸ்ரீமாவோ பிரதமராக இருந்தபோது ஜே.ஆர் ஜயவர்தன எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். இதேநிலை தான் சஜித் எதிர்க்கட்சித் தலைவராகும் வரை தொடர்ந்தது. மூன்றாம் நபர் ஒருவர் உருவாக இடமளிக்கப்படவில்லை. ஆனால் சஜித்தின் பலவீனம்,

திறமையின்மையின் காரணமாகவே அநுர குமார திஸாநாயக்கா உருவாகி சஜித்தை விடவும் முன்னுக்கு சென்றுள்ளார்.

கேள்வி: உங்களது கொள்கைப் பிரகடனத்தில் தேரவாத வர்த்தக பொருளாதார முறைமை என்று பெயரிடப்பட்டுள்ளது. இற்றைவரையும் லிபரல்வாத முறை, திறந்த பொருளாதார முறை குறித்து கூறினீர்கள். அப்படியெனில் தேரவாத பொருளாதார முறை, திறந்த பொருளாதார முறை மற்றும் லிபரல்வாத முறைகளில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

பதில்: தேரவாத நாடுகள் சந்தைப் பொருளாதாரத்தில் ஈடுபட்டுள்ளன. இலங்கையின் அநுராதபுரத்தின் ரஜரட்ட யுகத்தில் தான் அப்பொருளாதார முறைமை அறிமுகமானது. அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவையில் பாரிய சந்தைப் பொருளாதார முறைமை காணப்பட்டது. மேற்கு, கிழக்கு பிரதேசங்களின் வர்த்தக பரிமாற்ற நடவடிக்கைகளுக்கான இடங்களாக அவை விளங்கின.

அத்தோடு உணவு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. தேரவாத பௌத்தத்தின் செல்வாக்கு காரணமாகவே அந்நிலை ஏற்பட்டது. மியன்மாரிலும் இந்நிலை காணப்பட்டது. சந்தைப் பொருளாதாரத்தை ஒவ்வொரு விதமாக மேற்கொள்ளலாம். அந்தப் பின்புலத்தில் தான் தாய்லாந்துடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பௌத்த மதத்திற்கும் வர்த்தகத்திற்கும் இடையில் தொடர்பு உள்ளது. பௌத்த மதம் தொடர்பில் எனது கொள்கைப் பிரகடனத்தில் மாத்திரமே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கேள்வி: இத்தேர்தலில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் வாக்குகள் தான் தீர்மானகர வாக்குகளாக அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறதே?

பதில்: அந்த மக்கள் எனக்கு வாக்களிக்கத் தீர்மானித்து தயாராகியுள்ளனர். அதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.

கேள்வி: மக்கள் தேர்தலில் புதிதாகப் பரீட்சித்து பார்க்கவும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தவும் எதிர்பார்ப்பதில் உள்ள தவறுகள் என்ன?

பதில்: நாம் எப்போதும் இந்நாட்டில் பரீட்சித்து பார்த்துள்ளோமே. அதன் விளைவாகவே ஒரு போதும் முன்னேற்றமடையாதுள்ளோம். இருப்பதை விடவும் அடுத்தது நல்லதெனக் கருதி செல்கிறோம்.

அந்த அடிப்படையில் தான் இப்போது பரீட்சித்து பார்க்கவென தேசிய மக்கள் சக்திக்கு வழங்க எதிர்பார்க்கின்றனர். அப்படியென்றால் ஒரு டொலரின் விலை 500 ரூபாவுக்கு செல்வது பரவாயில்லையா? மீண்டும் அத்தகைய இடத்துக்கு செல்ல வேண்டுமா? ஏற்கனவே தெளிவான அனுபவம் உள்ளது.

மக்களிடம் வருமானமும் சொத்துக்களும் குறைவடைந்துள்ளன. அவற்றை அதிகரிக்க வேண்டும். அதனால் தான் உறுமய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தினேன். அதன் ஊடாக 20 இலட்சம் பேருக்கு இற்றை வரையும் இல்லாத காணிக்கான உரித்து கிடைக்கப்பெறும். சாதாரண மக்களின் மூலதனத்துடன் இந்த 20 இலட்சம் உரித்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

கேள்வி: பெருந்தோட்ட மக்களின் சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கு நீங்கள் முன்வைத்துள்ள தீர்வுகள்?

பதில்: பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளக் கொடுப்பனவுடன் தான் ரூ. 1700.00 ஆக்கப்பட்டுள்ளது. கொடுப்பனவுகளுடன் தான் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தும் முன்னெடுப்போம். லயன் அறைகளில் உள்ள முதியவர்களுக்கு அஸ்வெசும வழங்கப்படும். லயன் அறை முறையை நீக்கி கிராம முறைமை அறிமுகப்படுத்தப்படும். அதற்கு காணி வழங்கப்படும். பெருந்தோட்டப் பொருளாதாரத்திற்கு பதிலாக விவசாய பொருளாதாரம் அங்கு ஆரம்பிக்கப்படும்.

