Home » தமிழரசுக் கட்சிக்குள் தோன்றிய மாறுபட்ட நிலைப்பாடுகள்!

தமிழரசுக் கட்சிக்குள் தோன்றிய மாறுபட்ட நிலைப்பாடுகள்!

by Damith Pushpika
September 8, 2024 6:00 am 0 comment

ஜனாதிபதித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள தற்போதைய நிலையில், பிரதான வேட்பாளர்களுக்கான ஆதரளவுத் தளம் அதாவது அரசியல் கட்சிகளின் ஆதரவுத் தளமும் பரபரப்பு அடைந்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியினர், பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்து வந்து புதிய கூட்டணியை உருவாக்கியவர்கள், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பிரிந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.

மற்றுமொரு வேட்பாளரான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கடந்த அரசாங்கங்களில் பதவியில் இருந்த எவரையும் தம்முடன் இணைத்துக் கொள்ளவில்லை. ஜே.வி.பி மற்றும் தங்களுடன் ஏற்கனவே இணைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுடன் தனது பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றார்.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்களே ஆதரவாக இருக்கின்றனர். தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அவருக்கு ஆதரவானவர்களுடன் தனது பிரசாரங்களை அவர் முன்னெடுத்து வருகின்றார்.

அதேநேரம், மற்றுமொரு பிரதான வேட்பாளரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அவருடைய கட்சி உறுப்பினர்கள், பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்துவந்த குழுவினர், ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், சம்பிக்க ரணவக்க போன்ற கூட்டணிக் கட்சிகள் ஆதரவு வழங்கி வருகின்றன.

இந்த வரிசையில் மற்றுமொரு பிரதான கட்சியின் ஆதரவும் சஜித்துக்குக் கிடைத்துள்ளது. வடக்கு, கிழக்கில் உள்ள பெரும்பாலான தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகப் பார்க்கப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தனது ஆதரவை சஜித்துக்கு வழங்கத் தீர்மானித்துள்ளது.

அண்மையில் கூடியிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்தார். இருந்தபோதும், இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டமை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், தனக்கு அறிவிக்கப்படவில்லையென்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறியிருப்பது அக்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவேட்பாளரும் தமிழ்க் கட்சிகளும்:

ஏழு தமிழ் அரசியல் கட்சிகளும், ஒரு சில சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து பொதுத் தமிழ் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனைக் களமிறக்கியுள்ள பின்னணியில், இலங்கைத் தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க எடுத்த தீர்மானம் பற்றி பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

பொதுவேட்பாளர் விடயத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்பம் தொட்டு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கவில்லை. இருந்தாலும், தமிழரசுக் கட்சியின் ஒரு சில உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் பொதுவேட்பாளரைக் களமிறக்குவதற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்தனர். குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், “பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவதற்கு தனிப்பட்ட ரீதியில் ஆதரவாக உள்ளேன்” எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் வெளிநாடு செல்வதன் காரணமாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இறுதியாக நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை. இருந்தபோதும், வெளிநாடு செல்ல முன்னர் கட்சியின் தலைவருக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் தனது நிலைப்பாட்டை அறிவித்திருந்தார். தென்னிலங்கை வேட்பாளருக்கு ஆதரவா அல்லது பொதுவேட்பாளருக்கு ஆதரவா என்ற தெரிவை எடுக்கும் நிலைமை ஏற்பட்டால் பொதுவேட்பாளருக்கே தனது ஆதரவு என்ற தொனியில் அவர் அக்கடிதத்தை எழுதியிருந்தார்.

அதேநேரம், சுகவீனம் காரணமாக குறித்த மத்தியகுழுக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கலந்து கொள்ளவில்லை.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் தீர்மானம் தொடர்பில் தனக்கு அறிவிக்கப்படவில்லையென்றும், “என்ன அடிப்படையில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்தார்கள் என்பது ஆராயப்பட வேண்டும்” என்றும் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.

இரகசிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஏற்கனவே, தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டு பல தமிழ் அரசியல் கட்சிகள் அவருக்கு ஆதரவாகப் பிரசாரங்களை மேற்கொண்டுள்ள நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சி மாத்திரம் தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்குத் தனது ஆதரவை அறிவித்திருப்பது தமிழ்த் தரப்புக்கள் மத்தியில் ஒற்றுமை இன்மையை வெளிக்காட்டும் ஒன்றாகவும் அரசியல் அவதானிகள் நோக்குகின்றனர்.

வடக்கு, கிழக்கு மக்களின் நிலைப்பாடு:

கடந்தகாலத் தேர்தல்களில் தென்னிலங்கை வேட்பாளர்கள் பலரை நம்பி ஏமாந்த நிலையிலேயே தமிழர்களின் அபிலாஷைகளை சர்வதேசத்துக்கு எடுத்துக் கூறுவதற்காக பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஏழு அரசியல் கட்சிகளும், ஒருசில சிவில் அமைப்புக்களும் இணைந்து எடுத்திருந்தன.

