ஐனாதிபதி ரணில் கடந்த வார இறுதியில் மன்னார் மாவட்டத்தில் இருந்தார். ஜனாதிபதி ரணில், மன்னார் ஆயர் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோவைச் சந்தித்து முதலில் ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் உறுமய காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்றார். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் அதில் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.
மதிய உணவின் போது இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. உறுமய காணி உறுதி வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை பாராட்டி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் உரையாற்றினார். திங்கட்கிழமை விடுமுறையாக இருந்த போதிலும், மகாவலி வளவ பிரதேசத்தில் உள்ள விவசாயிகளுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் எம்பிலிப்பிட்டியவிற்கு சென்றிருந்தார்.
“நீங்கள் காணி உறுதிப் பத்திரங்கள், அஸ்வெசும மற்றும் புலமைப்பரிசில்களை மக்களுக்கு வழங்குகிறீர்கள். இரண்டு வருடங்களில் மக்களுக்கு இவ்வளவு நன்மைகளை வழங்கிய ஒரே ஜனாதிபதி நீங்கள் தானே?” என வந்தவர்கள் உற்சாகமாகக் கேட்டார்கள்.
செவ்வாய்கிழமை காலை ஜனாதிபதி ரணில் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவதற்காக பாராளுமன்றத்திற்கு சென்றார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெண்களின் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தடையாக இருப்பதைச் சுட்டிக் காட்டவே சென்றார்.
சட்டவிதிகள் குறித்த கேள்வியை எழுப்பி ஜனாதிபதி ரணில் இது குறித்து நீண்ட விளக்கமளித்தார்.
இதேவேளை, வீட்டு வாடகை வரி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, நாட்டில் வாடகைக்கு வீடுகளை வைத்திருப்பவர்களில் 90% பேருக்கு பாதிப்பு ஏற்படாது என தெரிவித்தார். இது 10% முதலாளிகளை பாதிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ரணில் தனது உரையை முடித்துக் கொண்டு எதிர்க்கட்சி லாபிக்குச் சென்றார். அப்போதும் ஏராளமான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இருக்கையில் அமர்ந்து மகிழ்ச்சியுடன் அளவளாவிக் கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் தற்செயலாக அங்கு வந்த ஜனாதிபதியை பார்த்தவுடன் அவர்கள் இருக்கையில் இருந்து எழுந்து ஜனாதிபதி அமருவதற்கு ஆசனம் வழங்கினார்கள்.
“எல்லோரும் என்ன பேசுகிறீர்கள்?” எனக் கூறியபடி ஜனாதிபதி அமர்ந்தார்.
“நல்ல நேரம், எனது பதவிக் காலத்தை 5 ஆண்டுகளாக குறைத்தீர்கள்…” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதும், அனைவரும் ஆச்சரியத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“எனது பதவிக்காலத்தை அப்போது 5 ஆண்டுகளாகக் குறைக்கவில்லை என்றால், நான் கொவிட் பிரச்சினையில் சிக்கி இருப்பேன். மறுபுறம், கொவிட் மூலம் வரும் பொருளாதார நெருக்கடியையும் நான் எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும்.” என சர்வ சாதாரணமாகக் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்தார்.
“அதாவது உங்களுக்கு ஏற்படவிருந்த சிக்கலுக்கு ஜனாதிபதி கோத்தபாய முகம் கொடுத்தார் என்று இது அர்த்தப்படுத்துகிறதா?” என்று அங்கிருந்த எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கேட்டார்.
இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவற்றைப் பார்த்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு வெளியேறியதை அங்கிருந்த அனைவரும் காணக்கூடியதாக இருந்தது.
அங்கு வந்திருந்த பேராசிரியர் ஆசு மாரசிங்க, அதோ உங்கள் தலைவர் செல்கிறார் என்று அனைவரும் கேட்குமாறு கூறினார்.
“அரசு அதிகாரிகளுக்கு வாகன அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் எம்.பி.க்களுக்கு வழங்கப்படவில்லை. எம்.பி.க்கள் என்ற முறையில் எங்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதியிடம் முறையிட்டனர்.