கேள்வி: 2028 இல் கடனை செலுத்தத் தொடங்கும் போது நாட்டில் மீண்டும் நெருக்கடி ஏற்படுமென பெரும்பாலான புத்திஜீவிகள் கூறுகின்றனரே?

பதில்: 2022 இல் எமது மொத்த தேசிய உற்பத்தி 76 பில்லியன் டொலர்களாகும். அது 2023 இல் 84 டொலர்காக உயர்ந்துள்ளது. தற்போது அதைவிடவும் அதிகரித்துள்ளது. மொத்த தேசிய உற்பத்தி அதிகரிக்கும் போது கடனை செலுத்த வேண்டியது தான். அதேநேரம் நாம் எப்போதும் கையேந்துபவர்களாக இருக்க முடியாது. எம்மவர்கள் அதிக திறமை கொண்டவர்கள். வேலையில் இறங்கினால் திறமையை வெளிப்படுத்துவார்கள். இதனை வெளிநாட்டவர்கள் கூட ஒப்புக் கொண்டுள்ளனர்.

கேள்வி: ஐ.எம்.எப். உடன் பணியாற்றும் போது ஏனையவர்களை விடவும் நீங்கள் முக்கியத்துவம் பெறுவது தொடர்பில் குறிப்பிடுவதாயின்?

பதில்: தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுவது நான் ஐ.எம்.எப். க்கு சமர்ப்பித்து அங்கீகரிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களாகும். அது தொடர்பில் ஐ.எம்.எப். உடன் உடன்படிக்கை கைச்சார்த்திடப்பட்டிருக்கிறது. ஆனால் ஏனையவர்கள் தற்போது நடைமுறையில் உள்ள வேலைத்திட்டங்களை மாற்றுவதாகக் குறிப்பிடுகின்றனர். உடன்படிக்கையில் இருந்து வெளியேறினால் நிதியுதவி வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுவிடும். அடுத்த காலாண்டுக்கு நாம் 300 மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுவது தொடர்பில் திருப்தியடைந்தால் தான் அந்நிதி கிடைக்கப்பெறும். தற்போதைய வேலைத்திட்டங்களை மாற்றுவதாகக் குறிப்பிட்டால் இந்நிதியை வழங்க முடியாது என்பர். அதனால் புதிதாகப் பேச்சுவார்த்தை நடாத்தி இணக்கப்பாட்டை எட்ட வேண்டும். அதற்காக ஆறு முதல் ஒரு வருடம் வரை காலம் செல்லலாம். அப்படியென்றால் இக்காலப்பகுதிக்கு நாட்டுக்கு தேவையான பணத்தை எங்கிருந்து பெறுவது என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

கேள்வி: ஏனைய அபேட்சகர்கள் வரிகளைக் குறைப்பதாகக் குறிப்பிடுகின்றனர். வரிகள் தொடர்பில் உங்களது வேலைத்திட்டங்கள்?

பதில்: வரி வருமானத்தில் வீழ்ச்சி ஏற்படுமாயின் பிரச்சினைகள் ஏற்படும். வரிகளை ஒரு பகுதியில் குறைத்தால் மறுபகுதியில் அதிகரிக்க வேண்டிவரும். வற் வரியைக் குறைத்தால் பல வரிகளை அதிகரிக்க வேண்டும். வருமானத்தை அதிகரிக்காது வரியை குறைக்க முடியுமாயின் ஐ.எம்.எப். உடன் பேசலாம்.

உதாரணமாக அடுத்தாண்டு நாம் 5117 பில்லியன் ரூபாவை வருமானமாகத் திரட்ட எதிர்பார்த்துள்ளோம். எமது வரவு செலவுத்திட்டத்தில் 1700 பில்லியன் ரூபா வித்தியாசமுள்ளது. அதனால் சந்தையில் எங்களால் கடன் பெறலாம். மாலிமாவ வரியை குறைப்பதன் விளைவாக 4900 பில்லியன் ரூபா வித்தியாசம் ஏற்படும். வரிகளைக் குறைக்கும் போது வருமானத்திற்கும் செலவுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கும். ஆனால் அடுத்த வருடத்திற்கு வேறு வழியில்லை. வரிகளைக் குறைத்து எதுவும் செய்ய முடியாது. மொத்த தேசிய உற்பத்தியை அதிகரிப்பதே இதற்கு ஒரே வழியாகும். அதனால் எங்களது ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டும்.

கேள்வி: காணாமல் போனவர்கள் அலுவலக சட்டத்தின் ஊடாக அரசாங்கம் இராணுவத்தை காட்டிக் கொடுப்பதாக சிலர் குறிப்பிடுகின்றனரே?

