ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த திருக்கோவில் பிரதேசத்திற்கு முக்கிய இடமுண்டு. மட்டக்களப்பு மாவட்டத்தின் (1960க்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கைள்ளேயே அம்பாறை மாவட்டமும் இருந்தது ) முதலாவது நாவலாசிரியர் என்று பண்டிதர் வீ.சி. கந்தையாவால் அடையாளப்டுத்தப்பட்ட 1958, 1959 களிலேயே இந்திராபுரி இரகசியம், மஞ்சட் பூதம் அல்லது இழந்த செல்வம் ஆகிய நாவல்களைத் தந்த முன்னோடி எழுத்தாளர் உவில்லியம் பிள்ளை பிறந்த பிரதேசம் அது.
அப் பிரதேசத்தில் இருந்து, ஈழத்துப் புனைகதைத் துறைக்கு ஒரு புதிய வரவாக மலர்ந்திருக்கிறது ‘நல்லது நடக்கட்டும்’ என்ற சிறுகதைத் தொகுதி.
மட்டக்களப்பு மகுடம் பதிப்பக வெளியீடாக 90 பக்கங்களில் (பதிப்புரை, என்னுரை, முன்னுரை, அணிந்துரை என்பவை தவிர்த்து) வெளிவந்துள்ள நூலின் ஆசிரியர் ஈழத்து இலக்கியப் பரப்பிலும்- புலம்பெயர் நாடுகளிலும் நன்கு அறியப்பட்டிருக்கும் பொன்விழாக் கண்ட படைப்பாளி கோவிலூர் செல்வராஜன்.
நாவல், சிறுவர் தொடர்கதை, மெல்லிசைப் பாடல், கவிதை, கட்டுரைகள் வரிசையில் பத்து நூல்களையும் ‘விடியாத இரவுகள்’, ‘ஊருக்குத் திரும்பணும்’,’கொத்து ரொட்டி’என்ற பெயர்களில் மூன்று சிறுகதை நூல்களையும் ஏற்கனவே இலக்கிய உலகுக்கு வழங்கியிருக்கின்ற அவரின் 14ஆவது நூல் இது. சிறுகதைத் தொகுதி வரிசையில் இது அவரின் 4ஆவது நூல்.
உலகத்தையே ஒரு குலுக்குக் குலுக்கிய ‘கொரொனா’ வால் ஏற்பட்ட மனரீதியிலான தாக்கம், சமூக, பொருளாரதர ரீதியிலான பாதிப்பு என்பவற்றைப் படம் பிடித்துக் காட்டுகின்ற15 சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கொரோனா கால மக்கள் வாழ்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு முழுமையான இலக்கியப் பதிவாக இந்நூல் அமைந்திருக்கின்றது.
ஆழிப்பேரலை அனர்த்தத்தோடு குடிபெயர்ந்து வாழும் திருக்கோவில் பிரதேசத்தின் மண்டானைக் கிராமத்து மக்களின் வாழ்க்கை பற்றிக் கூறுகிறது ‘நீங்க நல்லா இருக்கணும்’ என்ற முதற்கதை. கணவனை, தாய், தந்தையரை இழந்து, விதவைகளாகவும் ஆதரவற்றவர்களாகவும் நாட்கூலிகளாக வாழும் அக்கிராம மக்களை கொரோனாவும் அதனால் ஏற்பட்ட ஊரடங்கும் எப்படித் தூக்கிப்போட்டு வதைத்தது என்பதைக் கூறுகின்ற கதை அது.
‘என்ன பாக்கியம் படுத்து தூங்கிறாயா?’ கேட்டாள் பார்வதி.
‘இல்லை அக்கா பிள்ளைகள் இரண்டும் பசி, பசி என்று அனுங்குதுகள். அதுதான் என்ன செய்யலாம் என்று யோசிச்சுக்கிட்டு இருந்தன். மரவள்ளி மரம் ஒன்றை புடுங்கி கிழங்காவது அவிச்சுக் கொடுப்போமா என்று இருந்தன் சம்பல் போட தேங்காயும் இல்லை’.
‘ பாக்கியம் கவலைப்படாத இன்று மண்டானை பள்ளிக்கூடத்துக்குள்ள திருக்கோவிலில் இருந்து பெடியன்மார் மூன்று ஆட்டோவில் சாமான்கள் கொண்டு வந்து இறக்கி இருக்காங்க. இங்கே கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கப் போறாங்களாம்’
பார்வதியும் பாக்கியமும் பள்ளிக் கூடத்துக்குப் போகிறார்கள்.
