- மாறாதிருப்பதற்கு அரசியல் என்பது மதமல்ல.
- நாட்டை மீட்க முடியுமா என்று அஞ்சியவர்கள் ஓடி, ஒளிந்தனர்.
- வெற்றியின் பக்கம் சென்று அதிகார வேட்கைகளைத் தீர்ப்பதுதான் இவர்களுக்குத் தெரிந்த தந்திரம்.
- நாட்கள் நகர, நகர ஜனாதிபதியின் பயணமும் வெல்லும்.
- கொடிபிடிப்பதும் கோஷமிடுவதுமே சிறுபான்மைச் சமூகங்களின் அரசியலுக்கு சாபக்கேடு
- ஆசனங்களைக் குறியாகக் கொண்டு எவரும் தேசிய காங்கிரஸில் இணையத் தேவையில்லை.
வெல்லப்போகும் வேட்பாளரைத் தீர்மானிப்பதை விடவும், வெல்ல வேண்டிய வேட்பாளரைத் தெரிவு செய்வதே, நாட்டுக்கு இன்று தேவையாக உள்ளதாக தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். சமகால அரசியல் குறித்து தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பேட்டியில் அவர் தெரிவித்தவை…..
கே: சமகால அரசியலில் சிறுபான்மை கட்சி களுக்கு உள்ள பொறுப்புக்கள் எவை?
பதில்: நாடு இதுவரைக்கும் கண்டிராத வித்தியாசமான ஒரு சூழலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.
பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்கள்.இதனால் கடந்த காலங்கள் மறக்கடிப்பட்டுள்ளன.
யார் வீரன், எவன் சாதனையாளன் என்றெல்லாம் மக்கள் சிந்திக்கவில்லை. உண்பதற்கு உணவும் வாழ்வதற்கேற்ற அமைதியான சூழலையும் தோற்றுவிக்கும் தலைமையையே மக்கள் தேடுகின்றனர்.
கே: நீங்கள் கூறுவதைப்போல, மக்கள் தேடும் அந்த தலைவர் யார்?
பதில்: யாரையும் தேடலாம். ஆனால், இவரையே தெரிவு செய்யுங்கள் என்று மக்களுக்கு வழிகாட்டுவது அரசியல் தலைமைகளின் பொறுப்பு.
கே: மக்களால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளில் தேசிய காங்கிரஸும் ஒன்று. அந்த வகையில் உங்களது வழிகாட்டுதல் யாரை நோக்கியதாக உள்ளது.?
பதில் : நாட்டின் முன்னாள் ஜனாதிபதியை மக்கள் ஏன் விரட்டினர். பசியினால்தான். இதைச் சிந்தித்தால் ஒரு தீர்மானத்துக்கு வரலாம். வீர வரலாறுகள் பேசி மக்களின் பசியை போக்க முடியாது. பொருளாதார வளர்ச்சி, வாழ்வாதாரத்தில் செழிப்பை ஏற்படுத்தியே அவர்களது தேவைகளைத் தீர்க்க வேண்டும். இவற்றைச் செய்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. இது, எல்லோருக்கும் தெரிந்த விடயம். அரசியலுக்காக எவரும் மறைக்க முடியாது.
இரண்டாவது உலக மகா யுத்தத்தை வென்ற பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில், அதன் பின்னர் நடைபெற்ற தேர்தலில் தோற்றார்.
பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பிய கிளமண்ட் அலி வெற்றியீட்டினார். இதுவே வரலாறு.
கே: நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை மீட்டார் என்ற ஒரே காரணத்துக்காகவா அவரை ஆதரிக்கிறீர்கள். இந்த நெருக்கடி எவ்வாறு ஏற்பட்டது?
பதில் : திடீரென இந்த நெருக்கடி ஏற்படவில்லையே. திறைசேரி காலியாகப் போவதாக பலரும் எச்சரித்தனர்.
அப்போதைய ஜனாதிபதி இவற்றை செவிமடுக்கவில்லை. பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளை பொருட்படுத்தவில்லை. இவ்வாறு எச்சரித்த அமைச்சர்கள் இருவர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டனர். எவரோ செய்த தவறால் ஏற்பட்ட வீழ்ச்சியைப் போக்க, ஜனாதிபதி ரணிலே முன்வந்தார். இவர் முன்வந்திருக்காவிட்டால், பட்டினி மற்றும் பற்றாக்குறைகளால் நாடு பற்றி எரிந்திருக்கும். ஆனால்,
நாட்டை மீட்க முடியுமா என்று அஞ்சியவர்கள் ஓடி, ஒளிந்தனர். பதவிகளைத் திணித்தபோதும் பொறுப்பேற்க தயங்கினர்.
கே: ஒரு காலத்தில் நாட்டின் நாயகனாக நோக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ களமிறங்கியுள்ளமை குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில் : முதிர்ச்சியான அரசியல் அனுபவமுள்ளவர் மஹிந்த ராஜபக்ஷ. எதையும் வீணாகச் செய்ததுமில்லை, சிந்திப்பதும் இல்லை. எவரது தலையீடுகளும் இன்றி சுதந்திரமாக அவரெடுத்த தீர்மானங்கள் பிழைத்ததும் இல்லை. நாமலைக் களமிறக்கியமை காலத்தை முந்திய செயலே. எனவே, இந்த முடிவில் ஏதாவது அழுத்தம் இருந்திருக்கும்.