“தயவு செய்து எதிர்க்கட்சித் தலைவர் ஊடாக இந்தக் கோரிக்கையை விடுங்கள். அப்போது ஆளுங்கட்சியுடன் பேசி இந்த விவகாரத்தில் தீர்வு காண முடியும்’’ என்றார், ஜனாதிபதி. அவர் பேசும் போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் மீண்டும் அவ்வழியே வந்தார்.
“இதோ எதிர்க்கட்சித் தலைவர். இப்போது அவரிடம் சொல்லுங்கள்.” ஜனாதிபதி ரணில் மீண்டும் கூறியபோது எதிர்க்கட்சித் தலைவர் சஜித், “எனக்கு எதுவும் கேட்கவில்லை. எனது வாய்க்கு பூட்டுப் போடப்பட்டுள்ளது.” என்று கூறியவாறு அங்கிருந்து சென்றார்.
“வழக்கில் கூட, மௌனம் சம்மதம் என்று அர்த்தம். எதிர்க்கட்சித் தலைவரின் மௌனம், எம்.பி.க்களின் கோரிக்கையை அவர் ஆமோதிப்பதையே காட்டுகிறது” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதும் அனைவரும் பலமாக சிரித்தார்கள்.
அரசாங்கக் கட்சிக் குழுக் கூட்டத்திலும் அமைச்சரவைக் கூட்டத்திலும் கலந்து கொண்ட பின்னர் ஜனாதிபதி வெளியேறினார்.
நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்து ஜனாதிபதி கூறியதையடுத்து, நிறைவேற்றுத்துறை, சட்டமன்றம் மற்றும் நீதித்துறைக்கு இடையே உள்ள பிரச்சினை குறித்து பல எம்.பி.க்கள் கலந்துரையாடினர்.
அமைச்சரவையின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் சட்டமியற்றும் சபைக்கு பொறுப்புக்கூற வேண்டியதாக இருந்தாலும், பாராளுமன்றத்தின் மீது நீதித்துறை அதிகாரம் செலுத்துவது குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துகளை தெரிவிக்க ஆரம்பித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமையை பலாத்காரமாக நீதிமன்றம் எடுப்பது குறித்து நடவடிக்கை எடுக்க செயற் குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதியின் கோரிக்கையை முன்னெடுக்க பல எம்.பிக்கள் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
பாராளுமன்றத்தில் இருந்து ஜனாதிபதி ரணில் நேரடியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு வந்தார். கட்சியின் வலய அமைப்பாளர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் இரண்டாம் கட்டப் பணியில் இணைவதற்காகவே வருகை தந்தார்.
அன்று காலை பொதுச் செயலாளர் ரங்கே பண்டார ஐ.தே.க செயற்பாட்டாளர்களுக்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ஆற்றிய பணிகள் குறித்த விரிவுரையொன்றை ஏற்பாடு செய்திருந்ததுடன் அதனை முடித்துக் கொண்டு ஜனாதிபதியின் வைபவத்தில் கலந்து கொள்வதற்காக அவர்கள் சிறிகொத்தவிற்கு வந்தனர்.
பேச்சாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் அறிவித்திருந்ததால் மூன்று சிறு உரைகளுக்கே சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. பொதுச் செயலாளர் ரங்க, தவிசாளர் வஜிர, துணைத் தலைவர் அகிலவிராஜ் ஆகியோர் பேசினர், அதன்பின்னர் ஜனாதிபதி உரையாற்றினார்.
அவர் பாராளுமன்ற உரையை சில நிமிடங்கள் நீடித்து, தன் உரையை முடித்துவிட்டு, நியமனக் கடிதங்களை விநியோகிக்க பொதுச்செயலாளர் ரங்கேவுக்கு அழைப்பு விடுத்தார். நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் கட்சி நிர்வாகக் குழுவின் வாராந்தக் கூட்டம் ஜனாதிபதி ரணில் தலைமையில் நடைபெற்றது.