“கொரோனா வைரஸின் தொற்றைத் தடுக்க அரசாங்கம் மக்களை வீட்டில் இருக்கச் சொல்லி ஊரடங்கு சட்டம் போட்டதால உணவு கிடைப்பது கஷ்டம் ஆகிவிட்டது. இதை அறிந்து வெளிநாட்டில் உள்ள எம்மவரிடம் உதவி கோரியிருந்தோம். அவர்கள் கஷ்டத்தில் உள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுகளை கொடுக்கச் சொல்லி, பண உதவி செய்துள்ளார்கள். அதன்படி இங்குள்ளவர்களில் தினக்கூலி, மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் விதவை தாய்மார்கள், என்று நாங்கள் தெரிவு செய்த 100 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக இன்று உணவு பொதிகளை வழங்குகிறோம். வரிசையில் அமைதியாக வந்து பெற்றுச் செல்லவும்” என்று விதானையார் கூறி முடிக்கிறார்.
அந்த உணவுப்பொதிகளைப் பெற்றுக் கொண்டு அவர்களை ‘நல்லா இருக்கணும்’ என்று அந்தக் கிராமத்து மக்கள் மனதார வாழ்த்திக் கொண்டு சென்றதாக முதற்கதையில் சொல்கிறார் கதைஞர்.
முதலாவது கதை பிறந்த மண்ணின் கொரோனா கதை. இரண்டாவது கதை புலம்பெயர்ந்த- இலண்டன் மாநகரின் கொரோனா கதை.
“இலண்டன் மாநகரில் கொரோனா வைரஸின் தொற்று தீவிரமடைந்ததால் இறந்தவர்கள் தொகை இருபதாயிரத்தைக் கடந்து சென்றது. அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வழியில் அனுமதி உண்டு. மற்றப்படி வீட்டில் இருக்க சொல்வதால் சுந்தரேசன் வீட்டிலேயே முடக்கப்பட்டு இருந்தார். இது அவருக்கு மிக கஷ்டமாக இருந்தது. பெற்ற மகள் 4 கிலோ மீட்டர் தூரத்தில் தான் இருக்கிறார். அவளைக் கூட கண்டு பார்க்க முடியாத அவலத்தை கொரோனா அவருக்கு கொடுத்திருக்கிறது. இதைவிட, இன்னும் கொடுமை பேரப்பிள்ளைகளை பார்க்க முடியாமல் போனது. சாதாரணமாக மனைவியை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் பேரப்பிள்ளைகள் இருவரையும் பார்க்க அவர் செல்வது வழக்கம். மகள் சொல்லிப் போட்டாள், நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏற்கனவே சத்திரசிகிச்சை செய்தவர்கள் மற்றும் பலவீனமானவர்கள் வெளியில் வராமல், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று தேசிய சுகாதார சேவையினர் சொல்லியுள்ளார்கள். அதனால் நீங்கள் வரவேண்டாம் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டாள்.” கதாசிரியரின் சொந்த வாழ்க்கை அனுபவமாக அமைந்துள்ள அக்கதையில்,
இலண்டனில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தவமணி கொரோனா காலத்தில் (கொரோனா நோயால் அல்ல) இறந்து போவதையும் சுவிஸில் வாழும், அம்மா, அக்காவோ, இலங்கையில் இருந்து உறவுகளோ, இலண்டனில் வாழும் நண்பர்களோ அங்குசென்று பார்க்க முடியாமலிருப்பதையும் எடுத்துச் சொல்லிக் கலங்குவார்.
“ஓம் நீர் சொல்வது சரிதான். இறுதிக்கிரியை வேலை செய்ய இரண்டு மணி நேரம் கொடுத்திருக்கிறார்கள். ஒரே நேரத்தில் ஐந்து பேர் மட்டும் இரண்டு மீற்றர் இடைவெளியில் சென்று அப்படியே வெளிவர வேண்டுமாம்.
முகக் கவசம், கையுறை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டுமாம் என்று தவத்தின் மகன் சொன்னார்”
என்று வரும் உரையாடல்களின் மூலம் கொரோனா கால இலண்டன் நகர வாழ்க்கையைப் பதிவு செய்வார் கோவிலூர் செல்வராஜன் .
இவ்வாறு முழுமையான கொரோனாகால வாழ்வியலை வித்தியாசமான நிகழ்வுகளினூடாக ஒவ்வொரு கதையிலும் கோவிலூர் செல்வராஜன் எடுத்துக் காட்டுவதை, சிறுகதைகளை வாசிப்போர் உணர்ந்து கொள்வர். நூலுக்கு முன்னுரை, அணிந்துரை, பதிப்புரை என்பவற்றை முறையே பேராசிரியர் சி.மௌனகுரு, எழுத்தாளர் எஸ். தில்லை நடராசா, மகுடம் ஆசிரியர் வி.மைக்கல் கொலின் ஆகியோர் வழங்கியுள்ளனர்.