பதில்: நாம் உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைத்துள்ளோம். அங்கு காட்டிக்கொடுக்க முடியாது. சாட்சியங்கள் இருந்தால் வழக்கு தாக்கல் செய்ய முடியும். நாம் காரணங்களைத் தேடுவதற்காக பல ஆணைக்குழுக்களை அமைத்துள்ளோம். 2009இல் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அன்றைய ஐ.நா. செயலாளர் நாயகம் பங்கிமூனுடன் இணக்கம் கண்ட உடன்படிக்கையையே நான் நடைமுறைப்படுத்தினேன்.

கேள்வி: இலங்கையில் அண்மையில் ஏற்பட்டது போன்ற அரகலய போராட்டம் பங்களாதேசத்திலும் ஏற்பட்டு இன்னும் தொடர்கிறது. உலக அங்கீகாரம் பெற்ற பொருளாதார நிபுணர் பங்களாதேசத்தின் ஆட்சியைப் பொறுப்பெடுத்துள்ளார். என்றாலும் இவ்விடயத்தில் இலங்கைக்கும் பங்களாதேசத்துக்கும் இடையில் சிற்சில வேறுபாடுகள் காணப்படுகின்றனவே?

பதில்: நான் பிரதமர் பதவியை ஏற்று பதில் ஜனாதிபதியாக வேலைத்திட்டங்களை முன்னெடுத்தேன். பாராளுமன்றம் என்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்வற்கு முன்னரான வாரத்திலேயே நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்தினேன்.

ஆனால் பங்களாதேசத்தில் பிரதமர் வெளியேறிய பின்னர் தேர்தல் நடாத்த வேண்டும் என்று கோரினர். அதனால் பாராளுமன்றத்தைக் கலைத்தனர். இன்று தேர்தலை நடாத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பாரிய நெருக்கடிக்குள் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பங்களாதேசத்தைப் போன்று இங்கும் சஜித் பிரேமதாச போன்றோர் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடாத்தும்படி கோரினர். அப்படி நடாத்தி இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை இப்போது புரிந்து கொள்ளுங்கள்.

முன்னாள் பிரதமர் ஹசீனா வெளியேறியதும் வேறு எவராவது ஆட்சியைப் பொறுப்பேற்று அதன் பின்னர் மாற்றங்களை செய்திருக்கலாம். அதனை அவர்கள் செய்யவில்லை. அதன் விளைவாக படுகொலைகள், தீவைத்தல்கள் இடம்பெறுகின்றன. இந்நிலை நீடிக்குமாயின் முதலீட்டாளர்களும் நாட்டைவிட்டு வெளியேறும் நிலை ஏற்படும். இவ்வாறான நிலை ஏற்படுவதையே அன்று நான் தவிர்த்தேன். அதற்காக என்னை தூற்றுகிறார்கள் போலும். ஆனால் நான் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தேன்.

கேள்வி: தமிழரசு கட்சியின் தீர்மானமும் வடக்கின் பொதுவேட்பாளரும் உங்களுக்கு சவால் எனக் கருதுகிறீர்களா?

பதில்: இல்லை. அவர் எனக்கு சவால் இல்லை. அத்தோடு வேறு எவருக்கும் அவர் சவால் இல்லை என்றே நான் கருதுகிறேன்.

கேள்வி: எதிர்க்கட்சியில் இருந்து உங்களது அணிக்கு சேர்க்கப்படுகின்றவர்களுக்கு மதுபானக்கடை அனுமதிப்பத்திரம் (லைசன்ஸ்) வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறதே?

பதில்: நான் எவருக்கும் அத்தகைய லைசன்ஸ் வழங்கவில்லை. எமது அமைச்சு மதுக்கடைகளுக்கான அனுமதிப்பத்திரங்களை 10,000-50,000 மில்லியன் ரூபாக்களுக்கு விற்பனை செய்கின்றது.

இதனை அடுத்தவருடம் மேலும் அதிகரிக்க உள்ளேன். ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வரும் பாராளுமன்ற உறுப்பினர்களை மேலும் சேர்த்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. நாம் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைப்போம்.

கேள்வி: தேசிய மக்கள் சக்தியினர் குறிப்பிடுவது போன்று திருடர்களைப் பிடிப்பது ஒன்று, திருடப்பட்டவற்றை மீண்டும் அறவிட்டுக் கொள்வது மற்றொன்று. இவற்றை மேற்கொண்டு வெளிநாடுகளில் தொழில்புரிபவர்கள் மூலம் கிடைக்கப்பெறும் அந்நிய செலாவணியையும் பயன்படுத்தி வரவு செலவுத்திட்ட துண்டுவிழும் தொகையை நீக்க முடியாதா?

