எஞ்சிக் கிடக்கும் வினாடிகள்’ ஒலுவில் எஸ். முஸம்மில் எழுதியிருக்கின்ற கவிதை நூல். அழகிய முகப்பட்டையோடு 78 பக்கங்களில் 64 கவிதைகளோடு விரிந்திருக்கின்றது.
முஸம்மில், தினகரன் பத்திரிகையில் எம்.எச்.எம் ஷம்ஸ் என்ற மறைந்த இலக்கிய ஆளுமை தயாரித்தளித்த ‘புதுப் புனலில்’ வளர்ந்த படைப்பாளி. இருபது வருடங்களுக்கும் மேலான கவிதைப் பரிச்சயமுடைய முஸம்மிலின் முதல் கவிதை நூல் இது. வெறும் வசன முறிவுகளைக் கவிதைகள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களில் இருந்து வித்தியாசப்படுபவர் முஸம்மில். அளவான சொற்களை அழகாகக் கையாண்டு கவிதைகளைத் தருபவராக அவரை அடையாளப்படுத்த முடியும். அவரின் கவிதைகள் ஒத்திசைப்புப் பெற்று ஒழுகுவன என்பதற்குத் தொகுப்பிலுள்ள அவரின் கவிதைகள் சான்று பகர்வனவாக அமைந்திருக்கின்றன. கவிதைகளின் தலைப்புகளிலேயே மொழியழகையும் ,கவித்துவத்தையும் கொட்டி விடும் ஆற்றல் அவருக்கு வாய்த்திருப்பதனை இந்நூலை வாசிப்பவர்கள் உணர்ந்து கொள்வர் .
நிலவைச் சுட்ட இரவு
பசியாறிய வறுமை
கானலான காதல்
எஞ்சிக் கிடக்கும் வினாடிகள், என்ற சில தலைப்புகளை பதப் பருக்கைகளாக இங்கு எடுத்துக் காட்டலாம் .
இயைபுத் தொடை பெற்று, ஓசை உருவம் பெற்று நிமிர்கின்ற பல கவிதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன..
‘நிலைமாறும் உலகில்’ என்ற தலைப்பில் இடம்பெறும் கவிதையையும்,,’கானலான காதலில்’வரும் வரிகளையும் ‘ அப்பக்காரி கவிதையையும் உதாரணமாக எடுத்துச் சொல்லலாம்.
“வேசங்கள் எதுவரை தொடருமோ?
வேள்வியில் வாழ்வு படருமோ?
கேள்விகள் கேட்டால் குற்றமே
கேடென ஆகுமே சுற்றமே” ..( நிலை மாறும் உலகில்)
பத்து முறை பார்த்த பின்பு
மொத்தமாய் நடக்கின்றாய்!
பித்துமனம் தேடயில
மௌனமாய் கடக்கின்றாய்! (கானலான காதல்)
பனையோலைத் தட்டில்
பாலூற்றிய அப்பம்
பார்ப்பதற்கு வடிவான
பளபளப்புச் செப்பம்!(அப்பக்காரி)
முஸம்மிலின் புதுக்கவிதைகள் வாசிக்குந்தோறும் நமது மன உணர்வுகளோடு அப்பிக் கொள்பவை.. கலைத்துவ இரசனை குறையாத வண்ணம் அழகியலைச் சுமந்து வருபவை.. காட்சிப்படுத்தல்கள் நிறைந்தவையாக அமைந்து இன்பமளிப்பவை. ‘பொய்முகம்’ என்ற கவிதையில் வரும் சில வரிகள் இவை.
“இளந் தென்றல் கை கோர்க்கும்
அந்தி நேரத்தில்,
நீயும் நானும் ஒன்றித்திருந்த
அந்த ஆற்றங் கரையில்தான்
இன்றும் அமர்ந்திருந்தேன்.
நாணல்கள் தலையாட்டிய தாளத்தில்தான் உனதான கண்ணசைவுகள்
அழகான கானமிசைத்தது மௌனமாய்..
தலை தடவிய என்விரல்கள்
மணலினைக் கீறிக் கொள்கின்றன.” என்று அவர் பாடும் போது அக்காட்சி அப்படியே நம்மனக் கண் முன் விரிகின்றது.
முஸம்மில், பொருத்தமில்லாப் படிமச் சேர்க்கைகளை தலை,கால் தெரியாமல் பெய்து வைப்பவரல்லர்.
படிமச் சிறப்பும் உவமையழகும் கொண்ட பல கவிதைகளை முஸம்மில் நமக்குத் தருகின்றார்.
“கசாப்புக் கடையின்
கூரிய கத்தியால்
கீறி விட்டதாய்
மனசு நிசப்தமாக அழுது புலம்பியது.’
(நிலவைச் சுட்ட இரவு)
“இந்த தேசம் ஈரலிப்பாகவே
சுவாசித்துக் கொண்டிருக்கின்றது.
வறுமையில்
ஏழைகள் விட்டுக் கொண்டிருக்கும்
சொட்டுச் சொட்டான கண்ணீரால்”( பசியாறிய வறுமை)
“எரிதணலின் விரல்கள் கொண்டு
வருடுவது போல்
மெல்லக் கொல்லுது உன் நினைவுகள்” (சலனம்)
கோடைச் சூரியன் சுட்டெரித்த வரட்சியாய்
எல்லோர் மனதினிலும் ஏதோவோர் வெறுமை.
(ஏக்கத்தின் தேடல்கள்)
மண்வளச் சொற்கள் கொண்ட ,நாட்டாரியல் பண்புகள் தோய்ந்த கவிதைகளைத் தருவதிலும்
முஸம்மில் முன்னிலை பெறுவதை அவதானிக்க முடிகின்றது.
“சாறன மறிச்சிக் கட்டி
சண்டியன் போல் போனாரு
சாராய நாத்தத் தோட
சந்தியில கிடப்பாரு
அடுப்பெரிக்க விறகுமில்ல
அடுத்த வேள உணவுமில்ல
அஞ்சு ரூபா ஒழப்புமில்ல
அரசியல் பேசும் பொழப்பு வேற”(தேர்தல் கால அவலம்)
“காட்டு வயல் வெதச்சிருக்கு
காணி நெலம் வரண்டிருக்கு
மேற்கால வாறமழை
மேலால பெய்யாதோ”?(சுமைகள்)
வாழ்வியற் கோலங்களைப் பல்வேறு கோணங்களிலும் தரிசிக்கத் தருகின்ற விதத்தில் அவரின் கவிதைகளின் பொருட்பரப்பு விரிந்துள்ளது. துயரங்கள் ,அவலங்கள் எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், காதல், ஆத்மீக உணர்வு, போலிகள் என்று அவற்றை வகைப்படுத்திப் பார்க்கலாம். கவிதை நூலுக்கு முஸம்மில் புதியவரானாலும் கவிதைக்கு அவர் புதியவரல்லர் என்பதை, தனது கவிதைகளின் மூலம் நிரூபித்திருக்கின்றார் முஸம்மில்.
அவருக்கு நமது வாழ்த்துகள்!
நூல்:- எஞ்சிக் கிடக்கும் வினாடிகள்
வெளியீடு:- சபியா வெளியீட்டகம்,ஒலுவில்
முகவரி:- 36/1 O.P.A வீதி,ஒலுவில்-06.
விலை:- ரூபா 600/-