இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜிகார் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த 8 ஆம் திகதி பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.
பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதேசமயம் மருத்துவ மாணவியின் கொலைச் சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்திருந்தது. இந்தச் சம்பவத்திற்கு நீதி கேட்டு மருத்துவர்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தியுள்ளனர். மருத்துவர்களின் போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இதனிடையே அரசைக் கடுமையாகச் சாடிய மேற்கு வங்க உயர்நீதிமன்றம், வழக்கை சி.பி.ஐ இற்கு மாற்றி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, மாணவி கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையான மரணதண்டனை வழங்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் மம்தா கொல்கத்தாவில் பேரணி நடத்தினார். இருப்பினும் மம்தாவிற்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டு அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.
இந்த சூழலில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பெண் மருத்துவர் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, “பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் புகைப்படங்கள் ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் பரவியது எவ்வாறு? ஏன் பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை? சம்பவம் நடந்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டிய பொலிஸ்துறை மெத்தனமாக நடந்திருக்கிறது. இது கொல்கத்தா மருத்துவமனை பிரச்சினை மட்டுமே அல்ல; ஒட்டுமொத்த மருத்துவர்களின் பிரச்சினை” என்று தலைமை நீதிபதி கடும் தொனியில் கூறினார்.
பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அளவில் குழு அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை இந்த விவகாரத்தில் மம்தா அரசும் கொல்கத்தா பொலிசாரும் மிகப் பெரிய தவறுகள் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.
குற்றம் இடம்பெற்ற தினத்தில் அதை மூடி மறைக்க மேற்கு வங்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறது. உண்மையை மூடிமறைக்கவே மம்தா அரசு முயன்றதாக அங்குள்ள இடதுசாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அங்குள்ள கருத்தரங்கு மண்டபத்தில் மிக மோசமான நிலையில், மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆனால், இதைத் தற்கொலை என்று சொல்லி மூடி மறைக்கவே அம்மாநில அரசு முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
உயிரிழந்த பெண் மருத்துவரின் உடலைப் பார்க்க அவரது பெற்றோரை சுமார் மூன்று மணி நேரம் காக்க வைத்துள்ளனர். மேலும், விசாரணை நடக்கும் போதே அவசர அவசரமாகப் பெண் மருத்துவரின் உடலைத் தகனம் செய்துள்ளனர்.
தங்கள் மகளின் மரணத்திற்கு நியாயம் வேண்டும் என்று உயிரிழந்த பெண் மருத்துவரின் பெற்றோர் கூறி வந்தனர். அந்த நேரத்தில் நிலைமையைச் சமாளிக்க மம்தா பானர்ஜி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபா 10 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார். இதுவும் அங்கே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஆர்ஜிகார் மருத்துவமனையில் உள்ள செமினார் மண்டபத்தில்தான் இந்தக் குற்றச் சம்பவம் நடந்துள்ளது. விசாரணை நடக்கும் போதே அந்த மண்டபம் மற்றும் அருகே இருந்த கழிப்பறைச் சுவர் அவசர அவசரமாகப் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஆதாரங்களை அழிக்கவே இந்தப் பணிகள் உடனடியாக நடந்ததாகவும் விமர்சனங்கள் உள்ளன.
குற்றம் நடந்த போது ஆர்ஜிகார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷை பாதுகாக்க முயல்வதாக மம்தா அரசு மீது குற்றச்சாட்டு இருக்கிறது. இந்த சம்பவத்தைத் தற்கொலை என்று மூடி மறைக்க முயன்ற சந்தீப் கோஷ் மீது இதுவரை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதைப் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
அடுத்து இந்தச் சம்பவத்தைக் கண்டித்து போராட்டங்கள் நடந்த போது அதை மேற்கு வங்க அரசு மிக மோசமாகக் கையாண்டது. மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்த போது அவர்களை அழைத்துப் பேசாமல், அவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று மறைமுகமாக அம்மாநில அரசு அழுத்தம் கொடுத்தது.
மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதில் மம்தா அரசு அதிக கவனம் செலுத்துவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கே கால்பந்து போட்டி ஒன்று நடக்க இருந்தது. ஆனால், போராட்டம் நடக்குமோ என்று அஞ்சி மேற்கு வங்க அரசு அந்த போட்டியை மொத்தமாக ரத்து செய்தது. இந்தச் விவகாரத்தில் சமூக வலைத்தளங்களில் கருத்துச் சொல்வோருக்கு எதிராக கொல்கத்தா பொலிஸ் நடவடிக்கை எடுத்தது. பலருக்கு இந்த விவகாரத்தில் நோட்டீஸ் கூட அனுப்பப்பட்டது. இந்த சம்பவத்தில் மம்தாவை குற்றஞ்சாட்டினால் விரலை உடைப்பேன் என்று திரிணாமுல் அமைச்சர் உதயன் குஹா சொன்னது சர்ச்சையான விடயமாகும்.
கடைசியாக இந்தச் சம்பவத்தில் மம்தா நடத்திய போராட்டம் மிகப்பெரிய விமர்சனத்தைக் கிளப்பியது. மேற்கு வங்க முதல்வராக இருக்கும் மம்தா உரிய நடவடிக்கை எடுக்காமல் போராட்டம் என்று இந்தச் சம்பவத்தைத் திசைதிருப்ப முயல்வதாக உயிரிழந்த பெண் மருத்துவரின் பெற்றோர் உட்பட பலரும் சாடினர்.
கொல்கத்தா மருத்துவக் கல்லுாரி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மேற்கு வங்க அரசின் செயல்பாட்டுக்கு அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், சரமாரி கேள்விகளை எழுப்பியது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜிகார் மருத்துவக் கல்லுாரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31 வயதான பயிற்சி பெண் மருத்துவரே கொல்லப்பட்டவராவார்.
கொல்கத்தாவில் நடந்துள்ள சம்பவம், மருத்துவர்கள் பணி தொடர்பான பல கேள்விகளை எழுப்பியுள்ளது. முதலில் அவர்களுடைய பாதுகாப்பு தொடர்பானது. தற்போது பெண்கள் அதிகளவில் இந்தத் துறையில் ஈடுபடுவதால், அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இளம் மருத்துவர்கள் வாரத்தில் 36 மணி நேரம் பணி செய்ய வேண்டியுள்ளது. அவர்களுக்கு ஓய்வு அறைகள் இல்லை. ஆண்கள், பெண்களுக்கென தனித்தனி கழிப்பறைகள் இல்லை என்று கூறப்படுகின்றது.
பயிற்சி மருத்துவர் கொலைச் சம்பவம் தொடர்பாக கொல்கத்தா ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த சந்தீப் கோஷிடம் சி.பி.ஐ விசாரித்து வருகிறது. அவர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எஸ்.சாரங்கன்