பதில்: அவர்கள் எந்த உலகில் இருக்கிறார்கள். அரச நிதியை சட்டத்துக்கும் ஒழுங்குமுறைக்கும் அப்பால் பெற்றுள்ளவர்களை அடையாளம் கண்டு வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு போட்டால் மாத்திரம் போதாது. புதிய சட்டத்தின் கீழ் செயற்பட வேண்டும்.

இவ்வாறான நிதியை மீளப்பெறுவதற்கு எந்தவொரு நாட்டிலும் குறைந்தது எட்டு, பத்து வருடங்களாவது செல்லும். அது வரைக்கும் காத்திருக்க முடியுமா? அடுத்தது எவ்வளவு நிதி என்பதைப் பார்க்க வேண்டும். நிதியின் அளவு மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும்.

மேலும் வெளிநாடுகளில் 20 இலட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் ஊடாக அப்படி எவ்வளவு தான் கிடைக்கப்பெறப் போகிறது.

மாதத்திற்கு 100 டொலர்கள் கூட அனுப்ப முடியாதவர்கள் தான் அதிகளவில் உள்ளனர். அப்படியானவர்கள் 10 டொலர்களையே அவர்கள் அனுப்புவர்.

திருடர்களைப் பிடிக்கவென ஆனந்த விஜயபாலவை நியமித்தார்கள். கோவைகள் 400 இருந்தும் 15 வழக்குகள் தான் தாக்கல் செய்யப்பட்டன. எத்தனை பேர் சிறைத்தண்டனை பெற்றார்கள் என்பதை நானறியேன். அவ்வாறான பணிக்கு சட்டத்தரணியற்ற ஒருவரை எந்தவொரு நாடும் நியமிக்குமா? இல்லவே இல்லை.

கேள்வி: புதிய அரசியமைப்பு குறித்து கலந்துரையாடப்படுவது தொடர்பில் குறிப்பிடுவதாயின்?

பதில்: புதிய பாராளுமன்றத்தில் ஒரு வருடத்திற்குள் அரசிலமைப்பு நிறைவேற்றப்படும் என்று நான் குறிப்பிட்டுளேன். தற்போதைய அரசியலமைப்பில் குறைபாடுகள் இருந்தாலும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லலாம். இது எமக்கு முக்கிய பிரச்சினை அல்ல.

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே முக்கிய விடயமாகும். மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன ஒய்வு பெற்ற பின்னர் இந்த ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாகக்கூறி ஜனாதிபதியான எவரும் இம்முறைமையை நீக்கவில்லை.

கேள்வி: முன்னர் நீங்களும் சஜித்தும் ஒரே அணியில் இருந்தீர்கள். தற்போது சஜித்துடன் இணைய முடியாதது ஏன்?

பதில்: அன்று முதல் அவருக்கு அழைப்பு விடுத்தேன். வரவில்லை. தற்போது அவருக்கு ஜி.எல். பீரிஸ், நாலக்க கொடஹேவா போன்றோர் உள்ளனர். அனைத்தும் மாற்றமடைந்துள்ளது. இது புதிய அணி.

கேள்வி: இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்ட போது கைப்பட்டி தருவதாகவும் கார்களில் பயணிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் குறிப்பிட்ட நீங்கள், இத்தேர்தலில் தோல்விற்றால் சமையல் எரிவாயு கிடைக்காது போகும் என்கிறீர்களே?

பதில்: அன்று நான் கூறியவற்றை செய்யாததன் விளைவாகவே பொருளாதாரம் இந்நிலையை அடைந்தது. நான் கூறியவற்றை மேற்கொண்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிராது. அன்று முதல் நாம் ஏற்றுமதி பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவே எதிர்பார்க்கிறோம்.

கேள்வி: உங்களுக்கும் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் ஒப்பந்தம் (டீல்) இருப்பதாக சஜித் கூறுகிறாரே?

பதில்: அவ்வாறு கூறுகின்ற ஒருவரை ஜனாதிபதியாக்க முடியுமா? இத்தேர்தலைக் கேலிக்குரியதாகக் கருதுவதாயின் ஏன் தேர்தலை நடாத்த வேண்டும்.

கேள்வி: உங்களுக்கு சஜித்துடன் தனிப்பட்ட கோபம் உள்ளதா?

பதில்: நான் தான் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவை நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இருந்து பாதுகாத்தேன். அவர் படுகொலை செய்யப்பட்ட சமயம் கூட அந்த இடத்தில் இருந்தேன். நான் எப்போதும் அவரைப் பாதுகாத்தேன். ஆனால் மகன் (சஜித்) தந்தையிடம் கற்றுக்கொள்ளவில்லை.

பேட்டி கண்டவர்: மர்லின் மரிக்கார்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division