தமிழர் வாழ்வியலில் கொண்டாடப்படும் காதலுக்கு அகத்துறை இலக்கணம் தந்த கடவுள் சிவன். தமிழ் நாட்டில் பெண்கொண்ட கடவுள் சிவன். தமிழ்மரபுப்படி காதல் மங்கையோடு ஊடுவதும் கூடுவதும் செய்து களிப்பவன் சிவன். தெந்தமிழ் நாடாகிய தென்னாட்டையே தன்னாடாகக் கொண்ட கடவுள் சிவன். சங்கம் அமர்ந்து தமிழ் வளர்த்த கடவுள் சிவன். பார்வதிக்கும், அகத்தியனுக்கும், நக்கீரனுக்கும் தமிழ் கற்பித்த கடவுள் சிவன். பன்னிரு திருமுறைகளாகப் பதினெண்ணாயிரம் பாடல்களால் தமிழிலே பாடப்பட்ட கடவுள் சிவன். தமிழர் சமயமாம் சைவத்தின் முழுமுதற் கடவுள் சிவன். தமிழர் தத்துவநெறியாம் சைவசித்தாந்தத்தின் தோற்றுவாய் சிவன்.
இவ்வாறு இருக்க முருகன் மட்டும் எப்படித் தமிழ் கடவுள் ஆனார்?
முருகனும் தமிழ்ச்சங்கத்தில் அமர்ந்து தமிழ் வளர்த்தார். இதை இறையனார் அகப்பொருள் நக்கீரர் உரை ”குன்றெறிந்த குமரவேளும்” என்று குறிப்பிடுகின்றது.
முருகன் அகத்தியருக்கு தமிழையும் அதன் நுணுக்கங்களையும் கற்பித்ததாக கந்தபுராணமும், சிவஞானசித்தியாரும் கூறுகின்றன.
பன்மொழி நிலவும் பாரத தேசத்தில் சிவன், திருமால், கொற்றவை என்னும் அம்பிகை முதலான பல கடவுளர்களின் வழிபாடு எங்கும் பரவலாக இருந்தாலும் முருக வழிபாடு சிறப்பாகக் காணப்படுவது தமிழ் நாட்டிலேயே. இந்தியாவின் மற்றைய மாநிலங்களிலும் கார்த்திகேயன் என்றும், சுப்பிரமணியன் என்றும் ஆங்காங்கே முருக வழிபாடு இருந்தாலும் கந்தன் என்றும், கடம்பன் என்றும், முருகன் என்றும் குன்றுகள் தோறும் மட்டுமல்லாது, தமிழ் வழங்கும் நிலம் எங்கும் தமிழர் வாழும் இடம் எங்கும் கோயில் கொண்டுள்ள பெருமையும் தனித்துவமும் முருகனுக்கே உரியது. இவ்வாறு தமிழர்களால் அவர்கள் வாழும் இடமெல்லாம் கோயில் கொண்டு கொண்டாடப்பட்டும், வணங்கப்பட்டும், வாழ்த்தப்பட்டும் வருவதனாலேயே முருகனை நாம் தமிழ்க்கடவுள் என்கின்றோம். இதுவே பல ஆய்வாளர்களினதும் முடிவும்கூட. இதை நாம் மறுப்பதற்கில்லை. ஆயினும் இதனால் மட்டுமா முருகன் தமிழ்க்கடவுள் என்னும் தகுதியைப் பெறுகின்றான் என்றால் இல்லை, இதற்கும் மேலான விடயம் ஒன்று உண்டு.
சைவமும் தமிழும் வேதங்களும் கூறும் நீலமணிமிடற்றுச் சிவன், கொற்றவை, கண்ணன் என்னும் திருமால், வேந்தன் என்னும் இந்திரன், வருணன் முதலாய பல தெய்வங்கள் தமிழர் மரபில் இருந்தாலும், சிவனாரும் முருகனும் தமிழை ஆய்ந்தும், கற்பித்தும், ஆதரித்தும், வளர்த்தும் இருந்தாலும், தமிழ் மரபின் அகத்துறையாகிய காதலைக் கொண்டாடினாலும் காதலின் களவியல், கற்பியல் என்ற இரு துறைகளில் களவு முறையில் வள்ளியிடம் சென்று, அவள் செல்லுமிடமெல்லாம் பின் தொடர்ந்து, பல்வேறு கோலம் காட்டியும், ஆசை காட்டியும், பயம் காட்டியும் பல வகைகளில் முயன்று வள்ளியின் காதலை வென்றவன் முருகன்.
இவ்வாறு வள்ளியின் மனதை வென்ற பின்னரும் அவளின் சுற்றத்தார் யாரும் அறியாவண்ணம் சந்தித்தும், கூடியும் மகிழ்ந்தவன் முருகன். வள்ளியின் பெற்றோரும், குடும்பத்தாரும் இதை அறிந்து எதிர்த்துப் போரிட்டபொழுது அவர்களுடன் போராடி வென்று வள்ளியைக் கை பிடித்தவன் முருகன். காதலுக்காக வள்ளியின் குடும்பத்தாருடன் மோதிப் போரிட்டு வென்றாலும் ஈற்றில் பெண்வீட்டாருடன் சமாதானமாகி ஒன்றுகூடியவன் முருகன்.
மொத்தத்தில் முருகனின் காதலானது தமிழ் மரபின் அகத்துறையின் காதல் மட்டுமல்ல, இன்றளவும் நம் தமிழர் வாழ்க்கையிலும், கலைகளிலும், இலக்கியங்களிலும், சினிமாவிலும் கூடத்தொடருகின்ற உயிர்ப்பான காதல்.
அந்த கற்பியல் மரபில் தெய்வானையைக் கரம்பிடித்தோடு மட்டுமல்லாமல் சங்கத்தமிழர் கொண்டாடும் களவு நெறிக்காதலில் திளைத்து வள்ளியைக் கரம் பற்றியவர்.
இவ்வாறு சங்கத்தமிழர் போற்றும் களவியற் காதலில் திளைத்த நமது கதாநாயகன் முருகன். ஆதலால் முருகன் தமிழ்க்கடவுள். இதனாலேயே முருகன் ஒருவனுக்கே தமிழ்க்கடவுள் என்னும் தகுதியும் சிறப்பும் பெருமையும் தனித்துவமும் பொருந்தி அமைகின்றது.