இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய வரவுசெலவுத்திட்ட உரையில் தமிழ்நாடு, தமிழ் என்ற வார்த்தைகள் ஒருமுறை கூட இடம்பெறாத நிலையில், அதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றத்தில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே பீகார், ஆந்திராவை ஆளும் பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகள் தங்கள் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்தன. இந்தக் கோரிக்கைக்கு இணங்க ஆந்திரா, பீகாருக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆந்திராவுக்கு ரூ. 15,000 கோடியும், பீகாரின் நெடுஞ்சாலை மேம்பாட்டுக்கு ரூ. 26,000 கோடியும் ஒதுக்கீடு செய்வதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மேலும், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் உரையில் தமிழ்நாடு, தமிழ் என்ற வார்த்தைகள் ஒருமுறை கூட இடம்பெறவில்லை. வழக்கமாக திருக்குறள் போன்ற தமிழ் இலக்கியத்துடன் பட்ஜெட் உரை தொடங்கப்படும். இம்முறை அதுவும் தவிர்க்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ 2 ஆ-ம் கட்ட திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, தாம்பரம் – செங்கல்பட்டு விரைவுச் சாலை திட்ட ஒப்புதல், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் எதுவும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துத் தெரிவிக்ைகயில்,
“2024 ஆம் ஆண்டுக்கான பா.ஜ.க அரசின் பட்ஜெட் அறிக்கை ஒட்டுமொத்த இந்தியாவிற்கானதா? தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மட்டுமானதா? என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
“மத்திய அரசின் பட்ஜெட் கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்தும் சலுகை அறிவிப்புகளாக மட்டுமே அமைந்துள்ளது. விவசாயம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத்தேவைகளுக்கு போதிய நிதியை ஒதுக்காததது இந்திய மக்களின் நலன்மீதான பா.ஜ.க அரசின் அக்கறையின்மையை மீண்டும் வெளிப்படுத்துகிறது” என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
“பட்ஜெட் உரையில் தமிழ்நாடு என்ற பெயரையே உச்சரிக்காத நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வன்மையாகக் கண்டிக்கிறேன். மோடி ஆட்சியில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. ஆட்சியை, பதவியை, அதிகாரத்தை தக்கவைக்க பா.ஜ.க அரசு எந்த நிலைக்கும் செல்லும் என்பதற்கு இந்த பட்ஜெட்டே ஒரு உதாரணம்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
“2024–2025ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது” என்று அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
“இந்த பட்ஜெட் அறிக்கை வடமாநிலங்களையும், பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்த இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையோடு ஊக்குவிக்கக்கூடிய அறிக்கையாக இல்லை. குறிப்பாக தமிழகத்திற்கு எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பது, தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது” என்று எடப்பாடி தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்ைகயில், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எந்தவித திட்ட அறிவிப்புகளும் இல்லை என்று கண்டனம் தெரிவித்தார்.
தமிழகத்திற்கு திட்டங்கள் அறிவிக்கப்படாததை கண்டித்து, பிரதமர் நரேந்திர மோடியின் அனைத்து முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை எனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
“மத்திய பட்ஜெட் தமிழகத்துக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஒருசில மாநில கட்சிகளைத் திருப்திப்படுத்த ஒருசில மாநிலங்களுக்கு மட்டுமே திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்த நாட்டுக்கானது அல்ல. பிகார், ஆந்திர மாநிலங்களுக்கான நிதிநிலை அறிக்கையாக உள்ளது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்த எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. தமிழகத்தின் நலன் முழுமையாக புறக்கணிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரயில் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இரண்டு மிகப்பெரிய பேரிடரை சந்தித்த தமிழகத்துக்கு இதுவரை எந்தவித வெள்ள நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை. பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற சொல் கூட இடம்பெறவில்லை.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் நான் பங்கேற்கப்போவதில்லை. அனைத்து முதல்வர்கள் கூட்டத்தை புறக்கணிக்கிறேன்” என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.
இது இவ்விதமிருக்க, இந்திய மத்திய வரவுசெலவுத் திட்டத்தில் மாநிலங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகக் கூறி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் கடந்த புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
பட்ஜட் குறித்த விவாதத்துக்காக புதன்கிழமை காலை நாடாளுமன்றம் கூடியது. முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் கூடிய இந்தியா கூட்டணி எம்பிக்கள், மத்திய பட்ஜட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்.பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பட்ஜட்டுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்த பட்ஜட் பா.ஜ.கவின் கூட்டாளிகளை திருப்திப்படுத்துவதற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் (பா.ஜ.க) யாருக்கும் எதுவும் கொடுக்கவில்லை. இது பாரபட்சமான பட்ஜட். இந்த பட்ஜட்டை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்” எனக் குறிப்பிட்டார்.
எஸ்.சாரங்கன்