இந்த விடயத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்பம் முதலே இரட்டை நிலைப்பாட்டில் இருந்து வந்தது. அதேநேரம், கஜேந்திரகுமார் தலைமையிலான அணியினர் இதனை முன்கூட்டியே எதிர்த்திருந்ததுடன், ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர். இந்த நிலையில் தமிழரசுக் கட்சி சஜித்தை ஆதரிக்க எடுத்திருக்கும் முடிவு எவ்வாறானது என்பதே தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் அது உள்ளடங்கலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன கடந்த காலத் தேர்தல்களில் குறிப்பாக ஜனாதிபதித் தேர்தல்களில் வேட்பாளர்களை ஆதரிப்பது தொடர்பில் எடுத்த தீர்மானங்களைப் பற்றி எடுத்துப் பார்த்தால், கொள்கை ரீதியாக எடுத்த முடிவுகள் அல்ல என்பது தெளிவாகும்.

வடக்கு, கிழக்கில் உள்ள பொதுமக்கள் அதாவது தமிழ் வாக்காளர்களின் போக்கை நன்று ஆராய்ந்து பார்த்து அந்தப் போக்கிற்கு ஒத்துப் போகும் வகையிலேயே அவர்கள் தீர்மானங்களை எடுத்துள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை ஆதரித்த முடிவும், அதற்கு முன்னர் மைத்திரியை ஆதரிக்க எடுத்த முடிவும், அதற்கு முன்னைய ஜனாதிபதித் தேர்தலில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஆதரிக்க எடுத்த முடிவும் அவ்வாறானதேயாகும்.

வேட்பாளர்களுடன் கொள்கை ரீதியில் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாடுகளுக்கு அமைய அவர்கள் தீர்மானங்கள் எடுத்ததாகத் தெரியவில்லை.

இலங்கைத் தமிழரசுக் கட்சி இவ்வாறான தீர்மானத்தை எடுத்திருந்தாலும், வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களைப் பொறுத்தவரை இம்முறை யாரை ஆதரிப்பார்கள் என்பது குறித்து உறுதிபடக் கூறமுடியாவிட்டாலும், பொருளாதார ரீதியில் நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கணிசமான ஆதரவு இருப்பதாகவே தெரிகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் தமிழ் மக்களுக்கு எப்பொழுதும் நல்லதொரு அபிப்பிராயமே இருந்து வந்துள்ளது. இனப்பிரச்சினைத் தீர்வு மற்றும் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விடயங்களில் ஓரளவுக்கு நடுநிலைமையாகச் செயற்படக் கூடியவராக அவர் பார்க்கப்படுகின்றார்.

அவர் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட தலைவராகவும் காணப்படுகின்றார். அது மாத்திரமன்றி, ‘தமிழ் மக்களுக்கும் பிரச்சினை உள்ளது, அது தீர்க்கப்பட வேண்டும்’ என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்ட ஒருவர் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நிலையில், அவருக்கான தமிழ் மக்களின் ஆதரவு இருப்பதாகவே களநிலைமைகள் எடுத்துக் காட்டுகின்றன.

தெளிவற்ற தேர்தல் விஞ்ஞாபனம்:

இந்த நிலையில் தமிழ்க் கட்சிகள் சிலவற்றினாலும், சிவில் அமைப்புக்கள் சிலவற்றினாலும் களமிறக்கப்பட்டுள்ள தமிழ் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. தமிழ் மக்கள் அல்லது தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, தமிழ் மக்களுக்கெதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை என முழுமையாக முன்வைத்தே இந்த விஞ்ஞாபனம் வெளிவந்துள்ளது. அநீதி இழைக்கப்பட்ட சம்பவங்களின் பட்டியல்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ள போதும், தெளிவான விளக்கங்களோ அதற்கான கொள்கை விளக்கங்களோ எதுவும் தெளிவாக வழங்கப்படவில்லை.

பொதுவாக்கெடுப்பு என்ற தீர்மானம் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்படவில்லை. தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டால் எவ்வாறான விடயங்களை முன்னெடுப்பார்கள் என்ற தெளிவான விளக்கங்களையும் அதில் காணக் கிடைக்கவில்லை.

ஒட்டுமொத்த தேர்தல் விஞ்ஞாபனத்தை நோக்கும்போது பிறிதொரு வேட்பாளருடன் செய்துகொள்ளக் கூடிய ஒப்பந்தத்திற்கான நிபந்தனைகள் போன்ற விடயங்களே இதில் காணக்கிடைக்கின்றன.

உதாரணமாக எடுத்துக்கொள்வதாயின், ஒரு நிரந்தரத் தீர்வைக் கண்டடைவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கத்தோடும், தமிழர் தேசத்தின் இருப்பைப் பாதுகாக்கும் நோக்கத்தோடும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கென்று பன்னாட்டு சமூகத்தின் மேற்பார்வையின்கீழ் விசேட இடைக்காலப் பாதுகாப்பு ஏற்பாடு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற விடயம் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னெடுப்பதற்கு தான் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் பற்றியோ அல்லது யாரிடம் இவ்வாறானதொரு விடயத்தை உள்ளடக்கப் போகின்றேன் என்பது பற்றியோ எவ்வித தெளிவான வழிகாட்டலும் உள்ளடக்கப்படவில்லையென்பதைக் காணக் கூடியதாகவுள்ளது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division