இங்கு, கட்சி அமைப்பு நடவடிக்கைகள் மற்றும் வேலை செய்யாதவர்களை நீக்குவது குறித்து பொதுச் செயலாளர் ரங்கேவுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
அதன்பின், கட்சியின் தேர்தல் பிரசாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. லசந்த குணவர்தன, ஷமல் செனரத் மற்றும் ரொனால்ட் பெரேரா ஆகியோருக்கு பொறுப்புகளை வழங்கிய ஜனாதிபதி ரணில், எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கூட்டங்கள் தொடர்பிலும் முகாமைத்துவ குழுவிற்கு யோசனையொன்றை முன்வைத்திருந்தார்.
புதன்கிழமை காலை ஜனாதிபதி ரணில், பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்துக்கு கைத்தொழில் கண்காட்சியை திறந்து வைப்பதற்காக சென்றார்.
இண்டஸ்ரியல் எக்ஸ்போ கைத்தொழில் கண்காட்சியின் பின்னர், மீண்டும் பாராளுமன்றத்திற்கு வந்த அவருடன் எம்.பிக்களும் அமைச்சர்களும் நீதிமன்ற நடவடிக்கைகளின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்கள்.
ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் முதலாவது புலமைப்பரிசில் திட்டத்தில் இணைந்து கொள்வதற்காக மாலையில் அலரி மாளிகைக்குச் சென்றார் ஜனாதிபதி. குழந்தைகளிடம் வந்த ஜனாதிபதிக்கு குழந்தைகளிடமிருந்து உயர்ந்த அங்கீகாரம் கிடைத்தது/ அங்குள்ள ஆசிரியர்களும் ஜனாதிபதியின் புலமைப்பரிசில் திட்டத்தைப் பாராட்டி பேசினர்.
மறுநாள், நிதியமைச்சில் நடைபெறவிருந்த பல கூட்டங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவிருந்ததால் அவர் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வந்தார். அதற்கு முன், அங்கு வந்த பல அமைச்சர்களையும் சந்தித்தார்.
“பாராளுமன்றத்தின் அதிகாரத்தை நீதிமன்றம் எடுத்துக்கொள்ள அனுமதிக்க முடியாது. ஆசிரியர் நியமனத்தை நீதிமன்றம் நிறுத்தியதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியது மிகவும் உணர்வுபூர்வமானது என்று அமைச்சர் மனுஷ வருத்தத்துடன் தெரிவித்தார்.
“எம்.பி.க்களின் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி பேசிய பிறகு, அனைவரும் அதைப் பற்றி பேசத் தொடங்கினர். பாராளுமன்ற அதிகாரத்தை வேறு தரப்பினர் எடுக்க முடியாது. பாராளுமன்ற உறுப்பினர் வஜிரவும் உரையில் கலந்துகொண்டார். செயற்குழுவை நியமித்து, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.” பாராளுமன்ற உறுப்பினர் தொலவத்த கூறினார்.
பாலின சமத்துவச் சட்டத்தால் ஒருமத குழு இப்போது வருத்தமடைந்துள்ளது. அந்த மத சம்மேளனமும் செய்தியாளர் மாநாட்டை நடத்தியிருந்தது.
ஆனால் இதன் பின்னணியில் ஒரு சிலர் இருப்பதை மறந்துவிட்டார்கள். இந்த குழுக்கள் இப்போது அவர்கள் விரும்பியபடி செயல்படுகின்றனவா?” பாராளுமன்ற உறுப்பினர் தொலவத்த மற்றுமொரு குண்டை வெடிக்கச் செய்தார்.
பா.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு வந்ததையடுத்து பா.ஜ.க.வின் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்ற எஸ்.ஜெய்சங்கர், தனது முதல் வெளிநாட்டு பயணமாக வியாழனன்று கொழும்பு வந்தார்.
மூன்றாவது தடவையாக பிரதமரான மோடியின் செய்தியை எடுத்துக்கொண்டு ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினரை சந்தித்ததோடு ஜனாதிபதிக்கும் அமைச்சருக்கும் இடையில் தனியான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
பகல் உணவுக்குப் பிறகு, அவர் இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தினார்.
ஜனாதிபதி ரணில் மாலையில் தந்திரிமலை ரஜமகா விகாரையில் பொசன் பௌர்ணமி பூஜையில் கலந்து கொண்ட பின்னர் மட்டக்களப்பு மற்றும் அம்பாறைக்கு ‘உறுமய’ உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்காகப் புறப்பட்டார்.