கே: எம்.எச்.எம்.அஷ்ரஃபின் எச்சரிக்கையை, சஜித்தை ஆதரிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தூக்கிப் பிடிக்கிறாரே?
பதில் : மாறாதிருப்பதற்கு அரசியல் என்பது மதமல்ல.
இன்றைய காலத்தில் தூக்கிப்பிடிக்க வேண்டிய எச்சரிக்கையுமல்ல அது. ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராகவும் தற்போதைய ஜனாதிபதி இல்லை. சுயேச்சையாகவே போட்டியிடுகிறார். இத்தனை யதார்த்தங்களையும் மீறி, அஷ்ரஃபின் எச்சரிக்கையை ஏன் தூக்கிப்பிடிக்க வேண்டும். இதைத்தான் சொல்கிறேன்.
யதார்த்தத்துக்கு அப்பாலான உணர்ச்சி அரசியலையே அவர்கள் செய்கின்றனர். ரணசிங்க பிரேமதாசாவின் வெற்றிக்கு அஷ்ரஃபின் ஆதரவுதான் காரணமானதாகக் கூறும் ஹக்கீம், பிரேமதாசாவை ஆதரித்ததற்கான பின்புலத்தையும், யதார்த்தத்தையும் மறைத்து உணர்ச்சிக்காக வரலாற்றை மட்டும் உசுப்பேற்றுகிறார்.
அன்று ரணசிங்க பிரேமதாசாவை அஷ்ரஃப் ஆதரித்த யதார்த்தங்களில் ஒரு துளியைக்கூட இன்று சஜித்திடம் இவர்கள் முன்வைத்துள்ளார்களா?
கே: ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் நாற்பது நாட்களே உள்ளன. இந்நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்னும் தீர்மானத்தை அறிவிக்கவில்லை. இதில் ஏதும் இருக்குமா? ஏன் இந்த தயக்கம் அல்லது தடுமாற்றம்?
பதில் : பெரிதாக ஒன்றுமிருக்காது. நீங்கள் சொல்வதைப்போல தடுமாற்றம் இருக்கவே செய்யும்.
யார் வெல்வார் என்பதே அது. சமூகம் அல்லது நாட்டின் தேவைக்காக முடிவெடுப்பவர்கள் இல்லையே இவர்கள்.
வெற்றியின் பக்கம் சென்று அதிகார வேட்கைகளைத் தீர்ப்பதுதான் இவர்களுக்குத் தெரிந்த தந்திரம். நாடு இன்றுள்ள நிலையில், வெற்றி வேட்பாளரையல்ல வெல்ல வேண்டிய வேட்பாளரையே ஆதரிக்க வேண்டும்.
இதுதான் தர்மம். தாமதமானாலும் தர்மமே வெல்லும். நாட்கள் நகர, நகர ஜனாதிபதியின் பயணமும் வெல்லும்.
ஆனால், தர்மம், நியாயத்தின் பக்கம் முஸ்லிம் தலைமைகளை அழைப்பது பிறவிக்குருடனை விழிக்கச் செய்வதற்கு (முழித்தல்) ஒப்பானது.
கே: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மைச் சமூகங் களுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு நீங்கள் கூற விரும்புவதென்ன?
பதில் : ஒரே வார்த்தையில் சொல்வதானால், உணர்ச்சி அரசியலை கைவிடுங்கள் என்பதுதான். இந்தளவு முன்னேறியுள்ள காலத்தில், இன்னும் அடிமைத்தன உணர்ச்சிகளுக்கு பலியாவதை நினைக்கையில், பரிதாபப்பட வேண்டும். அதற்காக உரிமை அரசியல் அவசியமில்லை என்ற பொருளாகாது.
காலமறிந்து பயிர் செய்வதில்லையா. அது போலவேதான். கொரோனா காலத்தில் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட விடயத்தை மிகக் கச்சிதமாகக் கையாண்டிருந்தால், நீதிமன்றம் வரை சென்றிருக்கத் தேவையில்லை.
கொடிபிடிப்பது, கோஷமிடுவது இவைகளே இன்று சிறுபான்மைச் சமூகங்களின் அரசியலுக்கு சாபக்கேடாக அமைந்துள்ளன.
கே: பிராந்திய அரசியலில் தேசிய காங்கிரஸின் எதிர்கால நகர்வுகள் எப்படியிருக்கும்?
பதில் : எந்த அரசியலானாலும் சமூகம், நாடு என்பவற்றை மையப்படுத்தியே எமது நகர்வுகள் இருக்கும். இந்த நகர்வுகள், சிலரின் எதிர்பார்ப்புக்களுக்கு தடங்கலாக அமைவதும் உண்டு.
இவ்வாறானவர்கள்தான், எங்களை விட்டுச் செல்கின்றனர். அதிகாரத்தில் ஆசை கொண்டு அல்லது ஆசனங்களைக் குறியாகக் கொண்டு எவரும் தேசிய காங்கிரஸில் இணையத் தேவையில்லை.