கிழக்கின் பிரசித்திபெற்ற வனவிலங்குகள், பறவைகள் சரணாலயமாக விளங்கும் கூமுன பிரதேசம் வெளிநாட்டு உல்லாசப்பயணிகளாலும் உள்ளூர்ப் பிரயாணிகளாலும் தற்போது நிரம்பி வழிந்துகொண்டிருக்கின்றது.
உலகிலே கடல் நீரலைச்சறுக்கலுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற உல்லாச புரியாகக் கருதப்படும் அறுகம்பே உல்லே பிரதேசத்துக்கு தமது கடல் நீரலைச் சறுக்கல் மட்டைகளுடன் வருகை தருவோர், கூமுனைக்கு செல்லத் தவறுவதில்லை. பொத்துவில் பிரதேச செயலக பிரிலுள்ள அறுகம்பே உல்லே பிரதேசத்தையடுத்துள்ள பாணம பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் கூமுன வன விலங்குகள் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
35,664 ஹெக்டயர் பரப்பளவைக்கொண்ட கூமுன பிரதேசத்தில் விலங்குகள் மற்றும் பறவைகள் உல்லாசமாகவும் சுதந்திரமாக பறந்தும் நடமாடியும் திரிவதால் அவற்றை இயற்கையோடு பார்த்து ரசிக்கக்கக்கூடிய ஒரேயொரு சரணாலயம் இதுவாக கருதப்படுகின்றது. இது வேறு எந்த நாடுகளிலுமோ இல்லாத ஒரு விசேட அம்சமாகும்.
கூமுன சரணாலயத்துக்குள் பிரவேசிப்போர் கால் நடையாகவோ, மோட்டார் சைக்கிளிலோ அல்லது தமது சொந்த சொகுசு வாகனங்களிலோ செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. நாம் இங்கு சுற்றிப் பார்வையிடுவதற்கு சபாரி வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. இவற்றை நாம் வாடகைக்கு அமர்த்தலாம். பாணமையிலோ அல்லது கூமுனயிலோ திறந்த ஜீப் வண்டிகள் உள்ளன. கூமுனை பிரதேசத்திற்கு செல்வோர் வாகனங்களில் இருந்து இறங்கி விலங்குகளையோ அல்லது பறவைகளையோ பார்வையிட முடியாது.
யானைகளை சாதரணமாகவே இங்கு காணலாம். முதலைகள் குளக்கரைகளில் இருந்து தமது வாயை அகலத்திறந்து பார்த்துக் கொண்டிருப்பதையும் சாதாரணமாக எப்போதுமே காணலாம்.
கூமன பறவைகளுக்கு மிகவும் பிரசித்திபெற்ற ஓர் பிரதேசமாகும் இங்கு இருநூற்று முப்பெத்தெட்டு (238) வகையான பறவைகள் மிகவும் சுதந்திரமாக பறந்து திரிவதாக அறிவிக்கப்படுகின்றது. அவற்றுள் 130 வகையான பறவைகள் வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் அபூர்வ பறவைகளாகும் என இங்கு பணிபுரியும் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கூமுன சரணாலயத்திற்கு சற்று முன்புறமாக உகந்த முருகன் ஆலயமும் பௌத்த கோயில்களும் உள்ளன. இங்கு வருகை தருவோர் அங்கு இறை வழிபாடுகளில் ஈடுபட ஒருபோதும் தவறுவதில்லை.
(கலாபூஷணம் எம்.ஏ.பகுர்டீன்)