“கோவிலூர் செல்வராஜன் இலங்கையில் பரவலாக அறியப்பட்ட ஒருவர். இன்று லண்டனில் வதியும் அவர் உலக நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு அறிமுகமானவர்.
இசை அவரது ஒரு முகமானால் அவரது இன்னொரு முகம் எழுத்து ஆகும். இன்று அவர் தனது சிறுகதைகளோடு நம் முன் நிற்கிறார். நெருக்கடி காலத்தின் மனித உணர்வுகளை இக்கதைகள் பேசுகின்றன.
இவ்வகையில் கொரோனாவுக்கு முகம் கொடுத்து வாழுகின்ற, தப்பிக்க முயலுகின்ற, மனிதரையும், மனித உறவுகளையும், உணர்வுகளையும் வாழ்வின் ஓர்மத்தையும், இக்கதைகளில் நாம் காணுகிறோம் என்று பேராசிரியர் சி.மௌனகுரு குறிப்பிட்டிருப்பதையும், “சாதாரண பொழுதுபோக்குக்காக அன்றி அன்றாட வாழ்வுக்கு அவசியமான உண்மைச் சம்பவங்களை கற்பனை கலந்து சில சில எதிர்பார்ப்புகளையும் எச்சரிக்கைகளையும் இணைத்து பல்கலை வித்தகர் சுவையான படைப்புகளாக இச்சிறு கதைகளில் தந்துள்ளார்”
என்று முன்னாள் அரசாங்க அதிபரும் எழுத்தாளருமான உடுவை எஸ்.தில்லை நடராசா குறிப்பிட்டிருப்பதையும் இங்கு குறிப்பிடுவது நூலின் சிறப்பு பற்றிய மதிப்பீட்டுக்கு உதவக் கூடியதாகும்.
பதிப்புரை தந்த மைக்கன் கொலின் குறிப்பிடுவது போல, 2018இல் கொத்து ரொட்டி என்ற சிறு கதைத் தொகுதி மூலம், இலங்கை அரசியலை துல்லியமாக வெளிக்கொணர்ந்தவர் கோவிலூர் செல்வா. “நல்லது நடக்கட்டும்” என்ற இத்தொகுதி மூலம் கொரோனாகால வாழ்வியலையும் இலக்கிய ஆவணமாக்கியிருக்கிறார். கொரோனா கால வாழ்வியலை இலக்கியப் பதிவாக்கிவிட வேண்டுமென்ற நன்னோக்கில் எழுந்த அவசரத்தில் சில சிறுகதைகளில் கட்டுரைத் தன்மை மேலோங்கியிருப்பதை நட்போடு இங்கு சுட்டிக்காட்டவேண்டும். இதனைப் பேராசிரியர் சி. மௌனகுருவும் சுட்டியுள்ளார்
‘அவர்கள் திருந்த வேண்டும்’ என்ற கதை அதற்கு உதாரணம்.
‘ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த நாடு என்றால் அது டென்மார்க் நாடு தான். முன்கூட்டியே முன் பள்ளிகளையும் பாடசாலைகளையும் கல்லூரிகளையும் மூடிய நாடு டென்மார்க். பொது போக்குவரத்தை மட்டுப்படுத்தியதும், மக்களை வீட்டில் தனிமைப்படுத்தி வைத்ததும் தனது எல்லைகளை மூடியதும் இந்த நாடுதான். வைரஸின் தொற்று வீதமும் இறப்பு வீதமும் குறைந்த நாடாகவே இது இருந்தது’. என்று அந்தக் கதை செல்கிறது.
“சிறுகதை என்பது சுருக்கமாக கதை கூறும் புனைவு வகை உரைநடை இலக்கியமாகும். தந்தத்தில் பொம்மையை கூர்மையாக செதுக்குவது போன்றது. சொல்லுகின்ற செய்தியை தெளிவாக சொல்ல வேண்டும். அது அளவில் சிறிதாக முழுமை பெற்றிருக்க வேண்டும் தனிமனித அல்லது சமுதாய வாழ்க்கையை சுவையோடு பிரதிபலிக்க வேண்டும்.” என்ற உறுதியோடு தொடர்ந்து எழுதுபவர் கோவிலூர் செல்வராஜன். அவருக்கு நமது வாழ்த்துகள். சுக தேகியாக, பல்லாண்டு காலம் அவர் வாழ்ந்து, இன்னும் பல படைப்புகளை அவர் தரவேண்டுமென்பதே நமது பிரார்த்தனையாகும்.
நூல்:- நல்லது நடக்கட்டும்
நூலாசிரியர் :- கோவிலூர் செல்வராஜன்.
வெளியீடு:- மகுடம், இல 90, பார் வீதி,மட்டக்களப்பு.
விலை:- ரூபா 600/-
பாவேந்தல் பாலமுனை பாறூக்