கலை ஒளி முத்தையாபிள்ளை அறக்கட்டளை வெளியீடாக மலர்ந்திருக்கும் பீ.மரியதாஸின் ‘மலையகம்: இங்கிருந்து எங்கே?’ என்ற நூல் மலையகத் தமிழரின் சமகால வாழ்வியலை வரலாற்றுப் பின்புலத்தில் நிறுத்தி அலசும் ஆவணமாகச் சிறப்புப் பெறுகிறது. தேயிலையை வளர்த்துத் தேசத்தை உயர்த்தியோர், தங்களின் 200 ஆண்டுகால வரலாற்றில் ஒதுக்கப்பட்டோராக நடத்தப்பட்ட அவலத்தை, வேதனைதரும் வேதன முறையை, சுதந்திர இலங்கையில் மலையகத் தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, குந்துவதற்குக் கையகலக் காணி இல்லாத கொடுமையை இந்த நூலில் பீ.மரியதாஸ் நுணுக்கமாகப் பேசுகிறார். இடதுசாரி இயக்கமும் மலையகமும், மலையகத் தேசியம் பற்றிய அவரின் கட்டுரைகள் அவரது அனுபவப் பின்னணியிலிருந்தும் மார்க்சிய அணுகுமுறையிலிருந்தும் எழுந்தவையாகும். இந்த நூலின் கட்டுரைகள் அனைத்திலும் அவரது பரந்த வாசிப்பும், நுணுகிய பார்வையும், சமகால அநுபவத்துடனான கிரகிப்பும் துலாம்பரமாகத் தெரிகிறது. வரலாற்று ஆவணங்கள், ஆராய்ச்சி நூல்கள், களஆய்வு முடிவுகள், அரசாங்க அறிக்கைகள், அனைத்துலக நாடுகளின், அமைப்புகளின் ஆய்வறிக்கைகள் என்று தேடி வாசித்து, சான்றுகளின் துணையுடன் கட்டுரைகளை வரையும் பாங்கு பாராட்டிற்குரியது.
மலையக சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் மரியதாஸின் பார்வை குவிந்திருக்கிறது. ஒன்றோடு ஒன்றை இணைத்தும் பிரித்தும் தொகுத்தும் அசலான எழுத்தை அவர் தந்திருக்கிறார். அனைத்தையும் வரலாற்றுப் பின்புலத்தில் அணுகும் அவரின் ஆய்வு நோக்கு அவரது கட்டுரைகளுக்கு ஆழத்தைச் சேர்க்கிறது.
இருநூற்றாண்டுகால மலையக மக்களின் வாழ்வு அவரது சிந்தனைத் தளத்தில் எதிரொலித்திருக்கிறது. தனது சரித்திரகதியின் இடத்தை மரியதாஸ் உணர்கிறார். நடைமுறை அரசியலையும் மலையகத்தின் புதிய அரசியல் தேவைகளையும் எழுச்சிகளையும் தனது மார்க்ஸிய தரிசனத்தில் பரிசீலித்து மரியதாஸ் தந்திருக்கும் இந்த நூல், நமக்குக் கிடைத்திருக்கும் சிறந்த அரசியல், சமூகக் கையேடு.
பல்கலைக்கழகக் காலத்திலேயே அவர் எழுத ஆரம்பித்து விட்டாரெனினும், ஆசிரியப்பணி அவரது நேரத்தை விழுங்கிய நிலையில், அவரின் எழுத்துப்பணி தொடரவில்லை. ஆயினும், அண்மைக்காலத்தில் அவரது எழுத்தாக்கம் மிகுந்த உற்சாகத்துடன் தொடர்வது மகிழ்ச்சி தருகிறது. மலையக இலக்கியத்திற்கு அவரது மீள்வரவு புத்துணர்ச்சி தருவது. செழுமையான மார்க்சிய ஞானம் கொண்ட மரியதாஸின் எழுத்துகள் மலையக எழுத்தில் தனிமுத்திரை பதிப்பவை. தன்னை முன்னிலைப்படுத்தாத மாண்பு அவருடையது. தொடர்ந்த, அயராத, ஆழ்ந்த அவரது வாசிப்பு அவரின் எழுத்திற்குக் கனதி சேர்க்கிறது.
மலையகம் அவரது சுவாசம். அந்த மக்களின் வாழ்வும் வளமும் அவரது ரத்த நாளத்தோடு உறைந்தது. அந்த மண்ணின் சோக ராகத்தை அவர் நெஞ்சில் சுமந்து திரிபவர். மலைமுகடுகளில் நம்மவர் படும் அவலம் அவர் நெஞ்சக்கணப்பறையில் என்றும் கனன்று கொண்டிருப்பது. முதலாளித்துவம் எங்கள் ஈரலைப் பிடுங்கி வைத்தாலும் திருப்தி கொள்வதில்லை என்பதை அவர் கண்கூடாகக் கண்டவர். முதலாளித்துவ சுரண்டலும் இனவன்முறையும் நம் சமூகத்தைச் சூறையாடிவருவதை உணர்பவர். இந்த அநியாயத்தை எதிர்க்கும் சின்ன முனகலையும் அவரால் கேட்க முடிகிறது. அற்பஜீவிகளின் சந்தை இரைச்சலிலிருந்து வெகுதொலைவில் நிற்பவர். மரியதாஸ் வாசிப்பில் மட்டுமே கருத்தூன்றி நின்ற காலத்தில், ‘நீங்கள் எழுதவேண்டும்’ என்று அவருக்கு உற்சாகம் ஊட்டி, இக்கட்டுரைகளைப் பத்திரிகைகளில் பிரசுரம் செய்து, அவற்றைத் தொகுத்து நூலாக்கும் பணியில் முழுமூச்சுடன் உழைத்த எச்.எச்.விக்ரமசிங்கவிற்கு நன்றி கூறவேண்டும். ‘இங்கிருந்து எங்கே?’ என்று மரியதாஸ் எழுப்பும் கேள்வி நம் சமூகத்தின் கூட்டுக்குரல். நிகழ்கால அவலத்திலிருந்து நம் சமூகம் எழுந்து நிமிர்ந்து, ஒளியை நோக்கி நகரும் எழுச்சியின் எக்காளம் அது.
மு.நித்தியானந்தன்